Monday, April 16, 2012

கார்த்திகேசு சிவத்தம்பி

 
(கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை), (பிறப்பு மே 10, 1932) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.

கல்வியும் கல்விப்பணியும்

ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் கொழும்பு ஷாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.

கலைப் பங்களிப்பு

பல்கலைக் கழக காலத்தில் மேடை நாடகங்களில் ந்டித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

ஆக்கங்கள்

ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

இவர் பற்றிய படைப்புக்கள்

தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'கரவையூற்று' நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம்.

இவருடைய நூல்கள்

* இலங்கைத் தமிழர் - யார், எவர்?
* யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு
* தமிழில் இலக்கிய வரலாறு
* இலக்கணமும் சமூக உறவுகளும்
* மதமும் கவிதையும்
* தமிழ் கற்பித்தலில் உன்னதம்
* சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்
* திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு
* தமிழ்ப் பண்பாட்டில் சினிமா (மக்கள் வெளியீடு)


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு

இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார்.

இவற்றிற்கும் அப்பால் இவர் மிகச்சிறந்த நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் இருப்பதும் ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்வதும் சிலர் அறியாத விடயமாகும்.

நான் இங்கு பேராசிரியரின் நாடக விடயங்களையும் அவருடன் எனக்கிருந்த உறவுகளையும் அழுத்திக் கூற விரும்புகிறேன். எனக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமான உறவு ஏறத்தாழ 45 வருடகால உறவாகும். இதை அரை நூற்றாண்டு உறவு எனலாம்.

ஈழத்தின் வடபால் பிறந்த ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஈழத்தின் கிழக்கிலே பிறந்தவன் நான் . இந்த இரண்டையும் இணைத்து வைத்த பெருமை நாடக கலைக்கு இருப்£தை நான் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன்.

1959ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்தேன். அப்போது நான் 16-17 வயது மாணவனாக வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலே பயின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு கூத்து அரங்கேற்றப்பட்டது. பேராசிரியர் நித்தியானந்தனும் பேராசிரியர் சிவத்தம்பியும் அந்த கூத்தை பார்வையிட வந்திருந்தனர்.

இரண்டு பெரிய ஆகிருதிகளும் அந்த கூத்தை வெகுவாக இரசித்தார்கள். கூத்து முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் கூத்தாடிய எல்லா மாணவர்களுக்கும் உச்சி முகர்ந்து கன்னம் தடவி வாஞ்சையுடன் எமமை வாழ்த்தினார்கள். அந்தப் பார்வை , அந்த நெருக்கம் , அந்த உறவுதான் எனக்கும் போராசிரியர் சிவத்தம்பிக்கும் ஏற்பட்ட முதலாவது உறவாக அமைந்தது.

அதன் பின்பு அந்த கூத்தை பேராதனைப் பல்கலைக்கழக மேடையில் அரங்கேற்றினார்கள். அப்போது நிறைந்த ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. அதை மேடை ஏற்றும்படி கூறியிருந்தவர்கூட பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான்.

1961 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கிழக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்தோரே அப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அந்த காலப்பகுதியில் சரத் சந்திரா அவர்கள் சிங்கள நாடக உலகிலே கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தார். சிங்கள மரபு வழி நாடகங்களை அடிப்படையாக வைத்து அவர் "மனமே சிங்கபாகு" அவர் போன்ற சிறந்த நாடகங்களை தயாரித்திருந்தார். அவை தனித்துவம் கொண்ட சிங்கள நாடகங்களாக அறியப்பட்டிருந்தன. அதனால் அவை நல்ல வரவேற்பை பெற்றன. பேராசிரியர் சரத் சந்திரா ஒரு நல்ல மனிதர், மிகவும் இன செளஜன்யத்தை விரும்புகின்ற ஒரு நல்ல புத்திஜீவி.தனது நாடகங்களுக்காக தமிழ்க்கூத்திலிருந்தும் சில அம்சங்களை தான் "மனமே சிங்கபாகு" போன்ற நாடகங்களுக்கு எடுத்துக் கொண்டதாக அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.

