Thursday, February 16, 2012

சம்பாதிப்பது பல மடங்கு ஆக என்ன செய்யலாம்?




வறுமையினால் துன்பப்படும் குழந்தைகளுக்கு உணவளிப்பது, பசு மாட்டைத் தினமும் பூஜித்தல், வேதம் அறிந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுதல், சிதிலம் அடைந்த கோவில்களின் புனர்நிர்மாணத்திற்கு உதவுதல், அனாதை பிரேத சம்ஸ்காரம், ஈமச் சடங்குகள் செய்ய வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் பொருள், பணம் உதவி செய்தல் கவனிப்பாரின்றி உள்ள கோவிலில் தீபம் ஏற்றி வைப்பது  -  போன்ற மகத்தான புண்ணிய காரியங்கள் ஜாதகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாகும்.......... 

சரி இதே ரீதியில் நிறைய எழுதியாச்சு.... கொஞ்சம் பேர் சின்சியரா பாலோ பண்ணி இருக்கலாம்... நிறைய பேர் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கலாம்.... 

Livingextra .com னு பேர் வைச்சுக்கிட்டு, உருப்படாத வெத்து சமாச்சாரங்களா போட்டுக் கிட்டு இருக்க முடியாது... உள்ளே வந்து படிக்கிற வாசகர்களை ஒரே ஒரு நிமிஷமாவது நிமிர்ந்து பார்க்க வைக்கணும்... நாம என்ன சைட் இப்போ பார்க்கிறோம்னு? அப்படின்னு தோணுச்சு... 

சரி எப்படி? ஐயா தெரிஞ்சோ தெரியாமலோ மனுஷனா பொறந்தாச்சு....  நாம யாரு, இன்னைக்கு அப்பாவா இருக்கலாம், அண்ணனா இருக்கலாம், நல்ல கணவனா / மனைவியா இல்லை தலைவனா /  குடும்ப தலைவியா இருக்கலாம், இல்லை இன்னும் கல்யாணம் ஆகாம ஒரு நல்ல உள்ளத்துக்கு காதலனாகவோ / காதலியாகவோ இருக்கலாம்.. ஏன் ரெண்டும் இல்லாம ஒரு பொறுப்புள்ள புள்ளையா நம்ம அப்பா / அம்மாவுக்கு இருக்கலாம்...

சரி, இருக்கிறோம்... இப்படி இருக்கிறப்போ நம்மை சுற்றி இருக்கிற எல்லோருக்குமே ஒரு எதிர்பார்ப்பு , கணிப்பு இருக்கும்.. அவரா.. அவர் இப்படி, அப்படி.. நல்லவர், வல்லவர்...இந்த மாதிரி, அந்த மாதிரி...
இந்த எதிர் பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்ற முடிஞ்சாலும், நாம பெரிய பிஸ்தாதான். 

ஆனா, ஒன்னு முடிஞ்சதா அடுத்த கடமை. அதுக்கு அடுத்து இன்னொன்னு... இப்படியே .... போராட்டம் தொடருது..... எல்லாத்துக்கும் அடிப்படையா மூணு விஷயங்கள் தான். வீரம் / தைரியம், கல்வி, செல்வம்...... மூணுல ஒன்னு குறைஞ்சாலும் எங்கேயோ பலமா அடி விழப்போகுதுன்னு அர்த்தம்....

இதோடா, சார் சரஸ்வதி சபதம் பட ரீமேக்குல இறங்கிட்டாருன்னு சொல்லப் போறீங்க.. அதானே... இல்லீங்கண்ணா... யோசிங்க... அது தான்  நிஜம். இந்த மூணுல எதோ ஒரு விஷயத்துல உங்க தனித்தன்மை மேலோங்கி இருக்கும்.. அதை கெட்டியாப் பிடிங்க..... அம்புட்டுத்தான் விஷயம்.... 

