Wednesday, August 15, 2012

தலைமைத்துவம்



ஏன் தலைமைத்துவம் பற்றிப் பேசுகின்றோம்?
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வறிய கிராமம். இங்குள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பல வருடங்களாக இயங்காமல் இருந்தது. ஒவ்வொரு முறையும்; புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்யுங்கள், அதனை கிராம சேவையாளருக்கும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்துங்கள் என்று பல தடவைகள் விழுது பணியாளர்கள் அங்கு போய் ஆலோசனை சொல்லியும் ஒன்றும் நடந்தபாடில்லை. அரச உத்தியோகத்தர்கள் வருவதற்கு கால தாமதம் ஆகின்றது என்றார்கள். அவர்கள் வருகின்ற நேரம் வரட்டும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பியுங்கள் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. அப்படியும் ஒன்றும் நடக்கவி;ல்லை. கடைசியாக விழுது அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் அங்கு சென்றபோது, ஏன் இன்னும் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டு அவர்கள் இயங்கவில்லை எனக் கேட்டபோது, எல்லாரையும் அடையாளம் பண்ணி வைத்திருக்கின்றோம், ஆனால் யாராவது ஒரு தலைவர் இருந்தால்தானே அவர் முன்னிலையில் நாங்கள் தெரிவு செய்யலாம் என்றனர். அப்படியே அங்கேயே வைத்து விழுது உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்கள் தங்கள் நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர். கடைசியில் மனத்திருப்தியுடன் கலைந்து சென்றார்கள்.
இந்தக் கதையில் நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்தது முழுக்க சங்க அங்கத்தினரே. பின் எதற்காக ஒரு 'தலைவரு'க்காகக் காத்திருந்தனர்? . . .உங்கள் மத்தியில் இதன் காரணங்களைக் கலந்துரையாடிவிட்டு தொடர்ந்து படியுங்கள். எங்கள் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனேகம் பேர் விஷயங்களைக் கொண்டு நடத்துவது எப்படி என்று தெரிந்திருந்தும் தாமே அதனைச் செய்வதற்குரிய ஆளுமை இல்லாதவர்களாகும்.  அவர்களுக்கு யாராவது ஒரு தலைவர் அவசியம் தேவைப்படுகின்றது. நீங்கள் அங்கத்துவம் வகிக்கும் சங்கங்களின் நடவடிக்கைகளை உற்றுப் பாருங்கள். ஒவ்வொரு சங்கத்திலும் எத்தனையோ நூற்றுக்கணக்கான பேர் அங்கத்துவம் வகித்தாலும், எல்லா வேலைகளையும் ஓடியாடிச் செய்பவர்கள் ஓரிரண்டு பேர்களே. இவர்களைத்தான் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் சங்க அங்கத்தினர் ஒவ்வொரு முறையும் தெரிவு செய்கின்றனர். ஏன் என்று கேட்டால், 'இவ(ர்)தான் வெளிவேலையளை ஓடிச் செய்யக்கூடியவ(ர்)' என்று சொல்லுகின்றனர். இப்படியான சிலர் தற்செயலாக சங்கத்திலிருந்து விலகினாலோ அல்லது மாற்றலாகி வேறு ஊருக்குப் போனாலோ உடனேயே அச்சங்கம் படுத்து விடுவதைக் காணலாம். இது நாள்வரையும் நடந்து வந்த கூட்டங்கள் நடத்தப்படாது, அப்படி நடத்தப்பட்டாலும் அங்கத்தவர்கள் வர மாட்டார்கள். சங்கத்துக்குள்ளும் ஏதாவது முரண்பாடுகளும் முறுகல் நிலையும் இருக்கும்.  அதே போல விழாக்கள் நடத்தும் கொமிட்டிக்களை நீங்கள் பார்த்தீர்களானால் அங்கும் ஓரிரண்டு பேர்தான் ஐடியா முழுக்கக் கொடுப்பார்கள், அவற்றை நடத்தி முடிப்பார்கள். இப்படி எங்கேயும் எப்பொழுதும் எதுவும் தொடர்ந்து நடப்பதற்கு தலைமைத்துவப் பாத்திரங்களை வகிக்கும் மக்கள் தேவையாக இருக்கின்றதைப் பார்க்கின்றோம். அதனால்தான் சமூகப் பணியில் ஈடுபடுபடுபவர்களுக்கெல்லாம் தலைமைத்துவம் பற்றிப் பேசுவது முக்கியமாகின்றது.

