Wednesday, August 29, 2012

மிலேச்சன்-அம்பை

எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட 'அம்பை'யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம்புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. 'அந்தி மாலை'  (நாவல், 1966), 'நந்திமலைச் சாரலிலே' (குழந்தைகள் நாவல், 1961), 'சிறகுகள் முறியும்' (சிறுகதைகள், 1976) - இவை நூல் வடிவில் வெளிவந்துள்ள படைப்பு கள். 'தங்கராஜ் எங்கே?' என்ற குழந்தைகள் திரைப் படத்துக்காக வசனம் எழுதியிருக்கிறார்.
ambai (3)

ஊரின் ஒதுக்குப்புறத்தில், பிறரின் தொடல்களுக்கு அருகதையற்ற கீழ்ஜாதி ஆத்மாவாய்த் தன்னை உணர்ந்தான் சாம்பு அந்த இடத்தில்; அந்தச் சமயத்தில்.
அவனைச் சுற்றிலும் பேச்சு நடந்துகொண்டிருந்தது. அவன் பங்கேற்காததைப் பற்றிக் கவலைப்படாத பேச்சு. அவன் அங்கே யிருந்த நாற்காலிகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஸவிதா, அவளுக்கும் அவள் பெற்றோர்களுக்குமிடையே உள்ள அபிப்பிராய பேதங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள், காலை சிற்றுண்டி யின் போது. "அவர்களுக்கு நான் பெரிய பிசினஸ் எக்ஸிக்யூடிவைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை. எனக்கு அப்படியில்லை. அறிவு பூர்வமாக நான் ஒருவனை விரும்பவேண்டும். அவனுக்கு மற்றவர்களின் துன்பங்களில் பங்கேற்கத் துடிப்பு இருக்க வேண்டும்."
அவனுக்கு ஏனோ அவன் தங்கை இந்துவின் நினைவு வந்தது. ஸவிதா, உனக்குத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. உன் அப்பா பெரிய வர்த்தகர். ஓர் அறிவு ஜீவியை நாடக்கூட உன் போன்ற வர்களுக்குத்தான் உரிமை. ஆனால் இந்து? அவள் காலையில் எழுந்து அம்மாவிடம் ஆயிரம் திட்டுகள் கேட்டவாறே இயங்கி, அவளே கஞ்சி போட புடைவை ஒன்றை உடுத்தி, குட்டி டிபன்பாக்ஸில் மத்தியான்னத்துக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடுவாள். பஸ்ஸில் இடம் விடும் முதல் ஆள் அவள் கவனத்தைக் கவர்ந்துவிடுவான். புன்சிரிப்புப் பூக்கும். அவள் மனம் குளிர ஓர் ஆண் முகம் போதும். தர்க்கரீதியாக இயங்குவது இல்லை அவள் மனம். அவள் வெறும் உணர்ச்சிகளின் கலவை. தியாகம், பாசம், தூய்மை, தேசபக்தி, அன்பு, காதல் போன்ற சொற்கள் அவள் மனத்தின் தந்திகளை மீட்டுபவை. அவளிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேசி ஒருவனைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் அவள் மிரண்டுவிடுவாள். காலம் காலமாய் அவள் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத, இருந்து பழக்கமில்லாத உரிமை அது. அவள் காதலித்தாலும் சினிமா கூட்டிப் போக, புடைவைகள் வாங்கித் தர, அடிக்காமல் அன்பு செலுத்த (அப்பாவிடம் வாங்கிய பெல்ட் அடிகளின் எதிரொலி) ஒருவனைத்தான் காதலிப்பாள். கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்றுச் சினிமாப் பார்க்கும் திருப்தியிலும் பண்டிகைகள் கொண்டாடும் பக்தியிலும் வாழ்க்கையைச் செலவழித்து விடுவாள். தனக்கு நிராகரிக்கப்பட்டது எது என்பதை அவள் அறியமாட்டாள். அந்த மட்டும் திருப்தி. அவன் அதை உணரும்போதுதான் சிக்கல்கள்.
"மதராஸி இன்று ரொம்ப யோசிக்கிறார்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டுச் சிரித்தாள் ஸவிதா. புன்னகை செய்தான் சாம்பு.
"ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவியைப் பற்றி என்ன நினைக்கிறாய் சாம்பு?" என்று கேட்டாள் ஆங்கிலத்தில்.
"நான் கூட ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவி தான். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்றான் பதிலுக்கு.
அவள் கடகடவென்று சிரித்தாள்.
"நல்ல ஜோக்" என்றாள்.
"ஏன்?" என்றான்.
"உன் கொள்கை என்ன?" என்றாள் உதடுகளை மடக்கிச் சிரித்தபடி.
"உன்னைப் போன்ற ஓர் அறிவு ஜீவியை மணப்பதுதான்" என்றான் பட்டென்று.
அவள் திடுக்கிடவில்லை. ஒரு நாளில் பத்து முறைகளாவது இவளை மணக்க விரும்புவது பற்றித் தெரிவிக்கும் ஆண்கள் அவள் தோழர்கள். சாம்பு சொன்னதுதான் அவளை வியப்பில் ஆழ்த்தியது.
"குடித்திருக்கிறாயா இத்தனை காலையிலேயே?" என்றாள்.
சாம்பு மேஜையை விட்டு எழுந்தான்.
சென்னை வீதிகளில் உலவும் மனிதர்களை வெறுத்து, மூச்சு முட்டும் அதன் கருத்துகளைப் பகிஷ்கரித்து அவன் டில்லியை வந்தடைந்தான். ஒரு நாள் விடிகாலை, எம்.ஏ. பரீட்சை முடிந்த நிம்மதியில் நடக்க அவன் கிளம்பினான் சென்னையில். கோலம் போட்டவாறே அவனை ஊடுருவி நோக்கும் சந்தியா; (காதலை அவள் நம்புகிறாள், மடப்பெண்!) வயதுக்கு வந்துவிட்ட தன் பேத்தியை மனத்தில் இருத்தி அவனை நோக்கும் எதிர் வீட்டுத் தாத்தா; யுகம் யுகமாய்ச் சிகரெட் கடன் தந்த பெட்டிக்கடை நாயர்; தெரு ஓரத்தில் எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட மண்ணில் புரண்டு, சேற்றில் உளைந்து பக்கெட் பக்கெட்டாய் மூத்திரம் கொட்டும் எருமை மாடுகள்; வளைந்து குறுகி, பின் அகன்று மீண்டும் சுருங்கிக்கொண்ட, கோலங்கள் பூண்ட அந்த வீதி - எல்லாமே அந்த விடிகாலை வேளையில் ஓர் அந்நியக் கோலம் பூண்டன. திடீரென்று பெருங்கரம் ஒன்று அவனைத் தூக்கி அங்கே கொண்டுவந்து நிறுத்தியது போலத் தோன்றியது. அவன் சாம்பமூர்த்தி அல்ல. கள்ளிக்கோட்டையில் வந்திறங்கிய வாஸ்கோடகாமா போல், ஒரு மிலேச்சனின் கண்களோடு அந்த வீதியை நோட்டமிட்டான். அவனுக்கு மூச்சு முட்டியது.
அவனுக்குரிய இடமில்லை அது என்று தோன்றியது.
பாராகம்பாத் தெரு மரங்களின் நிழலில், இந்தியா கேட்டின் பரந்த புல்லில் பி.எச்டி பட்டத்துக்குப் படிக்கும் அறிவு ஜீவிகளின் சிந்தனையில் தன்னைக் கலந்துகொள்ள அவன் முயன்றான்.
"ஹலோ சாம்பு! இன்னிக்கு வராய் இல்லையா?" மணி கேட்டான். "எங்கே?"
"இன்னிக்கு ஸ்டிரைக். காம்பஸுக்குப் போகணும்." "எதுக்காக ஸ்ட்ரைக்?" "விலைவாசி ஒசந்ததுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க."
"அரிசி என்ன விலை விக்கறதுன்னு தெரியுமா உனக்கு? டேய், பீர் விலை ஒசந்ததுன்னாதானேடா உனக்கு உறைக்கும்?"
"இதோ பாரு. உன்னோட பேச எனக்கு நேரமில்லை. நான் பிஸியா இருக்கேன். வரயா இல்லையா?"
"வரேன்."
"விலைவாசியை இறக்கு."
"இந்திரா ஒழிக."
"மாதாஜி முர்தாபாத்."
"டவுன் வித் ப்ளாக்மார்க்கடியர்ஸ் அண்ட் ஹோர்டர்ஸ்."
"சாம்புவைப் பாரேன். என்ன ஆக்ரோஷமாய்க் கத்தறான்."
"இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்லேதான் ஒருத்தனோட அடங்கிக்கிடக்கிற மூர்க்கத்தனம் வெளியே வரது. கூட்டத்திலே அவன் ஒருத்தன் ஆயிட்டான் இல்லையா?"
சாம்பு பக்கத்தில் வந்தான்.
"காலையில் என்ன சாப்பிட்டாய்?"
"என்ன விளையாடறயா?"
"சொல்லு."
"முட்டை டோஸ்ட், ஜாம், காஃபி, வாழைப்பழம்."
"பயத்தம்பருப்புக் கஞ்சின்னு கேள்விப்பட்டிருக்கிறாயா?"
"ஏன்?"
"அதுதான் எங்க வீட்டுலே கார்த்தாலே சாப்பிட. மிராண்டா ஹவுசில் படிக்கிறாளே உன் தங்கை, கெரஸின் க்யூன்னா என்ன, அதுலே நிக்கற அநுபவம் எப்படீன்னு தெரியுமா அவளுக்கு?"
"நீ சொல்றது தப்பு, சாம்பு. ஒரு விஷயத்தைப் பற்றி என் எதிர்ப்பைத் தெரிவிக்கக் கஷ்டப்படறவனை நான் பார்த்து அதைப் புரிஞ்சுண்டாப் போதும். நானே அதை அநுபவிக்க வேண்டிய அவசியமில்லை. கான்ஸரை ஆபரேஷன் செய்யற டாக்டர் அதோட கொடுமையைப் பார்த்துப் புரிஞ்சுண்டாப் போதும் - அவனுக்கே கான்ஸர் வரவேண்டிய அவசியம் இல்லை."
"இது வியாதி இல்லை."
"இதுவும் ஒரு வியாதிதான், சமூகத்தைப் பீடிக்கிற வியாதி."
"அப்படியே வைச்சிப்போம். நான் அதை அநுபவச்சிருக்கேன்."
"என் சின்னத் தம்பிக்குத் தூங்கறப்போ கதை சொல்லறச்சே, 'அதுதான் ராமராஜ்யம் ஒரே பாலும் தேனும் ஓடும், ரத்னங்கள் வீட்டுலே இறைஞ்சு கிடக்கும்' அப்படி எல்லாம் சொன்னா, ராம ராஜ்யத்துலே கெரோஸின் நிறையக் கிடைக்குமோ அப்படீன்னு அவன் கேள்வி கேக்கறப்போ எந்தப் பின்னணியிலேந்து அது பொறந்ததுன்னு எனக்குப் புரிகிறது. அம்மா கரண்டியைச் சாதத்துலே வெக்கறபோதே ரொம்பச் சமத்தா 'அம்மா, எனக்குப் பசிக்கலே; ஒரே ஒரு கரண்டி போதும்'னு என் கடைசித் தங்கை சொல்லறபோது அரிசி விளைவோட பாரம் என் நெஞ்சிலே ஏறிக்கறது."
பக்கத்தில் நின்றவாறு சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த ஸவிதா பெரிதாகச் சிரித்தாள்.
கோஷங்கள் மாலையில் முடிந்தன.
மீண்டும் ஹாஸ்டலுக்கு வரும் வழியில் ஆரதி பானர்ஜி அவனுடன் நடந்து வந்தாள். மென்குரலில் ஆங்கிலத்தில் கூறினாள்.
"உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடுதான். ஏனென்றால் நீங்கள் கூறும் அநுபவங்கள் என் வீட்டில் புதிதல்ல" என்றாள்.
"நீ பி.எச்டி. செய்யாமல் வேலைக்குப் போயிருந்தால் உன் வீட்டிற்கு அது பயன்பட்டிருக்கும் இல்லையா?"
அவள் புன்னகை செய்தாள்.
"ஆமாம். ஆனால் என் கனவுகள் என்னை இங்கே அழைத்து வந்தன."
"எந்த மாதிரிக் கனவுகள்?"
"மூன்று வருடங்களில் பி.எச்டி. முடித்துவிடலாம். பின்பு பெரிய வேலை. ஒருவேளை என் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க ஒரு பணக்காரக் கணவன் கூடக் கிடைக்கலாம். நிஜத்தில் நடந்தது வேறு. பி.எச்.டி.யின் முடிவில் கூடிய வயதும் மனம் பிடிக்காத வேலையும் நித்தியக் கன்னி பட்டமுந்தான் எஞ்சும் போல் இருக்கின்றன."
"உன் மனசுக்குப் பிடித்த யாரும் இங்கில்லையா?"
அவள் அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். பட்டென்று சொன்னாள்: "என்னிடம் உள்ள மொத்த புடைவைகள் ஐந்து."
"புரியவில்லை."
"ஓபராய் போய்க் காஃபி குடிக்கவோ, அக்பர் ஹோட்டல் போய்ச் சாப்பிடவோ அணிந்துகொள்ளக் கூடிய புடைவைகள் என்னிடம் இல்லை. பெரிய ஹோட்டல்களில் நுழைந்தவுடனேயே என் கண்கள் விரிந்து நாவடைத்துப் போய் விடுகிறது. என் முந்நூறு ரூபாய் ஸ்காலர்ஷிப்பில் நூறு ரூபாய் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். மரியாதைக்குக் கூட என்னால் எங்காவது வெளியே போனால் 'நான் பில் தருகிறேன்' என்று சொல்ல முடியாது. எனக்கு இந்த மனநிலையில் ஏற்படும் எந்த அன்பும் காதல் என்ற பட்டம் பெற முடியாது. அது சுயநல எண்ணங்களோடு திட்டமிட்டுப் பின் நடைமுறையில் செய்யப்படும் வியாபாரந்தான். காதல் என்ற சொல்லுக்கே நம் வாழ்க்கை முறையில் இடம் இல்லை. இது குறிப்பிட்ட சிலரின் ஏகபோக உரிமை."
"ம்."
"ஒரு நிமிஷம்" என்று அப்பால் சென்றாள்.
"ஏய் சாம்பு, ஆரதியிடம் ஜாக்கிரதை. அவள் ஒரு கணவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். விழுந்து விடாதே."
பின்னால் கனைத்தாள் ஆரதி.
"ஆரதி, நான் ஒன்றும்..."
"பரவாயில்லை கோவிந்த். நீ டெல்லியின் நாற்றச் சந்துகளில், விளக்குக் கம்பம் புடைவை கட்டிக்கொண்டு வந்தால் கூடப் பின்னால் போகிறாய் என்று கேள்விப்பட்டேன். நான் உன்னை விடத் தேவலை இல்லையா?"
கோவிந்துக்குப் பலமான அடிதான்.
அதன்பின் மௌனமாகவே நடந்தனர்.
ஹாஸ்டலில் இந்துவின் கடிதம் வந்திருந்தது.
‘வைரத் தோடாம் அண்ணா. அப்பா முடியாது என்று கூறிவிட்டார். அண்ணா நீ பி.எச்டி. முடித்ததும் நமக்கு இந்த மாதிரி தொல்லை இல்லை. நீ புரொபஸராகிவிடுவாய். அண்ணா நீ நன்றாகப் படி. எனக்கு ஆஃபிஸில் வேலை ஜாஸ்தி. புது ஆஃபீஸர் ரொம்ப டிக்டேஷன் தந்துவிடுகிறார். நாங்கள் எல்லாருமாக ‘நேற்று இன்று நாளை’ போனோம். எனக்குப் பிடித்தது.”
இந்து, இந்து உன் உலகம் எவ்வளவு வித்தியாசமானது. என்னுடையதை விட?
பி.எச்டி. முடித்தால் புரொபஸராகி விடுவேனா? இந்த பி.எச்டி.யை எப்போதுதான் முடிப்பது? புரொபஸர் கருணையின்றி பி.எச்டி. வாங்க முடியுமா? அவர் ஜீனியஸ்தான். அதுதான் தொல்லை. பத்து வருடங்களுக்கு குறைந்து அவரிடம் பி.எச்டி. வாங்க முடியாது. தீஸிஸ் விஷயமாகப் போனால் மிக அழகாக ரெயில்வே ஸ்டிரைக் பற்றிப் பேசுவார். ஜோன் பேயனின் ஸெக்ஸி குரல் பற்றிப் பேசுவார். நிக்ஸன் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றிச் சொல்வார். ஜெரால்ட் ஃபோர்டு எதற்கும் பயனில்லை என்பார். யாரும் நினைவு வைக்க முடியாத சரித்திர சம்பவங்களை நினைவு கூர்ந்து ஜோக் அடிப்பார். ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.
“ஸார், என் சாப்டர்...”
“என்ன சாப்டர்?”
“ஒன்றாவது ஸார்.”
“வீட்டுலே குடுத்தியா ஆஃபிஸிலியா?”
“வீட்டுலேதான்.”
“இன்னொரு காப்பி உண்டா?”
“ம். ஸார்.”
“நாளைக்குக் கொண்டாயேன். பார்க்கலாம்.”
“சாரி, ஸார்.”
இரண்டு வருடங்களாக இதுதான் நடக்கிறது, இந்து. உங்களுக்கு எல்லாம் இது எப்படிப் புரியும்?
“என்ன சாம்பு, லவ் லெட்டரா?” தேஷ்பாண்டே கேட்டான்.
“இல்லை தேஷ்பாண்டே.”
“கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்களா வீட்டில்?”
சிரித்தான் சாம்பு, “ம்ஹூம்.”
“சரி, இன்னிக்கு வெச்சுக்கலாமா?”
“வேண்டாம் தேஷ்பாண்டே.”
“டேய், நீ ஒரு முட்டாள் மதராஸி, வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத மதராஸி.”
"இருக்கட்டும்."
"உனக்குத் தைரியம் இல்லை. ஒரு பெக் சாப்பிட்டா நீ டவுன் தான்."
"என்னைச் சாலஞ்ச் பண்ணாதே."
"சும்மா பேச்சுத்தான் நீ. அம்மா திட்டுவாளா?"
"சரி, இன்னிக்கு வெச்சுக்கலாம்."
சாயங்காலம் தேஷ்பாண்டேயின் அறையில் ஐந்தாறு நபர்கள் கூடினர். சுடச்சுடத் தொண்டையில் இறங்கிப் பின் சூடு உடம்பில் பரவியது. ஸிக்கிம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று யானை பலம் வந்தது போலிருந்தது. குறுக்காகத் தொப்பி வைத்துக்கொண்ட நெப்போலியன் தான் எனத் தோன்றியது. பிரஷ் மீசை வைத்த ஹிட்லராக மாறி யூதர்களைக் கூட்டம் கூட்டமாக அழிப்பது போல் தோன்றியது. வேஷ்டி சட்டையுடன் அண்ணாதுரை, ஒரு கூட்டத்தில் பேசுவது போல் தோன்றியது. சிவாஜி கணேசன் முகம் கொண்ட ராஜராஜ சோழன் தான் என்று மார் தட்டிக்கொள்ள அவா எழுந்தது. இழைய முடியாத டில்லி சூழ்நிலை. டைப் அடித்து அடித்து விரல்களைச் சொடுக்கிக் கொள்ளும் இந்து, பாத்திரத்தின் அடியில் இருக்கும் சாதத்தைக் கரண்டியின் சுரண்டல் ஒலி இல்லாமல் எடுக்கும் அம்மா, எல்லாம் மறைந்து அவனே பூதாகாரமாய் ரூபமெடுத்து அத்தனையையும் அடித்துக்கொண்டு மேலெழுந்து வருவது போல் உணர்வு தோன்றியது.
"ஸிக்கிமை ஆக்ரமிக்க வேண்டும்" என்று உரக்கச் சொன்னான்.
"ஏய் சாம்பு, என்ன ஏறிடுத்தோ நன்னா?" மணி கேட்டான்.
"சேச்சே, அதெல்லாம் இல்லை."
"ஜாக்கிரதை, ஒரேயடியாக் குடிக்காதே. மெள்ள மெள்ள."
"நான்ஸென்ஸ். நான் சரியாத்தான் இருக்கேன். ஸவிதா வரலியா?"
"ஸவிதா இங்கே எங்கேடா வருவா?"
"ஏன் வரக்கூடாது? நான்தான் அவ தேடற துடிப்புள்ள இளைஞன். நான் நடுத்தரக் குடும்பம்னா அவ என்னை லவ் பண்ணக்கூடாதா? நான் ஒரு துடிப்புள்ள இளைஞன்."
ஸிக்கிம் பற்றிய பேச்சு நின்றது.
சாம்பு பேசிக்கொண்டே போனான்.
"ஸவிதாவை எனக்குப் பிடிக்கறது. ஆனா இந்த உலகமே வேற. அரசியல், ஆராய்ச்சி, வெளிநாட்டுத் தொடர்பு பற்றிப் பேசற அக்கறை இல்லாத உலகம் இது. தேஷ்பாண்டே, இங்கே ஓட்டை போட்டுண்டு வந்த எலி நான். இங்கே இருக்கிற யார் மாதிரியும் நான் இல்லே. நான் ஒரு துரத்தப்படும் எலி. பூனைகள் உலகத்துலே அகப்பட்டுண்ட எலி. ஸவிதாவை நெருங்க முடியாத எலி. என் தங்கை இந்து இருக்கிற உலகத்துலேயும் நான் இல்லே. கோலம், கோபுரம், புடைவை, சினிமா, கற்பு, கணவன், அம்மா, அப்பா இவர்கள் எல்லாருக்கும் நான் அந்நியமாப் போய்விட்டேன். ஓ, எங்கே?" என்று எழுந்து கால்களை உதறி அறை முழுவதும் தேடி ஓடினான்.
"ஹே, எதைத்தான் தேடுகிறாய்?"
"என் வேர்கள், என் வேர்கள்" என்று ஆங்கிலத்தில் கூறி அழுதான் சாம்பு.
திடீரென்று எழுந்து, "எனக்கு எங்கேயும் இடம் இல்லை" என்று கூறி ஓட ஆரம்பித்தவன் முறித்துக்கொண்டு கீழே விழுந்தான். அறை முழுவதும் வாந்தி எடுத்த நெடி.
"தேஷ்பாண்டே, இதெல்லாம் உன் தப்பு. ஹோல் ஈவினிங் கில்... ஸ்பாயில்ட்."
"ஏய், இவன் முழிக்கமாட்டேன் என்கிறானே?"
"முகமெல்லாம் வெளுத்துவிட்டது."
"குட் லார்ட்! டாக்ஸி கொண்டுவா. வெலிங்டன் ஹாஸ்பிடலுக்கு ஓடலாம்."
கண்ணை விழித்தபோது தேஷ்பாண்டேயின் முகம் தெரிந்தது.
"ஐ ஆம் சாரி."
"இட்ஸ் ஓ கே! எத்தனை பெக் குடித்தாய்?"
"ஒன்பது."
"ஜீஸஸ்!"
"எனக்கு அத்தனையும் தேவைப்பட்டது, தேஷ்பாண்டே! தேஷ்பாண்டே நான் இந்த இடத்தில் இருக்க வேண்டியவன் இல்லை. ஏழு வருஷம் பி.எச்டி. பண்ண என்னால் முடியாது. என் தங்கை கல்யாணம் ஆகாமல் தவித்து விடுவாள். என் அம்மா உருக்குலைந்து போய் விடுவாள். அறிவுஜீவியாவது கூட எனக்கு ஓர் ஆடம்பரமான விவகாரந்தான். அங்கேயும் நான் ஓர் அந்நியன் தான். ஆனாலும் அங்கே நான் தேவைப்படறேன்."
"டேக் ரெஸ்ட், சாம்பு."
தலை திரும்பியபோது ஆரதி வருவது தெரிந்தது.
தேஷ்பாண்டே எழுந்தான். ஆரதியைப் பார்த்து மரியாதைக்குப் புன்னகை செய்துவிட்டுப் போனான்.
"என்ன சாம்பு, இது என்ன இப்படிப் பண்ணிவிட்டீர்கள்?"
கண்களில் நீர் பெருகியது.
"ஆரதி, நான் ரொம்பத் தனியனாக இருக்கிறேன்."
"ம்."
"என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை."
"ம்."
"உனக்கும் இந்த அனுபவம் உண்டா?"
கையிலிருந்த பையைப் பார்த்தவாறே ஆரதி பேசினாள்.
"ம், உண்டு. இதை விட உண்டு. உங்களுக்கு வீட்டுக்குத் திரும்பிப் போக முடியும். அங்கே மூத்தபிள்ளை என்ற அந்தஸ்து உண்டு. எனக்குத் திரும்பிப் போக முடியாது. என் குடும்பம் நான் இல்லாமல் இருக்கப் பழகிவிட்டது. நான் அங்கே போகும்போதெல் லாம் வெளியாளாய் உணர்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை பிரச்னைகள் இல்லாத ஒரு பெண். அந்த எண்ணத்தை மாற்ற நான் விரும்பவில்லை. இரண்டு உண்மைகளை நான் உணர்வதால் என் நிலைமையை என்னால் ஏற்க முடிகிறது. ஒன்று, வேலை செய்து தான் வாழவேண்டும் என்ற சமூகப் பிரக்ஞையால் பிறக்கும் உணர்வு. இரண்டு, நாம் எல்லோருமே ஒவ்வொரு வகையில் தனியாள்தான் என்ற உணர்வு."
"நான் ஸவிதாவை விரும்புகிறேன்."
ஆரதி புன்னகை செய்தாள். "எனக்குத் தெரியும்."
"நான் பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா?"
"ம்ஹூம். உண்மைகளைப் பார்க்காதவர்."
"புரியவில்லை."
"ஸவிதாவை நீங்கள் விரும்புவது நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவன் என்ற தாழ்மையுணர்ச்சியால்தான். அந்த வர்க்கத்து உணர்வுகளிலிருந்து விடுபட விரும்பும் வேகத்தால்தான். இந்த உணர்வே ஒரு தப்பிக்கும் முயற்சிதான். ஏணி மேல் ஏறி, எந்த வர்க்கத்தை ஏளனம் செய்கிறீர்களோ அதே வர்க்கத்தை நீங்கள் எட்டிப் பார்க்கிறீர்கள். கீழேயும் உங்களுக்கு இடம் இல்லை. மேலே யும் உங்களுக்கு இடம் இருக்காது."
"கோபிக்காதே. நீ என்னை விரும்புகிறாயா?"
அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
"மற்றவர்கள் நினைப்பதுபோல் நான் ஒரு கணவனை நிஜமாகவே தேடி அலையவில்லை. உண்மையான பரிவுணர்வைக் காட்ட என் போன்றவர்களுக்கும் முடியும்."
"ஐ ஆம் ஸாரி."
"டோண்ட் பி" என்று கூறிவிட்டு எழுந்தாள்.
அவள் போனபின் வெகுநேரம் நெஞ்சில் பல உணர்ச்சிகள் குழம்பித் தவிக்க வைத்தன. வேர்களற்ற நான் யார்? என்னை எந்த அநுபவங்களோடு நான் ஒன்றிப் போகவைக்க முடியும்? ஆராய்ச்சி செய்ய நேரமோ, பணமோ அவனிடம் இல்லை. அது ஒரு நீண்டகாலத் திட்டம். அவன் போன்றோர்களிடம் இல்லாத ஒரு போகப் பொருள்; காலத்தை அலட்சியம் செய்யும் மனப் பான்மைதான். அவன் காலத்துடன், ஒன்று, அதனுடன் சண்டை யிட்டு, அதனிடம் மண்டிபோட வேண்டியவன். இல்லாவிட்டால் இந்துவின் வாழ்வு குலைந்துவிடும். தம்பியின் எதிர்காலம் இருளடை யும். எங்கும் புகுந்து எப்படியும் வாழும் எலிகளில் அவன் ஒருவன். புரிந்தது. ஆனால் ஏற்க முடியவில்லை. குப்பைத் தொட்டியின் மேல் மல்லாக்கப் படுத்து இறந்து, காக்கை தன் வயிற்றைக் குத்திச் சதை யைப் பிடுங்கும் எலியாய்த் தன்னை உணர்ந்தான். அவன் வித்தியாச மாக எதையும் செய்ய முடியாது. அவனுக்கு நிராகரிக்கப்பட்ட உரிமை அது. அவன் எதிர்வீட்டு ஸந்தியாவை மணக்கலாம். அவ ளுடன் நல்ல கணவனாகப் படுக்கலாம். அவள்மேல் ஆதிக்கம் செலுத் தலாம். குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். பணம் இல்லாமல் தவிக்கலாம். ரிடையர் ஆகலாம், இறக்கலாம். குப்பைத் தொட்டி மேல் செத்த எலி போல, இதுவே அவனுக்கு விதிக்கப்பட்ட வரம்புகள்.
வரம்புகள், வரம்புகள், வரம்புகள்!
ஆஸ்பத்திரியின் கட்டிலில்; அதன்மேல் அவன், கோபாலை யரின் மகன் சாம்பமூர்த்தி. அவனே அவனுக்கு அந்நியமானவனாகப் பட்டான்.
அவன் திரும்பிப் போவான். கோலங்களின் ஓரமாக எருமைகளைத் தாண்டி அந்தத் தெருவில் நடப்பான்; ஆனால் அதுவல்ல அவன் இடம். அத் தெருவின் மண்; அதன் மீது பஸ் பிடிக்க ஓடும் இந்து; சைக்கிளில் போகும் அப்பா; புத்தகப் பையுடன் போகும் தம்பி; எல்லாரும் எலிகள்; பொந்து போட ஓடும் எலிகள். வரம்புகளைக் கட்டிக்கொண்டு அதனுள் ஓடும் எலிகள்.
பல்லாயிரக்கணக்கான எலிகள், மாறுபட்ட அவனைக் கோரைப் பற்களால் சுரண்டி வால்களால் அவனைத் தாக்கி அவன் மேல் ஆக்கிரமிப்பது போல் உணர்ந்தான். திடீரென்று கோடிக்கணக்கான பூனைகள் எலிபோல் தோன்றிய அவனை நகங்களால் கீறி வாய்க்குள் அடைத்துக்கொள்வதைப் போல் தோன்றியது.
சாம்பு வீரிட்டான்.

No comments:

Post a Comment