தமிழில்: பிரம்மராஜன்
ஒரு வன்மம் மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது.
ஒரு முனையில் அவன் நெற்றிப் பொட்டுக்கும் மற்றொன்றில் கன்னத்துக்குமாக
சுருக்கங்கள் ஏற்படுத்திய அது ஏறத்தாழ முழுமையடைந்த அரைவட்டமாகவும்,
சாம்பல் நிறத்திலும் இருந்தது. அவனின் உண்மையான பெயர் முக்கியமல்ல: டாகு
ரெம்போவில் இருந்த எல்லோரும் அவனை கொலரோடோவிலிருந்து வந்த ஆங்கிலேயன் என்று
அழைத்தார்கள். அந்த வயல்களின் சொந்தக்காரனான கார்டோசோ அவற்றை விற்க
மறுத்தான்: எதிர்பார்த்திராத ஒரு விவாதத்திற்கு அந்த ஆங்கிலேயன்
இட்டுச் சென்றிருக்க வேண்டும்: அவன் கார்டோசோவிடம் தன் வடுவின்
ரகசியத்தைக் கூறியிருக்க வேண்டும். ரியோ கிராண்ட் டேல் சர் என்ற
பகுதியிலிருந்து, எல்லைப் புறத்திலிருந்து அந்த ஆங்கிலேயன் வந்தான். அவன்
ஒரு கடத்தல்காரனாக பிரேஸிலில் இருந்தவன் என்று சொல்பவர்கள் நிறைய
இருக்கிறார்கள். அந்த வயல்கள் புல் மண்டிக்கிடந்தன: நீர்ச்சுனைகள்
உப்புக்கரித்தன: இந்தக் குறைபாடுகளை சரியாக்கும் பொருட்டு அந்த ஆங்கிலேயன்
நாள் முழுவதும் தன் வேலையாட்களைப் போலவே கடினமாக உழைத்தான்.
கருணையின்மையின் எல்லைக்கு அவன் கண்டிப்பானவன் என்றும் துல்லியமான
நியாயவாதி என்றும் அவனைப் பற்றிச் சொன்னார்கள்: ஒரு வருடத்தின் சில
சமயங்களில் தன்னை ஒரு மாடி அறையில் வைத்துப் பூட்டிக்கொண்டான். இரண்டு
அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு போரிலிருந்தோ, ஒரு தலை சுற்றலில்
இருந்தோ வெளிப்படுவது போல வெளுத்துப் போய், நடுங்கியபடி, குழம்பிப்போய்
ஆனால் முன்பைவிட அடக்கி ஆள்பவனாக அவன் வெளிப்பட்டான். அந்தக் கண்ணாடி போன்ற
கண்கள், சக்திமிக்க மெல்லிய உடல், மற்றும் நரைத்துப்போன மீசை ஆகியவை
எனக்கு ஞாபகம் வருகின்றன. அவன் எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக்
கொள்ளவில்லை. அவன் பேசிய ஸ்பானிய மொழி மிக அரிச்சுவடித்தனமானதும் ப்ரேஸீல்
மொழிக் கலப்பு மிக்கதும் எனபதும் உண்மை. ஏதாவது ஒரு துண்டுப் பிரசுரம்
அல்லது ஒரு வியாபார சம்பந்தமான கடிதம் தவிர அவனுக்கு எந்தக் கடிதங்களும்
வருவதில்லை.
வடக்குப் பிராந்தியங்கள் வழியாக நான்
சென்றமுறை பயணம் செய்தபோது கராகுவடா அருவியின் எதிர்பாராத பொங்கி வழிதல்
என்னை ஒரு இரவு கொலரோடாவில் தங்கும்படி கட்டாயப்படுத்தியது. சில
கணங்களுக்குள் என் வரவு அங்கு சமயப் பொறுத்தமற்றுப் போனதை என்னால் உணர
முடிந்தது.
என்னை அந்த ஆங்கிலேயனுக்கு உவப்பாக்கிக்
கொள்ள முயன்றேன். சிறிதும் பகுத்து அறிதல் அற்ற பற்றுக்களில் ஒன்றை நான்
பயன்படுத்தினேன்: தேசப்பற்று. இங்கிலாந்துபோன்ற வெல்ல முடியாத உணர்வுடைய
ஒரு நாட்டினை என்னுடையதாகக் கூறினேன். என் நண்பன் ஒப்புக்கொண்டு ஆனால் தான்
ஒரு ஆங்கிலேயன் இல்லை என்றான். அவன் அயர்லாந்தில் டங்கர்வான் பகுதியைச்
சேர்ந்தவன். இதைக் கூறிய பிறகு, அவன் ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டது
போல திடீரென்று நிறுத்தினான்.
இரவு உணவுக்குப் பிறகு
நாங்கள் வானத்தைப் பார்க்க வெளியே சென்றோம். வானம் தெளிவாகி இருந்தது.
ஆனால் தாழ்ந்த மலைகளுக்கு அப்பால் தெற்கு வானம் மின்னலால் கீறப்பட்டு,
ஆழ்ந்து பிளக்கப்பட்டு, இன்னொரு புயலை கருக் கொண்டிருந்தது. சுத்தம்
செய்யப்பட்ட உணவருந்தும் அறையில், இரவு உணவு பரிமாறிய பையன் ஒரு பாட்டில்
ரம் கொண்டு வந்து வைத்தான். கொஞ்ச நேரம் நாங்கள் மௌனமாக அருந்தினோம்.
எனக்கு
போதை ஏறிவிட்டதை நான் உணர்ந்தபோது என்ன நேரம் என்று தெரியவில்லை. என்னுடைய
புத்துணர்ச்சியா, அல்லது சோர்வா, அல்லது பெருமகிழ்ச்சியா–அந்த வடுவைப்
பற்றிக் குறிப்பிடச்செய்தது எது என்று தெரியவில்லை. ஆங்கிலேயனின் முகம்
மாறுதல் அடைந்தது. அவன் என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளப்போகிறான் என்று
சில வினாடிகள் நினைத்தேன். விரிவாக, தன் சாதாரண குரலில் அவன் கூறினான்:
“என்
வடுவைப் பற்றிய வரலாற்றை ஒரு நிபந்தனையின் பேரில் நான் சொல்கிறேன்: அந்த
பெரும் அவமானத்தை, இழிவான சந்தர்ப்பங்களின் தீவிரத்தை சற்றும் குறைக்கப்
போவதில்லை.”
நான் ஒப்புக்கொண்டேன். அவனுடய ஆங்கிலத்தில் ஸ்பானிய மொழியையும், போர்ச்சுகீசிய மொழியையும் கலந்து அவன் சொன்ன கதை இதுதான்:
கிட்டதட்ட
1922இல் கன்னாட் நகரங்களில் ஒன்றில், அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக
சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரில் நானும் ஒருவன். என்னுடைய தோழர்களில்
சிலர்– தங்களை அமைதியான காரியங்களில் ஈடுபடுத்தியபடி இன்னும் உயிருடன்
இருக்கிறார்கள்: மற்றவர்கள், புரிந்து கொள்ள முடியாத வகையில்
பாலைவனத்திலும் கடலிலும் ஆங்கிலக்கொடியின் கீழ் போரிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்; தகுதிவாய்ந்த மற்றொருவன் விடியல் நேரத்தில், ராணுவ
வீரர்களின் குடியிருப்பு முற்றத்தில், தூக்கம் நிரம்பிய மனிதர்களால்
சுடப்பட்டு இறந்தான். இன்னும் பலர் (மிகவும் அதிர்ஷ்டமற்றவர்கள் அல்ல)
பெயரற்ற, உள்நாட்டுப் போரின் ரகசிய மோதல்களில் தங்கள் முடிவுகளை
எதிர்கொண்டனர். நாங்கள் தேசீயவாதிகள்; கத்தோலிக்கர்கள்; நாங்கள்
ரொமாண்டிக்குகள் என்று கூட சந்தேகப்படுகிறேன். .. அயர்லாந்து எங்களுக்கு
நிறைவேற்றம் காணமுடியாத எதிர்காலமாக மட்டுமின்றி பொறுத்துக்கொள்ள முடியாத
நிகழ்காலமாகவும் இருந்தது. அது ஒரு கசப்பான, போற்றிப் பாதுகாத்த புராணிகம்;
அது வட்ட வடிவக் கோபுரங்களாகவும் சிவப்பு சதுப்பு நிலங்களாகவும் இருந்தது.
பார்னலின் மறுதலிப்பாக இருந்தது. மாபெரும் காவியப் பாடல்களாக அவை
காளைகளைக் களவாடிய நிகழ்வுகளைப் பாடின. இவை இன்னொரு பிறவியில்
நாயகர்களாகவும் மற்றும் சிலவற்றில் மீன்களாகவும், மலைகளாகவும். . . .
