பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற விஷயம் வலி. குறிப்பாக பெண்களும் வயதானவர்களும் பல்வேறு வலிகளால் அவதிப்படுகிறார்கள்.
எங்கேயாவது அடிபட்டுக் கொள்வது, திசுக்கள் தேய்வது, நீரிழிவு, தைராய்டு மாதிரி ஏதேனும் நோய் தாக்குவது, சூழ்நிலை போன்றவை தான் வலிக்கான காரணங்கள்.
வலி என்பது நாள்பட்ட வலியாக மாறினால், வாழ்க்கை முழுவதும் அதன் அவதியை அனுபவிக்க வேண்டி வரும். உலகம் முழுக்க ஒன்றரை கோடி மக்கள் தீராத வலியால் அவதிப்படுகிறார்கள்.
அவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 75 சதவிகிதத்தினருக்கு மன உளைச்சலும் கவனக்குறைவும் சேர்ந்து கொள்கிறது. 85 சதவிகிதம் பேர் தூக்கமின்றித் தவிக்கிறார்கள்.
இத்தகைய வலியை எப்படித் தவிர்ப்பது?
சாதாரண வலியாக இருக்கும் போதே அதை சரியாகக் கவனிக்காமல், சிகிச்சையளிக்காமல் விட்டால், அது நிரந்தர வலியாக உடம்பிலேயே தங்குவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம்.
சாதாரண வலியை உடனடியாகக் கவனிக்காததே, அது நாள்பட்ட வலியாக மாறுவதற்கான பிரதான காரணம். வலி வந்ததும் 48 மணி நேரத்துக்குள் சிகிச்சையளிக்காவிட்டால், அது உடலில் தங்கும் அபாயம் உண்டு.
நாள்பட்ட வலி என்பதே ஒரு நோய் தான். இந்த வலிக்கு சாதாரண வலி நிவாரண சிகிச்சைகள் பலன் தராது. வலி நிவாரண மாத்திரைகளோ, சுய மருத்துவமோ உதவாது.
மாறாக வியாதியின் தீவிரம் தான் அதிகரிக்கும். நாள்பட்ட வலிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் தான் தீர்வு. வலிக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கேற்ற உடற்பயிற்சி, மனப்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது முதல் கட்டம்.
சதை வலி, மூட்டு வலி, முதுகு வலி, தலைவலி, நரம்பு வலி, புற்றுநோய் வலி என எல்லா வலிகளுக்கும் இன்றைய நவீன மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் உள்ளன.
அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். எந்தக் காரணத்தினால் வலி உண்டானதோ, அதைத் தவிர்க்க வேண்டும்.
உதாரணத்துக்கு நடந்தால் வலிக்கிறது என்றால் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சியால் வலி என்றால் அதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருபோதும் சுய மருத்துவம் வேண்டாம். ஓய்வெடுத்தால் வலி சரியாகி விடும் என்கிற அலட்சியமும் வேண்டாம்.
|
No comments:
Post a Comment