இவற்றைப் பார்த்தபோது தான் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஈழத்துக் கூத்து மரபில் இருந்து ஈழத்து தமிழ் நடன நாடக வடிவத்தை உருவாக்க முடியாதா என்ற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு அடித்தளமாக மட்டக்களப்புக் கூத்துக்கள் அமைந்திருந்தன. மட்டக்களப்பு கூத்துக்களில் தான் தாளக்கட்டுக்களும் ஆடல்களும் நிறைந்திருந்தன. அவற்றை அடிப்படையாகக்கொண்டு பேராசிரியர் நித்தியானந்தன் இத்தகைய நாடகங்களை தயாரிக்க வேண்டும் என்று அவாக் கொண்டிருந்தார். இதற்கு பின்பலமாக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

நாங்கள் பேராதனைக்கு சென்றபோது பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் கூத்துக்களைப் போட ஆரம்பித்திருந்தார். எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது, பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது 61 ஆம் ஆண்டிலே கர்ணன் போர், 62 ஆம் ஆண்டிலே நொண்டி நாடகம், 64 இலே இராவணேசன், 65 இலே வாலி வதை என்று மட்டக்களப்பின் தென்மோடி, வடமோடி நாடகங்களை செழுமைப்படுத்தி பேராசிரியர் சரத் சந்திரா பாணியிலே வித்தியானந்தன் தயாரிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. காலனித்துவ சிந்தனைகளாலும் மேற்கு மோகத்தாலும் சூழ்ந்திருந்த அந்த பேராதனை மண்ணிலே கூத்துக்கள் மத்தள ஒலியும் சலங்கை ஒலியும் கேட்க ஆரம்பித்தன.

கிராமிய சூழலிலமைந்த கூத்துக்கள் ஆட ஆரம்பித்தன. அந்த நாடகங்களை தமிழ் மாணவர்கள் வியப்போடு பார்த்தார்கள். அப்போது ஒரு கலக்கு கலக்கியது பேராதனைப் பல்கலைக்கழகம். எப்படி சிங்கள மாணவர்கள் மத்தியிலே பேராசிரியர் சரத்சந்திரா அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ வகித்தாரோ அதே தாக்கத்தை பேராசிரியர் நித்தியானந்தன் பேராசிரியர் சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மாணவர்கள் மத்தியிலே ஏற்படுத்தினார்.

அந்த அருமையான காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்போது தான் பேராசிரியர் சிவத்தம்பி பற்றி மெல்ல மெல்ல அறிய ஆரம்பித்தேன். அவர் அதற்கு முன்னரேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்திருக்கிறார். அவர் மாத்திரமல்ல பேராசிரியர் கைலாசபதியும் நடித்திருக்கிறார். பேராசிரியர் சிவத்தம்பி ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்திருக்கிறார்.
அவருடைய விதானையார் வீடு என்ற நாடகத்திலே அவர் பாத்திரம் மிகவும் பிரபல்யமானது.
( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).

இதைவிட அவர் நாடக எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். இவ்வண்ணமாக இந்த ஆய்வுத்துறைக்கு வர முதல் ஒரு நாடக கலைஞர் ஆகத் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்.

இதைப்பற்றி கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே குறிப்பிடுகின்ற பொழுது இவர் நடிப்பிலே சிறந்தவராக இருந்தவர் என குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை எப்படி சுருக்கலாம் என்ற ஆலோசனைகளை தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. இந்தக் காலகட்டத்திலே தான் பேராசிரியர் சிவத்தம்பியினுடைய நாடகப் படைப்பாற்றல் பணிகளை நான் அருகிலிருந்து அவதானித்தது மாத்திரமல்ல, அவரிடமிருந்து அதிகம் பெறவும் கூடியதாக இருந்தது.

இந்தக் கூத்துக்களை எப்படிச் சுருக்கலாம் என்பதை எனக்கு அவர் மிகவும் அதிகமாக விளங்கப்படுத்தினார். கர்ணம் போர், நெண்டி நாடகம், போன்ற நாடகங்களை மட்டக்களப்பு மரபு வழி நாடகங்களில் இருந்து நாங்கள் சுருக்கினோம். ஏற்கனவே கூத்தில் கொஞ்சம் பரிச்சயம் என்றபடியால் என்னைத்தான் அவற்றைச் சுருக்குவதற்குக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் முழு ஆலோசனைகளையும் தந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும் , பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களும்.

பிறகு அந்தக் கூத்துக்கள் மேடையேற்றுகின்ற போது கூத்தின் வீரியம் கெடாமல் ஒரு வட்டக்களரியில் ஆடப்பட்ட கூத்தினை எப்படிப் படச்சட்ட மேடைக்குள் போடலாம் என்பதை அதனுடைய வீரியமும் அதனுடைய தன்மையும் கெடாமல் அதனுடைய தாற்பரியங்களைப் புரிந்து கொண்டு மேடையிலே போடவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இராவணேசன் மட்டக்களப்பு கூத்துப் பாணியில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாடகம். காரணம் மட்டக்களப்பு கூத்துக்களிலே ஒரு எடுத்துரை அரங்காகத் தான் அது இருக்கும். ஆனால் அதில் பாத்திரப் பண்புகள் வராது. இராவணேசனை பாத்திர குணாம்சம் பொருந்தியவராக மாற்றுவதற்கு பேராசிரியர் சிவத்தம்பி விரும்பினார். துன்பியல் நாயகனாக அவனைப் படைக்கவேணும் என்று அவர் கூறினார். துன்பியல் நாயகனை கிரேக்க நாடகங்களில் காணலாம்.

கிரேக்க நாடகத்திலே விதிக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கின்ற போட்டியிலே மனிதன் விழுவான். அந்த வீழ்ச்சி ஒரு துன்பியலாக இருக்கும். பல நல்ல குணங்கள் இருந்தும் ஒரு தீய குணத்தால் தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொள்பவன் தான் துன்பியல் நாயகன். இராவணேசனை அப்படியொரு துன்பியல் நாயகனாக மாற்றவேண்டுமென சிவத்தம்பி அவர்கள் கூறினார். அதன்படி அவர் கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தை எனக்குப் படிப்பித்தார்கள். இதைத்தான் எழுதும் படி கேட்டுக் கொண்டார். எப்படி இராவணன் சிந்தித்தான், எப்படிப் போனான், எப்படி துன்பியலுக்கான அடித்தளம் போடப்படுகின்றது என்பதை யுத்தகாண்டத்தினை படிப்பிப்பதனூடாக கூறி அந்த பாத்திரத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் விளைவாகத் தான் இராவணேசன் உருவாகியது.

இந்த இராவணேசன் நாடகத்தில் ஒரு கூத்தை நாடகமாக மாற்றுவதற்கு பேராசிரியர் நித்தியானந்தனுக்கு பேராசிரியர் சிவத்தம்பி நிறைய உதவியாக இருந்தார். அவர் சொல்லுவார் பாட்டை எப்படி நடிப்பாக வைரமுத்து அவர்கள் மாறினார்களோ அதோ போல ஆட்டம் நடிப்பாக மாறவேண்டும் என்று அடிக்கடி சிவத்தம்பி அவர்கள் கூறுவார்.

முக்கியமாக இராவணேசனின் பிரதியாக்கம் பெற உதவியாக இருந்தார். அது மாத்திரம் இல்லை கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் போன்ற நாடகங்களுக்கு உதவித்தயாரிப்பாளராகவும் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கர்ணம் போரில் தயாரிப்பாளர் அதாவது நெறியாளர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.உதவியாளர்கள் பேராசிரியர் கைலாசபதியும், பேராசிரியர் சிவத்தம்பியும். பிறகு வந்த நாடகங்களுக்கெல்லாம் உதவியாளராக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சி படப்பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களைப் படுத்தும் பாடுதல் என்று பாடும் முறைமையினைக் காட்டித் தந்ததோடு, ஒரு வட்டக்களரியிலே ஆடும் ஆட்டத்தை படச்சட்ட மேடையில் ஆடும் முறைமையினையும் எமக்கு விளக்கியவர் சிவத்தம்பி அவர்கள்.

