Monday, August 6, 2012

நயினாதீவு மகா வித்தியாலயம்



இலங்கையின் இலவசக்கல்வியின் தந்தை என கூறப்படும் திரு சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா அவர்களின் பெருமுயற்சியால் கிராமங்கள் பலவற்றிலும் அரசாங்க பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவ்வகையில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய நயினை அம்மன் குடியிருந்து அருள்பாலிக்கும் நயினாதீவிலும் 1946 ஆம் ஆண்டு தைத்திங்கள் 17ஆம் நாள் 228 மாணவர்களுடன் ஒரு கனிஸ்ட ஆங்கிலப் பாடசாலை நிறுவப்பட்டது.

நயினாதீவின் கண்ணே இருந்த பல பெற்றோருடைய பெருமுயற்சிகளையும் அவவர்களுடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக நின்று ஊக்கமும் ஆக்கமும் அளித்த சேர். வைத்தியலிங்கம் துரைச்சாமி அவர்களுடைய தூர சிருஸ்டியையும் அப்போது வடபகுதி கல்வி அதிகாரியாக இருந்த திரு வி. கே. நாதன் அவர்களுடைய உறுதுணையையும் இப்பாடசாலையின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாயமைந்தன. சேர் வைத்தியலிங்கம் துரரைச்சாமி அவர்கள், ஊர்காவற்றுறைத் தொகுதி அரசசபை உறுப்பினராகவும் சபாநாயகராகவும் இருந்து அளப்பரிய சேவையாற்றியவர். யாழ்ப்பாணத்தை அண்டிய ஏனைய தீவுகளிலெல்லாம் தனித்தனி மகா வித்தியாலயங்கள் அமைந்திருக்க நயினாதீவு மட்டும் புறக்கணிக்கப்பட்டிருந்த வேளையில் அவர், அப்போது கல்வி அமைச்சராயிருந்த திரு. கன்னங்கரா அவர்களுடன் கலந்து நயினாதீவில் ஒரு கனிஸ்ட ஆங்கிலப் பாடசாலை நிறுவ அனுமதி பெற்றுத் தந்தார்.
பாடசாலைக்கான கட்டடமோ நிலமோ இல்லாத போதிலும் முதலாம் வட்டாரத்திலிருந்த திரு மாரிமுத்து அவர்களினால் யாத்திரிகர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த மடத்தில் கனிஸ்ட ஆங்கிலப் பாடசாலை நயினையிலுள்ளோர் கண்டு கண்குளிர கால் கோள் பெற்றது. ஒரு வருட காலம் வரை மேற்படி மடத்தில் இயங்கி வந்த பாடசாலை பெற்றோரின் தளராத உழைப்பினால் 1947 ஆம் ஆண்டு புதுப்பொலிவுடன் சொந்தமான ஒரு தற்காலிக அமைப்பிலே உருவாகியது. இந்தப் புதிய இருப்பிடத்திற்கு கிறிஸ்தவ சமய நிறுவனத்தார் காணியினை அன்பளிப்பாய் வழங்கினர். புதிய இருப்பிடத்தில் அமைந்த பாடசாலைக்கான தற்காலிக இருக்கையை பெற்றோர்களே அமைத்தார்கள்.
இப்பாடசாலை ஆரம்பத்தில் அரசாங்கக் கனிஸ்ட பாடசாலையாகவும் பின்னர் சிரேஸ்ட பாடசாலையாகவும் அதன் பின்னர் மகா வித்தியாலயமாகவும் தரமுயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் பாடசாலையில் தற்காலிக அதிபராக திரு எஸ். அரசன் அவர்கள் கடைமையாற்றினார்கள். பின்னர் 12.02.1946 தொடக்கம் நிரந்தர அதிபராக திரு எஸ். கந்தப்பு அவர்கள் பதவியேற்று ஏழு ஆண்டுகள் கடமையாற்றினார்கள். பாடசாலை வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து பிறருக்காக வாழ்ந்து உறக்கமும் காணாது உழைத்து கருமமே கண்ணாயிருந்து நயினையின் மதிப்பிற்குரிய பெரியவராய் வாழ்ந்து சபையிலே மக்களை கவந்திழுக்கச் செய்தார் அன்று சுயமொழியில் சிரேஸ்ட பாடசாலைத் தரத்திலிருந்து பல மாணவர்களை குறுகிய காலத்தில் ஆங்கில மொழி மூலம் பயிற்றுவிக்க ஆவண செய்து ஆக்கமும் ஊக்கமும் தந்தார். ஆங்கிலக் கல்வியின் பொருட்டு அன்றைய ஆசிரியர்கள் எடுத்த முயற்சி இங்கு குறிப்பிடத்தக்கது. பாடசாலையைத் தரிசித்த மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் பலவற்றையும் இன்றும் பதிவுப் புத்தகங்களில் காணலாம்.