ஒருநாள் மதியம், நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். மன்ஸ்டர்
நகரத்திலிருந்து வந்த கூட்டாளி எங்களுடன் சேர்ந்தான்: ஒரு ஜான் வின்சென்ட்
மூன்.
அவன் இருபது வயது நிரம்பாதவன். அவன் ஒரே
சமயத்தில் மெலிந்தும், தொங்கும் சதைப்பற்று உடலுடனும்
காணப்பட்டான்;முதுகெலும்பு இல்லாத பிராணியொன்றினைப் போல அசௌகரியமான
மனப்பதிவை ஏற்படுத்தினான். அவன் தீவிரத்துடனும், தற்பெருமையுடனும் ஒவ்வொரு
பக்கத்தையும் படித்திருந்தான்–கடவுளுக்குத்தான் தெரியும் என்ன கம்யூனிஸ்ட்
புத்தகங்கள் என்று. எவ்விதமான விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அவன்
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்தினான். ஒருவன் மற்றவனை
வெறுப்பதற்கு அல்லது விரும்புவதற்கு எல்லையற்ற காரணங்கள் கொண்டிருக்கலாம்:
மூன் பிரபஞ்சத்தின் வரலாற்றையே மிக மோசமான ஒரு பொருளாதார பிரச்சனைக்குச்
சுருக்கினான். புரட்சியானது வெற்றி யடையும்படி முன்பே
தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூறினான். ஒரு நாகரீகமான
மனிதனுக்கு இழந்தபோன நோக்குகள் மட்டுமே கவர்ச்சிகரமானதாக இருக்கவேண்டும்
என்று நான் அவனிடம் சொன்னேன். . . இரவு வந்துவிட்டிருந்தது; எங்களுடைய
கருத்துமாறுபாடுகளை, கூடத்தில், மாடிப்படிகளில், தெளிவில்லாத தெருக்களில்
தொடர்ந்தோம். அவன் வெளிப்படுத்திய தீர்மானங்களை விட அவற்றின் மறுக்க இயலாத,
நிறுவப்பட்ட தன்மையே என்னைக் கவர்ந்தது. புதிய தோழன் விவாதிக்கவில்லை.
உதாசீனத் துடனும் வெறுப்புடனும் தன் கருத்துக்களைக் கட்டளைத்தொனியில்
தெரிவித்தான்.
“வெளிப்பகுதியில் அமைந்திருந்த
வீடுகளுக்குப் பக்கத்தில் நெருங்கும் போது, சற்றும் எதிர்பார்க்காத
துப்பாக்கிச் சத்தம் எங்களை ஸ்தம்பிக்க வைத்தது. (இதற்கு முன்பு அல்லது
பிறகு ஒரு தொழிற்சாலையின் வெற்றுச் சுவரையோ அல்லது ராணுவவீரர்களின்
குடியிருப்பையோ சுற்றி வந்தோம்)கற்கள் பாவப்படாத ஒரு தெருவில் நுழைந்தோம்;
பற்றி எரியும் குடிசை ஒன்றிலிருந்து, நெருப்பு வெளிச்சத்தில் பூதாகரமாய்த்
தெரிந்த ஒரு ராணுவ வீரன் வெளிப்பட்டான். உரக்கக் கத்தியபடி, எங்களை
நிற்கச்சொல்லி உத்தரவிட்டான். என் நடையை துரிதமாக்கினேன்; என் தோழன் கூட
வரவில்லை.நான் திரும்பினேன்: ஜான் வின்சென்ட் மூன் பயத்தினால்
நித்தியப்படுத்தப்பட்டவன் போல ஈர்க்கப்பட்டு அசைவற்று நின்றான். நான்
பின்னால் திரும்பி ஓடி ராணுவ வீரனை ஒரே அடியில் கீழே தள்ளி, வின்சென்ட்
மூனை அவமானப் படுத்தி, என்னைத் தொடர்ந்து வர உத்தரவிட்டேன். நான் அவன்
கையைப் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டியதாயிற்று; பயம் என்ற உணர்ச்சி அவனை
ஏதும் செய்ய இயலாதவனாக்கி விட்டிருக்கிறது. ஒளிப்பிழம்புகளால்
ஊடுருவப்பட்ட இரவின் ஊடாக நாங்கள் தப்பித்தோம். துப்பக்கிக் குண்டுகள்
ஏராளமாய் எங்களை நோக்கியபடி வந்தபோது, அதில் ஒன்று மூனின் வலது தோளைக்
காயப்படுத்தியது. பைன் மரங்களுக்கிடையில் நாங்கள் தப்பித்துச் சென்றபோது
அவன் ஒரு பலவீனமான தேம்பலை வெளிப்படுத்தினான்.
“1923ஆம்
வருடத்தின் இலையுதிர்காலத்தில் நான் ஜெனரல் பார்க்லியின் கிராமத்து
வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருந்தேன். (இதுவரை என்றும் நான் பார்த்திராத)
அந்த ஜெனரல் நிர்வாகக் காரியமாற்றுவதற்கோ எதற்கோ பெங்கால் சென்றிருந்தார்;
அந்த வீட்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் குறைவாகத்தான் வயதாகியிருக்கும்.
ஆனால் அது சிதைலமடைந்தும் நிழல் நிரம்பியும் இருந்தது. புரிபடாத
வராந்தாக்களிலும் அர்த்தமற்ற பின் கூடங்களிலும் அது விரிவடைந்திருந்தது.
காட்சிக் கூடமும், மாபெரும் நூலகமும் முதல் மாடியை ஆக்கிரமித்திருந்தன.
சர்ச்சை மிகுந்த, உவப்பில்லாத புத்தகங்கள்–அவை ஒரு வகையில் 19ஆம்
நூற்றாண்டின் வரலாறாக இருந்தன; நிஷாபூரின் அகன்ற முனைக்
கொடுவாள்கள்–அவற்றின் உறைந்த வளைவுகளில் இன்னும் போரின் கொடூரமும் காற்றும்
நிலைத்திருப்பது மாதிரியாகத் தோன்றியது. நாங்கள் பின்பக்கத்திலிருந்து
(நான் நினைவு கொள்வது மாதிரி) நுழைந்தோம். மூன் நடுங்கியபடி, வாய்
உலர்ந்து, அந்த இரவின் நடப்புகள் சுவாரஸ்யமானதென்று முணுமுணுத்தான்; நான்
அவனின் காயத்திற்குக் கட்டுப்போட்ட பின் ஒரு கோப்பை தேநீர் கொண்டுவந்தேன்:
என்னால் அவனின் “காயம்”’ மேலோட்டமானது என்று தீர்மானிக்க முடிந்தது.
குழம்பிய நிலையில் அவன் திடீரென்று உளறினான்:
“உனக்குத் தெரியுமா நீ ஈடுபட்டது மிக ஆபத்தான காரியம்”.
அதைப்
பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று நான் அவனுக்குச் சொன்னேன். (உள்நாட்டுப்
போரின் பழக்கம், நான் எவ்வாறு இயங்க விரும்பினேனோ அவ்வாறு செயல்படத்
தூண்டியது; மேலும் ஒரு நபர் பிடிபட்டாலும் கூட எங்கள் நோக்கத்திற்கு ஆபத்து
ஏற்படும்).
“அடுத்த நாள் மூன் தன் நிதானத்தை
அடைந்திருந்தான் ஒரு சிகரெட்டை ஏற்றுக் கொண்டு “நம் புரட்சிகர கட்சியின்
பொருளாதார வழிமுறைகள்”’குறித்து என்னை ஒரு கடுமையான விசாரணைக்கு
ஆளாக்கினான். அவன் கேள்விகள் மிகத் தெளிவாய் இருந்தன: நான் (உள்ளபடி)
நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினேன். ஆழ்ந்த துப்பாக்கி வெடி ஓசைகள்
தெற்கைக் குலுக்கின. நம் தோழர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள் என்று
மூனிடம் சொன்னேன். என்னுடைய மேல்கோட்டும் கைத்துப்பாக்கியும் என் அறையில்
இருந்தன; நான் திரும்பியபோது மூன் கண்களை மூடியபடி சோபாவில் நீட்டிப்
படுத்திருப்பதைப் பார்த்தேன். அவனுக்குக் காய்ச்சல் என்று அவன் கற்பனை
செய்து கொண்டான். வலிமிக்க துடிப்பு ஒன்றினைத் தன் தோளில் அவன் வரவழைத்துக்
கொண்டான்.
அந்த கணத்தில் அவனின் கோழைத்தனம் சரி
செய்யவேமுடியாதது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவனைப் பத்திரமாக
இருக்கும்படி குலைந்த தொனியில் வேண்டிக்கொண்டு நான் வெளியே கிளம்பினேன்.
இந்த பயந்த மனிதன் என்னை அவமானத்துக்கு உள்ளாக்கினான். வின்சென்ட் மூன்
அன்றி ஏதோ நான்தான் கோழை என்பது போல. ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும்,
அது எல்லா மனிதர்களும் செய்ததைப் போலத்தான். அந்தக் காரணத்துக்காக
தோட்டத்தில் இழைக்கப்பட்ட ஒரு துரோகம் மனித இனத்தையே மாசுபடுத்துவது
தவறானாதல்ல. அந்தக் காரணத்துக்காக, அதைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு
தனிப்பட்ட யூதனை சிலுவையில் அறைந்தது போதுமானது என்பது நியாயமற்றதாகாது.
ஒருவேளை ஷோப்பன்ஹீரீன் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா
மனிதர்களும், எந்த மனிதனும் எல்லா மனிதனே, ஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த
மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.
“ஜெனரலின்
பிரம்மாண்டமான வீட்டில் ஒன்பது நாட்கள் கழிந்தன. போரின் அவசங்களையும்
வெற்றிகளையும் பற்றி நான் பேசப் போவதில்லை:என்னை அவமானப்படுத்தும் அந்த
வடுவின் வரலாற்றைக் கூற முயல்கிறேன். என் ஞாபகத்தில் அந்த ஒன்பது நாட்கள்,
கடைசி நாளின் முந்திய தினத்தைத் தவிர, ஒரே நாளாகத்தான் இருக்கிறது. அன்று
எங்கள் ஆட்கள் ராணுவக் குடியிருப்புக்களில் நுழைந்தனர். எல்ஃபின்
பிராந்தியத்தில் யந்திரத் துப்பாக்கிகளுக்கு இறையாகிப் போன எங்கள் பதினாறு
தோழர்களுக்கு ஈடாய் மிகச்சரியாக வஞ்சம் தீர்க்க முடிந்தது அன்று.
விடியற்காலையின் தெளிவின்மையில், காலை உதிக்கும் முன் நான் வீட்டிலிருந்து
வெளியேறினேன். இரவு கவியும் சமயத்தில் திரும்பினேன். மேல் மாடியில் என்
தோழன் எனக்காகக் காத்திருந்தான்: அவனின் காயம் அவனை வீட்டின்
கீழ்ப்பகுதிக்கு இறங்க அனுமதிக்க வில்லை. எஃப்.என்.மாட் என்பவரோ அல்லது
க்ளாஸ்விட்ஸ் என்பவரோ எழுதிய யுத்த தந்திரம் பற்றிய தொகுதி ஒன்றை அவன்
கையில் வைத்திருந்தது என் நினைவுக்கு வருகிறது. “தரைப்படையே
எனக்குப்பிடித்த ஆயுதம்”’ என்று ஒரு இரவு என்னிடம் மனம் திறந்து கூறினான்.
எங்களுடைய திட்டங்களைப் பற்றி விசாரித்தான்: அவற்றை விமர்சிக்கவோ அல்லது
மாறுதல் செய்யவோ விரும்பினான். “நமது படுமோசமான பொருளாதார அடிப்படை”யை’அவன்
கண்டனம் செய்யப் பழகியிருந்தான். வறட்டு கொள்கைக்காரனாகவும்
கலகலப்பற்றவனாகவும் இருந்த அவன் ஒரு அழிவிற்கான முடிவை முன்னறிவித்தான்.
“அது ஒரு கொழுந்துவிட்டு எரியும் விவகாரம்”’ என்று முணுமுணுத்தான். உடல்
அளவில் அவன் ஒரு கோழை என்பதை அசட்டை செய்ய வேண்டி அவனின் மன ஆணவத்தைப்
பெரிதாக்கிக் காட்டினான். நல்லதற்கோ, கெட்டதற்கோ, இவ்வாறு ஒன்பது நாட்கள்
கழிந்தன.
