Friday, September 7, 2012

கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகம்.
____________________________________
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள்ஏறு
ஒன்று உடையானை, உமை ஒருபாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிரு(ம்)மே.

கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதிஉடன் வைத்தல் பழி அன்றே?

மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி,
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும்
எம்தம்(ம்) அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.

துறை மல்கு சாரல், சுனை மல்கு நீலத்துஇடை வைகி,
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி,
கறை மல்கு கண்டன், கனல்எரிஆடும் கடவுள்(ள்), எம்
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே!

கொலை வரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும்
சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்!
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளைநிறம் ஆமே?

வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே?

வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மே செல்வனார்,
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார்,
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே!

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன்தன்
தலை கலன்ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார்---
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால்,
சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!

அரப்பள்ளியானும் அலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

நாணாது உடைநீத்தோர்களும், கஞ்சி நாள்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல்
பேணாது, உறு சீர் பெறுதும் என்பீர்! எம்பெருமானார்
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!

தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமலஊரில் கவுணியன்---
ஞானசம்பந்தன்---நலம் மிகு பாடல்இவை வல்லார்
வான சம்பந்தவரொடும் மன்னி வாழ்வாரே.

No comments:

Post a Comment