Thursday, May 10, 2012

ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்




ரிக்வேதம் – முதல் மண்டலம், முதல் சூக்தம் (ரிஷி: மதுச்சந்தா விஸ்வாமித்ரர்)
ஓம்
அக்னியே புரோகிதன்
வேள்வியின் தேவன்
ரித்விக், ஹோதா
செல்வங்களின் இருப்பிடம். 
போற்றுவோம்!  
(புரோகிதன் – வேள்விச் சடங்கின் முக்கிய பூசாரி; ரித்விக்,ஹோதா – வேள்வியில் மந்திரங்கள் ஓதும் துணை பூசாரிகள்) 
பழைய ரிஷிகளும் புதியோரும் போற்றும் அக்னி   
தேவர்களை இங்கு அழைத்து வருக!   
புகழும் உன்னத வீரியமும் கொண்டு 
நாள்தோறும் வளரும் செல்வம் 
அக்னியால் பெறுகிறோம்.  
அக்னி! நீ எங்கும் சூழ்ந்து நிறையும் வேள்வி 
தவறாமல் தேவர்களைச் சென்றடைகிறது.
முதல் புரோகிதன்
உட்பொருள் உணரும் கவி
சத்தியமானவன்
உன்னத மேலோன் தேவன்
அக்னி 
தேவர்களுடன் இங்கு வருக!
ஓ அக்னி! அங்கிரஸ்! 
நீ தரும் நன்மையும் செல்வமும் 
உண்மையில் உனக்கே உடைமையாகிறது.
தீமையழிக்கும் அக்னி! 
ஒவ்வொரு நாளும் 
உன்னையே எண்ணிப் போற்றி 
உன்னிடம் வருகிறோம்.
சுடர்விட்டு ஒளிர்வோன்
வேள்வியின் வேந்தன் 
மாறாத சத்தியத்தின் காவலன் 
தன்னகத்தே வளர்வோன் 
அக்னி. 
 
மகனுக்குத் தந்தை போல 
நீ எமக்கு எளியவன்
அக்னி! எம் நல்வாழ்விற்காக
எம்முடனே இருந்திடுக! 
முதல் வேதமான ரிக்வேதத்தின் முதல் சூக்தம் இது.
இத்தகைய சூக்தங்கள் வேதங்களின் ஆதிப் பழங்கால இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் என்றும், கர்மகாண்டம்  என்று அழைக்கப்படும் சடங்குகளை மையமாகக் கொண்ட சமயப் பிரார்த்தனைகள் என்றுமே பொதுவாக அறியப்படுகின்றன. ஆனால் ஆலமரத்தைத் தன்னுள் அடக்கிய விதை போல, இந்து ஞான மரபின் வளர்சிதை மாற்றங்களுக்கான கூறுகள் ரிக்வேதத்திலேயே உருவாகத் தொடங்கிவிட்டன என்பதே வேத அறிஞர்கள் பலர் கொண்டுள்ள கருத்தாகும். வேத இலக்கியத்திற்கும் உலகின் மற்ற பல கலாசாரங்களின் பழங்குடிப் பாடல்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் இதுவே. ரிக்வேதத்தின் தொல்பழம் பாடல்கள்கூட காலம் கடந்து இன்றளவும் நமது கூட்டுப் பிரக்ஞையில் சிந்தனைகளாகவும், உணர்வுகளாகவும் நிற்பதும் வேத இலக்கியத்தின் தனிச்சிறப்பு என்று கூறலாம்.
உதாரணமாக, இந்த சூக்தத்தின் முதல் மந்திரத்தை எடுத்துக் கொள்வோம். ஆதி வேத ரிஷியின் வேள்விச் சடங்குக்கான இந்தத் துதிப் பாடலிலேயே கூட, இந்து மெய்ஞானம் கண்டடைந்த தத்துவத்தின் உச்சமாக உள்ள ஒரு தரிசனம் இருக்கிறது.

பல ஆண்டுகள் முன்பு நான் எல்லோரா சென்றிருந்தேன். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைய குகைக்கோயில்கள் அங்குள்ளன. இந்திய சிற்பக் கலையின் மகோத்தனங்களான இந்த குகைக் கோயில்களில் மையமானதும் மிக அழகானதும் கைலாசநாதர் கோயில். இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவாலயம் வழக்கமான முறையில் கட்டப்பட்டதல்ல. மாறாக ஒரே மிகப் பெரிய பாறையை உள்பக்கமாகக் குடைந்து அதிலிருந்து உருவாக்கப்பட்டது. கோயிலுக்கு உள்ளிருந்து பார்க்கும்போது வெளியே விரியும் பரந்த ஆகாய வெளியே கோயிலுக்கு உள்ளும் பிரதிபலிப்பதாக ஒரு பிரமிப்பு ஏற்படும்.
கோயிலுக்குள் சென்றேன். அங்குள்ள சிவலிங்கத்தை வணங்கினேன். அப்போது சட்டென்று அந்த விஷயம் உறைத்தது– இது ஒரே கல்லால் கட்டிய கோயில். அந்த மாபெரும் ஒரே கல்தான் இந்தக் கோயிலும் அதன் விமானமும் அதன் பிராகாரங்களும்; அதன் சிவலிங்கமும் கூட. அதன் மீது நான் நின்று கொண்டிருக்கிறேன். அதையே வணங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த உணர்வு தந்த பிரமிப்பில் ஒரு நிமிடம் கல்லாய்ச் சமைந்துவிட்டேன்.
ஆம்! அக்னியே புரோகிதன். அக்னியே வேள்வியின் தேவன். அக்னியே வேள்வியில் கானம் பாடுவோன். வேள்விப் பயனான செல்வஙகளின் இருப்பிடமும் அவனே.

‘அறிவும் அறிபடு பொருளும் அறிபவனும் ஒன்றாகும் நிலை’ என்று வேதாந்த தரிசனம் குறிப்பிடும் நிலையை இந்த மந்திரம் மறைபொருளாகச் சொல்கிறது என்று கொள்ளலாமா? அதற்கு இடமிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் வேதம் உரைத்த ரிஷிகள் மறைஞானிகள். அவர்களது வாய்மொழிகள் வெறும் சொற்கள் அல்ல, மெய்யுணர்வின் உச்ச நிலையின் வெளிப்பாடுகள்.
வேள்வி என்பதை செயலின் குறியீடாகக் கொண்டால், செயலும், செய்வோனும், அந்தச் செயலுக்கான கருவிகளும், செயலின் இலக்கான தேவதையும், செயலின் பயனான செல்வங்களும் எல்லாம் அக்னியே என்று இந்த மந்திரம் கூறுகிறது. ‘ஒன்றாகக் காண்பதே காட்சி’ என்ற உணர்வினால் அது சாதாரணச் செயலாக இல்லாமல் யோகமாக ஆகிறது. இத்தத்துவம் கீதையில் இன்னும் அழகாக தெளிவான சொற்களில் பேசப்படுகிறது. வேள்வி என்ற வைதீகச் சடங்கையே ஓர் உருவகமாகக் கொண்டு பிரபஞ்ச இயக்கம் முழுவதையும் அந்தச் சுலோகத்தில் கீதை காட்டிச் செல்கிறது – “அர்ப்பணம் செய்தல் பிரம்மம்; அவிப் பொருள்களும் பிரம்மம்; பிரம்மமாகிய அக்னியில் பிரம்மத்தால் கொடுக்கப் படுகிறது. பிரம்மமாகிய கர்மத்தில் மனம் குவிந்துள்ளவனால் பிரம்மமே அடையப்படுகிறது”.
இது போன்று, ரிக்வேத சூக்தங்களில் உறைந்துள்ள மறைபொருள் குறித்து ஸ்ரீஅரவிந்தர் விரிவாக எழுதியுள்ளார். The secret of the Veda என்ற நூலில் வேத முனிவர்களின் பாடல்கள் அனைத்தையும் குறியீடுகளாகவும் தத்துவங்களாகவுமே கண்டு வேத இலக்கியம் பற்றிய தனது புரிதலை அவர் முன்வைக்கிறார். Hymns to the Mystic fire என்ற நூலில் ரிக்வேதத்தில் உள்ள 36 அக்னி சூக்தங்களை இந்தக் கோட்பாடு கொண்டு விளக்கியுள்ளார். இந்த நூலை அவரது சீடரும் மாபெரும் வேத அறிஞருமான கபாலி சாஸ்திரி 1940-களில் தமிழாக்கம் செய்தார். பண்டித நடையில் அமைந்திருந்த அந்த மொழியாக்கம் ஓரளவு எளிமைப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளிவந்துள்ளது  (அரவிந்தர் அருளிய அக்னி சூக்தங்கள், SAKSI பதிப்பகம், பெங்களூர்)
ஆனால், இந்த மந்திரங்களை இவ்வாறு குறியீட்டுரீதியாக, தத்துவார்த்தமாக மட்டுமே கண்டாக வேண்டும் என்பதில்லை. அடிப்படையில் அவை மிக அழகிய தொன்மக் கவிதைகள். ரிஷிகளின் மெய்த் தேடலும், ஆதிப் பழங்குடியினருக்கான குழந்தைத் தனமும், சம்ஸ்கிருத மொழியின் ஆரம்ப கணங்களிலேயே அதில் உருவாகிக் கொண்டிருந்த உயர்கவித்துவமும் எல்லாம் கலந்து இந்த மந்திரங்களில் மிளிர்கின்றன என்று கருதுவதே சரியாக இருக்கும்.
ரிக்வேதம் முதல் மண்டலத்திலிருந்து பத்தாம் மண்டலம் வரையிலான மந்திரங்கள் பல்வேறு ரிஷிகளால் அருளப் பெற்றவை. அக்னியைக் குறித்த பாடல்களே இவற்றில் மிகப் பிரதானமாக உள்ளன. இந்தப் பாடல்களில் சிலவற்றை ஒரு பறவைப் பார்வையாகப் பார்த்தோமானால், ரிக்வேத இலக்கியம் தன்னுள் அடைந்துவந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு சித்திரமும் காணக் கிடைக்கும்.
அக்னியே இந்திரனாக, எமனாக, ருத்ரனாக, விஷ்ணுவாக, தாய் அதிதியாக, தேவ சொரூபங்கள் அனைத்தும் கொள்வதாக மந்திரங்கள் பகர்கின்றன. அனைத்து இந்தியர்களின் தொல்மூதாதைகளான ரிஷிகள் வளர்த்த அக்னியே வேள்வித் தீயாக, ஆசைத் தீயாக, சக்தித் தீயாக, உயிர்த் தீயாக, அறிவுத் தீயாக, கலைத் தீயாக, யோகத் தீயாக, ஞானச் சுடராக பல்வேறு தோற்றம் கொண்டு வளர்ந்து இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
மேலும் இரண்டு சூக்தங்களையும் கீழே அளிக்கிறேன்.
*****
ரிக்வேதம் – இரண்டாவது மண்டலம், நான்காவது சூக்தம் (ரிஷி: க்ருத்ஸமதர்)
நல்லொளி கூர்தர நற்சொற்களுடன்
மாந்தர்க்கு விருந்தாய் வந்து 
நல் ஆகுதிகள் ஏற்கும் அக்னி
மித்திரன் போல் இனியவன்
மனிதர் தேவர் ஈறாக அனைத்துமறியும்
ஜாதவேதஸ்
அவனை அழைப்போம்.
நீர்களில் உறையும் அவனைப் பணிந்து
மானிடர் கூட்டங்களில் நிறுவினர் பிருகுக்கள்
விரிந்த உலகெங்கும் ஆள்க அக்னி ! 
விரைந்தோடும் பரிகளுடையோன்!
தேவர்களின் மேலாளன்!
குடிபுகுமிடம் வரும் மித்திரன் போல
அன்பு அக்னியை
தேவர் மனிதரிடையே அமைத்தனர்
அலைபாயும் இரவுகளின் தவிப்பை
ஆற்றும் அவன் சுடர்
வேள்வி தரும் வீடுகள் அவனை உபசரித்திடுக.
  
இன்பம் அவனது சுடரின் புஷ்டி
வாழ்வில் வளப்பம் போல
இன்பம் அவன் கனன்று முன்செல்லும் காட்சி
வனச்செடிகளை நாவால் தீண்டி
பிடரிமயிர் குலுங்க ஓடும்
தேர்க்குதிரை அவன்!
காடுகளை உண்ணும் அவன் வலிமை
போற்றுகிறது என் மனம் 
விருப்புற்றுத் தன்வண்ணம் காட்டுகிறான்
இன்புற்று அவன் காட்டும் எழிலார்ந்த சுடரொளி! 
ஓ! மூப்படைந்த அவன் மீண்டும் 
இளமையுறுகிறான்!
தாகத்தால் தவிப்பது போல்
காடுகளில் ஒளிர்கிறான்
நீரோட்டம் போல் அவனது முழக்கம்
வழியெங்கும் அவனது வெய்யக் கருமை
விண்ணின் மேகப் புன்முறுவலென. 
பேருலகெங்கும் எரிந்து பரவுகிறான்
கட்டில்லாது சுயமாய்த் திரியும் மிருகமென.
உலகையே உண்டுவிடுவது போல்,
உலர்ந்த அடிமரத்தைப் பொசுக்கிக் 
கரிய சுவடாக்கும் அக்னி!
உனது பழைய ஆசிகளின் நினைவில்
மூன்றாம் வேள்வியில் உன்னைப் பாடுகிறோம்
அக்னி! 
வீரர் கூடும் பெரும்பரப்பும் 
நற்சந்ததிகளும் நிறைந்த செல்வமும் 
தருக!
அக்னி! 
உன்னைப் புகழும் க்ருத்ஸமதர்கள்
வலிமை பெறுக!  
நிறைந்த வீரர்களுடன்
எதிரிகளை அடக்கி முன்சென்று வெல்க! 
மறைபொருள் எமக்கு வசப்படுக!
*****
ரிக்வேதம் – ஆறாவது மண்டலம் முதல் சூக்தம் (ரிஷி: பரத்வாஜர்)
அக்னி
இந்த எண்ணத்தை முதலாக எண்ணியவன் நீ
அற்புதன்  
வேள்வியில் தேவர்களைக் கூவியழைப்போன்
வெல்லுதற்கரிய காளை நீ 
உன் ஆற்றலால் உலக ஆற்றல்கள் அனைத்தும் ஆள்பவன்.
வேள்வி நடத்துவோன் நீ
யாம் வேண்டி வழிபட 
விருப்புற்று வந்தமர்ந்தாய்
செல்வப் பெருநிதியின் வழி உன் மனம் 
உன்னையே முதலாய்ப் பற்றி
தேவர்களைச் சமைப்பர் உணர்ந்தோர். 
ஊண்செறிந்து
மேன்மேலும் ஒளிர்ந்து சுடரும்
பெரியோய் ! 
கண்ணுக்கினிய அக்னி!  
நீ விழித்து நோக்கிட 
வழிப்போக்கர் பின்செல்வார் போல
செல்வங்களைப் பின்தொடர்வர் மாந்தர். 
 