உதாரணமாக இராவணேசனில் ஒரு காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இராவணேசன் தன் படையை அனுப்புகின்ற கட்டம். நான் தான் இராவணனாக நடித்தேன். மிகுந்த பயிற்சியை எனக்கு அவர்கள் தந்தார்கள்.அவன் நீலன், சிங்கன், மகரற்கண்ணன், குருதிக்கண்ணன் என்று அணியணியாக அரக்கர்களை இராமனுக்கு எதிராக ஏவுகின்றான்.அதற்கு பின்னணியாக அப்போது விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கணீரென்று
"போவதோ எனது வீரம் வீழ்வதோ புகழென்றெண்ணி அடி சூழ் சேனையோடு சிங்கனை அனுப்பி வைத்தான்"
என்று பாடலைப் பாடியவுடன் அந்த இராணவனாக நடித்த நான் அபிநயத்து, மெல்ல நடந்து, மத்தள ஓசைக்குத் தக்க திரும்பி ஆடி, வேகமாக ஆடி மேடையின் வலது கீழ் மேடைக்கு வந்து இரண்டு கைகளையும் தூக்கி படைகளை அனுப்பி வைப்பேன். தொடர்ந்து ஒலிக்கும் பறையும் உடுக்கும், மத்தளமும், சங்கும் படை போவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். திடீரென்று அவை நின்றதும் இராவணன் உடலிலே சோர்வு தோன்றும். மேடையில் அமைதி நிலவும். படைகள் அழிந்து போகின்ற உணர்வு வரும். பிறகு மீண்டும் படைகளை அனுப்புவதற்கான பாடலை சண்முகதாஸ் அவர்கள் பாடுவார்கள். இவ்வண்ணமாக கூத்திலே இல்லாத ஆனால் கூத்தை அடிநாதமாகக் கொண்ட காட்சியமைப்புக்களை மிக அற்புதமாக உருவாக்கினார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அதே போல் இராவணனும் இராமனும் போரிடுகின்ற கட்டத்தை அவரே படைத்தார். கூத்திலே அப்படி ஆடுவதில்லை. மிக இலாவகமாக, மிக வேகமாக ஆடி அந்தக் களரி ஆட்டத்தை முடிப்பார்.

எனக்கு ஒரு ஞாபகம் வருகின்றது.
ஒரு நாள் ஒத்திகை நடந்து கொண்டிருக்கின்றது. இராவணேசன் நாடகம், இராவணேசனாக நான், நீலன், மகரன், குருதிக்கண்ணன் எல்லாரையும் அனுப்பி, இந்திரஜித்தையும் அனுப்பி, உறவுகளையும் இழந்து, எல்லாரும் போய் விட்டார்கள், இனி யுத்தத்திலே வெல்ல முடியாது என்கின்ற நிலையிலே இராவணன் நிற்கின்றான். அவனுடைய சோர்வு, துக்கம், துயரம், வெட்கம், கோபம், எல்லாவற்றையும் முகத்திலே கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது முயற்சி எடுத்து நடிக்கின்றேன். சிவத்தம்பி அவர்கள் தலையாட்டிப் போட்டுச் சொல்கின்றார் போதாது என்று. அருகிலே சுங்கானோடு பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நிற்கின்றார். உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கின்றார். மீண்டும் நடிக்கின்றேன். வித்தியானந்தனும் திருப்தியின்றித் தலையசைக்கின்றார். இருவர் முகத்திலும் திருப்தியில்லை. என்னால் இனிமேல் நடிக்கமுடியவில்லை. சோர்ந்து போனேன், அப்போது எனக்கு வயது 21 இருக்கும். சிவத்தம்பி அவர்கள் என்னை அழைக்கின்றார்கள். யுத்த காண்டத்தில் இராவணேசனின் தோல்வியை விளக்கி கம்பன் பாடல் ஒன்ரையும் கூறி விளக்குகிறார். தோல்வி மேல் தோல்வி பெற்ற இராவணன், வாளினைப் பார்க்கிறான், தன் தோளினைப் பார்க்கிறான், வலிய தன் கைகளைப் பார்க்கிறான், இறுதியில் நாணத்தால் குறுகிச் சிரிக்கிறான், அழுகிறான், கோவிக்கிறான், வெட்கப்படுகின்றான். இதற்கான கம்பனுடைய பாடலைக் கூறி கம்பன் கடைசி அடியிலே நகும், அழும், முனியும், நாணும் என்று கூறுகின்றார். "எங்கே சிரியும், அழும், கோபியும், நாணப்படும், இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முகத்திலே கொண்டுவாரும்" என்று அவர் கேட்கவும், அவர் கூற்றை உள்வாங்கிக் கொண்டேன். "எனக்கு கொஞ்ச நேரம் தாருங்கள்" என்றேன். ஒரு சின்ன இடைவேளை. நாங்கள் பழகிக் கொண்டிருந்த விரிவுரை மண்டபத்துக்கு அருகிலே தான் பாத்றூம் இருந்தது. சுற்றி வர நிலைக்கண்ணாடி. போய் நடித்துப் பார்க்கின்றேன். திருப்பி திருப்பி நடித்துப் பார்க்கின்றேன். திருப்தி ஓரளவுக்கு வருகின்றது. மீண்டும் அவர்களுக்கு முன்னால் வந்து ஒத்திகை ஆரம்பமாகின்றது. நானும் காட்சியைச் செய்தபோது வித்தியானந்தனின் முகமும், சிவத்தம்பியின் முகமும் மலர்ந்ததும், ஒத்திகை முடிய அவர்கள் வந்து பாராட்டியதும் என் வாழ்வில் மறக்க முடியாத கணப்பொழுதுகள். இன்றும் அதை நினைத்து நினைத்து மகிழ்வேன், நெகிழ்வேன். செதுக்கிய அந்தச் சிற்பிகள் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது.

கூத்தை நாடகமாக்கிய அந்தக் காலகட்டங்களிலே தான் கிழக்கத்தேய நடிப்பு முறை என்ற உண்டு என்பது எனக்கு பொருள்பட விளங்கியது. இத்தனை சிக்கலான ஆக்கங்களும், தாளக்கட்டுக்களும், செழுமையான பாடல்களும் கொண்ட இக்கூத்து எப்படி ஒரு கிராமிய நாடகமாக இருக்க முடியும் என்று எம்மிடம் கேட்பார் சிவத்தம்பி அவர்கள். அக்கினிக் குஞ்சாக என் மனதுக்குள் புகுந்த அவரது கருத்துத் தான், எனது "மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்" என்ற பி.எச்.டி ஆய்வாக விரிந்தது. 660 பக்கங்களிலே அது வந்திருக்கின்றது. அதில் தமிழர்களுடைய தொன்மை பொருந்திய மரபில் ஒன்று கூத்து என்று நான் எழுதியிருக்கின்றேன்.

டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதேபோல் இந்த கூத்தை வைத்து கொண்டு செழுமை பொருந்திய பழைய நாடகமரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
உலகளாவிய பல விடயங்களை வயதுக்கு மீறி திணித்து சிந்திக்க வைத்து செதுக்கிய பெருமை முக்கியமானவர்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பியும், வித்தியானந்தனுமே. அந்த உறவு பின்னர் நன்றாக விரிந்தது. கொழும்பிலே அவர் அப்போது நாடகக்குழு தலைவராக இருந்தார். ஈழத்தின் தமிழர் வாழ் பிரதேசங்களுக்கெல்லாம் சென்று அந்தக் கூத்து மரபுகளை அறிகின்ற பணியிலே எங்களை ஊக்குவித்தார்.நானும்; சண்முக சுந்தரமும் எல்லா இடங்களுக்கும் பேராசிரியர் சிவத்தம்பியின் பிரதி நிதிகளாகச் சென்றோம். வன்னியிலே 1971/ 72 இலே ஒரு பெரிய மாநாட்டை கூட்டுவதற்கு ஒழுங்கு செய்தார் சிவத்தம்பி. வன்னிக்கலைகளை வெளியுலகுக்கு கொண்டு வருகின்ற முயற்சி தான் அது. வன்னி மாநிலத்திலே இருக்கின்ற கூத்து, கரகம் கோவலன் கூத்து சிலம்பு கூறல் குடக்கூத்து போன்ற பல்வ்வேறு கலைகளை வன்னி மாநிலத்திற்க வெளியே கொண்டு வருகின்ற முயற்சி தான் இது.

அந்தக் காலகட்டத்திலே தான் கொழும்பிலே தாசீசியஸ், சுந்தரலிங்கம் ஆகியோர் கொழும்பிலே நாடகங்களைப் போடுகின்றார்கள்.
சுந்தா என்று அறியப்பட்ட பி.பி.சி சுந்தரலிங்கம் அவர்களின் வீட்டில் நான் குடியிருந்தேன். அந்த வீட்டு மொட்டை மாடியில் இந்த வகையான நாடகங்கள் பழகப்பட்டன. அந்த மொட்டை மாடியில் இருந்து சுந்தா, கைலாசபதி, சிவத்தம்பி, எல்லோரும் சூழ்ந்திருக்க தாசீசியஸ், நான், சுந்தரலிங்கம் போன்றோர் இந்த நாடகங்களைப் பழகிய அற்புதமான காலங்கள், கொழும்பில் இருந்த காலங்கள்.

