Friday, February 21, 2014

பாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ்

வாரம் ஒரு முறை பாத நகங்களை நன்றாக வெட்டி, சுத்தம் செய்யவேண்டும். நக ஓரங்களில் ஊக்கு, ஊசியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். ஸ்க்ரப்பர் அல்லது காட்டன் துணியின் முனையை வெதுவெதுப்பான நீரில் நனைத்துப் பாதங்கள் மற்றும் நகங்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.

செருப்பு அணியாமல்போனால், கல், முள் போன்றவை நம் கால்களைக் காயப்படுத்திவிடும். இதனால் விரல்களில் நகச்சுத்தி வரலாம். எலுமிச்சைப் பழத்தில் மஞ்சள் கலந்து பத்துப்போடுவதன் மூலம், நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் கல், மண் படிந்துவிட்டால், நல்லெண்ணெய் தோய்த்தத் திரியை விளக்கில் காட்டி, மிதமான சூடில் கால் விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். அழுக்கு தானாக வெளியே வந்துவிடும்.

காலை மற்றும் இரவில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஐந்து நிமிடங்கள் நனைக்கவும். அது புத்துணர்வைத் தருவதுடன் பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மென்மையான தோலில் தயாரிக்கப்பட்ட செருப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், அது பாதத்தைப் பதம் பார்த்துவிடும்.

குழந்தைகளுக்கு தரமான காட்டன் சாக்ஸ்களையே பயன்படுத்தவும். சாக்ஸ் அணியும்போது உட்புறம் ஏதாவது கூரான துகள்கள் சிக்கியுள்ளதா என்று பரிசோதனை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

நல்ல காற்றோட்டமான செருப்புகளை அணிய வேண்டும். பாதத்தில் புண், வெடிப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மருதாணி இலையை விழுதுபோல் நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் தினமும் தடவிவந்தால் வெடிப்பு நீங்கும்.

இரவில் படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு போட்டுப் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, பழைய டூத்பிரஷால் பாதத்தை நன்றாக‌ சுத்தம்செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாத வலி குறைந்து, தூக்கம் தழுவும்.

No comments:

Post a Comment