பத்தாவது நாள் நகரம் இறுதியாக வேட்டை
நாய்களிடம் சிக்கியது. உயரமான, மௌனமான குதிரை வீரர்கள் சாலையில் திரிந்து
கண்காணித்தார்கள். சாம்பலும் புகையும் காற்றில் மிதந்தது: ஒரு சதுக்கத்தின்
மையத்தில் வீரர்கள் தங்கள் குறிக் கூர்மையை முடிவற்று பயிற்சி
செய்துகொண்டிருந்த ஒரு போலி மனித உருவை விட மெலிதான மனப்பதிவே இருக்கக்
கூடிய அளவில், தரையின் ஒரு மூலையில் மனிதச் சடலம் வீசப்பட்டுக் கிடந்ததைப்
பார்த்தேன். . . . வானில் விடியல் தெரியும் நேரம் நான் கிளம்பினேன்:
மதியத்திற்கு முன் நான் திரும்பிவிட்டேன். நூலகத்தில் மூன் யாருடனோ
பேசிக்கொண்டிருந்தான்; அவன் குரலின் தொனி அவன் தொலைபேசியில் பெசிக்
கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிவித்தது. பிறகு என் பெயர் காதில் விழுந்தது;
பிறகு நான் ஏழு மணிக்குத் திரும்புவேன் என்பதும், பிறகு நான் தோட்டத்தைக்
கடந்து வரும்போது அவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற
குறிப்புணர்த்தலும். என்னுடைய நியாயமான நண்பன் என்னை நியாயமான வகையில்
விற்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு தன் சுயபாதுகாப்பு பற்றிய உறுதி
தரவேண்டும் என்று கேட்டதும் என் காதில் விழுந்தது.”
“இந்த
இடத்தில் என் கதை தெளிவற்றுத் தொலைகிறது. மயக்கமடையச் செய்யும் ஆழ்ந்த
படிக்கட்டுகள் வழியாகவும், பயம் கொள்ளத்தகுந்த கூடங்கள் வழியாகவும் என்னைக்
காட்டிக் கொடுத்தவனைப் பின் தொடர்ந்தேன் என்பது எனக்குத் தெரியும். மூன்
அந்த வீட்டை மிக நன்றாக, என்னைவிட நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான்.
வீரர்கள் என்னை நிறுத்துவதற்கு முன்பு அவனை மடக்கினேன். ஜெனரலின் ஆயுதச்
சேர்ப்புக்களில் ஒரு வளைந்த குறுவாளைப் பிடுங்கி எடுத்தேன். அந்த அரைச்
சந்திரனால் அவனுடைய முகத்தில் என்றென்றைக்குமாக ரத்தத்தினால் ஆகிய
அரைச்சந்திரனைச் செதுக்கினேன்.”
“போர்ஹே, ஒரு அந்நியரான உங்களிடம் இந்த மனந்திறப்பினைச் செய்திருக்கிறேன். உங்களின் வெறுப்பு அவ்வளவாய் என்னை வருந்தச் செய்யவில்லை.”
இங்கு கதை சொன்னவன் நிறுத்தினான். அவன் கைகள் நடுங்குவதை நான் கவனித்தேன்.
“அப்புறம்
அந்த மூன்?”’நான் கேட்டேன் அவன் காட்டிக் கொடுத்துக் பெற்ற பணத்தை
எடுத்துக் கொண்டு பிரேஸீலுக்கு ஓடிவிட்டான். அந்த மதியம், சதுக்கத்தில் ஒரு
போலி மனித உரு சில குடிகாரர்களால் சுடப்படுவதை அவன் பார்த்தான்.
நான் பலனின்றி கதையின் மிச்சத்திற்காகக் காத்திருந்தேன். இறுதியில் அவனை தொடர்ந்து சொல்லச் சொன்னேன்.
அப்பொழுது ஒரு கேவல் அவன் உடம்பை உலுக்கியது: ஒரு மெலிந்த மென்மையுடன் அவனின் வெண்மையான வளைந்த வடுவைச் சுட்டிக் காட்டினான்.
“நீங்கள்
நம்பவில்லையா? அவன் திக்கினான். என் முகத்தின் மீது பெரும் பாதகத்தின்
குறி எழுதப்பட்டு நான் அதைச் சுமந்து திரிவதை நீங்கள் பார்க்கவில்லையா?
கதையின் இறுதிவரை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு
கூறினேன். என்னைப் பாதுகாத்தவனைப் புறக்கணித்தேன் நான். நான்தான்
வின்சென்ட் மூன். இப்பொழுது என்னைப் பழியுங்கள்.”
Translated by Donald A.Yates.
No comments:
Post a Comment