Tuesday, April 10, 2012

கம்பனிடம் கலந்த சக்தி!



-சக்தி சக்திதாசன், லண்டன்
கம்பன் என்னும் கவிச்சக்கரவர்த்தியை பள்ளியில் நான் தமிழ் இலக்கியம் படிக்கும் போது ஓர் வம்பனாகக் கண்டதுண்டு. ஆமாம் தமிழ் ஆசிரியரின் கம்ப இலக்கிய விளக்கத்தை அந்நாளில் ஒரு சித்திரவதையாக எண்ணி அய்யய்யோ! கம்பன் என்னும் வம்பனுக்கேனிந்த வேலை ? என்று எண்ணிக் கசந்ததுண்டு.  ஆனால் கம்பனின் கல்வியறிவு எல்லையில்லாதது. அவனுடைய அறிவு அவனது காலகட்டத்தில் வானளாவி இருந்தது. கவிச் சக்கர்வர்த்தி என பல மன்னர்களால் போற்றப்பட்டவன். அவனின் கற்பனை எனும் மகாசக்தியில் சில சக்தியை மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதில் சொல்லப்படும் கருத்துக்களை சமயம் சார்ந்ததாக எடுத்துக் கொள்ளாமல் தமிழ் இலக்கியம் என்பதாய் எடுத்துக் கொண்டு பார்க்கலாமா...!
1. இராமன் தனியாகத் தூங்கினானா?
விசுவாத்திர முனிவருடனும், தம்பி இலக்குவனுடனும் இராமர் மிதிலை நகர வீதியில் நடந்து கொண்டிருக்கிறார். கன்னிமாடத்திலே நின்றிருக்கும் கயல்விழி மாதுவின் விழிகளும், அயோத்தி இளவரசன் இராமனின் விழிகளும் ஒன்றையொன்று கவ்விக் கொள்கின்றன.

இரண்டு இளநெஞ்சங்கள் ஒன்றுடன் ஒன்று பூப்பந்து விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டன. முற்றும் துறந்த முனிவனும் இதை முக்காலும் உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.

மிதிலை மன்னன் ஜனகனின் விருந்துபசாரத்தில், அவர்களது விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்கள். இரவு வந்தது, காதலில் விழுந்த உள்ளங்களுக்கு இந்த இரவு ஒரு கொடுமையான பொழுதல்லவா?

முனிவரும், தம்பியும் படுத்துறங்க தன்மையான் இடத்தைத் தேடி பாய் விரித்துப் படுக்கிறான் ராகவன். நாமெல்லோரும் அவன் அப்போது தனிமையில் வாடுகிறான் என்று எண்ணுகிறோம்.

இங்கேதான் கம்பன் தனது கற்பனைச் சிறகை அழகாய் விரிக்கிறான்.
அவன் தனியனாக இல்லை என்பதை எப்படி விளிக்கிறான் பாருங்கள் !முனியும் தம்பியும் போய்
தமக்கு
இனிய பள்ளிகள் எய்திய பின், இருட்
கனியும் போல்பவன், கங்குலும்,
திங்களும்
தனியும், தானும், அத் தையலும்,
ஆயினான்

-என்ன சொல்கிறான் கம்பன் ?

முனிவரும், தம்பியும் தமக்கென இனிமையான தூக்கத்திற்கு உகந்த இடத்தைத் தேடியதும், கருமை நிறம் கொண்ட இராமன் தனியனாகத் தூங்கவில்லையாம்.

அவனுடன் ஜந்து இருந்ததாம். எவை அந்த ஜந்துகளாம் ?
கங்குல் - இருள்
திங்கள் 
- வெண்ணிலா
தனிமை 
- தனிமை உணர்வு
தான் 
- தன்னைப்பற்றிய உணர்வு (இந்த உணர்வு இல்லாதவனால் காதலைப் பரிபூரணமாக எப்படி உணர்ந்து கொள்ள முடியும்?)
அத்தையல் - 
அவனது உள்ளத்தைக் கவர்ந்த அந்தக் கனிகையும் அங்கே மனத்தளவில் அவனுடன் இருந்தாளாம்.
தனியனாக தன்னுடைய காதல் நினைவுகளில் அழுந்தியவாறு படுத்திருக்கும் அயோத்தி இளவரசனாக எமது கண்ணுக்குப் புலப்படும் இராமனுடன் ஐந்து இருக்கின்றன என்னும் கற்பனை வளத்தைக் கொண்டு கவி சொன்ன கவிச்சக்கர்வர்த்தியின் கற்பனைச் சக்தியை என்னவென்று சொல்வது?
2. அணுவைப் பிளக்க முதல் அறிவுரை?
உலகின் அனைத்து பொருட்களின் கடைசித் துகள் அணு என்கிறது விஞ்ஞானம். அந்த அணுவைப் பிளக்க முடியாது என்னும் கருத்துப் பல காலங்களாய் நிலைப்பட்டு இருந்தது. ஆனால் இன்றைய அதிவேக விஞ்ஞான உலகத்தில் அணுவைப் பிளந்து அதன் சக்தியைப் பயன்படுத்தும் உத்தியைக் கண்டு விட்டார்கள் மனிதர்கள்.

