Tuesday, August 7, 2012

நயினாதீவுச் சுவாமிகள்


உலகெங்களும் உள்ள சக்திபீடங்கள் அறுபத்துநான்கில் நயினாதீவு நாகபூஷணி ஆலயமும் ஒன்றாகும். இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் எனபதுவும் இதுவே. மணிமேகலையும் மணிமேகலா தெய்வமும் வரப்பெற்ற இடமாகும். நயினாதீவு முற்காலத்தில் சிறந்ததொரு துறைமுகமாகவும் விளங்கியது. மணித்தீவு, மணிநாகதீவு, நாகதீபம் என்ற பெயர்களும் இத்தீவிற்கு உண்டு. பாரத நாட்டிலிருந்து வருவோர் அம்பிகையை தரிசிக்க தவறுவதில்லை.
நான்கே நான்கு மைல் சுற்றளவுள்ள இத்தீவில் பெரும்பகுதியோர் சைவவேளான் மரபைச்சார்ந்தவர்களாகும். இம்மரபிலே ஆறுமுகம் எனும்பெரியார் ஒருவர் வாழ்நதார். அவருக்கு ஒரு மகன். அம்மகனுக்கு முத்துக்குமாரசாமி என்று நாமகரணம் சூட்டினர். இந்த முத்துக்குமாரசாமியே பிற்காலத்தில் நயினாதீவுச் சாமியார் என்று அழைக்கப்பட்டார்.
உரிய காலத்தில் ஆரம்பக்கல்வி பெற்றார். அக்கால இளைஞர்களில் பெரும்பாலானோர் ஆரம்பக்கல்வி முடிந்ததும் முடியாததுமாக யாழ்ப்பாண நகருக்கோ, கொழும்புக்கோ அன்றி கண்டி போன்ற பட்டினங்களுக்கோ சென்றுவிடுதல் வழக்கமாக இருந்தது. முத்துக்குமாரசாமி ஆரம்பக்கல்வி முடிந்ததும் கொழும்புக்குச் சென்று ஒரு வர்த்தக நிலையத்தில் வேலைக்கு அமர்ந்தார். முத்துக்குமாரசாமி வர்த்தக நிலையத்தில் சிப்பந்தியாக வேலை பார்த்தாலும் மனம் இறைபணியையே நாடி நின்றது. ஒருநாள் வர்த்தக நிலைய அதிபர் இவரை ஏசிவிட்டார். அந்த வன்சொல்லை அவரால் பொறுக்க முடியவில்லை.
ரமண பகவானுக்கு பதினாறு வயதாயிருக்கும்போது இவரது தமையனார் இவர் ஒழுங்காக படிப்பதில்லை என்பதை மனதிற்கொண்டு இப்படிப்பட்டவனுக்கு இங்கு என்ன வேலை என்று ஏசினார். இந்த ஏச்சு மனதில் தைக்க, ‘இது நல்ல விடயத்தை நாடிச்செல்லுகின்றது, இதையாரும் தேடவேண்டாம்” என்று ஒரு கடிதத்திலே எழுதிவைத்துவிட்டு திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டார். இவருடைய துறவுக்கு இவரது தமையனாரே காரணம் ஆனார்.
இச்செய்தி போன்றுதான் முத்துக்குமாரசாமியும் ஒரு சீட்டுக்கவி மாத்திரம் எழுதிவைத்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கடையைவிட்டு சென்றுவிட்டார். கவி ஒரு விரசமான கவிதான். ஆனால் அந்த நேரத்து மனஉணர்வை அக்கவி படம்பிடித்து காட்டுகின்றது. பல இடங்களிலும் தேடினார்கள். ஊரிலும் தேடினார்கள். முத்துக்குமாரசாமி சென்ற இடத்தை யாரும் அறியார். துறவுக்கேற்ற பக்குவநிலை ஏற்படும்போது சிறு சம்பவங்கள் கூட துறவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
அக்காலத்திலே இந்தியாவுக்கு சென்று வருவதில் எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. முத்துக்குமாரசுவாமியாருடைய உள்ளம் இறைவனை நாடி இருந்தமையால் தலயாத்திரை மேற்கொண்டார்.
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த்த தொடங்கினர்க்கு
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே
என்ற தாயுமானவரின் வாக்குப்படி இவரது யாத்திரை வீண்போகவில்லை. இவரிடத்து விளங்கிய தெய்வபக்தி, ஞானம், தூய்மை, மனஅடக்கம், இன்சொல், அருளோடு கூடிய நோக்கு, எந்த நேரமுஞ் சிவசிந்தனை ஆகிய குணங்கள் இவரைத் தகுந்த ஒரு குருவிடம் கொண்டு சென்று சேர்த்தன. அவரோடு பல ஆண்டுகள் தங்கிக் குரு உபதேசமும், சந்நியாசமும் பெற்றுக்கொண்டார். இவரது பக்குவநிலை அறிந்த குருநாதர் நீ உனது ஊருக்கு செல்லலாம் என்று உத்தரவு கொடுத்தார். குருநாதரை பிரிய மனமின்றி பிரிந்து ஊர்நோக்கி வந்தார்.