தலைமைத்துவம் என்றால் என்ன?
பொதுவாக பகிரங்க மேடையில் பேசுபவர்கள் தலைமைத்துவம் உள்ளவர்கள் என்று கருதப்படுகின்றது. பேச்சாற்றல் தலைமைத்துவம் உள்ளவரின் ஒரு பண்பாக இருக்கலாமேயொழிய பேச்சாற்றல் மட்டுமே தலைமைத்துவம் ஆகாது. அதே போல விஷயங்களை செயற்படுத்தும் இயல்பு உள்ளவர்கள் தலைவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். விஷயங்களைச் செயற்படுத்தும் திறமை தலைமைத்துவத்தின் ஒரு பண்பேயொழிய அது மட்டுமே தலைமைத்துவம் ஆகாது. முதல் பகுதியில் மேலே நாங்கள் பார்த்த உதாரணச் சம்பவங்களை ஆராய்ந்து 'ஏன் இங்கு ஒரு தலைமைத்துவம் தேவையானது?' என்கின்ற கேள்விக்குப் பதில்களை ஒன்றொன்றாகக் கண்டு பிடித்தோமென்றால் தலைமைத்துவம் என்றால் என்ன என்று சொல்லி விடலாம். அந்தக் கதையில் ஒரு கிராமத்தின் அபிவிருத்திக்காக உழைக்கும் சங்கத்தக்கு தலைமைத்துவம் தேவையாக இருந்ததைப் பார்த்தோம். ஆனால் அது மக்கள் எல்லோரும் சமமாகப் பங்கேற்றல் என்பது போன்ற குறித்த கொள்கைகளைக் கொண்டியங்கவேண்டும் என்றும் கண்டோம். அத்துடன் சண்டை சச்சரவுகள் இல்லாமல் எல்லோரும் ஒற்றுரமையாக இயங்க வைப்பதும் தான் இல்லாவிட்டால்கூட சகல விடயங்களும் நடத்திக் காட்டுவதும் இதன் அம்சங்கள் என்றும் பார்த்தோம். இவற்றை வைத்துக்கொண்டு தலைமைத்துவம் என்றால்,
ஒரு பொது நன்மை அல்லது இலக்கினைக் குறித்து ஒற்றுமையுடன் இயங்கும் பொருட்டு ஒரு மக்கள் குழுவிற்கு வழிகாட்டுவது,
மனிதாபிமானம் சார்பான கருத்தியலையும் விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக ஒழுகுவது,
சகலருடனும் சுமுகமான உறவுகளைப் பேணி அவர்கள் மத்தியில் எழக்கூடிய முரண்பாடுகளைத் தீர்ப்பது,
தன்னைப்போலவே இயங்கக்கூடிய வேறு தலைமைகளை உருவாக்குவது,
என இவ்வாறாக விளக்கலாம். இவை ஒவ்வொன்றையும் இன்னும் ஆழமாகப் பார்ப்போம்.
1. ஒரு பொது நன்மை அல்லது இலக்கினைக் குறித்து ஒற்றுமையுடன் இயங்கும் பொருட்டு ஒரு மக்கள் குழுவிற்கு வழிகாட்டுதல்
ஒருவர் தன்னுடைய சொந்தத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் கெட்டித்தனம் மிக்கவராக இருந்தாலும் அவரை தலைமைத்துவப் பண்பு உள்ளவர் என்று நாம் கூற முடியாது. தலைமைத்துவமானது ஒரு அமைப்பைச் சார்ந்த மக்களுக்கோ அல்லது ஒரு மக்கள் குழுவிற்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ அல்லது ஒரு நாட்டுக்கோ அதிலுள்ளவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிகாட்டுதலைச் செய்யும். எனவே, தலைமைத்துவத்தை நாம் வரையறுக்கும்போது அங்கே ஒரு பொது இலக்கு, ஒற்றுமை ஆகியன இருக்க வேண்டும் என்பதைப் பார்க்கின்றோம். ஒரு குழு மக்களை ஒழுங்கமைத்து ஒற்றுமையாக இயங்க வைப்பதற்கு பல திறமைகளும் இயல்புகளும் அவசியம்.
1.1. அகத்தூண்டல் அல்லது உள்ளார்வத்தை ஏற்படுத்தும் பண்பு
மனிதர்கள் தாமே புத்தாக்கத்துடன் இயங்குவதற்கு அவர்களுக்கு அகத் தூண்டல் ஏற்படுவது மிக அவசியமாகும். ஒரு குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்கின்ற ஆர்வமும் அதனை அடையலாம் என்கின்ற நம்பிக்கையுமே அகத்தூண்டலாகும். தன்னுடன் பணி புரியும் ஏனையோருக்கு இவ்வகையான அகத்தூண்டipனை ஏற்படுத்துவதற்கு ஒரு தலைமை முதலில் குறித்த இலக்கின்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். உதாரணமாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பணிபுரியும் ஒருவர் தனக்குள்ளே 'எப்பிடிப் பார்த்தாலும் பெண்கள் ஆண்களுக்குக் கீழ்ப்படிந்துதான் ஆகவேண்டும்..' என்று நினைப்பாராயின், அங்கு அவரால் தன்னுடன் இருக்கும் ஏனையோரைத் தூண்ட முடியாத தடையை எதிர்நோக்க வேண்டிவரும். தானே நம்பாத விஷயத்தை எப்படி மற்றவர்களை நம்ப வைப்பது?  எனவேதான் தன்னுடைய இலக்கில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதன் மூலம் ஏனையோரைஅந்த இலட்சிய வழியில் தூண்டுவது தலைமைத்துவத்தின் முக்கிய இலக்கணமாகிறது.

1.2. நல்ல தொடர்பாடல் திறன்கள்
ஒரு குழுவாக மக்கள் இயங்கும்பொழுது, இங்கு இலக்கு என்ன, அதனை எப்படி அடையப் போகின்றோம், அதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம், ஏன் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பது போன்ற விளக்கங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். இந்த விளக்கங்கள் மக்களைச் சென்றடைய சிறந்த தொடர்பாடல் திறன்கள் தேவை. பேச்சாற்றல் எழுத்தாற்றல் போன்றவையே தொடர்பாடல் திறன்களாகும். எளிமையாக, மக்களால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய சொற்களை உபயோகித்து மக்களுடன் கலந்துரையாட வேண்டும். தொடர்பாடல் திறன்களைப் பிரயோகிக்கும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆயிரம் வசனங்களைவிடவும் ஒரு படம் கூடிய விளக்கம் கொடுக்கும் என்பதும், கண்களுக்கும் செவிகளுக்கும் ஒருசேரச் சென்றடையும் செய்தியானது தனியே கண்களுக்கோ செவிகளுக்கோ சென்றடையும் செய்தியைவிடவும் சக்தி வாய்ந்தது என்பதுமாகும்.
இன்று வெகுசன ஊடகங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலம் பெற்ற காலமாகும். இதனால் பத்திரிகை, தொலைக்காட்சி, ரேடியோ, நாடகம், பொம்மலாட்டம், நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற ஊடகங்களைப் புத்தாக்க முறையில் உபயோகிப்பதனால் செய்திகள் மக்களைச் சென்றடையும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.
1.3. பணிகளைப் சகலருக்கும் பிரித்துக் கொடுத்து அவை ஒழுங்காக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் முகாமைத்துவத் திறமை
பலர் சேர்ந்து இயங்கும்போது அங்கே அவர்கள் மத்தியில் ஓர் ஒழுங்கு காணப்படவேண்டும். இல்லாவிட்டால் குழப்பமே எஞ்சும். அத்துடன் எல்லோரும் இருக்கும் வேலையைப் பங்கு போட்டுக் கொண்டால் வேலையும் இலகுவாக முடிவடைகின்றது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து இயங்கும்பொழுது அவர்களை ஒற்றுமையாக பணி செய்ய வைப்பது ஒரு கலையாகும். இதற்குரிய முகாமைத்துவத் திறன்களை வளர்த்தெடுத்துக் கொள்ளுதல் தலைமைத்துவத்தின் இன்னுமொரு பண்பாகும்.