நல்ல உடல் நலம், பலம், ஓரளவு விஷய ஞானம் , நிறைய செல்வம் - இது தான் இப்போதைக்கு நம் சக மனிதர்களின் வாழ்க்கை தாரக மந்திரம். எல்லோருமே இதை நோக்கித் தான் ஓடிக்கிட்டு இருக்கிறோம்.  


அண்ணா... எல்லாத்திலும் நான் ஆவரேஜ் தான் , எனக்கே தெரியிது.. நான் என்ன பண்ணனும்? அதைத் தான் இங்கே பார்க்கப் போறோம்..!

(1)...  ஒரு நாளைக்கு பத்து நிமிஷம் வேகமா ஓடுங்க .. எந்த வியாதியும் கிட்டவே நெருங்காது. இப்போ பேசிக்கிட்டு இருந்ததா சொன்னேனே நண்பர் - அவர் காலேஜ்ல படிக்கிறப்போ , ஒரு நாள் அவருக்கு கடுமையான குளிர் காய்ச்சல். டைபாய்டு சீசன். பாவம் அவரால உடம்புக்கு  ரொம்ப முடியலை. கஷ்டப்படற குடும்பம். ஆஸ்பத்திரிக்கு போய் அங்கே ஒரு இருநூறு ரூபாய் கொடுக்கணுமான்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி. அன்னைக்கு நைட் தூங்கி , காலைலே எழுந்ததும் , ஒரு பதினஞ்சு நிமிஷம் வேகமா கிரவுண்ட்ல ஓட ஆரம்பிச்சார். ரெண்டே நாள்.... காய்ச்சல் ஓடியே போச்சு.... அன்னைக்கு தொடங்கிய ஓட்டம் காலேஜ் முடியிற வரைக்கும் தினமும் , தவறாம ஓடினார் எனக்கு தெரிஞ்சு....

இன்னும் ஓடுறாராம்... மழையாவது , பனியாவது... உள்ளூராவது - வெளியூராவது... சூரிய வெளிச்சம் வந்துட்டாலே போதும்.. நல்ல வேகமா - பதினஞ்சு நிமிஷம் ஓட்டம். இப்படி ஓடுறதால, ரத்தம் புத்துணர்ச்சி பெறுவதுடன், நோய் எதிர்க்கும் சக்தி - அபரிமிதமாக வளருகிறது ...

செலவே இல்லாமல் , நம் உடல் நலம் பெறும்  . நம்ம உடல் நலம் மேல் அக்கறை இருக்கிறப்போ, சிகரெட், தண்ணி பக்கம் போக மனசு கேட்காது. செலவு மிச்சம். அதனாலே உடலோடு சேர்ந்து மனசு ஆரோக்கியம் கூட ... 

ஒரு சின்ன விஷயத்தை தொடங்குறதுல எவ்வளவு நல்ல பலன்கள் பாருங்க....

===================================

(2) அடுத்து கல்வி ஞானம். நம்மோட வசதி வாய்ப்பு பொறுத்து - நமக்கு கிடைச்ச பள்ளி கல்வி , கல்லூரி கல்வி மட்டும் விஷயம் இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது விஷயத்தை கற்றுக்கொள்கிற ஆர்வம் வர வேண்டும். எதுவும் இல்லையா, ஒரு நல்ல செய்தித்தாள் அரை மணி நேரம் படித்தாலும் போதும்..... கண்டிப்பாக நம் தமிழுடன் ஆங்கிலமோ / ஹிந்தியோ அல்லது இரண்டுமே கற்றுக்கொள்வது மிக மிக அவசியம். 
இரண்டாவது விஷயமான கல்வி ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து விடும். அட போதுமா.. மெயின் விஷயத்துக்கு வருவோம்... செல்வம்...!?

(3) அதிகமா சம்பாதிக்கணும்....! எப்படி? உலகமே இன்னைக்கு அதுக்குப் பின்னாலே தான் இருக்கு. ஏராளமான ஸெல்ப் டெவலப்மென்ட் புத்தகங்கள் எல்லாம் , உங்களை சம்பாதிக்கிறதுல 'புலி' யாக்குறதுக்குத்தான். இந்த மாதிரி புத்தகம் போட்டு அவங்க சம்பாதிக்கிறாங்க என்பது வேறு விஷயம். பெரிய பெரிய மட அதிபதிகளும் இந்த விஷயத்தில் பெரிய ஆளாத் தான் இருகிறாங்க. பெரிய பெரிய அறிவு ஜீவி கூட்டமே இன்னைக்கு சம்பாதிக்கிற வழியை கண்டு பிடிக்கிறதுலதான் தீவிரமா இருக்கு....

இதுல என் மூளை எந்த மூலைக்கு? இருந்தாலும் எதோ ஒன்னு ரெண்டு ஐடியா எனக்கு பட்டதை சொல்றேன்... எல்லாம் அந்த நண்பர் உபயம். அவர் தன்னோட வாழ்க்கையில செஞ்சு கிட்டு இருக்கிற விஷயம். நாமளும் தெரிஞ்சுக்கிடலாம். சரியா இருந்தா, எடுத்துக்கோங்க... 

No : 1  வாய்ப்பு கிடைக்கிறப்போ எல்லாம் தங்கம் வாங்குறது. அரை கிராம், ஒரு கிராம், ரெண்டு கிராம்.... தயக்கமே இருக்க கூடாது . கையில அவசர தேவைக்கு மட்டும் கொஞ்சம் போல காசு வைச்சுக்கிட்டு, மீதி எல்லாத்துக்கும் தங்கம் வாங்குங்க.கொஞ்சம் கொஞ்சமா அது சேரட்டும். அவசரத்துக்கு தங்கம் போல,  அம்மா அப்பா கூட உதவி செய்ய முடியாது.
இன்னைக்கு நீங்க பத்து ரூபாய்க்கு வாங்குறது, ரெண்டு வருஷத்துல பல மடங்கு உயர்ந்து நிற்கும்.




அதோட நிக்காம, ஒரு நாலு / அஞ்சு லட்சத்துக்கு நீங்க வாங்குன தங்கத்தோட  மதிப்பு வந்தததும், அப்படியே, நீங்க இப்போ இருக்கிற ஊருக்கு பக்கமா, இல்லை உங்க சொந்த ஊரு... ( சரி, சரி .....நீங்க பொறந்த ஊருக்கு பக்கமா) நிலத்தை வாங்கிப் போடுங்க...

தங்கத்தை வித்து... இல்லை அப்படியே பேங்க்ல வைச்சு.... அதுக்கு நீங்க ரொம்ப கம்மியா வட்டி கட்டினா போதும்.... நீங்க, வாங்குற நிலம் சந்தேகமே இல்லாம, சில வருஷத்துக்குள்ளவே கண்டிப்பா ரெண்டு மடங்கு ஆகும்....
நீங்க வாங்குற சம்பளத்தை காட்டிலும், நீங்க சம்பாதிக்கும் விகிதத்தைக் காட்டிலும், பல மடங்கு அந்த நிலத்தின் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். 

சொந்த வீடுங்கிற நிலைமை தாண்டி , நிஜமாவே சொந்த ஊருங்கிற ரேஞ்சுக்கு நீங்க தாராளமா யோசிக்கலாம். 
    

அந்த நண்பர், நான் வாங்குற சம்பளத்துல பாதி கூட இப்போ வாங்கலை. உடனே நான் காலரை தூக்கி விட்டுக்க முடியாது. ஏன்னா, அவர் வாங்கிப் போட்டு இருக்கிற நிலத்தை, நான் இன்னும் முப்பது வருஷம் உழைச்சாலும், என்னால வாங்க முடியாது.

அவர் இன்னைக்கு நினைச்சா, நாலு கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கலாம். எனக்கு நாலு லட்ச ரூபாய் பேங்க் லோன் கொடுக்க, எல்லா வங்கியுமே கொஞ்சம் மேலேயும், கீழேயும் பார்க்கும். சம்பளம் நல்லா தான் இருக்கு சார். ஆனா, சிபில் ஸ்கோர் ரொம்ப கம்மி . (இதைப் பத்தி பெரிய கட்டுரையே எழுதலாம், வாய்ப்பு இருந்தால் )

ஆனா, நண்பர் இன்னைக்கு 'பேங்க்' க்கு லோன் போனா, கோடி ரூபாய்க்கு லோன் சாங்க்ஷன் பண்ண போட்டி போடுவாங்க. அவருக்கு இருக்கிற சொத்து மதிப்பு அப்படி. கிரெடிட் கார்ட் கிடையாது. யாருக்கும் செக் கொடுக்க மாட்டார். அதுனால செக் பவுன்ஸ் ஆகாது....

படிச்சது சாதாரண டிப்ளோமா தான். பதினெட்டு வருஷ சர்வீஸ்.  வாங்குற சம்பளம் வருஷத்துக்கு பத்து லட்சத்துக்குள்ள தான். ஆனா, சொத்து மதிப்பு பத்து கோடிக்கும் மேல.... 

தான் சம்பாதிச்சு, நிலத்தை வாங்கி - அந்த நிலம் அவருக்கு எவ்வளவோ சம்பாதிச்சுக் கொடுக்குது. 

நான் சொன்ன எதுவும் கட்டுக்கதை இல்லை , நிஜமா நம்ம மூளையை யூஸ் பண்ணினா, நாமளும் அரசியல் வாதிகளை விட நல்லாவே சம்பாதிக்கலாம். நல்ல விதமாகவே. 

என்னோட நண்பர் படிக்கிறப்போ பயங்கர அவுட் ஸ்டாண்டிங் எல்லாம் ஒன்னும் இல்லை. அபோவ் ஆவேராஜ் தான். ஆனா, நல்ல யோசனை சொன்னா உடனே அதை ஒப்புக்கிட்டு நடைமுறை படுத்துவார். சிந்திச்சா மட்டும் போதாது இல்லை. செயல் படுத்தனும், ரொம்ப வேகமா.....  என் நண்பர் பண்ணினார்.... நீங்களும் யோசிங்க....
நல்ல  சம்பாத்தியமோ, இல்லை அபரிமித விஷய ஞானமோ, இந்த உலகம் ஜெயிக்கிறவங்களுக்குத்தான்...... மத்த எல்லோரும் வேடிக்கை தான் பாக்கணும். நாம வேடிக்கை பார்க்க வந்து இருக்கிறோமா, இல்லை விளையாண்டு கலக்க போறோமாங்கிறதை நாம தான் முடிவு பண்ணனும்..!........

இதுல, அந்த நண்பர் ரொம்ப வேடிக்கையா சொல்றார். எல்லாம் நான் கொடுத்த யோசனையாம். பேருக்கு மட்டும் இல்லை, உண்மையிலேயே குருவாம்.... ! நான் எங்க போய் முட்டிக்க?


நன்றி , விடை பெறுகிறேன்.... மீண்டும் சந்திப்போம் ......! கீழே இன்னொரு சுவாரஸ்யமான கட்டுரை..... மேலே படிங்க..!
 ========================================= 
தினமலர் - வெளியிடும் செய்திகள் பல சமயங்களில் ஒரு தலைப் பட்சமாக இருக்கும்போதிலும், வாரமலரில்  அந்துமணி பா.கே.ப. கட்டுரை வெளிவரும். சமயங்களில் மிக சுவாரஸ்யமான கட்டுரை அதில் வரும். அப்படி வந்த ஒரு கட்டுரை , நம் வாசகர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறேன். சென்ற மாதம் ஆன்மீக கடலில் வெளியிடப் பட்டு இருந்தது. அங்கே படிக்காத , நம் வாசகர்களுக்காக...!

தினமலர் ஜனவரி 8 மதுரை பதிவு - வாரமலர் பகுதியில் இருந்து......
=============================================
அவர் ஒரு காஷ்மீர் பண்டிட்... 37 ஆண்டுகளுக்கு முன், புலம் பெயர்ந்து, இங்கிலாந்து நாட்டில் செட்டில் ஆனவர். அங்கேயே, வெள்ளைக்கார பெண்மணி ஒருவரை திருமணம் செய்து, லண்டன் மாநகரில் வசித்து வருகிறார். 25 வயதில் ஒரு மகன் இருக்கிறான் அவருக்கு!
 
