மூச்சுத் திணறல், சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த மன்னா டே கடந்த 5 மாதங்களாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் வியாழக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி சுலோசனா, கடந்த ஜனவரி மாதம் காலமானார்.
மூத்த மகள் ஷுமிதாதேப் பெங்களூருவிலும், மற்றொரு மகள் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். பிரபோத் சந்திர டே என்ற இயற்பெயர் கொண்ட மன்னா டே 1919-ஆம் ஆண்டு, மே 1-ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
தனது தந்தையின் உடன் பிறப்பான இசையாசிரியர் கே.சி. டேயின் மீது கொண்ட ஈர்ப்பால் இசையில் ஆர்வமிக்கவரானார்.
கே.சி. டே மற்றும் உஸ்தாத் தாபீர் கானிடம் ஹிந்துஸ்தானி இசையை முறையாகப் பயின்றார். முதல் முறையாக 1943-ஆம் ஆண்டு ஹிந்தித் திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். மலையாளத்தில் "செம்மீன்' என்ற திரைப்படத்தில்
"மானச மைனே வரூ' என்ற பாடல் மூலம் தென்னிந்திய திரைப்பட உலகிலும் பிரபலமானார்.
இதுவரை குஜராத்தி, வங்கமொழி, மலையாளம், மராத்தி, ஹிந்தி, அசாமி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொத்தம் 3,500 பாடல்களைப் பாடியுள்ளார். இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
1991-இல் ஹிந்தி திரைப்படமான பிரஹாரில் "ஹமாரி ஹி முத்தி மே' என்ற பாடலே இவர் பாடிய கடைசிப் பாடலாகும். தமிழ்த் திரைப்படங்களில் மன்னா டே பாடியதில்லை.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: மன்னா டேயின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். "படைப்புத் திறன் வாய்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகரை இந்தியா இழந்துள்ளது. தனது இனிமையான குரலால் பார்வையாளர்களை தன்வசப்படுத்தியவர் மன்னா டே' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேபோல, "பன்முகத் தன்மை கொண்ட கலைஞரை இசை உலகம் இழந்துள்ளது' என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், "இந்தியா மிகப்பெரிய இசை மேதையை இழந்துவிட்டது' என்று சோனியா காந்தியும் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
மன்னா டேவின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலி: பெங்களூருவிலுள்ள ரவீந்திர கலாúக்ஷத்ராவில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்னா டே உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக அரசு சார்பில் அமைச்சர் உமாஸ்ரீ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகை தாரா, பின்னணிப் பாடகர்கள் பி.கே.சுமித்ரா, யஷ்வந்தஹலபண்டி, சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்ராவ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ஹெப்பாள் மின் மயானத்தில் மன்னா டேயின் உடல் வங்காள மரபுப்படி தகனம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment