Monday, July 15, 2013

மலைக்கோட்டை

திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது மலைக்கோட்டையாகும். காவிரியின் தென்கரையில் இது கம்பீரமாக அமைந்துள்ளது. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் இது மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது.
இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.

இம்மலையின் இடைக்கோயிலின் மூலவரான செவ்வந்திநாதர் தாயுமானவர் என்றழைக்கப்படுவதற்கு ஒரு கதை கூறப்படுவதுண்டு. அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு புரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து, அதன் காரணமாகத் தாயும் ஆனவன் எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவர்.

இராமாயணப் போருக்குப் பின்னர், இராமேஸ்வரம் துவங்கி இந்தியாவின் பல கோயில்களையும் தரிசித்த விபீஷணர், பள்ளி கொண்ட பெருமானை இலங்கைக்கு எடுத்து செல்ல விரும்பினாராம். அவ்வாறு அவர் செல்கையில், வழியில் காவிரியாறும் கொள்ளிடமும் குறுக்கிட்டன. அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவனிடம் பள்ளி கொண்ட நாதர் சிலையைக் கொடுத்து, தமது காலைக் கடன்களைக் கழிக்கச் சென்றார் விபீஷணர். சிறுவனாக வந்தவனோ விநாயகன். அவன், பள்ளி கொண்ட நாதர் அங்கிருந்து செல்வதை விரும்பாதவனாகச் சிலையை கீழே வைத்து விட, அச்சிலை அங்கேயே நிலை பெற்று விட்டது. திரும்பி வந்த விபீஷணர் அதனைப் பெயர்க்க இயலாது கோபமுற்று சிறுவனின் தலையில் குட்டியதாகவும், அவ்வாறு குட்டியதன் வடு இன்றும் உச்சிப் பிள்ளையாரின் பின் தலையில் காணலாம் என்றும் கூறுவர். அவ்வாறு பள்ளி கொண்ட நாதர் நிலைபெற்று விட்ட இடமே திருவரங்கமாகப் போற்றப்படுகிறது. பள்ளி கொண்ட நாதர் அரங்க நாதராகத் திகழ்கிறார்.

பல்லவர்களால் சிறு குகைக் கோயிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலைப், பின்னர், இதன் இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்ட நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோயில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது.

மதுரை நாயக்க வம்ச அரசர்களின் தலைநகரமாக இந்த மலை இருந்தமையால், இது பல பெரும்போர்களைக் கண்ணுற்றது. விஜய நகரப் பேரரசர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போர் அவற்றில் ஒன்றாகும். நாயக்கர்களின் வடமேற்கு அரணாக இக்கோட்டை விளங்கியது. அவர்களது அரசாட்சியின் இறுதி நூற்றாண்டுகளில் தஞ்சை மாயக்கர்கள், பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் மற்றும் படையெடுத்து வந்த பிஜாப்புர், மைசூர் மற்றும் மராத்திய அரசர்களிடமிருந்து இக்கோட்டை அரணாகக் காத்து வந்தது.

திருச்சி மலைக்கோட்டை சந்தா சாஹிப் மற்றும் ஆற்காட்டு அலி ஆகியோரிடையே நிகழ்ந்ததான (உண்மையில் ஃபிரெஞ்சுப் படைகளுக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையில் நிகழ்ந்த) போருக்காக மிகவும் நினைவு கூறப்படுகிறது. ஆங்கிலப் படைகளிடமிருந்து தப்பி இக்கோட்டையில் ஒரு குகையினுள் சந்தா சாஹிப் ஒளிந்து கொண்டதாகக் கூறுவர்.
இப்போருக்குப் பிறகு, 18ஆம் நூற்றாண்டில், திருச்சி அநேகமாக ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்து விட்டது. மலைக்கோட்டையின் கதவு முதன்மை அரண் கதவு (Main Guard Gate) எனப்படலானது. இன்றும் அது அப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. இதனருகிலேயே ராபர்ட் கிளைவ் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் உள்ளது. மலைக் கோயிலை ஒட்டிய மேற்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் இது உள்ளது.

No comments:

Post a Comment