2. மனிதாபிமானம் சார்பான கருத்தியலையும் விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக ஒழுகுதல்
தலைமைத்துவமானது ஒரு பொது இலக்கை நோக்கி மக்களை வழிநடத்துவது என்று மேலே பார்த்தோம் அல்லவா? இந்தப் பொது இலக்கு எப்படித் தீர்மானிக்கப்படலாம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தலைமைத்துவமானது சமத்துவம், சகோதரத்துவம், பாகுபாடின்மை, சுதந்திரம் போன்ற அடிப்படை விழுமியங்களைத் தன்னுடைய பற்றுக்கோடாகக் கொண்டதாகும். அவ்வாறு அது இருந்தால்தான் தான் தலைமை தாங்கும் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் உள்ளார்வத்தையும் இயங்கும் உத்வேகத்தையும் ஏற்படுத்த முடியும். தனது மாதர் சங்கத்தில் சில அங்கத்தவர்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கி பாரபட்சம்hக நடக்கும் தலைவியை நல்ல தலைமைத்துவம் என்று கூற மாட்டோமல்லவா? அதே போலத்தான் எமது சமூகத்திலும் நாட்டிலும் சமத்துவத்தினை நிராகரித்து பிரிவினைகளைத் தோற்றுவிப்பவர்கள் ஒருநாளும் தலைமைத்துவமாகக் கருதப்படமாட்டார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு பொது நன்மையை நோக்கி மக்களை ஒற்றுமையாக வழிநடத்த முடியாதவர்களாவர். இதனால்தான் மனிதாபிமானம் சார்ந்த கருத்தியல் ஒரு தலைமைத்துவத்திற்குத் தேவையாகும்.மனிதாபிமானம் சார்பான கருத்தியல் கொண்டு இயங்குவதற்கு ஒரு தலைமைத்துவத்திற்கு சில குணாம்சங்கள் தேவை.
2.1. சமூக அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காத தன்மை
குடும்பம், நண்பர்கள், சக பணியாளர்கள், சமயத் தலைவர்கள், அரசியல் சக்திகள் போன்ற திசைகளிலிருந்து சமூக அழுத்தங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். இவற்றுக்கு ஈடு கொடுத்து தான் கொண்ட கொள்கையிலிருந்து வழுக்காத தன்மை கொண்டதுதான் நல்ல தலைமைத்துவமாகும். நாம் வாழும் சமூகத்தில் ஏராளமான ஏற்றத் தாழ்வுகளும் பாரபட்சமான உணர்வுகளும் உண்டு. எமது மரியாதைக்குரிவர்களும் எமக்கு நெருங்கியவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. தங்களைப் போலவே ஏனையோரும் சிந்திக்க வேண்டும் வாழ வேண்டும் என்று அவர்கள் அழுத்தங்களைச் செலுத்தும்போது, அவர்கள் நம்மீது வைத்திருக்கும் அபிமானமும் பிரியமும் குறையாமல் இருக்க வேண்டுமேயென்ற அக்கறையினால் பல சமயங்களில் அவர் பக்கம் சாய நேரிடுகின்றது.
சமயப் பாரம்பரியங்களைப் பின்பற்றுவது இதற்கு நல்ல உதாரணமாகும். இவை தாம் கொண்ட கொள்கைக்கு முரணாக இருந்தாலும், தமது சமூகத்தின் பிழையான அபிப்பிராயத்துக்கு ஆளாகக் கூடாது என்கின்ற பயத்திலேயே பலர் அது பற்றி ஒன்றும் பேசாது பின்பற்றுகின்றதை நாங்கள் பார்க்கலாம். வாக்காளர்கள் ஆதரிக்க மாட்டார்களெயென்று நல்ல முற்போக்கான கொள்கைகளைக் கைவிடும் அரசியல்வாதியின் நிலைமையும் இதுதான்.  நல்ல தலைமைத்துவமானது எங்கும் எப்பொழுதும் தான் நம்புவதை உறுதியாகப் பற்றியிருக்கும், மாறாது. என்றும் தனக்கு சரியென்று பட்டதைச் செய்யும்.  
