Tuesday, April 2, 2013

தன்மாத்ர (மலையாள திரைப்படம்)

தன்மாத்ர (மலையாள திரைப்படம்) - நான் பார்த்து வியந்த படம். மலையாளப் படவுலகில் ஒரு மிகப் பெரிய பரபரப்பை இப்படம் திரைக்கு வந்தபோது உண்டாக்கியது. படத்தின் கதாநாயகன் மோகன்லால். 2005 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி.பி.பத்மராஜன் எழுதிய ‘ஓர்ம’ (ஞாபகம் அல்லது நினைவு என்று அர்த்தம்) என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
அல்ஸெய்மர் ((Alzheimer) என்ற ஞாபக மறதி நோயை மையமாக வைத்து அமைக்கப்பட்டதே இப்படத்தின் திரைக் கதை.
ரமேஷன் நாயர் கேரள அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஒரு அலுவலர். மிகவும் நேர்மையான மனிதன் அவன். அவனுடைய மனைவி லேகா. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மகன் மனு ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறான். மகள் மஞ்சு ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். அழகான, சந்தோஷமான குடும்பம் அது. ரமேஷன் நாயர் படிக்கும் காலத்தில் மிகப் பெரிய திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் இருந்தவன். அவன் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், அது நடக்காமல் போய் விட்டது. தன் மகன் மனுவை நிச்சயம் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக கொண்டுவர வேண்டும் என்ற தீவிரமான இலட்சியத்துடன் இருக்கிறான் ரமேஷன். அதற்காக தனக்கு தெரிந்த விஷயங்களையெல்லாம் தன் மகனுக்கு அவன் கற்றுத் தருகிறான். ரமேஷன்தான் எல்லா பாடங்களிலும் நல்ல அறிவு உள்ளவனாயிற்றே! மனு பள்ளி முடிந்து வந்த பிறகு, கணக்கு, வரலாறு, அறிவியல், ஆங்கிலம், மலையாளம் என்று எல்லா பாடங்களிலும் மேலும் தெரிந்திராத விஷயங்களை அவனுக்கு கற்றுத் தருகிறான்.
ஒரு நொடியில் உலகத்திலுள்ள எந்த விஷயத்தையும் கூறக் கூடிய , ஒரே விநாடியில் எவ்வளவு பெரிய கணக்கிற்கும் விடை சொல்லக் கூடிய ரமேஷனின் அபாரமான நினைவாற்றலைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.
ரமேஷனின் ஞபாக சக்தியைப் பார்த்து, மனு படிக்கும் பள்ளிக் கூட விழாவிற்கே சிறப்பு விருந்தினராக அவனை அழைக்கிறார்கள்.
வாழ்க்கை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் போய்க் கொண்டிருக்கும் போது, திடீரென்று அந்த மாற்றம் நிகழ்கிறது.
ரமேஷன் தன்னுடைய நினைவாற்றலை படிப்படியாக இழக்கிறான். முன்பு இருந்த அந்த அபார திறமை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. காலப் போக்கில் ஞாபக சக்தி என்ற ஒன்றே இல்லாமற் போகிறான் ரமேஷன்.
விளைவு ?
சம்பந்தமில்லாமல் ஒவ்வொரு காரியத்தையும் அவன் செய்கிறான். அலுவலகத்திலிருந்து கொண்டு வந்திருந்த ஃபைலை ஒரு நாள் அவன் ஃப்ரிட்ஜில் கொண்டு போய் வைத்திருக்கிறான். இன்னொருநாள் காலையில் காய்கறி வாங்கிய கூடையுடன் அலுவலகத்திற்குள் நுழைகிறான். அங்கு போய் குளியலறையில் வீடு என்று நினைத்து, குளிக்க ஆரம்பிக்கிறான். அவனுடைய மேலதிகாரிகளும், உடன் பணியாற்றுபவர்களும் அவனுடைய நிலையைப் பார்த்து பயந்து போகின்றனர்.
அவனுடைய நெருங்கிய நண்பனான ஜோஸப் அவனை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான்.
மருத்துவமனையில் அவன் ‘அல்ஸெய்மர்’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர் கூறுகிறார். அதன் விளைவாகத்தான் அந்த ஞபாகக் குறைவு ம், நினைவாற்றல் இல்லாத நிலையும்...
அதன் தொடர்ச்சியாக - மகிழ்ச்சியுடன் இருந்த அந்த குடும்பம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மடை திறந்த வெள்ளம் போல இருந்த ரமேஷன் ஒரு சிறு குழந்தையைப் போல மாறி, நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கிக் கொண்டும், தாறுமாறாக வட்டங்களை வரைந்து கொண்டும் இருக்கிறான். பேசும்போது வாய் ஒரு பக்கம் கோணுகிறது. தன் தந்தையின் மீது உயிரையே வைத்திருந்த மகன் மனு நிலைகுலைந்து போகிறான்.
இந்த நிலையில் அவனுடைய தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்பாவின் மோசமான நிலைமையை நினைத்து, அழுது கொண்டிருக்கும் அவனால் நல்ல முறையில் தேர்வு எழுத முடியுமா?
ரமேஷனின் நோயின் முடிவு என்ன? அவன் அதிலிருந்து தப்பித்தானா? அந்த குடும்பத்தின் நிலைமை என்ன ஆனது? மனு தேர்வு எழுதினானா? வெற்றி பெற்றானா?
ரமேஷன் நாயராக.... மோகன்லால். இப்படியொரு கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத நடிப்புத் திறமையை அவரைத் தவிர வேறு யாரிடம் பார்க்க முடியும்? பாத்திரமாகவே மனிதர் வாழ்ந்திருக்கிறாரே! அதுவும் இறுதிப் பகுதி காட்சிகள் இருக்கின்றனவே ! - மோகன்லாலை தலையில் வைத்து ஆட வேண்டும் போல நமக்கு இருக்கும்.
ரமேஷனின் மனைவி லேகாவாக - மீரா வாசுதேவன் ( பொருத்தமான தேர்வு)
மகன் மனுவாக - அர்ஜுன்லால்... ( அடடா... என்ன நடிப்பு !)
மகள் மஞ்சுவாக... குழந்தை நட்சத்திரம் நிரஞ்ஜனா.
ரமேஷனின் தந்தையாக - நெடுமுடி வேணு
ரமேஷனின் நண்பன் ஜோஸபாக - ஜெகதி ஸ்ரீ குமார்
டாக்டராக - பிரதாப் போத்தன்
லேகாவின் தந்தையாக - இன்னஸென்ட்
ரமேஷன் நாயரின் இளம் வயது தோழியாக - சீதா
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த புதுமுகம் (அர்ஜுன்லால்)- ஆகிய விருதுகளை கேரள அரசாங்கத்திடமிருந்து பெற்ற ‘தன்மாத்ர’ 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
மோகன்லாலின் கலையுலப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மைல் கல் இந்த படம்.
thanks 
Subbiah Rajasekar

No comments:

Post a Comment