Friday, November 15, 2013

சில விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்:-





வேப்ப விதை:

வேப்ப விதைகளில் மேல் ஓடுகளை எடுத்துவிட்டு பருப்புகளை அரைத்து விஷம் கடித்த இடத்தில் தடவினால் சிறு விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். இந்த பருப்புகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாதநோய்களுக்கு தயாரிக்கப்படும் எண்ணெய்களில் சேர்க்கப்படுகிறது. விதையின் மேல் ஓட்டை எரித்து அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் தலையில் உள்ள நீர் இறங்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வேப்ப எண்ணெயை தடவி வந்தால் நரம்புகள் வலுவடையும்.

முருங்கை விதை:

பிரம்ம விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் முற்றிய விதையை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். மேலும் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும். முருங்கை விதையை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விரைவில் மீளலாம்.

மாங்கொட்டை:

மாம்பழத்தில் உள்ள விதையின் பருப்புகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண் நீங்கும். மேலும் மூலச் சூட்டைக் குறைக்கும். உடலுக்கு வலுவூட்டும்.

புளியங்கொட்டை:

புளிய விதையின் மேல் உள்ள ஓட்டை காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், அதிக உதிரப்போக்கு மாறும். இதன் பருப்பு தாதுவை விருத்தி செய்யும்.

முந்திரி பருப்பு:

முந்திரியின் உள் இருக்கும் பருப்பானது பித்தத்தைக் குறைக்கும். உடலுக்கு வலுவூட்டும். தாதுவை விருத்தி செய்யும். உடல் சூட்டைத் தணிக்கும். குழந்தைக்கு உண்டாகும் மாந்தத்தைப் போக்கும்.

புங்க விதை:

புங்க விதையில் உள்ள பருப்பு தோலில் ஏற்படும் புண், கரப்பான், அலர்ஜி இவற்றைப் போக்கும். இதன் எண்ணெய் வெப்பக் கட்டியைத் தடுக்கும். கண் நோய்களைக் குணப்படுத்தும்.

காட்டுப் புங்க விதை:

இதன் பருப்பானது வயிற்றுக் கடுப்பைக் குணப்படுத்தும். தோலில் ஏற்படும் தேமல், படர்தாமரை போன்றவற்றைப் போக்கும். வாயுத் தொல்லையை குணப்படுத்தும்.

புன்னை விதை:

வாதக் கோளாறுகளைக் குணப்படுத்தும். கருப்பை நோய்களை போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரைப் போக்கும்.

வாதுமை பருப்பு:

கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும். எப்போதும் சோம்பலாக இருப்பவர்கள் வாதுமைப் பருப்பை பாலில் போட்டு கொதிக்க வைத்து தினமும் அருந்திவந்தால் தாது பலப்படும். சோம்பல் நீங்கும்.

ஆமணக்கு விதை:

ஆமணக்கு விதையின் ஓட்டை நீக்கி, பருப்பை பச்சையாக அரைத்து அல்லது நன்றாக நசுக்கி அனலில் வதக்கி கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்து கட்டிகள் குணமாகும்.

ஆமணக்கு விதையின் பருப்பை பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட்டு வந்தால் உடலில் உண்டான வீக்கங்கள் குணமாகும். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடல்வலி மற்றும் மலச்சிக்கலைப் போக்கும்.

No comments:

Post a Comment