Monday, July 29, 2013

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.

கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.

தமிழ்நாடகத்தின் தொன்மை
·          தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.
·          சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.
·    அகத்தியம்,குணநூல், கூத்தநூல், சயந்தம்மதிவாணர் நாடகத் தமிழர்,  முறுவல் போன்ற  நாடக நூல்கள்பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுச் செல்கிறார்.

சங்ககால கூத்துகள்
       குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்துவகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது.

இருவகை நாடகங்கள்
       வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை இருவகையாகப் பகுக்கலாம். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும், பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும்.

இருண்ட காலம்
       சமண, புத்த சமயங்கள் கலைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருண்ட காலத்தில் நாடகத்தமிழ் ஒளியிழந்தது.

பல்லவர் கால நாடகங்கள்
       நாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும் நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லை. இக்காலத்தில் மகேந்திர வர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்“ என்ற நாடகநூல் புகழ்பெற்றிருந்தது. இன்னிசைக்கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.

சோழர் கால நாடகங்கள்
       சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச்சிறப்பைப் பாராட்டும் “இராஜராஜவிஜயம்“ நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

தமிழ் நாடகத்தின் எழுச்சி
       இசுலாமியர் படையெடுப்புக்குப் பிறகு கலைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளரஆரம்பித்தன. குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
·   காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாகும்.
·   மேடைநாடக அமைப்புக்கு முன்மாதிரியான, நவாப் கோவிந்தசாமி ராவ் அவர்களை தமிழ்நாடகத்தின் தாத்தா என்று அழைப்பர்.

தமிழ் நாடக மூவர்         
       பம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.
1.பம்மல் சம்பந்தம் – இவர் எழுதிய மொத்த நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைகப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும்.
2.பரிதிமாற் கலைஞர் – நாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
3.சங்கரதாசு சுவாமிகள்- முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர்.  அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன், நல்லதங்காள், பிரகலாதன்  உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்.

தமிழ் நாடகக் குழுக்கள்
·          பம்மல் சம்பந்தம் முதலியார் – சுகுணவிலாச சபை
·          சங்கரதாசு சுவாமிகள் - சமரசசன்மார்க்க சபை
·          சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் – பாலமனோகரசபா
என்.எஸ்.கே, பாலாமணி அம்மையார், கே.பாலசந்தர், எஸ்வி.சேகர், விசு ஆகியோரும் நாடகக்குழுக்கள் வைத்து நாடகம் வளர்த்தனர்.

நாடகங்களின் வகை
       நாவல்களைப் போலவே தமிழ்நாடகங்களையும் புராண நாடகம், இலக்கிய நாடகம்  துப்பறியும் நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என வகைப்பாடு செய்ய இயலும் சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய தோன்றின.பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும்.இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவு கிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம், பாரதிதாசனின் – பிசிராந்தையார், மறைமலையடிகளின்- அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.

முடிவுரை

       இன்றை சூழலில் கல்விச்சாலைகளில் ஓரங்கநாடகம், நாட்டிய நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன, வார, மாத இதழ்களிலும், வானொலி தொலைக்காட்சிகளிலும் நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன. இன்று அதிகமான தொழில்நுட்பங்களோடு நிறைய படங்கள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மேற்கண்ட நாடகங்களையும் அக்கலையை வளர்த்த சான்றோர்களையும் தமிழுலகம் என்றும் மறவாது.

No comments:

Post a Comment