Wednesday, August 15, 2012

அரசியலில் பெண்கள் பங்குபற்றுவதன் முக்கியத்துவம்



அரசியல் என்றால் என்ன?
சட்டம், ஒழுங்கை நிலை நாட்டி, மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்படும் கட்டமைப்புக்களும், அவற்றினிடையேயான உறவு முறைகளும் அரசியல் எனப்படும். அரசியல் என்றவுடன் எங்களுக்கு அனேகமாக பாராளுமன்றம்தான் நினைவுக்கு வரும். மக்கள் எங்கள்; வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளே பாராளுமன்றத்தை அமைக்கின்றார்கள். இப்பாராளுமன்றம் எங்கள் வாழ்க்கை தொடர்பான சகல சட்டங்களையும் இயற்றுகின்றது.  உதாரணமாகக் கூறப்போனால், குடியுரிமைச் சட்டம், கல்விச் சட்டம், காணிச் சட்டம், தொழிற்சட்டம், வீட்டுச் சட்டம், விவாகப்பதிவுச் சட்டம், கூட்டுறவுச் சட்டம், பாலியல் வன்முறைச் சட்டம், தேர்தல் சட்டம் என இவ்வாறு எல்லாமே பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளினூடுதான் வருகிறது. பார்த்தீர்களா? எங்கள் பொதுவாழ்க்கையிலிருந்து சொந்த வாழ்க்கை வரை எல்லாமே எப்படி அரசியலினால் தீர்மானிக்கப்படுகின்றதென்று?
பிரதானமான அரசியல் கட்டமைப்புக்கள் எவை?
பாராளுமன்றம் ஒரு சட்டவாக்க அமைப்பு என்று முதல் கண்டோம். பாராளுமன்றம் உருவாக்கிய சட்டத்தினை செயற்படுத்துவதற்கு அமைச்சுக்கள் இருக்கின்றன. அமைச்சுக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவாகி நியமிக்கப்படும் அமைச்சர்கள் தலைமை தாங்கி நடத்துகின்றனர். அமைச்சுக்கள் தமக்கென திணைக்களங்கள் என்றும், பிரிவுகள் என்றும் நிர்வாகக் கட்டமைப்புக்களை நியமித்து தமது வேலைகளைக் கொண்டு செல்கின்றன. அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் நேரடியாக அரசியலில் இல்லையென்றாலும், அவை அரசியல் கட்டமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டன.
சகல மக்களின் சகல தேவைகளையுமே ஒரு நாட்டின் மத்திய அரசு சரிவரக் கவனிக்க முடியாதபடியினால், ஒரு நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திற்கெனவும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டன. உள்ளுராட்சி மன்றங்கள் ஒவ்வொரு பிரதேசத்தின் சனத்தொகையைப் பொறுத்து மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை எனப் பெயர் பெறும். இந்த உள்ளுராட்சி மன்றங்கள், பாராளுமன்றமும் அமைச்சுக்களும் ஒருசேர இருப்பது போன்ற கட்டமைப்புக்களாகும். அவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். இவர்கள் பாராளுமன்றம் போலவே தமது அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களில் சட்டங்களை ஆக்கலாம். இச்சட்டங்களை செயற்படுத்த இவர்களுக்கு ஒரு நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று உண்டு. இந்த ஆட்சிமன்றங்கள் ஒரு பிரதேசத்தின் கல்வி, சமூக, சுகாதார, பொருளாதார விருத்திக்காகப் பலவித பணிகளைச் செய்யக்கூடியன.
உள்ளுராட்சி மன்றங்கள் பல சிறப்புத் தகைமைகள் கொண்ட அமைப்புக்களாகும். அவையாவன,
1) இதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள், தாம் ஆட்சி செய்யும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, உள்ளுர் மக்களின் பிரச்சினையை நன்குணர்ந்தவர்களாவார்கள்.

2) இப்பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் வாழ்பவர்களாகையால், மக்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்
3) ஓவ்வொரு உள்ளுராட்சி மன்றமும் அதைத் தெரிவு செய்த மக்களுக்கருகாமையிலேயே இருப்பதனால், அதன் நடவடிக்கைகளில் மக்கள் பங்குபற்றக்கூடியதாக இருக்கின்றது.  
எனவே, மக்களின் அடிப்படைத் தேவைகளை சரிவர பூர்த்தி செய்வதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் ஒரு சிறந்த கருவி என்பதில் ஐயமில்லை.
உள்ளுராட்சி மன்றங்கள் என்றால் என்ன,  பாராளுமன்றம் என்றால் என்ன, இவற்றில் அங்கத்துவம் வகிப்பதற்கும் அரசாங்கம் அமைப்பதற்கும் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களின் வாழ்க்கை எப்படி நெறிப்படுத்தப்படவேண்டும் என்கின்ற தனித்தன்மையான சித்தாந்தம் கொண்ட நிறுவனமாகும். இந்தக் கட்சிகளில் ஏதாவதொரு கட்சிக்குப் பெரும்பான்மை ஆதரவு மக்களால் வழங்கப்படும்போதுதான் அந்தக் கட்சி தனக்குரிய அமைச்சரவையையும் அதன் தலைவரான பிரதம மந்திரியையும் தேர்ந்தெடுத்து ஆட்சிப்பொறுப்பில் அமர்கின்றது. தனது சித்தாந்தத்தை சட்டங்களாகவும், கொள்கைத் திட்டங்களாகவும் நடைமுறைப்படுத்துகின்றது. எனவே, ஒருவரினது அரசியல் வாழ்க்கையை வரைந்து பார்ப்போமானால், அவர் முதலில் கட்சித் தொண்டராகி, பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினராகி, பின் பாராளுமன்ற உறுப்பினராகி, பின் அமைச்சராகி, பின் பிரதம மந்திரியாக உயரலாம்.
எங்கள் நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறைமையும் உண்டு. ஜனாதிபதியானவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவர் பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு அடிபணிய வேண்டியவராயினும், தனக்கென்று அதீத அதிகாரங்கள் கொண்ட தனிநபராக இருக்கின்றார். இதன்படி, அமைச்சுக்கள் பல பணிகளைச் செய்யலாமென்றாலும், அவற்றின் அமைச்சர்களைத் தீர்மானிப்பதும், அந்த அமைச்சுக்களையெல்லாம் நினைத்த நேரத்தில் தனது நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதும் என் ஏகப்பட்ட அதிகாரங்கள் அவருக்கு உண்டு.
அரசியலில் பெண்கள் ஏன் பங்குபற்ற வேண்டும்?
ஆதிகாலத்தில், மனிதர்கள் குடிகளாக வாழ்ந்தபொழுது பெண்கள் அக்குடிகளின் தலைமைத்துவத்தை வைத்திருந்தார்கள் என வரலாறுகள் எமக்குக் கூறுகின்றன. அதன் பிறகு, படிப்படியாக ஆண்களின் செல்வாக்கு சமூகத்தில் உயர்ந்தபோது, அவர்களே அரசராக முடிசூடும் வழக்கம் வந்தது. இவர்கள் மத்தியில் பெண்கள் அரசாளும் இராணிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தபோதும், அரசு என்றால் ஆண்களுக்குரியது என்கின்ற படிமம் எல்லோர் மனதிலும் விதைக்கப்பட்டுவிட்டது. அப்படிப்போலத்தான் கல்வி என்றால் பெண்களுக்கு வராது, வெளியே சென்று தொழில் செய்ய பெண்களுக்கு முடியாது என்று பெண்களைப் பூட்டி வைத்திருந்தது எங்கள் சமூகம்.
இந்த அடக்குமுறையிலிருந்து படிப்படியாக  பெண்கள் விழித்தெழுந்தார்கள். இன்று கல்விக்கான சமவாய்ப்பினைப் பெற்றுவிட்டார்கள். எங்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும் பட்டதாரிகளில் சராசரி 57 சதவீதமானவர்கள் பெண்கள் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அது மட்டுமல்லாது பெண்கள் வெளியே போய் வேலை செய்வது மட்டுமன்றி கடல் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்றும் வேலை செய்கிறார்கள். எங்கள் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதல் மூன்று தொழிற்றுறைகளிலும் பெரும்பான்மையாக உழைப்பது பெண்களே. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில், ஆடைத்தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் என இந்த மூன்று முக்கிய துறைகளிலும் பெண்களின் உழைப்புத்தான் பிரதானமாக இருக்கின்றது. எனவே, எங்கள் நாட்டில் பெண்கள், குடும்பங்களின் கண்களாக மட்டுமன்றி, நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்கின்றனர்.
இப்படியெல்லாம் திகழ்ந்தென்ன? எங்கள் அரசியல் களத்தை எடுத்துக் கொண்டால் அதில் பெண்களைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். 1948ல் நாங்கள் சுதந்திரம் கண்ட நாள்முதல் இன்று வரை எங்கள் பாராளுமன்றத்தில் 5 வீதத்திற்கு மேலாக பெண்கள் இருந்ததில்லை. எங்கள் உள்ளுராட்சி மன்றங்களிலோ 2 வீதத்திற்கு மேலாக இருந்ததில்லை. இதற்கு, எங்கள் இலங்கை நாட்டில் 1931ம் ஆண்டே பெண்கள் உட்பட சகலருக்குமான வாக்குரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டது. இன்றும்கூட பெண்கள்தான் அதிகூடிய வாக்காளர்களாக ஒவ்வொரு தேர்தல்களிலும் அவதானிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படியானால், பெண்களின் உழைப்பு வேண்டும்;. அவர்களின் வாக்குகள் வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அரசியல் பதவிகள் மட்டும் அவர்களுக்கு வேண்டாமா? இது நியாயமா என்று நீங்கள் யோசித்துச் சொல்லுங்கள்.
பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கான தடைகள்
பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கு மதம், பாரம்பரியம், சமூகம், பொருளாதார நிலை போன்ற சகல தடைகளும் உண்டு. அவையாவன,.
1. வீடுதான் பெண்களுக்கான இடம் என்று எங்கள் சமூகம் கருதுகின்றது. அதனால் பகிரங்க இடமாகிய அரசியலுக்குள் அவர்கள் நுழைவதைத் தடை செய்கின்றது. இதற்காகப் பல காரணங்களைக் காட்டுகின்றது. குடும்பத்தைக் கவனிக்கவேண்டும் என்கின்றது. ஒரு பெண்ணைப் போலவே ஒரு ஆணுக்கும் குடும்பம் தேவைதான். இதில் ஆணுக்கு மட்டும் குடும்பப் பொறுப்புக்கள் எதுவும் இருக்காதது ஏனோ? 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று சொல்லித்தான் அவர்களுக்கு கல்வியுரிமையை எங்கள் சமூகம் மறுத்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். குடும்பப் பொறுப்பைக் காரணம் காட்டித்தான் முன்பு வெளியில் சென்று தொழில் செய்யவும் விடவில்லை. இதிலிருந்து இது நொண்டிச் சாக்கு என்பதை அறிந்து கொள்ளலாம்.

2. அரசியலில் ஈடுபடுவதென்பது, நீண்ட நேரத்தைச் செலவழிக்க வேண்டிய விஷயமாகும். கூட்டங்களில் கலந்து கொண்டும், மக்களைச் சந்தித்துக் கொண்டும் திரியவேண்டும். இதைச் செய்வதற்கு குடும்ப ஒத்தாசை நிறையவேண்டும். அது குறிப்பாக குடும்பத்தின் ஆண் அங்கத்தவர்களிடமிருந்து கிடைப்பதில்லை. ஏனெனில், பெண்கள் அதிகாரபூர்வ பதவிகளில் அமர்வதை அனேகமாக அவர்களின் குடும்பத்து ஆண்கள் நேரடியாகவோ இரகசியமாகவோ வெறுக்கிறார்கள். அதிகாரம் கிடைத்தபின்பு தங்களை மதிக்க மாட்டார்களே என்கின்ற பயந்தான் இதற்குக் காரணம்.

3. வெளியில் திரிய விடாமல் வளர்க்கப்பட்டதனால், பெண்களுக்கும் வெளியுலகைப் பற்றிய அனுபவம் குறைவு. அத்துடன் அரசியல் விடயங்களில் ஆர்வத்துடன் வளர்க்கப்படும் பெண்கள் மிகக்குறைவு. எங்கள் மத்தியில் எத்தனை பெண்கள் கிரமமாக பத்திரிகை வாசித்து ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?. ஆனால் ஆண்களைப் பாருங்கள். அவர்கள் எந்த நேரமும் அரசியல் பேச்சுத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். தங்களுக்குத் தெரியாது, சமாளிக்க முடியாமல் போய்விடும் என்கின்ற காரணத்திற்கும் பெண்கள் தாங்களே பயந்து அரசியலுக்குள் நுழையத் தயங்குகிறார்கள்.

4. இன்று எங்கள் நாட்டின் அரசியல், வன்முறை நிறைந்த விடயமாக மாறிவிட்டது. தேர்தல் என்றால் குத்து வெட்டு சூடு என்று அர்த்தமாகி விட்டது. குண்டர்கள் இல்லாமல் அரசியல் பண்ணவே முடியாத நிலை. இதற்குப் பயந்தும் பெண்கள் ஒதுங்குகிறார்கள். ஆனால், பெரும்பாலும் அமைதியான அணுகுமுறை கொண்ட, அதிகார ஆசையும் போட்டிகளும் அதிகம் கிடையாத பெண்கள் இல்லாதபடியினால்தான் எங்கள் அரசியல் கலாசாரம் இவ்வளவு சீரழிந்து போயிருக்கின்றதென்பதை யாரும் உணர்வது கிடையாது. எங்கள் நாட்டின் அரைவாசி அரசியல்வாதிகள் பெண்களாக இருந்தால் அரசியல் உறவுகள் எப்படி இருக்குமென்று சும்மா கற்பனை பண்ணிப் பாருங்களேன்.  

5. அரசியலில் ஈடுபடுவதற்கு நிறையப் பணம் தேவை. பிரச்சாரத்திற்குக் கொஞ்சம் பேரை வேலைக்கு அமர்த்த வேண்டும், போஸ்டர் அடிக்க வேண்டும், விளம்பரங்கள் செய்ய வேண்டும், பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.  இதற்குத் தேவையான  முதல் எல்லாம் ஆண்களின் கைகளில்தான் இருக்கின்றன. பெரிய முதலாளி என்றால், அல்லது பெரிய தொழிலதிபர் என்றால், அல்லது பெரிய பிஸ்னஸ்மேன் என்றால் உங்கள் மனக்கண்களில் தெரிபவர்கள் யார்? ஆண்கள் அல்லவா? அத்தகைய பணக்காரர்கள்தான் பின்பு அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். இந்தப் போட்டியிலும் பெண்கள் அடிபட்டுப்போய்விடுகிறார்கள்.

6. கற்பொழுக்கம் பெண்கள் மீது மட்டும்தான் எங்கள் சமூகத்தினால் சுமத்தப்படுகின்றது. அந்த ஒழுக்கத்தில்தான் அவர்களின் குடும்ப கௌரவமும் தங்கி நிற்கின்றது எனக் காட்டப்படுகின்றது.  இதை மீறும் பெண்களை அவர்கள் குடும்பமும் எங்கள் சமூகமும் ஒரேயடியாக ஒதுக்கி வைத்து விடும். இதனால் எமது பெண்கள் சமூகத்துக்குப் பயந்தவர்களாக வாழ்கின்றார்கள். இந்த நிலையில் அவர்களை ஒரே அடியில் வீழ்த்துவதற்கு அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் கதைத்தால் போதும். உடனேயே அவர்களின் குடும்பம் 'நீ அரசியலில் இறங்கியதும் போதும் எங்கள் மானம் பறந்ததும் போதும்..' என்று சொல்லி வீட்டில் உட்கார்த்தி விடுகின்றது. இதனால்தான் பெண்கள் அரசியலில் இறங்கும் அனேகமான சந்தர்ப்பங்களில் அவர்களின் சொந்த வாழ்ககையின் ஒழுக்கத்தைப் பற்றிய கீழ்த்தரமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதே நேரம் ஆண் அரசியல்வாதிகள் ஒருவித வெட்கமுமில்லாமல் வைப்பாட்டிகள் வைத்துக் குடித்துக் கும்மாளமடிக்க முடியும். யாருக்குத் தெரிந்தாலும் அவர்களுக்குப் பாதகமில்லை.

7. அரசியல் அதிகாரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த போதைப்பொருள் போன்றது. அதை வைத்திருப்பவர்கள் யாரும் இலேசில் அதனை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஆண்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெண்கள் கைகளில் கொடுப்பதற்குத் தயங்குவதும் இதே காரணத்தினால்தான். எங்கள் நாட்டில், குறிப்பாக ஆட்சிக்கு வரக்கூடிய பிரதான கட்சிகளை, பெண்களை வேட்பாளர்களாகப் போடவைப்பதே மலைப்பான காரியமாகும். அவர்களை அப்படியே வேட்பாளர்களாகப் போடவைத்தாலும், பின்பு வாக்குகள் எண்ணும் இடத்திலேயோ அல்லது விருப்பு வாக்குச் சீட்டுக்கள் விழும் இடத்திலேயோ மோசடி செய்து வாக்கு மாறாட்டம் பண்ணி விடுகிறார்கள் ஆண் அரசியல்வாதிகள். அங்குள்ள பெண் வேட்பாளர்களோ ஏமாந்து உதவியற்று நிற்கின்றார்கள். எந்த உரிமையையும் போராடித்தான் மனிதர்கள் பெற்றார்கள். பெண்களுக்கான வாக்குரிமைக்கு அந்தக் காலத்தில் எங்கள் பூட்டிமார்கள் எவ்வளவு போராடினார்கள் தெரியுமா? அதே போல அரசியல் பங்கெடுப்பிற்கான உரிமையையும் போராடிப் பெறுவதற்கான தெம்பு எங்கள் பெண்கள் மத்தியில் இன்னும் வரவில்லை.

8. மத நம்பிக்கைகளும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு சிலசமயங்களில்  தடையாகின்றன. இந்த நிலைமை அனேகமாக வேதங்களை மதத் தலைவர்கள் எவ்வாறு அர்த்தம் கற்பிக்கின்றார்கள் என்பதிலேயே தங்கியிருக்கின்றது. மதத் தலைவர்களெல்லோரும் ஆண்களாக இருப்பதனால், அவர்கள் தங்களுக்கு சாதகமாகவே வேதங்களுக்கும் பொருள் கொடுப்பது சாத்தியமாகும்.
எனவே, அரசியலில் பெண்களின் பங்கேற்றலுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று நாம் நம்பினால், மேற்கூறிய ஒவ்வொரு தடையையும் தகர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்குண்டு. இவற்றை ஒரேயடியாகத் தகர்ப்பதற்கு, ஆசன ஒதுக்கீடுகள் உதவுகின்றன. இத்தனை பெண்கள் பாராளுமன்றத்திலேயோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களிலேயோ கட்டாயமாக அமரவேண்டும் என்பது சட்டபூர்வமாகக் கொண்டுவரப்பட்டால், அரசியல் கட்சிகள் வேறு வழியின்றி யாரையாவது பெண்களை அமர்த்தியேயாகவேண்டும். ஆரம்பத்தில் ஆண் அரசியல்வாதிகளின் உறவினர்களாகத்தான் இந்தப் பெண்கள் இருக்கக்கூடும் என்றாலும்கூட, பெண்கள் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் வழக்கம் நாள் செல்லச் செல்ல அதிகளவு பெண்களை அரசியலுக்குள் இழுக்கும். எந்த மாற்றம் வேண்டுமென்றாலும் சமூகத்தை முதலில் அதற்குப் பழக்கப்படுத்தவேண்டும், அவ்வளவுதான்.
நாங்கள் முன்பு பார்த்ததுபோல, உள்ளுராட்சி மன்றங்கள் மக்கள் பங்கேற்கும் ஜனநாயக முறைக்கான முக்கிய அங்கங்கள் என்பதனால், அவற்றிலே பெண்கள் பங்குபற்றுவது மிக அவசியமாகின்றது. எனவே, எதுதான் இல்லையென்றாலும், உள்ளுராட்சி மன்றங்களிலாவது பெண்கள் சரிசமமாகப் பங்குபெறுவதற்காக நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உழைக்க வேண்டும்.

கலந்துரையாடலுக்கான கேள்விகள்

1. நீங்கள் வளரும் பருவத்தில் உங்கள் குடும்பத்தில் யார் அரசியல் ஆர்வத்துடன் இருந்தார்கள் என்பதை உதாரணக்கதைகள் கொண்டு விளக்க முடியுமா?

2. அரசியல் மாற்றத்தினால் உங்கள் வாழ்க்கை மாறிப்போன ஏதாவதொரு சம்பவத்தைக் கூறுங்கள். அவ்வாறாயின், அரசியலை எவ்வளவு முக்கிய அம்சமாகக் கருதுகின்றீர்கள்? அதில் நீங்கள் ஈடுபடுவது முக்கியம் என்று நிiனைக்கிறீர்களா?

3. இங்கு குறிப்பிட்ட தடைகளைவிட வேறேதும் தடைகள் பெண்களுக்கு உண்டா?

4. உங்கள் ஒவ்வொருவருக்கும் எற்பட்ட அரசியல் அனுபவங்களைக் கூறுக. அதில் நீங்கள் பங்காளர்களாகவா அல்லது பார்வையாளர்களாகவா இருந்தீர்கள்? ஏன்?

5. மாற்றங்களின் தன்மை பற்றி இங்கே ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதைப் பற்றி உமது அபிப்பிராயம் என்ன?

6. பெண் பிரதிநிதிகளுக்கான ஆசன ஒதுக்கீடு அவசியம் என்று நினைக்கிறீர்களா?

7. பெண்களை அரசியலில் பங்குபெறச் செய்வதற்கு உங்கள் பிரதேசத்தில் என்னென்ன பணிகளைச் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஓன்றொன்றாக விவரிக்க

8. இது தொடர்பாக நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடிய  நடவடிக்கைகளை முதலிலிருந்து முன்னுரிமைப்படுத்தி எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி எடுத்துக்கொள்ளுக.

9. ஆரம்பிக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கைகளை உங்களில் யார் எப்போது செய்து முடிக்கப்போகிறீர்கள்? ஓவ்வொருவரும் உங்கள் சொந்த நடவடிக்கைத் திட்டத்தினைப் போடுங்கள். அதை ஒவ்வொருவராகவோ பலராகவோ செய்து முடிக்கலாம். உங்கள் அடுத்த வாசகர் வட்டக் கலந்துரையாடலில், நீங்கள் சொன்ன விடயங்களெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறீர்களா என்று நிறுவவேண்டும் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.








No comments:

Post a Comment