பிறகு 80 களுக்கு பிறகு நான் யாழ்ப்பாணம் வந்து விடுகின்றேன். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நுண்கலைத் துறைத் தலைவராக இருக்கின்றார். அவருக்கு கீழே நுண்கலைத் துறை விரிவுரையாளராக இருந்தேன்.
யாழ்ப்பாணத்திலே புதிய நாடக மரபு ஒன்று உருவாக ஆரம்பிக்கின்றது. அந்த நாடக மரபுக்குப் பின்புலமாக இருந்து ஊக்க சக்தி கொடுத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். நான் அப்போது தயாரித்த எல்லா நாடகங்களுக்கும் அவர் ஆலோசகராக இருந்தார்.
முக்கியமாக புதியதொரு வீடு நாடகம் தயாரிக்கப்பட்ட போது அவர் ஸ்ரனிஸ்லவஸ்கியின் மெதேட்டை எப்படி கொண்டு வரலாம் என்பதை அன்று நடிக்கப் பழக்கினார். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். இராவணேசன் மூலம் கீழத்தேய மரபை சிவத்தம்பி மூலம் கற்ற நான் யாழ்ப்பாணத்தில் ஸ்ரனிஸ்லவஸ்கியின் நாடக மரபை கற்கக் கூடியதாக இருந்தது.

அவர் ஓய்வு பெற்ற பின் கிழக்குப் பல்கலைகழகத்திற்கு இரண்டாண்டுகள் வந்து, லயம், இராவணேசன், கிழக்கிசை அவருடைய வழிகாட்டலில் நுண்கலைத்துறை செய்கின்றது.

ஒன்றை மட்டும் நிறைவாகச் சொல்லி வைக்கின்றேன். சிவத்தம்பி அவர்களை தந்தை போன்று உரிமையோடு சண்டை இட்டுக்கொள்வோம், சண்டை வரும், சமாதானம் வரும், தந்தைக்கும் மகனுக்குமுரிய எல்லா மோதல்களும் அதிலே வரும்.
ஆனால் அடி நாதமாக ஓடுவது ஒரு பாசம் தான். அந்த உறவு தான் ஸ்தாயிபாவமாக எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

ஆரம்ப காலத்திலே தத்துவத்தின் அடியாகத்தான் எல்லாவற்றையும் விளக்க முயன்றார். நடந்து கொண்ட எல்லா விடயத்தையும், நடைமுறைகளையும் தத்துவமாக உருவாக்க முயன்றார். அதை எப்படிக் கூறலாம் என்று சொன்னால் விளக்க முயன்ற காலம் பழைய காலமானால் விளங்கமுயன்ற காலம் பிற்காலமாக காணப்படுகின்றது.

நாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார். பண்பாட்டில் வலிமையிலே அவர் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனபடியால் தான் அவர் பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் அப்பால் சென்று பண்பாட்டடியாக தமிழ் மக்களைப் புரிந்து கொள்ள அவர் முயன்றார்.

சிவத்தம்பி அவர்கள் ஆய்வாளர் , விமர்சகர் , கவிஞர் , சிந்தனையாளர். இவற்றுக்கும் அப்பால் ஒரு நடிகர் நாடக எழுத்தாளர். நாடக நெறியாளர். மரபு வழி நாடகங்களை செழுமைப்படுத்தியவர். நாடகங்களையும் அரங்கியலையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியத்தை தனக்கு பின்னால் உருவாக்கி சென்றவர். இந்த பகுதி இன்னும் விரிவாக எழுதப்படுகின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் இன்னொரு ஆளுமையின் முகம் வெளியே தெரிய வரும் என்றார் பேராசிரியர் சி.மெனகுரு.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்களின் பகிர்வு

பேராசிரியர் சிவத்தம்பியின் எழுபத்தைந்தாவது அகவையில் அவர் குறித்துப் பேசுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய ஆய்வுகள் குறித்து 2005 டிசெம்பர் மாதத்தில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையும், ரொறொண்டோ பல்கலைக் கழக தென்னாசிய ஆய்வு மையமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை நடாத்தினோம்.
அந்தக் கருத்தரங்கில் தமிழ் நாட்டிலுள்ள மிக முக்கியமான ஆய்வாளர்கள் பெரும்பகுதியானோர் பங்கேற்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தமிழியல் ஆய்வும் அவரது வகிபாகமும் திசை வழிகளும் என்ற கருத்தரங்கு மூன்று நாள் சென்னைப் பல்கலைக்கழக சஙக இலக்கியத்துறையில் நடைபெற்றது.