2.2. திட நம்பிக்கை
ஒரு கொள்கையில் அல்லது கருத்தியலில் உறுதியாக நிற்பதற்கு திட நம்பிக்கை மிகவும் அவசியம். இது முக்கியமாகத் தன் ஆற்றலிலே அதீத நம்பிக்கை வைக்கும் இயல்பாகும். அத்துடன் சிந்தித்து தெளிந்த ஒரு சித்தாந்தத்தில் ஏற்படும் நம்பிக்கையுமாகும்.
தன்மீது நம்பிக்கை வைப்பது என்பது தனது பலங்களை உணர்ந்து அவற்றை மேலும் வலுப்படுத்துவதும், தனது பலவீனங்களை அவதானித்து அவற்றைப் பலங்களாக மாற்றுவதுமாகும். ஒரு விழுமியத்தில் அல்லது கோட்பாட்டில் நம்பிக்கை கொள்வது சிறிது வித்தியாசமானது. யார் என்னதான் சொன்னாலும், என்னதான் நடந்தாலும் அதே கோட்பாட்டில் நிற்பது அல்ல அது. மாறாக, தன்னுடைய வாழ்வின் அனுபவங்கள் தான் நேற்று உண்மையென்று நம்பியதை இன்று பொய்யாக்கிவிடும்போது, தான் முன்பு தவறாகக் கருதியதை ஒப்புக்கொள்ளும் மனத் தைரியமாகும். இந்த வகையான திட நம்பிக்கை தான் செய்த பிழையை ஒத்துக்கொள்ளும் நம்பிக்கையாகும். தான் நேற்றிலும்விட இன்று மேலும் கற்றுத் தெளிந்திருக்கின்றேன் என்று பிரகடனம் செய்யத் துணிந்த நம்பிக்கையாகும். இந்த வகையான நம்பிக்கை உள்ள தலைமைத்துவம் தான் கற்று முன்னேறுவதோடு, தன்னைச் சேர்ந்தவர்களும் கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கின்றது.  
இந்த இருவகை நம்பிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்த இயல்புகளாகும். தனது ஆற்றல் மீது அதீத நம்பிக்கை கொண்ட ஒருவர்தான் தான் விட்ட தவறுகளையும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்யும் துணிச்சல் உள்ளவராவார். ஏனெனில் அந்தத் தவறுகளினால் தனது மேன்மை கிஞ்சித்தும் குறையவில்லை என்கின்ற நம்பிக்கை அவருக்கு நிறையவே இருக்கின்றது. அதைப் பற்றிய தாழ்வுச் சிக்கல்கள் அவரிடம் கொஞ்சமும் இல்லை.
3. சகலருடனும் சுமுகமான உறவுகளைப் பேணி அவர்கள் மத்தியில் எழக்கூடிய முரண்பாடுகளைத் தீர்ப்பது,
இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை வித்தியாசமான அபிப்பிராயங்களும் இருக்கின்றன என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். ஒருவர் சிந்திப்பது போல இன்னொருவர் சிந்திக்க முடியாதல்லவா? இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் கூடும் இடங்களிலெலல்லாம் ஏதோவொரு அபிப்பிராயபேதம் ஏற்படத்தான் செய்கின்றது. அபிப்பிராயபேதங்கள் ஆரோக்கியமானவை. புதுப்புது ஐடியாக்களைக் கொண்டுதரும். ஆனால் அவையே மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகளாகவும் வன்முறைகளாகவும் மாறுமென்றால் எமக்கு தீங்காக முடியும். நல்ல தலைமைத்துவமானது அபிப்பிராயபேதங்களை ஊக்குவிக்கும் அதே சமயத்தில் அவற்றை முரண்பாடுகளாக வளரச் செய்யாது சமாதானம் காக்கும். இதற்கு அது கைக்கொள்ள வேண்டிய சில முறைகள் உண்டு.
