Sunday, November 16, 2014

உயிர் பெறும் ஓலைச்சுவடிகள்:அவற்றைப் புதுப்பித்தும், நகலெடுத்தும் தருகிறது ஓர் நூலகம்


பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதோடு, அவற்றைப் புதுப்பித்தும், நகலெடுத்தும் தருகிறது ஓர் நூலகம்
சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறையின்கீழ் இயங்கும் ‘கீழ்த்திசை நூலகம்’ மற்றும் ஆய்வு மையம், அரிதான பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளால் நிரம்பி வழிகிறது. தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடக சாதனமாகப் பயன்பட்ட ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதும் அவ்வப்போது கிடைக்கிற சுவடிகளை ரசாயன முறையில் புதுப்பிப்பதையும் மிகவும் நேர்த்தியாகச் செய்து வருகிறது, இந்த நூலகம். இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல், வட்டார வரலாறுகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் சேகரிக்கப்பட்ட 72 ஆயிரத்து 314 ஓலைச்சுடிகள் இங்கே கணக்கில் வரவு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த இந்த கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் தோற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த காலின் மெக்கன்சி. மற்றவர், இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயேரான பிரௌன். காலின் மெக்கன்சி 1783ல் இந்தியாவிற்கு வந்து, கிழக்கிந்தியக் கம்பெனியின் பொறியியல் பிரிவில் பணியாற்றியவர். பழமையான கணக்குகள், இந்திய வரலாறுகள், கீழ்த்திசை மொழிகள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார். இதனால், அவர் ஏராளமான சுவடிகள், வரைபடங்கள், மற்றும் நாணயங்களை சேகரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
மொழியியல் அறிஞரான பேராசிரியர் லேடன் என்பவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சேகரித்த பல தொகுப்பினை லண்டனில் உள்ள இந்திய அலுவலகத்தில் பார்த்த பிரௌன், பல முயற்சிகளுக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் 10,000 பவுண்டுகளுக்கு அந்த ஓலைச்சுவடிகளை விலைக்கு வாங்கி, அதில் ஒரு பகுதியை சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார். மெக்கன்சியால் சேகரித்த சுவடிகள் உட்பட அனைத்தையும் இப்போது எங்கள் நூலகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறோம்" என்கிறார், இந்த நூலகத்தின் காப்பாட்சியர் சந்திரமோகன்.
1870ல் சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கப்பட்ட இந்த நூலகம், இப்போது சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள முக்கியமான ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் சிதைந்த தாள், சுவடிகள் மற்றும் அச்சு நூற்களை, சிப்பான் துணிகளைக் கொண்டு சீரமைக்கிறார்கள். இங்குள்ள சுவடிகளிலிருந்து இதுவரை 200 புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி மாணவர்கள் பலர் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான விஷயங்களை சேகரித்துச் செல்கின்றனர். மேலும் வெளிநாட்டினரும் இங்கு உள்ள ஓலைச்சுவடிகளை பார்த்துச் செல்கின்றனர். ஓலைச்சுவடிகளை இங்கு விலை கொடுத்தும் வாங்கிக் கொள்கிறோம். நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படி வாங்கிய ஓலைச்சுவடிகள், ரசாயனப் பொருட்கள் இட்டு பாதுகாக்கப்படுகின்றன" என்கிறார் சந்திரமோகன்.
தமிழகத்தில் உள்ள 12,617 ஓலைச்சுவடிகளின் அடிப்படை விவரங்களைத் திரட்டி, அதில் 1,862 சித்த மருத்துவ சுவடிகளை இவர்கள் சி.டி.யில் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், குறுந்தகடு மூலம் சித்த மருத்துவ ஆய்வாளர்கள் தகவல்களை எளிதாகப் பெறமுடிகிறது.
பழமையான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருப்பவர்கள் இங்கு வந்து அவற்றைக் கொடுத்தால், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள சுவடிப் பாதுகாப்பு மையம் மூலம் எவ்விதக் கட்டணமும் இன்றி உரிய வேதிப் பொருட்கள் இட்டு, ஓலைச்சுவடிகளை சீரமைத்தும் தருகிறார்கள்.
ஓலைச்சுவடிகள் மூலம் தகவல்களைத் திரட்டவும், சுவடிகளைச் சீரமைக்கவும் தொடர்பு எண்: 044-2536 5130

No comments:

Post a Comment