தமிழர்களுடைய வரலாறு என்பது 2300 ஆண்டுகளைக் கொண்டது என்பது வரையறுக்கப்பட்டு விட்டது. அதற்கு முன் இருக்கலாம்.ஆனால் சான்றுகளின் படி 2300 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ் மொழி பேசும் இனக்குழு இருந்திருக்கின்றது என்பது உறுதி பெற்றிருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் 2300 ஆண்டுகளுக்கான நீண்ட நெடிய வரலாற்றை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தங்களுடைய ஆய்வின் மூலமாக எப்படியெல்லாம் பதிவு செய்திருக்கின்றார் என்பதை உங்களோடு நான் பகிர விரும்புகின்றேன்.

பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வுகள் கி.பி 2000 இற்கு முற்பட்ட காலம் பற்றிய தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ச்சமூகம் என்ரு ஒரு பிரிவாகச் சொல்லலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான தமிழ் இலக்கியம், கல்வெட்டுக்கள், அது சார்ந்த ஆய்வுகளையும் இன்னொன்றாகச் சொல்லலாம். மூன்றாவதாக 20 ஆம் நூற்றாண்டு பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்த ஆய்வுகள் என்று சொல்லலாம்.

இந்த முதல் நிலையில் அதாவது தொல்பழங்காலம் பற்றிய, தமிழர்கள் பற்றிய ஆய்வு என்பது மிக முக்கியமான ஒரு ஆய்வாக இருக்கின்றது. குறிப்பாக பிரித்தானியர்கள் தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படும் இந்துஸ்தான் என்ற நிலப்பகுதியில் அவர்கள் ஆட்சி அதிகாரம் செலுத்திய பொழுது அவர்கள் செயத முக்கிய ஆய்வு கல்கத்தாவை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் உருவாக்கிய ஏஷியாட்டிக் சொசைட்டி என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தியவியல் ஆய்வுகளைத் தொடங்கினார்கள். அந்த ஆய்வில் இந்தியா என்ற நாடு சமஸ்கிருத மொழியை முதன்மையாகக் கொண்டதாகவும், ஆரியர் என்ற தேசிய இனத்தைக் கொண்டதாகவும் அவர்களது ஆய்வுகள் நடைபெற்றன. வில்லியம் ஜோன்ஸ் தொடங்கி பிறகு வில்சன், பேராசிரியர் மாக்ஸ்முல்லர் வரை இந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இவர்கள் எல்லோரும் இந்தோ ஆரியம் சார்ந்த சமஸ்கிருதம் தான் இந்தியாவின் முதன்மையான மொழி என்றும், முதன்மையான பண்பாடு அந்த சமஸ்கிருத மொழியைச் சார்ந்த வேதகாலப் பண்பாடு என்ற வகையில் தான் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

மாறாக 1900 தொடக்கம் 1924 வரை தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் பெரியவர்கள், குறிப்பாக சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும், பின்னர் உ.வே.சாமிநாத ஐயரும் சேர்ந்து தமிழ்ச் சுவடிகளில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிக அரிய தொல் பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றைப் பதிப்பித்து வெளியுலகுக்கு கொண்டு வந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வும் ஐரோப்பியர்களால் இந்தியா என்று கருதப்படும் நிலப்பகுதியில் சமஸ்கிருத மொழிக்கு மாற்றான இன்னொரு மொழிக்குடும்பம் இருக்கிறது என்பதையும், அந்த மொழிக்குடும்பத்துக்கென தொன்மையான பண்பாட்டு மரபுகள் தொடர்ச்சியாக இருக்கின்றன என்பதையும் உலகத்துக்குத் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தப் பின்புலத்தில் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய 1965, 75 ஆண்டுகளில் அவர் நிகழ்த்திய ஆய்வுகளின் மூலமாக இவ்விதம் இந்தியா என்ற நிலப்பகுதி சமஸ்கிருதம் என்ற மரபுக்கு அமைய ஒருபக்கம் இருக்கும் அதேவேளை மறுபக்கம் திராவிட மரபு எனப்படும் தமிழை முதன்மைப்படுத்திய ஒரு செம்மொழி இலக்கிய மரபும், ஒரு பழமையான தொல்காப்பிய இலக்கண மரபும் இருந்தது என்பதைச் சார்ந்த ஒரு அங்கீகாரம் இருந்தது.