3.1. செவிமடுக்கும் திறன்
ஒருவர் ஒரு கருத்துச் சொல்லும்போது அவர் உபயோகிக்கின்ற சொற்கள் மட்டுமல்ல, ஆனால் அதை அவர் சொல்லுகின்ற விதங்கள் அவருடைய உடல் பாவனை எல்லாமே அவருடைய கருத்துக்கு விளக்கம் சேர்க்கின்றன. இதனை உன்னிப்பாகக் கவனிப்பதனால் அவர் ஏன் இந்தக் கருத்தினைக் கூறினார், அவர் இவ்வாறு கூறுவதற்குத் தூண்டிய அனுபவங்கள் யாவை என்பதையெல்லாம் அனுமானிக்க கூடுமாகின்றது. அந்த விளக்கத்தைக் கொண்டுதான் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கக்கூடிய அணுகுமுறைகள் தோன்றுகின்றன. எனவே, ஒருவர் ஒரு கருத்துச் சொல்லும்போது அதனை ஆழ்ந்து அவதானித்து கேட்டறியும் ஆற்றல் ஒரு தலைமைத்துவத்திற்குத் தேவையாகும்.


3.2. பொதுத் தளத்தைப் பற்றும் திறமை
எந்தளவு வேற்றுமையான கருத்துக்களாக இருந்தாலும் அவற்றிற்கு ஒரு பொதுத் தளம் கட்டாயம் இருக்கும். இதற்கு உதாரணமாக ஈழத் தமிழர் பிரச்சினையை எடுக்கலாம்.ஒற்றையாட்சி என்பர் சிங்கள மக்கள், தனித் தமிழீழம் என்கின்றனர் தமிழர். இவ்விரண்டு அபிப்பிராயங்களுக்குமிடையில் பொதுத்தளம் என்ன என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஒற்றையாட்சியோ தமிழீழமோ இரண்டிலுமே மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய ஜனநாயக முறைமை வேண்டும் என்றுதான் இருவரும் சொல்லுவர். எனவே ஜனநாயக ஆட்சிதான் இங்கு பொதுதத்தளமாகும். முதலில் இப்பொழுது ஜனநாயக ஆட்சியைக் கொண்டுவருவதற்கு எல்லோரும் சேர்ந்து பாடுபடலாம். அப்படிச் சோந்து இயங்க ஆரம்பிக்கும்போது ஜனநாயக ஆட்சியின் சில வரைமுறைகளைப் பற்றி இருவரும் சிந்திக்க வேண்டியதாக இருக்கும். ஒவ்வொரு மக்கள் குழுவும் தங்கள் அடையாளத்தைப் பேணிக்கொண்டு, தங்கள் வாழ்வைத் தாங்களே நிர்ணயம் செய்யும் உரிமையே ஜனநாயகமாகும். இதன் அடிப்படையில் இலங்கையில் வாழக்கூடிய சகல இனங்களும் தமக்கென அரசியல் அலகினைத் தோற்றுவிப்பது சரியெனப் படும். இது தமிழீழத்தின் காரணத்தை சிங்கள மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கின்றது.
இதில் பாருங்கள் முதலில், இருக்கக்கூடிய சகல மக்களும் ஒத்தக்கொள்ளும் ஒரு பொது வேலைத் திட்டத்தினைப் பற்றிக் கதைத்தோம். பின்பு அந்த வேலைத்திட்டத்தினைப் படிப்படியாக விரிவுபடுத்திக் கொண்டு போகும்போது அடுத்த கட்ட நகர்வுகள் தானே அவிழ்ந்து கொள்ளுகின்றன. ஆனால் முதலிலிருந்தே இரு சாராரும் தத்தமது நிலைப்பாடுகள் பற்றி அசையாமல் இருந்திருந்தால்...? ஆங்கு எங்கள் நாட்டில் நிகழ்ந்ததுபோல வன்முறையும் போரும்தான் மிஞ்சும். எந்த விவாதத்திலும் ஒரு பொதுத்தளத்தைப் பற்றி அதிலிருந்து வேலை செய்யத் தொடங்குவதால் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படுகின்றன. மக்கள் தங்கள் அனுபவங்களிலிருந்துதான் கற்றுக்கொள்கின்றனர் என்பதால் இந்த வகையான பொதுத் தளங்கள் அந்த அனுபவங்களை அவர்களுக்கு அளிக்க உதவி செய்கின்றன. அவற்றின் மூலமாகவே அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்திப்பதற்கு மக்கள் தயாராகின்றனர்.
4. தன்னைப்போலவே இயங்கக்கூடிய வேறு தலைமைகளை உருவாக்குதல்
நாங்கள் அனேகமான சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசும்போது, ' எல்லாத்துக்கும் நான்தான் ஓடவேணும்.. நான் இல்லாட்டி ஒண்டும் நடக்காது..' என்று அவர்கள் முறைப்பாடு செய்வதைப் போல ஆனால் உண்மையில் மிகுந்த மனத்திருப்தியுடன் சொல்லுவதைக் காணலாம். தங்களைவிட்டால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது இவர்களைப் பொறுத்தவரையில் பெருமைக்குரிய விஷயமாகவே இருக்கின்றது. பார்க்கப் போனால், தங்களுக்குத்தான் பெயர் கிடைக்க வேண்டும் என்பதிலும் இவர்கள் குறியாக இருப்பார்கள்.  இப்படியானவர்கள் நல்ல தலைவர்கள் அல்ல. வேறு பல நல்ல தலைவர்களை உருவாக்குபவரே உண்மையான நல்ல தலைவராவார். எல்லோரும் 'நாமே இதனைச் செய்தோம்' என்று கூற வைப்பது நல்ல தலைமைத்துவமாகும். அவ்வாறு புதிய தலைமைத்துவங்களை உருவாக்குவதற்கு தேவையான அணுகுமுறைகளைக் கீழே தருகின்றோம்.
4.1. பொறுப்புக்களையும் கடமைகளையும் பிரித்துக் கொடுத்தல்
எந்த வேலையைச் செய்யும்போதும் தங்களுடன் இருப்பவர்களுக்கான வேலைகளையும் பொறுப்புக்களையும் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும். இந்த வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பது மூலந்தான் மற்றவர்கள் தன்னம்பிக்கையையும் புதிய திறமைகளையும் பெற்றுக் கொள்ளுகிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கும்போது அவற்றை அவர்கள் ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதை விசேடமாகக் கண்காணிக்க வேண்டும். அப்பொழுதுதான் பெரிய தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம். பெரிய பெரிய தவறுகள் தற்செயலாக நடந்து விட்டால் அவர்களே தங்களால் இது முடியாது என்று கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுவர். இக்காரணங்களினால் நெருங்கிய மேற்பார்வை தேவை. இது நிறைய வேலை என்றாலும், இதன் மூலமாக எதிர்காலத்தில் தலைமைத்துவத்தில் இருப்பவர்களுடைய வேலைப்பழு குறையும் நன்மைகள் ஏற்படுகின்றன.
அத்துடன், ஒவ்வொரு நிகழ்வும் வேலைத்திட்டமும் முடிவடைந்தவுடன் அது செயற்படுத்தப்பட்ட முறை பற்றிய மீளாய்வொன்றினை மேற்கொள்ளுவது அவசியமாகும். இந்த மீளாய்வு, திட்டமிட்டபடி செயற்படுத்தப்பட்டதா, எங்கு தவறுகள் நிகழ்ந்தன, அவற்றைத் தவிர்ப்பதற்கு எதிhகாலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது கலந்துரையாடப்படவேண்டும். இக்கலந்துரையாடலில், 'நீ இங்கு பிழை, நீ அங்கு பிழை..' என்பது சொல்வதல்ல. தனிநபர்களில் கவனம் செலுத்தாமல் நடந்த முறை பற்றி ஆராயவேண்டியது அவசியமாகும். அதில் தலைமைத்துவம் மீதும் குற்றம் இருந்தால் உடனேயே தயங்காமல் அக்குற்றத்தினை ஒப்புக்கொள்ள வேண்டும். இது, தலைமைத்துவத்தின் நேர்மையினை பிறருக்குக் காட்டும். கலந்துரையாடப்பட்ட திருத்தங்கள் ஆவணப்படுத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அனுசரிக்கப்படவேண்டும். இந்த வகையில் ஒரு குழுவில் உள்ள எல்லோரும் தங்களைச் சுற்றி நடக்கும் விடயங்களைப் பகுப்பாய்வு செய்யவும் புதிய மூலோபாயங்களை கைக்கொள்ளவும் படித்துக் கொள்கிறார்கள்.
