ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விசேஷம் இருக்கும். அதைப்போல் சிவபுரிக்கும் இருந்தது. சிவபுரியின் பிரசித்தமானது அதன் பள்ளிக்கூடம் அடிதடி, சண்டை, வம்பு, தும்பு இத்தனைக்கும் பேர் போனது. இப் பள்ளி மாணவர்கள் எப்போதும் இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகளாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதை சரிசெய்வதற்குள் ஆசிரியர்களுக்கு பெரும்பாடாக இருக்கும். ஆசிரியர்கள் இப் பள்ளியிலிருந்து விடுதலை கிடைக்கும் நாளை ஆவலோடு எதிர் நோக்கி இருப்பார்கள். அதேபோல் சிவபுரி பள்ளிக்கு மாறுதல் என்றால் ஆசிரியர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். இந்த சமயத்தில் மாணவர் மத்தியில் ஒரு செய்தி வேகமாகப் பரவி கொண்டிருந்தது. தேவராஜன் என்ற ஒரு புதிய தலைமை ஆசிரியர் சிவபுரி பள்ளிக்கு வரப்போகிறார் என்பது. அதுவும் அவரே விரும்பி இந்த பள்ளிக்கூடத்திற்கு வருகிறாராம். இந்த பள்ளியைத் திருத்துவதற்கே அரசாங்கம் இவரை அனுப்புகிறதாம். ஒரு திங்கட்கிழமை அன்று தேவராஜன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தேவராஜன் ஆசிரியர்களை அழைத்து பேசினார். மாணவர்களை அழைத்துப் பேசினார். அவர்களின் பிரச்சினைகள் என்ன என்று தெரிந்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தான் இதற்குக் காரணம் என்று புரிந்து கொண்டார். அடுத்த நாள் காலை பள்ளியின் எதிரில் பிரேயருக்காக மாணவர்கள் கூடினர். வகுப்பு வாரியாக மாணவர்கள் வரிசையில் நின்றனர். ஆசிரியர்கள் பக்கத்தில் நின்றனர். "நீராருங் கடலுடுத்த" பாடலுடன் பிரேயர் தொடங்கியது. தலைமை ஆசிரியர் மைக் முன்னால் வந்து நின்றார். "மாணவர்களே இன்று உங்களுக்கு நான் ஒரு புதிர் விளையாட்டுப் போட்டி ஒன்றை வைக்கப் போகிறேன்" என்றார். "பிரேயரில் விளையாட்டா" என்று மாணவர்கள் கிண்டலடித்தனர். ஆசிரியர்களும் முகத்தைச் சுளித்தனர். "நான் இப்பொழுது உங்களுக்கு ஆளுக்கு ஒரு வாழைப்பழம் தரப் போகிறேன். இதை நீங்கள் நான் சொல்லும் வரை சாப்பிடக்கூடாது" என்றார். அதற்குள் வாழைப்பழக் கூடைகள் வந்து இறங்கின. தலைமை ஆசிரியரும், இதர ஆசிரியர்களும் வாழைப் பழத்தை மாணவர்களுக்கு ஒவ்வொன்றாகக் கொடுத்தனர். "மாணவர்களே இப்போது உங்கள் கையில் இருக்கும் வாழைப் பழத்தை சாப்பிடலாம். ஆனால் உங்கள் கையை மடக்கக் கூடாது" என்றார் தேவராஜன். மாணவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. கையை மடக்காமல் எப்படி வாழைப்பழத்தை சாப்பிடுவது? பல மாணவர்கள் பலவிதமாக முயற்சித்தனர். ஆசிரியர்கள் கூட சிலர் மாணவர்களுக்குப் பதிலாக முயற்சித்தனர். "நீங்கள் உங்கள் கையில் இருக்கும் பழத்தை நான் சொன்ன முறையில் சாப்பிட்டு விட்டால் நீங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்கிறேன். அப்படி இல்லை எனில் கை மடக்காமல் சாப்பிடும் வித்தையை நான் சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்குப்பிறகு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?" என்றார் தேவராஜன். சிறிது நேரத்திற்குப் பின்னர் கை மடக்காமல் நீங்கள் சாப்பிட முடியாது. ஆனால் அடுத்தவர் கை மடக்காமல் உங்களுக்குக் கொடுக்கலாம் அல்லவா? என்றார் தேவராஜன். அடுத்த நிமிடம் மாணவர்கள் பழங்களை தின்று தீர்த்தனர். மாணவர்கள் தலைமையாசிரியரின் புத்திக் கூர்மையைப் பாராட்டினர். "ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக இருந்தால் பயன் எல்லோருக்கும் கிடைக்கும் அல்லவா?" என்று கேட்டார். அன்று முதல் மாணவர்கள் தலைமையாசிரியரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டனர். மாணவர்கள் ஒற்றுமையுடன் சிறந்து விளங்கினர். அந்த ஆண்டு அந்த பள்ளி மாநிலத்திலேயே சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கர்ணன் |
No comments:
Post a Comment