"செம்மீன்" படத்தில் வரும் "கடலினக்கற போனோரே" பாடல், தமிழ் ரசிகர்களின் மனதில் கிட்டத்தட்ட நாற்ப்பதாண்டுகளுக்கு மேலாக பதிந்து நின்றது என்கிறார்கள் இசை விமர்சகர்கள்.
தமிழ் திரைப்பட காவியங்கள் என்று ரசிகர்களால் சிலாகிக்கப்படும் 'அழியாத கோலங்கள்" படத்தில் வரும் "பூவண்ணம் போல மின்னும்" பாடலை யாரால் மறக்க முடியும் ???
இப்படியான பாடலை நமக்கு தந்து சென்ற இசையமைப்பாளர் "சலீல் சவுத்ரி" அவர்களின் பிறந்த நாள் இன்று. வங்காள இசையமைப்பாளரான இவர் எப்படி தமிழுக்கு அழைத்து வரப்பட்டார் என்று ஒரு கவிதையை போல சொல்லி இருக்கிறார் பாலு மகேந்திரா. இனி பாலு மகேந்திரா என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
சலீல் சவுத்ரி பற்றி பாலு மகேந்திரா:
-------------------------------------------------
பூனே திரைப்படக் கல்லூரியில் எனது படிப்பை முடித்து தங்கப் பதக்கம் வென்று நான் வெளிவந்த வருடம் 1969. செம்மீன் புகழ் ராமு கரியாத், அதற்கடுத்து இயக்கிய நெல்லு என்ற மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை அறிமுகப்படுத்துகிறார். இது வருடம் 1971-ல் நிகழ்கிறது.
நெல்லு படத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி. செம்மீன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். இந்தியத் திரையிசையின் மகா மேதைகளில் ஒருவர் சலீல் சொத்ரி. நெல்லு படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்து பிரமித்துப் போன அவர் என் மீது மிகவும் பிரியமாக இருந்தார். அந்தப் பிரியத்தின் வெளிப்பாடாக அவர் ஒரு நாள் என்னிடம் சொன்னார். ”பாலு நீ இயக்கும் முதல் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன்”. இந்திய இசைவானில் தன்னிகரற்ற தனி நட்சத்திரமாகத் திகழ்ந்த அந்த மகா வித்வானின் அன்புக் கட்டளை அது.
அவர் விரும்பியபடியே,எனது முதற் படமான “கோகிலா”வுக்கு அவரே இசையமைத்து என்னை ஒரு இயக்குனராகத் துவக்கி வைத்தார். அது நடந்த வருடம் 1976. கன்னட கோகிலாவைத் தொடர்ந்து நான் இயக்கிய இரண்டாவது படம் “அழியாத கோலங்கள்” தமிழ்ப்படம். இந்தப் படத்திற்கும் சலீல் சௌத்ரியே இசை அமைத்தார்.
-----------------
இப்படியாகத்தான் தமிழ் திரையுலகிற்கு சலீல் சவுத்ரி கிடைத்தார். இது மட்டுமல்ல "பூவண்ணம் போல மின்னும்" பாடல் மெட்டை அவர் தமிழிலில் மட்டுமல்லாமல், மலையாளத்திலும், வங்காளத்திலும் பயன்படுத்தியுள்ளார்.
1977-ல் மலையாளத்தில் வெளிவந்த “ஏதோ ஒரு ஸ்வப்னம்” படத்தில் யேசுதாஸை வைத்து இதே மெட்டில் ஒரு பாடல் கொடுத்திருக்கிறார் சலீல் சவுத்ரி.
அதே போல் 1980-களில் வெளிவந்த “அந்தர்காட்” என்கிற வங்காள படத்தில் “கிஷோர்குமாரயும், லதா மங்கேஷ்கரயும்” இதே மெட்டில் பாட வைத்தார் சலீல்.
ஒரு தலைமுறை தமிழர்களின் வாழ்வில் ஒன்றாக கலந்துவிட்ட “சலீல் சவுத்ரிக்கு” பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment