Friday, April 6, 2012

குணத்தைக் காட்டிக் கொடுக்கும் கையெழுத்து




சித்ரா பலவேசம்


எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.

1. பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.

2. சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.

3. எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.

4. எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.

5. எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.

6. வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.

7. சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.

8. பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.

9. எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.

10. எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடையவர்கள்.

11. எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.

12. எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.

13. எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.

14. எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.

ஆமாம், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? உங்கள் குணம் மேற்காணும் தகவல்களோடு ஒத்துப் போகிறதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment