Wednesday, August 15, 2012

பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும்



பயங்கரவாதத் தடைச்சட்டம் தோன்றிய கதை
1977ம் ஆண்டுக்குப் பின்பு ஜேஆர் ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த சமயம். பாராளுமன்றத்தில் அக்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்கள் மட்டுமே வெற்றி கொண்டதனால் அதற்கு எதிர்க்கட்சித் தலைமையாகவேனும் இயங்க முடியவில்லை. தமிழீழக் கோரிக்கையுடன் தேர்தலில் இறங்கி 18 ஆசனங்களை வென்றெடுத்த தமிழர் கூட்டணியின் தலைவர் திரு அமிர்தலிங்கம்தான் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். இந்த நிலைமையில் ஆளுங்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் தனக்கிருந்த பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு எந்தச் சட்டத்தையும் இயற்றக்கூடியதாக இருந்தது. இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுதான் அந்த அரசாங்கம் 1978ம் ஆண்டு இலங்கைக்குரிய புதிய அரசியல் யாப்பினையும் சட்டமாக்கியது. இந்த அரசியல் யாப்புதான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கொண்டு வந்தது. மேலும் இந்த யாப்பில் இலங்கைப் பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமுலுக்குக் கொண்டு வரும் எந்தச் சட்டமும், அது அரசியல் யாப்புடன் ஒத்துப்போகின்றதோ இல்லையோ, அது செயற்படுத்தப்படும் என்கின்ற அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதே வேளை 1976ம் ஆண்டுக்குப் பின்பு வட-கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் சிறிது சிறிதாக அதிகரிக்கலாயின. 1976ம் ஆண்டு அவ்வியக்கம் அப்போதைய யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்தும் வேறு பல வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. எனவேதான் 1978ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பையும் அது போன்ற ஏனைய அமைப்புக்களையும் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தவிர எங்கள் நாட்டில் 1947ம் ஆண்டின் பொதுசன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் அவசரகாலச் சட்டமும் இருந்தது.  ஆனால் இவையெல்லாம் போதாதென்று கருதிய அரசாங்கம்  1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைக் கொண்டுவர பரிந்துரைத்தது.
முதலிலிருந்தே ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்தனா அவர்கள், இந்;தச் சட்டத்தை தான் தனது பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் அமுலுக்குக் கொண்டுவரப் போவதாக அறிவித்து விட்டார். இதனால், இச்சட்டம் எங்கள் அரசியல் யாப்பின் கொள்கைகளுக்கு மாறாக இருக்கின்றதா இல்லையா என்பதை எமது உயர் நீதிமன்றம் பரிசீலிப்பதற்கே தேவையில்லாமல் போய்விட்டது. ஏனெனில் என்ன சொன்னாலும் சரி செய்தே தீருவதென்று ஜனாதிபதி முடிவெடுத்து விட்டாரே. இதன் காரணமாக, உயர் நீதிமன்ற நீதியரசர்களும் முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தில் பாரதூரமான பிழைகள் ஏதும் இருக்கின்றனவா என்பதை மட்டும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, யாப்பின் மனித உரிமைகள் பிரிவினைப் பார்க்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் ஒரு பக்க அறிக்கையில் 'இது எமது அரசியல் யாப்புக்கு முரணாகவில்லை' என்று சொல்லி இந்தச் சட்ட மசோதாவை பாராளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கான பச்சை விளக்கைக் காட்டி விட்டார்கள்.
1979ம் ஆண்டு ஜுலை மாதம் 19ந் திகதி சட்ட மசோதா பாராளுமன்றத்துக்கு வந்தது. இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்மொழிந்தவர் யார் தெரியுமா? மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி உறுப்பினர் கே டபிள்யூ தேவநாயகம் அவர்களே. இந்த விவாதத்தின்போது இந்தச் சட்டத்தை எதிர்த்தவர் யார் தெரியுமா? நீங்கள் நினைக்கின்ற மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் இல்லை. இது 'பெடியன்களை'ச் சமாளிப்பதற்காக ஒரு கொஞ்ச நாளைக்குத்தான் அமுலில் இருக்கும். நீங்கள் அவ்வளவாக இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள் என்று ஜேஆர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், அவர் மௌனமாகிவிட்டார். அவருக்கும் 'பெடியன்களை'ச் சமாளிக்கின்ற தேவை இருந்தது போலும்.  இரு தமிழ் அரசியல் தலைவர்களின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் இன்றுவரை எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்களையும், அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் உடைமைகளையும் அழித்தொழிக்கப் பாவிக்கப்பட்டிருக்கின்றது தெரியுமா? இங்கு மவையகத் தமிழ் மக்கள்கூட விட்டுவைக்கப்படவில்லை. நினைத்தே பார்க்க முடியாத சித்திரவதைகள், கொடுமைகள். இதிலிருந்து, என்னதான் ஒரு சந்தர்ப்பத்துக்குத் தன்னும் செய்யப்படுகின்ற எந்த நடவடிக்கையும், அடிப்படை மனித உரிமைகளை மீறா வண்ணம் நாம் கண்காணித்தக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அன்று பாராளுமன்றத்தில் இதற்கெதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால செனநாயகதான் எதிர்த்து வாதிட்டவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தடைச்சட்டம் இருக்கின்றதே, அவசரகாலச் சட்டம் இருக்கின்றதே, அது கூடப் போதவில்லையா என்று, தனக்கு வாக்களித்த மக்களுக்கெதிராகவே இச்சட்டம் அவசர அவசரமாக பாஸ் பண்ணப்படுகின்றது என்ற அரசாங்கத்தின் உள் நோக்கத்தை அவர் சாடினார். ஆனால், என்ன பேசி என்ன செய்ய, ஒரே நாளிலேயே இச்சட்டம் கடகடவென அங்கீகரிக்கப்பட்டு விட்டது. தற்காலிகமானது என்று சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும் இன்று 2010ம் ஆண்டில் இது 30 வருடங்களையும் தாண்டிவிட்டது!!
இச்சட்டம் பின்பு 1982ம் ஆண்டும் பின்பு 1988ம் ஆண்டும் திருத்தப்படடது. இதில் கொடுக்கப்பட்டுள்ள ஷரத்துக்கள் போதாதென்று 2006ம் ஆண்டு மஹிந்த அரசாங்கம் இன்னுமொரு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தது. இது முதலாவதாக, பயங்கரவாத நடவடிக்கை என்றால் என்ன என்பதை வரையறுத்தது. அது, பிரிவினைக்கு ஆதரவாகப் பேசுதல் ,எழுதுதல், நடவடிக்கைகளைச் செய்தல், அப்படிச் செய்பவர்களுக்கு ஏதேனும் முறைகளில் உதவுதல், என்பனவாகும். ஐந்து பேருக்கு அதிகமாகக் கூட்டம் கூடினாலும் அது குற்றமாகக் கணிக்கப்படுகிறது. இதன் கீழ், கைதாகின்றவருக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள்கூட குற்றவாளிகளாகக் காணப்படலாம்!! புலிகளின் ஆதரவாளர்களின் ஆதரவாளர்களும் கைது செய்யப்படுவது மட்டுமல்ல, அவர்களின் சொத்துக்கள் கூட அரசாங்க உடைமையாக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டமும் எமது அரசியல் யாப்பில் பொறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளும்
இலங்கையின் 1978ம் ஆண்டின் அரசியல் யாப்பானது, பேச்சு சுதந்திரம், கூட்டம் கூடி இயங்கும் சுதந்திரம், சட்டத்தின் முன்பு சமத்துவமான பாதுகாப்பு, எழுந்தமானமான கைதுகளுக்கும் தடுத்து வைக்கப்படுதற்கும் எதிரான பாதுகாப்பு, சித்திரவதையினின்றும் விடுதலை, நீதியாக நடத்தப்படும் வழக்குகளுக்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மக்களாகிய எங்களுக்கு வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழோ,
1. அமைச்சரின் ஆணையின் பேரில், அவர் அதிகாரம் வழங்குகின்ற அலுவலர்களினால் அவர் சந்தேகிக்கின்ற எவரும் கைதாக்கப்படலாம். கைது செய்யப்படும்போது கைது செய்யப்படுபவருக்கு காரணம் ஏதும் சொல்லத் தேவையில்லை. அவருடைய வீட்டுக்குள் அனுமதியில்லாமல் புகுந்து தேடலாம். எந்தப் பொருளையும் எடுக்கலாம்.
