Thursday, July 3, 2014

பேர்லாகர் குவிஸ்டு: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி

ஸ்வீடிஸ் தேசத்து இலக்கிய கர்த்தா, 1951ல் நோபல் பரிசு பெற்றவர். ‘பாரபாஸ்’ என்னும் நாவல் எழுதி உலகப்புகழ் பெற்றவர். இந்நாவல் வெளிவந்த முதலாண்டிலேயே பதினொரு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதாம். திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
‘பாரபாஸ்’ நாவல் தமிழிலும் ‘அன்பு வழி’ என்ற தலைப்பில், க.நா.சு.வால் Lagerkvist மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு பதிப்பு வந்ததோடு சரி. வாசகர்கள் கண்டுபிடித்துப் படித்துப் பார்க்க வேண்டிய நாவல் இது.
‘அன்புவழி’ நாவலில் திருடன் ஒருவன் தண்டனைக்கு உள்ளாகிறான். அவனுக்குப் பதிலாக இயேசு குருசில் அறையப்பட்டுத் தண்டனை பெறுகிறார். இயேசுவுக்குப் பதிலாக ‘பாரபாஸ்’ விடுதலை பெறுகிறான். இயேசு குரிசில் அறையப்படும் காட்சியை  கண்ணால் பார்க்க நேரும் ‘பாரபாஸ்’ பெரும் பாதிப்புக்குள்ளாகிறான். இயேசு குரிசில் அறையப்பட்ட காட்சி அவன் மனதில் நீங்காது இடம் பெறுகிறது. ஆனால் அவனால் இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ, பின்பற்றவோ முடியவில்லை. செம்புச் சுரங்கம் ஒன்றில் அடிமையாக வேலை பார்க்கும் பாரபாஸ் மன உளைச்சல் என்ற குரிசில் ஓயாது தன்னை அறைந்து அவதிக்குள்ளாகிறான். ஆத்மீக ஒளியை ஏற்றுக்கொள்ள விரும்பியும், ஏற்றுக்கொள்ள இயலாத, தருக்க உலகுக்கு ஆட்பட்டுவிட்ட நவீன மனிதனின் இரண்டுங்கெட்டான் நிலையை பாரபாஸ் காட்டுவதாக கொள்ளலாம்.
பேர்லார்கர் குவிஸ்டு 1891ல் பிறந்தவர். அவருடையது விவசாயிகளின் குடும்பம். மிகுந்த மத நம்பிக்கைக்கு உட்பட்டது. வைதீகமானது. கிறிஸ்துவ வைதீக மத நம்பிக்கைகளை பேர்லாகர் குவிஸ்ட்டால் முழுமையாக ஏற்க முடியவில்லை. முழுமையாக நிராகரிக்கவும் முடியவில்லை.
பேர்லாகர் குவிஸ்ட் சுமார் 35 புத்தகங்கள் வரையிலும் எழுதியிருக்கிறார். 1913ல் சுவீடனிலிருந்து அவர் பாரீஸ் சென்றார். பாரீஸில் கூபிஸ்டு இயக்கம் மும்முரப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவ்வியக்கம் இவர் மனதை பாதித்தது. நுண் கலைகள், முக்கியமாக ஓவியம் தன் தடைகளை முறித்துக்கொண்டு, வாழும் காலத்தின் பிரதிபலிப்பை ஏற்று பயணத்தை முடுக்கிக்கொண்டிருப்பதாயும், இலக்கியம் தயங்கி பின் நிற்பதாகவும் அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. barabbas பாரபாஸ்
பேர்லாகர் குவிஸ்டு ஒரு கவியாக தன் இலக்கிய வாழ்வை ஆரம்பித்தவர். ‘துக்கம்’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட முதல் கவிதைத்தொகுதி இவருடைய 25வது வயதில் வெளியாயிற்று.
இளமைக் காலத்தில் பேர்லாகர் குவிஸ்ட்டை சங்கடப்படுத்திய பிரச்சனைகள் இரண்டு. ஒன்று அவருடைய மனோபாவத்துக்கு மாறாக வைதீக கிறிஸ்துவ மதம் கொண்டிருந்த நிலை. இரண்டு முதல் உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட நாசங்கள். இவர் எழுதிய முதல் நாடகம் ‘கடைசி மனிதன்’ என்பது. பைபிளைத் தழுவி எழுதிய நாடகம் இது. முப்பது வயதில் லாகர் குவிஸ்டு பிரஞ்சு தேசத்திலும் இத்தாலியிலும் வாழ்ந்தார். இவருடைய வாழ்க்கைப் பார்வையில் நம்பிக்கையின் ஒளியைச் சேர்க்க இவ்வெளிநாட்டு வாழ்க்கை உதவிற்று. மீண்டும் 1930 வாக்கில் ஐரோப்பியச் சூழ்நிலையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. வன்முறையும், எதேச்சதிகாரமும், பயமுறுத்தல்களும் வாழ்க்கையை மிக மோசமாக கெடுத்துக் கொண்டிருந்தன. இச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு பேர்லாகர் குவிஸ்ட்  ஏகாதிபத்தியத்தின் பரம வைரியாக மாறினார். இக்காலத்தில் இவர் எழுதிய நூல் ‘தூக்குத்தூக்கி’ என்பது. ஏகாதிபத்தியத்தைக் கேலி செய்து முகத்திரையைக் கிழிக்கும் நூல் இது. இந்நாவல் நாடகமாக மாற்றப்பட்டு அரங்கேறியபொழுது ஸ்காண்டிநேவிய நாடக உலகில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாயிற்று.
இவருடைய  ’ஆத்மாவை இழந்த மனிதன்’ என்ற நாவலில் பலாத்காரவாதியான ஒரு அரசியல்வாதி காதல் வாழ்க்கை மூலம் பக்குவப்பட்டு மனித வாழ்வைக் கருணையோடு பார்க்கும் மாற்றாத்தைப் படிப்போர் ஏற்றுக்கொள்ளும்படி மிக அழகாக சொல்லி இருக்கிறார். இதற்குப் பின் இவர் எழுதிய பிரபல நாடகம் ‘மனிதன் வாழட்டும்’ என்பது. நாடகத்தில் இயேசு நாதர், சோக்ரதர், ஜாண் ஆப் ஆக், ஒரு அமெரிக்க நீக்ரோ ஆகியோர்கள் வருகிறார்கள். இவர்களுடைய தலைவிதியின் பொதுத்தன்மையை ஆராய்கிறார் பேர்லாகர் குவிஸ்டு இந்நாடகத்தில்.
பேர்லாகர் குவிஸ்டு பேச்சில் நம்பிக்கை அற்றவர். பொதுக் கூட்டங்களின் கோலாகலங்களில் அவர் எப்போதுமே கலந்து கொண்டதில்லை. நோபல் பரிசு பெற்றபொழுது நிருபர்கள் அவரை அணுகி உலக மக்களுக்கு ஒரு விசேஷ செய்தி தர வேண்டும் என்று கேட்டதற்கு பேர்லாகர் குவிஸ்டு, ‘சொல்ல எதுவும் இல்லை என புத்தகங்களில் அனைத்தும் சொல்லி இருக்கிறேன்’ என்றார்.
- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.

No comments:

Post a Comment