Tuesday, August 12, 2014

நெய்தல் நிலம் தழுவும் கடலாகப்போகின்றேன்

கரையோரம் களித்தாடும்
வெள்ளை  ஆம்பல்கள்
நெய்தல்  பெண்ணொருத்தி
வந்தெம்மை சூடாரோ 
என ஏங்கிக்காத்திருக்கும்...
காரிகை வந்திடாத
நாளிலெல்லாம்
முகம் தொங்கி பொலிவிழக்கும்... 
நெய்தல் நிலத்தின் மேல்
நானுமோர் ஆம்பலானால் என்ன ?

திமிலேறி கடல் புகுந்து
திசைத்தெரியா ஆழியின் மேல்
"பிரிந்துவந்த தலைவியின்
மேனியை போன்ற
உப்பு நாறும் ஆழியே
என் ஆருயிர் காதலை
காற்றனுப்பி சொல்வாயா
தனித்த தலைவிக்கு
தக்கதொரு துணையாய் அது இருக்கும் "
என்று  பாட்டிசைக்கும்
பரதவரின் மூங்கில் குழல் மீது
நானுமோர் துளையானால் என்ன ?

கடல் காயும் உப்பங்கழியில்
வெயிலோடு புணர்ந்தன்றோ
ஈன்றெடுத்தாய் உப்பினை
என
அழுவத்தை பகடி செய்து
அடும்பு மலர் சூடும்
உப்பறுக்கும்
உமணர் பெண்கள்
மேனியெங்கும் பூத்திருக்கும்
வெண்முத்து வேர்வையினில்
நானுமோர் துளியானால் என்ன ? 

அலவன் தன் கால்களினால்
கடற்கரையில் வரைந்து போகும்
நெய்தல் ஓவியங்கள்
திரை வந்து அழித்தபின்னும்
திரும்ப வந்து எழுதிடுமே
பின்னுமொரு ஓவியத்தை
ஈரமணலின்  மேல்
நானுமோர் நண்டானால் என்ன ?

இரை தேடி பறந்து சென்ற
கடல் நாரை தூங்கிற்று
குறிஞ்சி நிலம் சென்று
அந்நிலத் திணை பாடி 
பரிசிலோடு வந்த பரதவரும் துஞ்சுகின்றர்
மீன் பிடிக்க சென்றிருந்த
தலைவனுக்காய் காத்திருந்து
கருங்குவளை கண்கள் அயர்ந்த
பெண்டிரும் உறங்குகின்றார்
ஆயினும்
நீலத்திரை படர்த்தி
அலை அலையாய்
அசைந்தாடும்
வெண்மலர் போல் நுரைபூத்த 
நதிவிழுங்கும் கடல் மட்டும்
ஓங்கார சத்தமிட்டு விழித்தபடி இருக்கிறது 
நானுமொரு நாள்
கண்துஞ்சா கடலானால் என்ன ?


--க.உதயகுமார் 

No comments:

Post a Comment