லண்டனில் டாக்டர் தொழில் செய்யும் நண்பர் ஒருவர் மூலம், இந்த அன்பருடைய தொடர்பு கிடைத்தது. இந்தியா வரும் போதெல்லாம் என்னை சந்திப்பார். அவ்வப்போது, தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்வார்.
இம்முறை, நான் லண்டன் போகும் தகவலை, இ-மெயில் மூலம் முன்பே அவருக்குத் தெரிவித்து இருந்தேன். கண்டிப்பாக தன் வீட்டுக்கு விருந்து உண்ண வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். "சரி' எனக் கூறி இருந்தேன்.
 
லண்டன் ஹியூஸ்டன் ரயில் நிலையம் அருகில் இருந்த பெர்னாட்ஷா பிளாசா என்ற ஓட்டலில் தங்கி இருந்தோம் நானும், லென்ஸ் மாமாவும்! அங்கிருந்து இந்த அன்பருக்கு போன் போட்டேன்... தம் லேட்டஸ்ட் பென்ஸ் காரில் வந்து இறங்கினார்.
 
லென்ஸ் மாமாவுக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறியதால், நான் மட்டும் அவருடன், அவர் இல்லத்திற்குச் சென்றேன்... வீட்டில் நுழைந்ததுமே, காஷ்மீரத்து உணவு வகைகளின் வாசனையும், பாசுமதி அரிசி வெந்து கொண்டிருக்கும் வாசனையும் மூக்கைத் துளைத்தது!
 
அவரது மனைவி வரவேற்றார்; மகன், எங்கோ வெளியில் சென்று இருந்தார்.
வீட்டிலேயே, "பைவ் ஸ்டார்' ஒட்டல், "பார்' போல செட் செய்திருந்தார்... இங்கே நம்மூரில், சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் ராமசாமி வீட்டில் அதே போன்ற, "பார்' பார்த்திருக்கிறேன்...
 
உட்கார்ந்தால் புதைந்து போய் விடும் அளவு, "சாப்ட்' ஆன சோபாவில் அமர வைத்து, பிரான்ஸ் நாட்டு கட் கிளாசில், அயர்லாந்து நாட்டு, ஜெமிசன் விஸ்கியை ஊற்றி, இரண்டு ஐஸ் கட்டிகளை போட்டுக் கொண்டார்...
எனக்கு, செயற்கை உரம் - பூச்சி மருந்து போடாமல் வளர்க்கப்பட்ட மரங்களில் இருந்து பறிக்கப்பட்ட ஆரஞ்சு பழங்களில் இருந்து பிழிந்த ஜூஸ் தந்தார்.
 
இப்படி பயிரிடப்படும், "ஆர்கானிக்' பயிர் வகைகளில் இருந்து கிடைக்கும் காய்கறி, பழம், கோதுமை போன்றவற்றுக்கு விலை ரொம்ப அதிகம்... ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இப்போது இவ்வகை உணவுப் பயிர் பாப்புலராகி வருகிறது. பேச ஆரம்பித்தார் அன்பர்...
 
"ஏன் இன்னும் காஷ்மீர் பிரச்னையைத் தொடர விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?' என ஆரம்பித்து, அரசியல்வாதிகளை, குறிப்பாக, நேரு குடும்பத்தை ஒரு பிடி பிடித்தார்... "இப்படியெல்லாம் நடக்குமென்பது தெரிந்து தான் அன்றே நாட்டை விட்டு கிளம்பி விட்டேன்...' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, டின்னருக்கு அழைத்தார், அவர் மனைவி.
என்ன தான் லண்டனில் வாழ்ந்தாலும், எவர்சில்வர் பிளேட்டில், கையால், தான் சாப்பிடுகிறார் அவர்... முள் கரண்டி, கத்தி எல்லாம் கிடையாது! அவரது மனைவியும், மகனும் கூட அப்படித்தானாம்!
 
காஷ்மீரிகள் நம்மைப் போல் பொரியல், கூட்டு, அவியல், பச்சடி, துவையல் குழம்பு, ரசம் என்று சமைக்க மாட்டார்கள்... அவர்களது உணவு அனைத்துமே, "செமி சாலிட்' ஆகத்தான் இருக்கும்...
குழம்பை ஊற்றி பிசைந்து, பொரியலையோ, கூட்டையோ, கீரையையோ தொட்டு நாம் சாப்பிடுவது போல் அல்லாமல், எல்லாவற்றையும் சாதத்தின் மீது ஊற்றி அப்படி அப்படியே பிசைந்து சாப்பிடுவர்.
 
அதாவது, பிளேட்டில் நாம், காய், பொரியல் வைக்கும் இடத்தில் மொத்தமாக சாதத்தை குவித்து, நாலு ஐட்டம் செய்து இருந்தால், ஒவ்வொன்றையும், குவியலின் ஒரு இடத்தில் ஊற்றி சாப்பிடுவர்; வினோதமாக இருக்கும்!
அன்று, பசலைக் கீரையில் ஒரு ஐட்டம், தாமரைத் தண்டில் ஒன்று, பனீரில் ஒன்று, பருப்பும், காய்ந்த வெந்தயக் கீரையும் சேர்த்து ஒரு ஐட்டம் என, சைவத்தில் நான்கும், அவர்களுக்கு சிக்கன் மற்றும் பன்றி இறைச்சியில் இரண்டு அடிஷனல் ஐட்டமும் இருந்தது.
 
சுவைத்து சாப்பிட ஆரம்பித்தோம்...
அன்பர் தொடர்ந்தார்: இப்போ, அமெரிக்கா பயங்கர பொருளாதார நெருக்கடியில் இருப்பது உனக்குத் தெரியும்... அமெரிக்கா என்ன... ஆசிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான்...
குளோபலைசேஷன் என்ற போர்வையில், பழைய காலனி ஆதிக்கத்தை திணிக்கின்றனர்... வெளிநாடுகளை அடிமைப்படுத்தி, காலனியாக முன்பு வைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு தவறு என்பதை, இவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
 
இனிமேல் அதே தவறை திரும்பச் செய்ய மாட்டார்கள்... அதற்கு மாற்று தான் குளோபலைசேஷன்... இன்று, இந்தியாவிலும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் சுதேசி தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டு வருகின்றன... இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பெயர் பெற்ற நகரம் அலிகார்... தோல் செருப்புகளுக்கு ஆக்ரா...
 
வெளிநாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இந்த சிறு தொழில்கள் அழிந்து விட்டன... நீங்கள் - இந்தியர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், பொருளாதார நிலைமை கவலைக்கிடமாகி விடும்.
 
ஒவ்வொரு வருடமும், நம் இழப்பு அதிகமாகி வருகிறது... 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், உங்களது பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள், 
ஆண்டுதோறும் சுருட்டிக் கொண்டு போகின்றன... இது, எதிர்காலத்தில் கூடுமே தவிர குறையாது... "அன்லஸ், அதர்வைஸ்' நீங்கள் விழித்துக் கொண்டாலன்றி...உங்கள் ஊரிலேயே தயாராகும் பொருட்களுக்கு, அவர்களது பிராண்டு பெயர் சூட்டி, கொள்ளையடிக்கின்றனர்... ஒரு பாட்டில் குளிர்பானம் தயாரிக்க, அதிகபட்சம், 70 பைசா செலவாகும்... இதையே உங்களிடம் ஒன்பது முதல், பத்து ரூபாய் விலையில் விற்று விடுகின்றனர். லாபத்தில் பெரும் பகுதியை, தம் தலைமை நிறுவனம் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் செயல் இது. 
கொக்கோ கோலா, பெப்சி, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள் குடித்தால் தான், உங்கள் தாகம் தீருமா? அதற்கு பதில் எலுமிச்சை ஜூஸ், அவ்வப்போது பிழிந்து தரப்படும் ப்ரஷ் ஜூஸ், லஸ்சி, மோர், இளநீர், ஜல்ஜீரா, பால் சாப்பிடுங்களேன்...
 
மல்டி நேஷன் நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல நான்... இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்... இல்லாவிட்டால், நம் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழே விழுந்து, இப்போது, 10 ரூபாய்க்கு வாங்கும், "கோக்'கை, 15 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை வரும்...
 
இன்று சபதம் எடுங்கள்... அடுத்த இரண்டு வருடத்திற்கு இந்தியப் பொருட்கள் மட்டுமே வாங்குவோம் என்று... முடிந்த வரையில் உங்கள் நண்பர், உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்களையும், இந்தியப் பொருட்களை வாங்க வையுங்கள்... ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த உணர்வு வந்தால் தான், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும் எனக் கூறி முடித்தார்.
 
பின்னர், ஓட்டல் அறையில், என்னை கொண்டு விட்டார். நேரம் இரவு, 9:00 மணி. அப்போது தான், சூரியன் மறையத் துவங்கி இருந்தான்!
ஊர் திரும்பியதும், விளம்பர ஏஜென்சியில் பணியாற்றும் நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, வெளிநாட்டு பொருட்கள் எவை, எவை... அவற்றுக்கு ஈடான இந்திய தயாரிப்புகள் எவை என, ஒரு லிஸ்ட் வாங்கினேன்.
 
இதோ அது:
 
வெளிநாட்டு சோப்பு, பாத் ஜெல் போன்றவை: கேமி, பாமொலிவ், லக்ஸ், லைப்பாய், லிசான்சி, ஹமாம், ரெக்சோனா, லிரில், பியர்ஸ், டோவ்...
இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள்: நீம், மார்கோ, சிந்தால் உட்பட கோத்ரெஜ் கம்பெனிகளின் சோப்புகள், சந்தூர், விப்ரோ சிகக்காய், மைசூர் சாண்டல், எவிட்டா, நிர்மா பாத், சந்திரிகா, மெடிமிக்ஸ், கங்கா...
 
வெளிநாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்: சிபாகா, பெப்சோடன்ட், போர்ஹான்ஸ், குளோசப், கோல்கேட், மென்டாடென்ட்... 
நம் தயாரிப்புகள்: வீகோ வஜ்ர தந்தி மற்றும் டாபரின் பற்பசைகள், நீம், பபூல், பிராமிஸ், புரூடென்ட்...
 பல் துலக்கும் பிரஷ்கள், வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகள்: போர்ஹான்ஸ், பெப்சோடன்ட், கோல்கேட், குளோசப்... 
நம்முடையவை: புரூடென்ட், அஜந்தா, பிராமிஸ்...
 
ஷேவிங் க்ரீம் மற்றும் பிளேடு வெளிநாடு: பாமொலிவ், ஓல்டு ஸ்பைஸ், கில்லட், செவன் - ஒ - கிளாக், 365.
நம்முடையவை: கோத்ரெஜ், இமானி, சூப்பர் மேக்ஸ், டோபாஸ், லாசர், அசோகா...
 
வெளிநாட்டு முக பவுடர்: பாண்ட்ஸ், ஓல்டு ஸ்பைஸ், ஜான்சன் பேபி பவுடர், ஷவர் டு ஷவர்... 
நமது: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோ பிளஸ்.
 
வெளிநாட்டு ஷாம்பு: ஹென்கோ, ஆல்கிளியர், நைசில், சன்சில்க்... 
நம்மவை: லாக்மே, நிர்மா, வெல்வெட்...
 
— நம் நாட்டு பொருளாதாரம் சீராக, இரண்டு வருடங்களுக்காவது நம் தயாரிப்புகளையே வாங்கி, நாட்டுக்கு நம்மாலான சிறு தொண்டைச் செய்வோமா? 

 

No comments:

Post a Comment