4.2. வெளிப்படையாகப் பாராட்டுதல்கள் வழங்குதல்
ஒருவர் ஒரு வேலையை ஒழுங்காக செய்து முடித்தால் அவரைப் பகிரங்கமாகப் பாராட்ட வேண்டும். இந்த சாதனைக்கு அந்த ஆள்தான் காரணம் என்பதை அடையாளம் காட்டிவிடுங்கள். அந்தப் பெருமையில் அடுத்த தடவை அவர் பம்பரமாகச் சுழலுவார். படித்தவரோ படிக்காதவரோ, பணக்காரரோ ஏழையோ, சகல மனிதர்களுக்கும் தமது சக மனிதர்களுடைய அங்கீகாரம் மிக மிக முக்கியமாகும். அந்த மரியாதையையும் அங்கீகாரத்தையும் நாம் வழங்கும்போது அவர் கொளரவப்படுத்தப்பட்ட மனிதராகின்றார். அவருடைய தன்னம்பிக்கை உயருகின்றது, வேலையில் ஈடுபாடும் அதிகரிக்கின்றது.
முடிவு
முடிவாக, தலைமைத்துவம் என்பது ஒரு பரிமாண விஷயம் அல்ல என்பதை உணரவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தமது தலைமைத்துவத்தினைக் காட்டுவார்கள். சிலர் நிகழ்ச்சிகளை எற்பாடு செய்வதில் வல்லவர்கள். அவர்களுடைய இந்தத் திறமை காணப்பட்டால், அதற்கு அவரையே பொறுப்பாக விட்டுவிடவேண்டும். செய்ய வேண்டிய நடவடிக்கைகளை வரிசைப்படுத்தி, அதற்கு ஒவ்வொருவரையும் பொறுப்பாக வைத்து அவர்களே நடத்தி முடிப்பார்கள். அதே போல சங்கத்துக்கான நிதி முதல்களை சேர்ப்பதில் சிலர் வல்லவராக இருக்கக்கூடும். வேறு வேறு அலுவலர்களைச் சந்தித்து பிரச்சினைகளை விளக்கி வேண்டிய உதவிகளைப் பெற்றுக் கொண்டு வருவார்கள். அதற்கு அவர்களைப் பொறுப்பாக விட்டால் நிர்வாகக்குழுவுக்கு தலையிடி தீரும். எனவே இங்கு முக்கியமாக ஒவ்வொருவரினதும் விசேட ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றிற்கெல்லாம் களம் அமைத்துக் கொடுப்பதுதான் உண்மையான தலைமைத்துவம் என்பதைச் சொல்லலாம்.
கலந்துரையாடலுக்கான வழிகாட்டி
1. உங்கள் சங்கம் அல்லது குழுவுக்கு தலைமைத்துவம் உண்டா? உண்டாயின் அது ஓரிருவரின் தலைமைத்துவமா?
2. உங்கள் சங்கம் அல்லது குழுவுக்குள் எத்தகைய தலைமைத்துவம் இருக்கின்றது? ஒவ்வொரு சம்பவமாகக் குறித்து விளக்கி, அது வகிக்கும் பங்கு என்ன என்பதை மற்றவர்களுடன் விவாதிக்கவும்.
3. உங்கள் குழுவுக்குள் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள் என்று கருதுகிறீர்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்தத் துறையில் தலைமைத்துவம் கொடுக்க முடியும்?
4. உங்கள் அமைப்புக்குள் நல்ல பல தலைவர்களை உருவாக்குவதற்கு நீங்கள் என்ன மாதிரியான வேலைத் திட்டங்களை செயற்படுத்த உத்தேசித்திருக்கிறீர்கள்? அதற்கு உங்களுக்கு எவ்வளவு காலம் தேவை?
5. ஏற்கனவே உங்களுக்கு அதிகாரம் மிக்க தவறான தலைமைத்துவம்தான் இருக்கின்றதெனில், அத்தலைமைத்துவத்தை மாற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள்?








 





No comments:

Post a Comment