இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது
மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்.
யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது.
தொலைத்துவிட்ட பாதை
வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.
புத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.
கண்டுபிடிப்புகளின் அடிப்படை
விமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன. மனிதர்களின் நற்குணத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே.
இந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைகிறது. அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது.
சுதந்திரம் ஒருபோதும் அழியாது
நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது. மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.
நீங்கள் இயந்திரங்கள் அல்ல
போர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக் காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள்! உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள்.
உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள்! மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!
கடவுளின் சாம்ராஜ்யம்
17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: “கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது.” ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு குழுவுக் குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம். எல்லா மனிதருக் குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம்! உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்! மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்தி - இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி.
மகிழ்ச்சியை உருவாக்கு வதற்கான சக்தி! இந்த வாழ்க்கையைச் சுதந்திரமான தாகவும் அழகானதாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன.
புதியதோர் உலகைப் படைப்போம்!
அப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.
இதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூ ரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் சொன்ன தெல்லாம் பொய்! அவர்கள் தங்களுடைய வாக்குறு திகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!
சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்! அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம்! நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப் பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம், புதிய உலகைப் படைக்க.
அறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக அனைவரும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், அனைவரும் ஒன்றுசேர்வோம்!
(ஹிட்லரைப் பகடிசெய்து சார்லி சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ‘த கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை.)
தமிழில்: ஆசை( தி இந்து,16.04.2014)
No comments:
Post a Comment