ஆனால் பல நூற்றாண்டு காலங்களுக்கு முன்னால் கவிச்சக்கரவர்த்தி கம்பனோ அணுவைப் பிளப்பது ஆகக்கூடியது ஒன்றே என்னும் கருத்தை வலியுறுத்தி தனது கவியின் மூலம் கருத்தை இயம்பியுள்ளான்.

ஆமாம். "இரணிய வதை படலம்" என்னும் கம்பனின் ஆக்கத்தைப் பலரும் அறிந்திருப்பீர்கள்.

இரணியன் என்றொரு அரசன் இருந்ததாகச் சொல்கிறது இதிகாச வரலாறு. இதில் அவனுக்குப் பிரகலாதன் என்னும் மகன் இருந்தான். பிரகலாதனோ அரியின் மீது அளவில்லாப் பக்தி கொண்டிருந்தான். அல்லும் பகலும் அரியின் நினைவினிலே, அரியின் பக்தியிலேயே கழிக்கலானான். அவனது தந்தை இரணியனுக்கோ இது ஆத்திரமூட்டியது. தனதி மைந்தனின் செய்கையை வெறுத்தான். அவனை நிந்தித்தான். ஆத்திரம் தாள மாட்டாமல் மகனைப் பார்த்து,
" உன் கடவுள் அரி எங்கேயிருக்கிறான்?" என்று உறுமுகிறான்.
அதற்கு அவன் பிரகலாதனோ, " என் கணால் நோக்கிக் காண்டற்கு எங்கனும் உளன்காண்! எந்தை"

-என் கண்ணால் காணும் காட்சிகள் அனைத்திலும் என் இறைவன் அரி நீக்கமற நிறைந்திருக்கிறான் தந்தையே!" என்கிறான்.

அதற்கு இரணியனோ விடாமல்,
"ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய்;
தூணில் நின்றுளன் எனின் கள்வன், நிரப்புதி நிலைமை!" 

எங்கும், எதிலும் உன் அரி நிறைந்திருக்கிறான் என்கிறாயே அப்படியானால் அவன் இங்கிருக்கும் இந்தத் தூணில் இருக்கிறானா என்று காட்டு பார்க்கலாம் என்கிறான்.

அதற்கு அவன் மைந்தன் பிரகலாதன் சொல்லும் விடையாகக் கம்பன் தந்த கவியிலே தான் அவனது விஞ்ஞான அறிவு துலங்குகிறது.
"சாணிலும் உளன் ; ஓர் தன்மை
அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன் ; மாமேருக் குன்றினும்
உளன் ; இந் நின்ற
தூணினும் உளன் ; நீ சொன்ன
சொல்லினும் உளன்"


அங்குலத்தின் ஒரு பாகமாகிய சாண் என்னும் மிகவும் சிறிய பகுதியிலும் உள்ளான்.

ஒரு ரூபாயை நூறு பகுதிகளாகப் பிரித்தால் ஒரு சதம் வருகிறது. அதே போல அனைத்துப் பொருட்களிலும் கடைசி அந்தமாகிய அணுவினை நூறு கூறுகளாகப் பிரித்தால் வருவது கோண் என்னும் சிறு துளியாம் அதில் கூட அரி இருப்பான் என்கிறான் பிரகலாதன்.

இது கம்பனின் நுண்ணறிவுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

அணு என்னும் பகுதியை உடைத்தால் கூட அதிலும் இறைவன் இருக்கிறான் என்று அன்றே எழுதத் தூண்டிய கம்பனின் கற்பனை சக்தியை என்னெவென்று சொல்வது?
3. நாடு எப்படி இருக்க வேண்டும்?
மகாகவி பாரதியார் ரசித்த முதன்மையான கவிஞர்களில் முன்னிற்பவர் கம்பர். கம்பரின் கவித்திறனை ஆழமாய் ரசித்தார் பாரதியார். மகாகவியின் " நான் " என்னும் கவிதையை எடுத்துக் கொண்டால், அதிலே அவர் தன்னுடைய மனதின் விரிவளவை, பரந்த தன்மையைக் குறிப்பிடுவதற்கு,விண்ணில் திரிகின்ற மீனெல்லாம் நான்
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான் 