அதில் பேராசிரியர் செய்த ஆய்வுகளில் அவரின் கலாநிதிப்பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வில், "பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம்" என்ற ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் மூலமாக கிரேக்கச் சமூகத்தில் இருக்கக் கூடிய பண்டை இன மரபுகள் சார்ந்த ஒரு இனக்குழுவைப் போலவே தமிழ் பேசக்கூடிய ஒரு இனக்குழு இங்கிருந்திருக்கிறது எனவும், அதில் ஒரு சமச்சீரற்ற சமூக அமைப்பு செயற்பட்டதென்பதும், அதில் பல்வேறு வகையான மரபுகளைக் கொண்ட கலைஞர்களும், குறிப்பாகப் பாணர்கள், புலவர்கள், விரலியர்கள் இப்படிப் பலர் வாழ்ந்தனர் என்றும், அவர்களுடைய கலை வடிவங்கள் செழுமையானவையாக நடைமுறையில் இருந்தன என்பதையும் தனது ஆய்வின் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இக்காலகட்டத்தில் எழுதிய மேலும் முக்கியமான சில ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது பண்டைத் தமிழ் சமூகத்தினுடைய திணைக்கோட்பாடு பற்றிய ஆய்வாகும். அதைப் போலவே பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் உருவான மேட்டிமை சார்ந்த தன்மை பற்றிய The development of aristocracy means in Tamil Nadu என்ற அவருடைய ஆங்கிலக் கட்டுரை. அதைப்போலவே திணைக்கோட்பாடு சார்ந்து உருவான உளவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள். ஏறக்குறைய அவருடைய கலாநிதி ஆய்வுப் பட்டமும் அதைச் சார்ந்த இந்த சங்க இலக்கியம் தொடர்பான பிற ஆய்வுகளும் ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்தன, என்னவென்று சொன்னால் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைப் போலவே திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் என்பது தொன்மையான நாகரிகம் என்றும் அந்த நாகரிகத்தைச் சார்ந்து ஒரு தொன்மையான கிரேக்க இலக்கியத்தோடு ஒப்பிடக்கூடிய ஒரு தொல் பழந்தமிழ் இலக்கியமும் உண்டு என்பதற்கான தர்க்கபூர்வமான, அறிவியல்பூர்வமான சான்றுகளை இவருடைய இந்த ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டன என்று சொல்லமுடியும்.

ஏனென்று சொன்னால் இக்காலங்களில் தமிழ் நாட்டைச் சேர்ர்ந்த தமிழ் தேசிய இனத்தை முதன்மைப்படுத்திய பலரும் குறிப்பாக தேவநேயப் பாவாணர், இலக்குவணார், இப்படியான பல பெருந்தகைகளும் இந்தக் கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்தினாலும் அதற்கு அவர்கள் அறிவியல்பூர்வமான சான்றுகளைத் தந்தார்களா என்று சொல்லமுடியாது. ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இந்த ஆய்வுகள் மூலமாக, குறிப்பாக பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் இருந்த நிலவியல் அமைப்பு, அங்கு வாழ்ந்த மக்கள் தன்மை, அதன் மூலமாக அவர்கள் உருவாக்கிய தமிழ் இலக்கியம், வரலாறு தொடர்பான ஒரு இலக்கிய எடுகோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மானுடவியல் ஆய்வை அவர் செய்தார் என்று சொல்லமுடியும். இந்த ஆய்வு இந்தியாவைப் பொறுத்தவரை மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களால் வட இந்தியாவைப் பற்றிக் கொண்டிருந்த அளவிற்கான ஒரு மிகப்பெரிய மதிப்பீட்டை தென்னிந்தியா அல்லது தென்னிந்தியாவில் இன்றைக்கு வாழக்கூடிய தமிழ் இனத்தின் முந்திய வரலாற்றை உறுதிப்படுத்துவனவாக அமைந்தன. இதை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மிக முக்கியமான பங்களிப்பாக நான் கருதுகிறேன்.

No comments:

Post a Comment