ஜமைக்காவில் கறுப்பின மக்கள் சரியாக நடத்தப்படாத
காலம் அது; ரப்பர் தோட்டங்களில் மிகவும் இன்னல்களுக்கு வெள்ளையர்களால்
உள்ளாக்கபட்டார்கள். மார்லி தெருவோரம், கடைநிலை மக்கள் வாழும் இடங்களில்
ஒலித்த ரெகே இசையை விரும்பி கற்றார். தன் இசையால் பிரபலம் ஆனார்; ஆனால்
ராயல்டி தராமல் ஏமாற்றிய பொழுது ப்ளாக்வெல் எனும் வெள்ளையரோடு சேர்ந்து
கொண்டார்; ஒழுங்காக பணம் வர ஆரம்பித்தது. அவரின் இசை மூன்றாம் உலக
நாடுகளின் மக்களின் குரலாக ஒலித்தது.
ரப்பர் தொழிலாளிகளின் கண்ணீரை வடித்தார்; எளிய மக்களின் இசையாக
பார்க்கப்பட்ட ரெகே இசை இவரால் உலகம் முழுக்க பிரபலம் ஆனது. இவரின்
இசைக்கோர்வைகள் மூன்றாம் உலக நாடுகளின் முதல் பாப் நட்சத்திரம் என்கிற
அந்தஸ்தை இவருக்கு வழங்கியது. அன்பினால் ஒரே உலகம் செய்வோம் என்கிற
தொனிப்பொருளில் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டன.
இவர் அமெரிக்கா
போனபொழுது இசை நிகழ்வை ஒரு நாடகத்தோடு நடத்த கூப்பிட்டவர்கள் இவரின் இசை
நிகழ்வு நாடகத்தை விட ஹிட் ஆனதால் பாதியிலேயே வெளியேற்றினார்கள்.
காசில்லாமல் நடுத்தெருவில் நின்றவர் தப்பித்து நாடுவந்து சேர்ந்தார்.
போரிட்டுக்கொண்டு இருந்த ஜமைக்காவின் குழுக்களுக்கு இடையே அமைதியை உண்டு
செய்ய ஸ்மைல் ஜமைக்கா எனும் இசை நிகழ்வை நடத்தப்போக அது உயிருக்கே
ஆபத்தானது.
விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி
ஏந்திய குழு இவரையும் மனைவியையும் தாக்க இசை நிகழ்வு நடக்காது என
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டோடு வந்தார் மனிதர்; பாடினார். 80,000
பேர் திரண்டார்கள்.
36 வயதில் கேன்சரால் இறந்து போனார். பணத்தை
ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவர்; பலநாள் தன் வளர்ந்த அழுக்கு நிறைந்த
சாலையில் படுத்து இதுதான் ஏகாந்தம் என பூரிப்பார். அவரின் மறைவுக்குபின்
அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதை அமெரிக்கா வழங்கியது;
டைம் இதழ் அவரின் பாடல் மற்றும் ஆல்பங்கள் நூற்றாண்டின் மில்லினியத்தின்
சிறந்த இசைக்கொர்வைகளாக வெள்ளையர்களின் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகின்றன .
ஸ்மைல் ஜமைக்கா இசை நிகழ்வின் பொழுது "நீங்கள் உயிருக்கு பயப்படவில்லையா?"
எனக்கேட்ட பொழுது "உலகத்துக்கு தீமை செய்பவர்களே பயப்படாத பொழுது இந்த
உலகை அன்பால் நிறைக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும்?" எனக் கேட்டார்.
அதுதான் மார்லி!
- பூ.கொ.சரவணன்
No comments:
Post a Comment