என்று அத்தனை பிரமாண்டமான விடயங்களைக் கூறிவிட்டு அடுத்ததாக,
"கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்கிறார்.
இத்தனை அண்டப் பிரம்மாண்டமான விடயங்களோடு கம்பனின் கவிதைகளை ஒப்பிட்டுக் கூறுமளவிற்கு கம்பனின் கவிதைகளை மாகாகவி பாரதியார் ரசித்திருந்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் தமிழ்ச் சாதி என்னும் கவிதையில் ஒரு பகுதி,"சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
'எல்லையன் றின்மை' எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிக்கோளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்
சாதியை "அமரத் தன்மை வாய்ந்தது" என்று
உறுதிகொண் டிருந்தேன். " 


இங்கே அவர்,
"எல்லையன் றின்மை எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிக்கோளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும்"
என்று கம்பனின் கவிகளின் எல்லையற்ற தன்மையை எண்ணி வியக்கிறார்.

கம்பனின் எல்லையற்ற தன்மையைக் காட்டும் திறமை. அவர் தனது கவிதைகளிலே கையாண்ட வழிமுறைகள் பல. தான் மதிப்புக் கொண்டு, மிகவும் பெருமையாகச் சொல்லப்போகும் விடயத்தை மிகவும் எதிர்மறையாக ஆரம்பித்து அதற்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கும் ஆற்றல் கம்பனுக்கு மிகையாக இருந்தது.

கம்பனுடைய கபராமாயணத்தின் காவிய நாயகனாம் இராமனின் சொந்த நாடானா கோசல நாட்டைப் பற்றிக் கூறும்போது,
"வரம்பெலாம் முத்தம்"
- வயல் வரம்புகளிலெல்லாம் முத்துக்களாய்ச் சிதறிக் கிடக்கின்றனவாம்"தத்து மடையெலாம் பணிலம்"
-தாவிப் பாய்ந்தோடும் தனை படைத்த மதகுகளிலெல்லாம் சங்குகளாம்."மாநீர் குரம்பெலாம் செம்பொன்"
-வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் செய்யப்பட்டுள்ள செய்கரைகளில் பொன் கட்டிகள் இருக்கின்றனவாம்

இப்படியாக இராமனின் கோசல நாட்டை வர்ணிக்கத் தொடங்கி... கோசல நாட்டில் தானம் செய்வோர்கள் இல்லையாம்... அதுமட்டுமா கோசல நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வீரமும் இல்லையாம். அந்நாட்டில் உண்மை பேசுவோர்களும் இல்லையாம், அறிவுடைமை உடையோரும் இல்லையாம்.

திகைத்துப் போகும் நம்மைச் சிந்திக்க வைத்து விடை தருகிறார்.
"வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்" 

இராமனின் நாட்டுப் பெருமைகளை விளக்கும் தன்மை.

தானம் கொடுப்போர் இல்லை ஏனெனில் அங்கே வறுமையே இல்லையாம். வீரம் மிகுந்த பாராக்கிரமரங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை ஏனெனில் அவர் மீது போர் தொடுக்கும் அளவிற்கு வீரம் கொண்ட எதிரிகள் இல்லையாம். உண்மை பேசுவோர் இல்லை ஏனெனில் அங்கே பொய் உரைப்போர் யாருமேயில்லையாம். மேலும் கோசல நாட்டு மக்கள் எல்லோரும் கேள்வி கேட்டு அனைத்தையும் அறிந்து விடுவார்களாம். அதனால் அங்கே அறிவுடமை என்னும் சொல் உபயோகமற்றுப் போய் விடுகிறதாம்.

எத்தனை அழகான விளக்கத்துடன் இத்தனை கருத்துக்களை எடுத்தியம்பும் கம்பனில் கவிபுனையும் சக்தியை வியக்காமல் இருக்க முடியுமா?
ஒரு உண்மையான, நிறைவான நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதனை மனித தர்மத்தின் அடிப்படையில் வகுத்து,தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைகண் விழித்து நோக்க
தெண்திரை எழினி காட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம்வீற் றிருக்கும் மாதோ


மயில்கள் சோலையிலே ஆடிக்கொண்டிருக்க, விளக்குகளைத் தாமரைகள் தாங்குகின்ற போது, மேகங்கள் மத்தளம் போல முழங்க மெதுவாய்த் துளசி கண் திறந்து பார்க்கையில், தெளிந்த அலைகள் நாடகத்திரை போட மதுரகீதம் பொழியும் மகரயாழ் போல வண்டுகள் ரீங்காரம் இட, மருத நாச்சியார் கொலுவீற்றிருப்பதைப் போல அந்த நீர் கொழிக்கும் வயல் அவ்வூரில் செழித்து இருக்கிறாம்.
இந்நாட்டின் மக்கள் எப்படி இருப்பார்கள்? என்று நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுபொருந்திய மகளி ரோடு
வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல்சென்(று) அன்ன
இயல் இசைப் பயன் துய்ப் பாரும்
மருந்தினும் இனிய கேள்வி
செவிஉற மாந்து வாரும்
வருந்தின் முகம் கண் (டு) அன்ன
விழாவணி விரும்பு வாரும்


தமது வயதை ஒத்திருக்கும் மகளிரோடு திருமணத்தில் இணைந்து கொள்வோர் ஒரு பக்கத்தில் ஆரவாரத்தில் திளைக்கிறார்களாம். பருந்து ஒன்று மதிய வெய்யிலில் பறக்கின்றது போல பாட்டோடு இசைந்து இசையும் போகின்றதாம். அப்படியான கச்சேரியை இசைக்கும் அரிய கலைஞர்கள் ஒருபுறத்தில் இசைக்கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். அமுதம் அருந்தித் திளைப்பவர்கள் போல இனிமையான் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டு ஒருபுற மக்கள் ஆனந்தமடைகிறார்களாம்.

கம்பன் கோசல நாட்டில் ஆனந்தமான வாழ்க்கையுடைய மக்கள் வாழுகின்றார்கள் என்பதனை எளிமையாகவும் அருமையாகவும் எடுத்துச் சொல்லும் திறனில் அதைப் படிப்பவர்கள் அசந்து போகிறார்கள். கம்பனின் சக்தி கவிதையில் விளையாடி நம்மை மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது.
4. தாமரை மலர்கள் அகழிக்குப் போனது ஏன்?
கம்பனின் இலக்கியம் சுந்தரமானது, சுகந்தமானது, சுவையானது. கரும்பில் அடிக்கரும்பு சுவை கூடியது என்பார்கள். கம்பராமாயணம் என்னும் அவனது இலக்கியத்தில் அவன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட கற்பனை எல்லைகளை விரித்துத் தன் திறமைக்கு தானே சவால் விடுகின்றான். மனதிலே பூத்து நின்ற அற்புதமான நகரின் வனப்புகளை, அந்நகரிலே வாழும் மக்களின் குணாதிசயங்களை கோபுரமாக்குகின்றான்.

எத்தகைய ஒரு அற்புதமான, ஆனந்தமான, அமைதியான நாட்டிலே வாழவேண்டும் என அனைவரும் எண்ணுகிறோமோ, அத்தகைய ஒரு கற்பனை நாட்டைத் தனது கதாநாயகனின் நாடாக்கி படிப்பவர்களையும் அவனோடு சேர்த்து மகிழ்விக்கிறான்.

நகரப் படலம் 
அந்தமா மதில்புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
கந்தநாறு பங்கயத்த கான(ம்)மான மாதரார்
முந்துவாள் முகங்களுக்கு உடைந்துபோன மொய்ம்பு எலாம்
வந்துபோர் மலைக்க, மாமதில் வளைந்தது ஒக்குமே. 16


கம்பனுடைய கதாநாயகன் ராமனுடைய நாட்டிலே அமைந்துள்ள அழகிய கோட்டையைச் சுற்றி அகழியாம். அந்த அகழியில் குவிந்து பூத்திருக்கும் அழகிய தாமரைகள் எப்படி அங்கு வந்தது?
 இராமனுடைய நாட்டிலே உள்ள பெண்கள் அத்தனை பேரும் அழகில் சிறந்தவர்களாம். அவர்களின் அழகைக் கண்ட தாமரைகள் இந்த நாட்டின் பெண்களின் அழகிற்கு எம்மால் ஈடு கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு ஓடிச் சென்று, அந்நகருக்கு வெளியேயுள்ள கோட்டையைச் சுற்றியுள்ள அகழிக்குள் கூட்டமாய் மலர்ந்து விட்டதாம்.

அந்த அகழிகள் எங்கே அமைந்திருக்கின்றன? கோட்டையைச் சுற்றி. அந்தக் கோட்டை நகரின் எல்லைப்புறத்தில் அமைந்திருக்கிறது. கம்பனுடைய கதாநாயகனின் ஊரிலுள்ள பெண்களின் அழகு எப்படிப்பட்டது என்று. அந்த பெண்களின் அழகின் வீச்சத்தோடு தமது அழகை ஒப்பிட முடியாத தாமரை மலர்கள் ஊரின் எல்லைக்கப்பால் ஓடி விட்டதாம். இங்கு கம்பனின் கவிச்சக்தியை விட அவனின் கற்பனைச் சக்தி எப்படி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

உபயோகிக்கப்பட்ட சில சொற்களின் பொருள்

கந்தநாறு
 - நறுமணம் கமழ்கின்ற,
வாள் - ஒளி,
மொய்ம்பு - வலிமை
மலைக்க - போரிட




No comments:

Post a Comment