பல ஆண்டுகளுக்கு பின் நீண்ட சடா முடியும், காவிஉடையும் தரித்த சுவாமியார் ஒருவர் நயினாதீவில் உலாவுவதை நயினாதீவு மக்கள் பார்தனர். எங்களுடைய ஆறுமுகத்தாரின் மகன் முத்துக்குமாரசாமியைப்போலல்லவா தோற்றம் இருக்கின்றது என்று சிலர் பேசிக்கொண்டனர். வேறுசிலர் அதற்கு மறுப்புத்தெரிவித்தனர். முத்துக்குமாரசுவாமி இருக்கும் இடமோ போன இடமோ யாருக்கும் தெரியாது. அவர் உயிரோடு இருக்கிறார் என்பதே சந்தேகம் என்றனர். மிக நெருங்கிய உறவினர் முத்துக்குமாரசாமியுடன் நெருங்கிப்பழகி அவர் முத்துக்குமாரசாமிதான் என்று தெளிந்து கொண்டனர். உற்றார் உறவினர் அவரை அணுகி தமது இல்லத்துக்கு வருமாறு அழைத்தனர். அவர் யாருடைய இல்லத்திற்கும் செல்லுவதற்கு மறுத்துவிட்டார். நாளொரு கோயிலில் சென்று தங்கி வந்தார். கோயில் மண்டபங்களையே தமது வசிப்பிடமாக்கி கொண்டார். கோயில் மண்டபங்களிலேயே படுத்துறங்கி தானும் தன்பாடுமாய் திரிந்த சுவாமியார் என்ன சாப்பிடுகிறார்? எங்கே சாப்பிடுகின்றார் என்பதை யாரும் அறியார்.
நயினாதீவிலே உள்ள மக்கள் சுவாமிகளை முத்துக்குமார சாமியார் என்றே அழைத்தனர். அனால் அயலூரவர்கள் சுவாமியாரை பெயர் சொல்லி அழைக்க அஞ்சிப்போலும் நயினாதீவுச் சுவாமியார் என்றே அழைத்தனர். சுவாமிகளுடைய குருநாதன் பெரியானைக்குட்டி சுவாமிகளேதான். குருநாதன் அவருக்கு என்ன பெயர் வைத்தாரோ யாரறிவார்? இப்படி ஊர்பேர் தெரியாது, உலகுக்குத்த தம்மைக் காட்டி கொள்ளாது மறைந்த மகான்கள் எத்தனைபேரோ யாரறிவார்?
சுவாமியார் என்று பெயர் எடுத்துவிட்டால் அவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நயினாதீவுச்சுவாமிகள் அதற்கு விலக்கானவர் அல்ல. சுவாமிகள் தமது அடியார் கூட்டத்தோடு வடபகுதியில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் யாத்திரை செய்தருளினார்கள்.
சுவாமியை நாடி வந்தவர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றே சென்றனர். சுவாமி கொடுத்த விபூதியை பெற்று உடல்நோய், உள்ளநோய் தீரந்தவர் ஆயிரத்திற்கதிகமானவர்கள். ஆத்மஞானம் நாடிவந்தவர்கள், ஆத்மஞானம் பெற்றனர். சுவாமிகளின் சீடர் கூட்டம் இன்று எல்லா ஊர்களிலும் இருக்கின்றது. தமது சீடர்களின் முதல்வரான சண்முகரத்தினம் அவர்களை கொண்டு நயினாதீவு தென்மேற்கு பகுதி கடற்கரையில், ஒரு தீர்த்தக்கேணி அமைப்பித்தார். இன்றும் நயினாதீவு நாகம்மாள் தீர்த்தம் ஆடிவருவது இத்தீர்த்தக்கேணியில்தான் என்பது குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
சுவாமிகள் இயல்பாகவே கவிபாடும் திறமை வாய்ந்தவர். இவரியற்றிய தனிப்பாடல்கள் பல உள்ளன. நாகேஸ்வரி தோத்திரமாலை, நாகேஸ்வரி அந்தாதி போன்ற நூல்கள் அன்னாரின் சமாதி நிலையத்தொண்டர் சபையினரால் வெளியிடப்பட்டுள்ளன. அடியவர்களுடைய இன்னல்களை வாக்கினாலும் நோக்கினாலும் தீர்த்தருளிய சுவாமியவர்கள் 1949ம் ஆண்டு தை மாதம் 26ம் திகதி தமது அன்பரின் இல்லத்தில் யாழப்பாணம் சிவலிங்கப்புளியடியில் சமாதிநிலை எய்தினார். சுவாமிகளின் திருவுளப்படி அவரின் பூதவுடல் நயினாதீவு காட்டுக்கந்தசுவாமி கோவிலின் மேற்குப்புறத்தில் அடியார்களால் சமாதி வைக்கப்பட்டது. இன்று அதனமேல் ஒரு சோமாஸ்கந்த லிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டு நித்திய பூசை நடைபெற்று வருகின்றது.

No comments:

Post a Comment