2. அமைச்சர் தீர்மானித்த முறையிலும் அவர் தீர்மானிக்கின்ற இடத்திலும் கைதானவர் தடுத்து வைக்கப்படலாம். முதல் 72 மணித்தியாலங்களுக்கு அவர் வெளியுலகத் தொடர்புகளின்றி, முக்கியமாக, ஒரு சட்டத்தரணியின் உதவியின்றி (எங்கள் பொதுச் சட்டம் கைதான எவருக்கும் உடனடியாகவே சட்டத்தை நாட உரிமை இருக்கின்றது என்று கூறுகிறது) தடுத்து வைக்கப்படலாம். இவ்வாறு தடுத்து வைக்கப்படும்போது அவர் கொடுக்கின்ற வாக்கு மூலங்கள் நீதிமன்றில் செல்லுபடியாகும் (எங்கள் பொதுச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்படும்போது சித்திரவதைகளுக்கு இடமிருக்கின்றது என்பதனால், அப்போது கொடுக்கப்படுகின்ற வாக்குமூலங்கள் செல்லுபடியாகா).  
3. கைது செய்யப்பட்டு இருப்பவரை பொலிஸ் விசாரணைக்காக எப்பொழுதும் எங்கும் கொண்டு செல்லலாம். எனவே, ஒரு நீதிமன்றின் பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எந்தக் கைதியும் பொலிஸாரினால் வேறெந்த இடத்துக்கும் கொண்டு செல்லப்படலாம்.
4. சந்தேக நபர் 18 மாதங்களுக்கு ஒருவித குற்றச்சாட்டுமின்றித் தடுத்து வைக்கப்படலாம். அப்படி அவர் விடுவிக்கப்பட்டாலும்கூட, இந்தக் காலத்துக்கு அவருடைய நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மட்டுப்படுத்தலாம். அவர் எங்கே குடியிருக்கலாம், எங்கே வேலை செய்யலாம், எங்கே பயணஞ் செய்யலாம், எந்தவொரு அமைப்புக்களை செயற்படுத்துவதற்கும் தடை போன்றவையே இந்த மட்டுப்படுத்தலாகும்.
5. பயங்கரவாத அமைப்புக்களை ஆதரிப்பது, அதற்கு ஆதரவாக பிரசுரங்களை வெளிக்கொணர்வது, வன்முறைகளில் ஈடுபடுவது இவையெல்லாவற்றுக்கும் 5வருடம் தொடங்கி 20 வருடம் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு. 2008ம் ஆண்டில் கைதான ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அவர்களுக்கு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இரண்டு கட்டுரைகள் எழுதினார் என்ற பேரில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை எங்களது நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்டது.
6. எவரேனும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து தமக்குத் தெரிந்த தகவல்களை பொலிஸாரிடம் தெரிவிக்காமல் விட்டால் அதற்கு ஏழு வருடங்கள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு.
இந்தச் சட்டத்தில் தில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியஅ ம்சங்கள் நிறையவே இருக்கின்றன. ஒரு அரசியல்வாதி (அமைச்சர் என்றால் வேறு யார்?) எங்களை கைது செய்வது பற்றித் தீர்மானிக்கலாம் (உண்மையில் நீதித்துறையே அதற்கான அதிகாரம் கொண்டது)ளூ பாதிக்கப்பட்டவருக்கு சட்ட உதவி இல்லாமல் பண்ணலாம்ளூ நீதிமன்றின் அனுமதியில்லாமலேயே அதன் பாதுகாப்பின் கீழ் இருக்கும் ஒரு நபரை எங்கும் (உத்தியோகபூர்வ பாதுகாப்பு இல்லாத எந்த இடமும் ) அழைத்துச் செல்லலாம்ளூ அவரை என்னவும் செய்யலாம் (ஏனெனில் எப்படிச் செய்தாலும் அவருடைய வாக்குமூலம் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுமல்லவா?).  வழமையாக எமது சட்டங்கள், செய்யப்படும் நடவடிக்கைகளுக்கான தண்டனைதான் தரும். செய்யாத நடவடிக்கைகக்காக தண்டனை தருவது கிடையாது. எமது பயங்கரவாதத் தடைச்சட்டத்திலேயோ, ஒருவர் படையினருக்கு தமக்குத் தெரிந்த தகவலை தெரிவிக்காத குற்றத்துக்காகத் தண்டிக்கப்படலாம். இதன்மூலம் எங்கள் நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஒரு வேவு பார்க்கும் சமூகமாக இந்தச் சட்டம் மாற்றியது. இந்தக் காரணத்தினால் கொழும்பு மற்றும் சுற்றுப்புறச் சூழலில் வாழ்ந்த எத்தனை தமிழர்கள் தங்கள் சிங்கள அயலவர்களினால் பொலிஸாரிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். இப்படி ஒரு பேனா வீச்சிலேயே இந்நாட்டிலுள்ள தமிழ் சிங்கள மக்களிடையே இருந்த ஒற்றுமையை இது குலைத்தது.
