விடாமல் தொடரும் தீய பழக்கங்கள் ஒருசமயம் பக்தன் ஒருவன், ஞானியிடம் சென்று தனக்கு ஏற்பட்ட சூதாடும் பழக்கத்தை எப்படி விடுவது என்று கேட்டான். ஞானி உடனே தன் பக்கத்தில் உள்ள ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூண் என்னை விடமாட்டேன் என்கிறதே! என்றார். பக்தன், சுவாமி! நீங்கள் தூணை விடவேண்டியதுதானே! ஏன் விடமாட்டேன் என்கிறீர்கள்? என்றான். இதுபோலத்தான் நீயும் கெட்ட பழக்கத்தைவிட வேண்டும். அது உன்னை பிடித்துக்கொண்டு இருக்கவில்லை. நீதான் அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறாய் எனக் கூற, பக்தன் சூதாடும் பழக்கத்தை விட்டுவிட்டான். எனவே எந்த தீய பழக்கமும் நம்மை பிடிக்கவில்லை. நாம் தான் அவற்றை பிடித்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.
எது கேவலம்?
பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் வால்டேர் என்பவர் ஜெனிவாவில் சில காலம் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் காஸினாவோ என்ற இத்தாலிய அறிஞர் வால்டேரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வால்டேர் தாம் ஹாலர் என்பவருடைய நூல்களை மிகவும் விரும்பிப் படித்ததாகவும், ஒவ்வொரு நூலும் மிகுந்த கருத்தாழம் மிக்கதாகவும் உள்ளது என்று பாராட்டிச் சொன்னார். உடனே காஸினாவோ, நீங்கள் என்னவோ அவருடைய நூல்களைப் பாராட்டிச் சொல்கின்றீர்கள். ஆனால், அவரோ உங்களுடைய நூல்களை மிகவும் கேவலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே. என்று சொன்னார். அப்படியானால், நாங்கள் இருவரும் எண்ணியது தவறு என்று தோன்றுகிறது எனக் கூறினார் வால்டேர். அந்தக் காலத்துல இருந்து இப்ப வரைக்கும் போட்டுக் கொடுக்கிறதுக்கு நிறைய பேர் பிறந்து கொண்டு தான் இருக்காங்க போலிருக்கு... |
No comments:
Post a Comment