தெய்வ உலகம் தேடிச் சென்றோர் 
போற்றிப் புகழ்ந்து அவற்றையடைந்தனர் 
வேள்வித் திருநாமங்கள் தரித்து 
உனது மங்கலக் காட்சியில் மகிழ்ந்தனர்.  
இம்மை மறுமை 
இருமைக்கும் செல்வமென 
மாந்தர் வளர்ப்பது உன்னை. 
நீயே துணைபுரிவோன், காப்போன்! 
நீயே மானிடர்க்கு என்றும் தாயும் தந்தையும்!
வேள்வித் திறலோன்
மாந்தர்க்கு இனிய அன்பன் 
கூவி அழைக்கும் புரோகிதன் 
வீற்றிருக்கிறான்
உன்னிடத்தில் நீ சுடர்ந்தெரிய
நெருங்கி முழந்தாளிட்டு வணங்குகிறோம்!
தூய மனதுடையோர்
தேவர்களைச் சமைப்போர் 
யாம் 
இன்பம் வேண்டி
உரத்துப் பாடி உன்னை நாடினோம்
அக்னி
பொலிவுறும் உன்னொளி பரவிய விண்ணின் வழி 
நீயே எம்மை நடத்திச் செல்கிறாய்
உண்மை காணும் கவி 
உலகனைத்தின் பதி 
நிலைபெற்றோன்
மாந்தருள் காளை
வரமருள்வோன்  
அக்னி 
செலுத்துவோன் 
தூயதாக்கும் புனிதன்
செல்வங்களின் தனியரசன்!
உழைத்து, உன்னைப் போற்றி 
சுள்ளியிட்டு, அவி சொரிந்து
வேள்வியின் நெறியறிந்த மானிடன்
உன் துணையும் காப்பும் தொடர
அனைத்து இன்பமும் அடைவான்.
பெரியோய் அக்னி! 
பெருமிதத்துடன் 
வேள்வி மேடையிட்டு
சுள்ளியிட்டு அவி சொரிந்து
பாடல்களும் துதிகளும் கூடிப் 
போற்றுகிறோம்.   
சக்தி மகனே 
உனது மங்கல நல்லருளே வேண்டி
முயல்கிறோம்.
புகழோய் 
விண்ணும் மண்ணும் நிறைத்தன
உன் ஒளியும் புகழும்
அக்னி
பெருங்கனமுள்ள உன் செல்வக்குவைகளுடன் 
இடையறாது எம்மிடத்தில் 
சுடர்க!
செல்வங்களுக்கரசே வசுவே 
எம் புதல்வனுக்கும் சந்ததியினர்க்கும் 
நிறைந்த பசுமந்தைகளை
என்றென்றும் தருக
தீமையற்ற நல்லுணவும் 
இன்பமளிக்கும் உண்மைப் புகழும் 
எம்மிடம் நிலைத்திடுக
அக்னியே அரசே 
உனதன்பும் அருளும் கொண்டு   
செல்வம் பலவும் நுகர்வோன் ஆகுக யான்!  
அடியார்க்கு வரம் தரும் 
செழுமையும் உரிமையும் உனதே!
thanks http://www.tamilhindu.com

No comments:

Post a Comment