Wednesday, November 27, 2013

அற்புதம் !


திசைகளைப் பற்றி அவள் அறிந்திருந்தாள்
எனினும் சூரியனை நோக்கியே திரும்பாத
விடியல்கள் அவளுடையவை…

காற்று வீசும்போது குலுங்கும் மரங்கள்,
இலைகளை அவள் தலைமேல் உதிர்க்கும் போது
அரை மைல் தொலைவு போய்விட்டிருக்கிறாள்….
இலைகள் அவள் சுவடுகளைத் தரிசித்தப்படி
மண்ணில் புரண்டு கொண்டிருக்கின்றன…

காலத்தைவிட்டு எப்போதும்
முன்பாகவே இருக்கிறாள்…
அவளுக்கான கடிகாரம்
இன்னும் செய்யப்படவில்லை!

உடலை விட்டு மனதைப் பிரித்து இயக்கும்
வித்தையை அறிந்திருந்தாள் எனினும்
சித்தர்கள் பட்டியலில்
அவள் பெயர் இருக்கவில்லை...

நூறு குரல்கள் ஒன்றாக ஒலித்தாலும்
மகனின் குரலுக்கு மட்டும்
அதிர்கிறது அவள் செவிப்பறை !

காலத்துக்கும் முன்பான அவள் தாலாட்டுகள்
பலப்பல கம்பி அறைகளைத் தாண்டி
மகனின் அறையில் நிலை கொள்கின்றன…

இளமையைத் தொலைத்த மகனின்
தனிமைக் கொட்டடியில் தொங்குகிறது
உத்தரத்தில் கொக்கிகளற்ற ஒரு தூளி !

எப்போதும் ஆடிக் கொண்டேயிருக்கும்
ஓர் ஆடாத தொட்டில் என்னும் முரணில்
கண்ணயர்ந்து கிடக்கிறது
அகாலத்தின் இருட்டு!

மூளையின் கட்டளையை ஏற்காத இரு
கால்களைக் கொண்டு அவள்
நடந்த தூரங்களை
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனப்
பிரிப்பது இலக்கணப் பிழை!

வெளிச்சத்தைத் தொலைத்த மகனுக்காகக்
கண்களை கட்டி கொண்ட காந்தாரி,
கண்திறந்தால் அண்ட சராசரமும்
அழிவது நிச்சயம் என்பதை
அறிந்தே வைத்திருப்பதால்
தள்ளிப் போகின்றன தீர்ப்புகள்!

அருந்தாத நீர், உண்ணாத உணவு,
உறங்காத உறக்கம் என
இவள் வீட்டுக் கொல்லையில்
மலைபோல் குவிந்திருக்கும்
உயிர் ஆதாரங்களை கேட்டுக்
கையேந்தி நிற்கிறது
பஞ்சத்தில் பரிதவிக்கும் பிரபஞ்சம்!

எண் குறிப்பிட முடியாத அலைவரிசையில்
ஒலிக்கும் இவள் குரலில் நிலைகுலைந்து
மரணம்
அனுப்புகிறது தன் கடைசி
நேயர் கடிததத்தை!

கயிறு இறுகும் போதெல்லாம் தன்
உயிரைப் பிதுக்கி வெளியே அனுப்பி
சடலமாகிறாள்…
கயிறு தளர்ந்த சேதி வரும்போதெல்லாம்
சடலம் அசையத் தொடங்குகிறது…
கூடுவிட்டு கூடுபாயும்
ரகசிய மந்திரத்தை இதுவரை
யாருக்கும் சொன்னாளில்லை!

சிறை வாயிலிலிருந்து பால்முகத்தோடு
ஒரு குழந்தையையும்
ஆடாத ஒரு தூளியையும்
கக்கத்தில் தூக்கிப் போகும் நாளுக்காக
முடியப் பட்டிருக்கிறது
அவள் முந்தானை!

நூறு மைல் நீளமுள்ள தன்கைகளாலும்
கற்சுவர்களைத் துளைத்துச் செல்லும்
இலேசர் கண்களாலுமே
கால் நூற்றாண்டுகள் ஒரு மகனை
வளர்க்க முடிந்த அற்புதத்தை,
அம்மா என்றும் அழைக்கிறார்கள்
தமிழ்நாட்டில் ஆயிரமாயிரமானோர் !



- கவிஞர் தாமரை 

No comments:

Post a Comment