இதைவிட முக்கியமாக, எமது நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள், ஒருவித சாட்சியங்களுமின்றி கைது செய்யப்பட்டவர் தடுப்புக் காவலில் இருந்தபோது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மட்டும் தீர்ப்பாகின. தடுப்புக்காவலில் நடத்தப்படும் சித்திரவதைகளின் அளவும் தன்மையும் முன்னெப்போதும் கண்டிராதவகையில் பெருகின. அந்த சித்திரவதைகளை இங்கு விவரிக்கவே அங்கம் கூசும்.
அவசரகாலச் சட்டம்
எங்கள் நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தோடு அவசரகாலச் சட்டமும் அமுலில் இருந்து வந்திருக்கின்றது. எனவே இதைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
அவசரகாலச் சட்டமானது, 1947ம் ஆண்டின் பொதுசன பாதுகாப்புச் சட்டம், மற்றும் எங்கள் அரசியல் யாப்பின் 76, 155 ஆகிய பிரிவுகள், ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படுத்தப்படுகின்றது. எமது ஜனாதிபதி அரசாங்கத்தின் வர்த்தமானியில் (அரசாங்கத்தின் கொள்கைகளையும் சட்டங்களையும் வெளியிடும் பிரசுரம்) பிரகடனம் செய்த அந்தக் கணமே அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. இந்தச் சட்டம் யாப்பில் காணப்படுகின்ற சட்டங்களைத் தவிர வேறெந்தச் சட்டங்களையும் மீற வல்லது. ஆயினும் எங்களது அரசியல் யாப்பு, தானே தனது எந்தெந்நதச் சட்டங்களை ஒரு அவசரகாலச் சட்டம் மீறலாம் என்று குறித்திருக்கின்றபடியால், அவசரகாலச் சட்டம் எங்கள் அரசியல் யாப்பின் அந்தச் சட்டங்களையெல்லாம் மீறுவதற்கு அதிகாரம் படைத்திருக்கின்றது (இது அனேகமாக எங்கள் அடிப்படை உரிமைகளைக் குறித்துத்தான் இருக்கும் என்பதை நீங்கள் நாம் சொல்லாமலேயே அனுமானித்துக் கொள்ளலாம்).
பிரகடனத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி, அதனை உடனடியாகவே பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இப்பிரகடனம் ஒரு மாதத்துக்குத்தான் செல்லுபடியாகும். அதற்குப் பிறகு பாராளுமன்றம் அதனை அங்கீகரித்தால்தான் அடுத்த மாதத்துக்கு அதனை நீட்டலாம். இப்படி மாதாமாதம் பாராளுமன்றம் கூடி அவசரகாலச் சட்டத்தினை அங்கீகரித்ததனால்தான் 1971ம் ஆண்டு தொடக்கம் (முதலாவது ஜேவிபி கிளர்ச்சி) இன்று வரை ஒரு சில மாதங்களைத் தவிர இச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருந்து வருகின்றது. இதைக் கொண்டு எங்கள் ஜனாதிபதி தொழிற்சங்க நடவடிக்கையை ஒடுக்குவது தொடங்கி பாராளுமன்றத்தைக் கலைப்பது வரை எதையும் செய்யலாம்.
அவசரகாலச் சட்டத்தின்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எவரையும் கைது செய்து காலவரையறையின்றி, அதாவது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரையும்,  தடுத்து வைக்க ஆணையிடலாம். ஆனால் எங்கள் நாட்டிலோ தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த தன்மையினால் யதார்த்தமாகப் பார்க்கப்போனால் ஒருவர் தனது வாழ்நாள் முழுக்கவே விசாரணையின்றி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படலாம் என்ற நிலைமையே காணப்படுகிறது. மேலும், கைதாகி 15 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் தருவிக்கப்படவேண்டும் ஆயினும், அவர் நீதிபதியினால் விடுவிக்கப்பட முடியாது. அவரை மிண்டும் ரிமாண்டில் போடுவதுதான் ஒரு நீதிபதி செய்யக்கூடிய உதவியாகும். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் நீதியமைச்சின் நிரந்தர செயலாளரின் அனுமதி பெற வேண்டும். சுருங்கக்கூறில், ஒருவரை நிரந்தரமாகக் கைதியாக வைத்திருக்கும் யுக்தியே நமது அவசரகாலச் சட்டம் என்றால் மிகையாகாது. இந்தச் சட்டத்தின் கீழ்தான் நாம் முன்பு கூறிய பயங்கரவாதத்துக்கு எதிரான 2006ம் ஆண்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்றாகச் செயற்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த நரக துன்பம்தான் எஞ்சும். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் 72 மணித்தியாலங்களில் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவேண்டும் என்பதனால், 72 மணித்தியாலங்களில் அவர்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஏதோவொரு குற்றச்சாட்டை எழுதிப் போட்டுவிடுவார்கள். இங்கு 15 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படவேண்டும் என்பதனால் உடனே திரும்பப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஏதேனும் குற்றச் சாட்டைப் போட்டு 18 மாதங்கள் சிறை வைத்து விடுவார்கள். இப்படியே போக வேண்டியதுதான். இன்னும் இந்தச் சட்டங்கள் எங்கள் நாட்டில் அமுலில் இருக்கின்றன. இவற்றுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமும் ஒருங்கே ஒருசேர அமுலில் இருந்தால் என்ன நடக்கும்? 2007ம 2008ம் 2009ம் ஆண்டுகள் நாம் அனுபவித்த பயங்கரங்கள்தான் கூடும்.
இவை இன்னமும் அமுலில் இருக்கின்ற சட்டங்கள். இவற்றை இல்லாதொழிப்பதற்கு பல மனிதஉரிமைகள் அமைப்புக்கள் பணி புரிகின்றன. மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், மனித உரிமைகள் இல்லம் போன்றவை அவையாகும். ஆனால் நாங்கள் மக்கள் உறுதியுடன் அவர்களுக்குப் பின்னால் நிற்காவிட்டால் சிறிய நிறுவனங்களாகிய அவை ஒன்றும் செய்ய முடியாது. இச்சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வுகளை தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியிலே ஏற்படுத்தி இந்த நாடே சூழ்ந்து இந்த அநீதிகளை ஒழிக்கப் பாடுபடச் செய்ய வேண்டும்.

கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. நீங்களேனும் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் எவரேனும் கைது செய்யப்பட்ட அனுபவங்கள் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் விரும்பினால் மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன?
2. அநீதிகள் எங்கள் வாழ்க்கையில் நடக்கும்போது அவற்றை நினைவு கூருவதும் அவற்றைப் பற்றிப் பேசுவதும் அவசியமானது என்று நினைக்கிறீர்களா, இல்லையா? ஏன் என்று கூறுக.
3. 'இந்தச் சட்டமெல்லாம் நமக்கப்பாற்பட்ட விசயங்கள். பேசாமல் இருந்து கொண்டு ஏதாவது ஆட்சி மாற்றங்கள் வந்தால் அதால இது மாறும் வரைக்கும் காத்திருக்கலாம்..' இப்படி உங்கள் நண்பர் சொல்லுகிறார். நீங்கள் அதற்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?
4. பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒழிக்கப்படுவதற்கு நீங்கள் உங்கள் ஊரில் இருந்து கொண்டு செய்யக்கூடிய நடவடிக்கைகள் என்ன? அவை என்னென்ன பயன்களைத் தரும்?

 Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்



No comments:

Post a Comment