திரு. கந்தப்பு அவர்களைத் தொடர்ந்து திரு. சண்முகம் அவர்கள் நான்கரை ஆண்டுகளும், திரு. கனகரெத்தினம் அவர்கள் ஏழு ஆண்டுகளும், திரு சபா ஆனந்தா நான்கு வருடங்களும் அதிபர்களாகக் கடமையாற்றினர். முன்னைய அதிபர் விட்ட பணியை சிரமேற் கொண்டு இவர்கள் செயற்பட்டனர். இவர்களுடைய காலத்தில் நிரந்தரக் கட்டமைப்புக்களும், வகுப்பறை வசதிகளும் உண்டாயின. திரு சண்முகம் அவர்களின் காலம் தொட்டு பாடசாலை இரு நேரப் பாடசாவலயாக அமைக்கப்பட்டு நேரசூசியும் அமைக்கப்பட்டது. விஞ்ஞானக்கல்வி அவசியம் பெற்றோரினால் உணரப்பட்ட போதிலும் கனகரெத்தினம் அவர்களுடைய காலத்தில் தான் கைகூடியது. அவர் ஒரு விஞ்ஞானப் பட்டடதாரியாக இருந்தமையினால் அன்னார் பாடசாலையில் அதிபராக நியமனம் பெற்றமை விஞ்ஞானக் கல்வியைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தியது. மாணவர்களுடைய ஆர்வமும் பெற்றோர்களுடைய ஊக்கமும் இத்துறையில் அவருக்குக் கிடைத்தமையினால் அரசிடமிருந்து உபகரணங்களையும் விஞ்ஞானக் கணித ஆசிரியர்களையும் பெறக் கூடியதாகவிருந்தது. பல மாணவர்கள் திரு கனகரெத்தினம் அவர்களுடைய காலத்திர் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் விஞ்ஞானப் பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்று இன்று அத்துறையில் முன்னோடியாகத் திகழ்கின்றனர்.
எனினும் விஞ்ஞானக் கல்வியில் நயினாதீவு மகா வித்தியாலயம் பூரண்த்துவம் அடைந்துவிட்டதென்று சொல்லுவதற்கில்லை. ஆசிரியர் பற்றாக்குறை ஆரம்ப காலந் தொடக்கமே இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் 1 – 10 வகுப்புக்கள் வரையும் பின்னர் 6 – 10 வகுப்புக்கள் வரையும் அதன் பின்னர் 6 – 12 ஆம் வகுப்பு வரையுமுடைய பாடசாலையாக வளர்ந்து வருகின்றது. தற்போது க.பொ. த(உயர் தர) கலை, வர்த்தக வகுப்புக்களை உள்ளடக்கிய 1C பாடசாலையாக உள்ளது. திரு கனகரெத்தினத்துக்கு பின் திரு சபானந்தா அவர்கள் 4 ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றினார். இவர் பல ஆண்டுகள் அதிபராக இருந்து பெரிய கல்லூரிகளில் ஆற்றிய பணிகளை கல்வி உலகு நன்கு அறியும். இவருடைய காலத்தில் பாடசாலை எளிலும் திருவும் பெற்றதெனலாம். இன்றிருக்கின்ற அழகுத் தோற்றத்திற்கு அன்னாரே முதலில் வழிவகுத்தார். இவருடைய காலத்தில் வர்த்தகக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
திரு ஆனந்தா அவர்களுக்குப் பின் திரு. விஸ்வலிங்கம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். பல ஆண்டுகளாக பாடசாலையில் தலைமையை ஏற்று நடத்திய அவருக்கு பல்துறை அனுபவங்கள் உண்டு. முக்கியமாக நிர்வாகத்துறை அவரின் வருகைக்குப் பின்னர் புது மெருகு பெற்றது. அத்துடன் கல்வியில் உள்ள அக்கறையும் பாடசாலையின் புனிதத்தைப் பேணுவதில் அவருக்குள்ள பற்றும் எமது பாடசாலையை ஓர் ஆலயமாக்கிவிட்டதென்றே சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் பலதுறைகளிலும் பாடசாலை வளர்ச்சி கண்டுள்ளது. அவர் காலத்திலும் பின்னும் நயினை மகா வித்தியாலயம் பெற்றுள்ள சிறந்த பரீட்சைப் பெறுபேறுகள் அவருடைய அயராத முயற்சிக்கு எடுத்துக்காட்டாகும்.  திரு வே. விஸ்வலிங்கம் அவர்கள் 12.07.1978 வரை அதிபராகக் கடமையாற்றினார்.
தற்போது அதிபராக திரு குணசேனன் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.

No comments:

Post a Comment