Monday, May 12, 2014

நட் ஹாம்சன்:அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி


நட் ஹாம்சன் சிறு வயதில் பல வேலைகள் பார்த்தார். செம்மானின் உதவியாளராக, சுரங்கக் கூலியாக, பாதை வெட்டும் தொழிலாளியாக, கிராமப்பள்ளியில் ஆசிரியராக. அன்றைய நார்வேயில், பல இளைஞர்கள், அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். வாழ்வில் சிறு ஆசுவாசங்களையேனும் தேடிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஹாம்சனும் போனார். அங்கும் தோட்டக்காரராகவும், பஸ் கண்டக்டராகவும், சிறு கடைகளில் கணக்குப் பிள்ளையாகவும், முச்சந்திப் பிரசங்கியாகவும் வயிற்றைக் கழுவ முயன்றார். அமெரிக்கா அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை . திருப்தியாக வயிற்றைக் கழுவிக்கொள்ளவும் முடியவில்லை, ரொம்பவும் சங்கடப்படவும் வேண்டியிருந்தது. குளிர் காலத்துக்கு அவசியமான புகையிலையும், ஒரு ஜோடிச் செருப்பும் மிச்சம் பார்த்துவிட வேண்டும் என்ற அவரது எண்ணமும் ஈடேறவில்லை. தமது 
Hamsun_bldsa_HA0341
இலக்கிய ருசி லேசுபட்டதல்ல என்று அவர் பிரசங்கங்களில் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். யாரும் அதைச் சட்டை செய்யவில்லை. கடுமையான வறுமையும், விசித்திரமான அனுபவங்களும், தரித்திரமில்லாமல் கிடைத்தன. நன்றாகச் சுற்றி அலைந்தார். தம் அனுபவங்களைப் பற்றியெல்லாம் குறித்து வைத்துக் கொண்டார். அத்தர் சேர்க்காமல், ஊதுபத்தி புகைக்காமல், காதல் கீதல் என்று புலம்பாமல், சுவாரஸ்யத்தை விட, கெட்டிக்காரத்தனத்தை விட, பிரச்சாரத்தை விட, உண்மை பொருட்படுத்தத் தகுந்தது என்ற நம்பிக்கையில் எழுதினார்.
அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பியதும் ‘அமெரிக்கக் கலாச்சார வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஒரு கிண்டல் புத்தகம் எழுதினார். அமெரிக்க வாழ்க்கையையும் அரசாங்கத்தையும் அரசியல் தலைவர்களையும், நை நை என்று நைத்திருக்கிறார் இதில். இந்நூலைப் படிக்கும் போது அமெரிக்காவைப் பற்றி கிண்டல் செய்து எழுதியுள்ள மாக்சிம் கார்க்கியின் எழுத்து (’அமெரிக்காவிலே’ தமிழ்மொழி பெயர்ப்பு - கு. அழகிரிசாமி) நினைவுக்கு வராமல் போகாது.
இதன் பின், ‘பசி’ என்ற நாவல் எழுதினார். இவரது இலக்கிய நோக்கின் செழுமையை வெளிப்படுத்திய முதல் நூல் இதுதான். தனது மனதைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்த, பழைய நினைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள, இந்நூலை அவர் எழுதினார் என்பார்கள். சொல்லும்படி ‘பசி’யில் கதை என்று ஒன்றுமில்லை. இதில் வரும் கதாநாயகன் பசியினாலும், மனச் சோர்வாலும் இடத்துக்கு இடம் அவனை அணைத்துக் கொள்ளக் காத்திருக்கும் ஏமாற்றங்களாலும் வேதனைப் படுகிறான். ஆசிரியரின் சுய அனுபவத்தின் மெய்ம்மை இந்நூலில் நம்மை ஊடுருவித் தாக்கும்.
நட் ஹாம்சன் ஒரு சில நாடகங்களும் எழுதியிருக்கிறார். விஞ்ஞான முன்னேற்றம் அவர் மனதில் ஏற்படுத்திய சஞ்சலங்களும் சந்தேகங்களும் இந்நாடகத்தில் வெளிப்பட்டுள்ளன. எனினும் நாடகத் துறையில் இவர் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.
இவரது மிக முக்கியமான நூல் ‘நில வளம்’. இந்த அற்புதமான நாவலை க.நா.சு. தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். வாசகர்கள் அவசியம் தேடிப் படிக்க வேண்டிய நாவல் இது. ‘நான் படித்தவற்றுள்ளேயே இதுதான் மிகச் சிறந்த நாவல்’ என்று எச். ஜி. வெல்ஸ் இந்நூலைக் குறிப்பிட்டுள்ளார். மண்ணைப் பற்றியும், மண்ணில் வேலை செய்யும் கிராமவாசிகளைப் பற்றியும், அவர் தம் ஆசாபாசங்கள் பற்றியும் கலைப்பாங்கோடு இந்நாவல் கூறுகிறது என்றாலும், முற்போக்கு நாவல் என்று இதைச் சொல்ல முடியாது; மிகச் சிறந்த நாவல் என்றுதான் சொல்ல முடியும். கதாபாத்திரங்கள் எல்லாம் தனி மனிதர்கள். தனி மனிதர்களின் ஏக்கங்கள், வெற்றிகள், தோல்விகள். தனி மனிதனைக் கும்பலாக் காணும் ‘தத்துவ தரிசனம்’ இவர் காலத்தில் பரவியிராத ஒன்று போலும்.
‘நில வளம்’ என்ற இந்நாவலுக்குத்தான் 1920-ல், தமது 61-வது வயதில் நோபல் பரிசு பெற்றார் இவர். நன்றாகக் குடித்துக்கொண்டு, சிலபோது இலக்கியக் கூட்டங்களில் கலாட்டா செய்து கொண்டு, (ஸெல்மா லாகர்லாஃப் என்ற சுவீடிஷ் நோபல் பரிசு பெற்ற அம்மையாரின் ரவிக்கையை இழுத்துக் கிழித்தார் இவர் - குடிவெறியில்தான் என்று சொல்லப்படுகிறது.) 93 வயது வரையிலும் வாழ்ந்தார்.
இந்திய மொழிகளில் நட் ஹாம்சன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் காப்பியடிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுள் இவர் முக்கியமானவர். அதிலும் முக்கியமாக இவருடைய ‘பசி’ என்ற நாவல். பசி, நமக்கு மிகவும் அன்னியமான விஷயமல்லவா?
- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.

No comments:

Post a Comment