Thursday, January 5, 2012

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம்




அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில்.
 இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது.
கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன.
இது முதலாம் இராஜசிங்கன் (1581-1592) கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்க மன்னன் இந்து தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தான். குறிப்பாக சிவ வழிபாட்டில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
தனது இராச்சியத்தை தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாப்புக்காகவும் கிராமிய தெய்வ வழிபாட்டு முறைகளையும் செய்துள்ளான். இந்நிலையிலேயே சீதாவாக்கை ஆற்றை அண்மித்ததாக பைரவர் கோயிலை அமைக்கத் திட்டமிட்டான்.
மக்களின் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும் மட்டுமல்லாது காவல் தெய்வத்தின் அவசியமும் இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
அதற்காக இந்தியாவிலிருந்து நிபுணர் ஒருவரை இராஜசிங்கன் வரவழைத்தான். அவரது பெயர் அரிட்டுகே வெண்டு என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள்.
அரிட்டுகே வெண்டு சிற்பத்துறையில் மட்டுமல்லாது சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார். சீதாவாக்கை ஆற்றை இடைமறித்து அதனை வேறு திசைக்குத் திருப்பி பைரவர் கோயில் கட்டப்பட வேண்டும் என அவரிடம் மன்னன் கோரிக்கை விடுத்துள்ளான்.

ஆற்றைத் திசைதிருப்புதல் பாவச்செயல் என்பதுடன் அதனால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் சாஸ்திரத்தின் பிரகாரம் அவ்வாறு உள்ளதாக அரிட்டுகே வெண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் தான்இஅரசன்இஆறு இந்த மூன்றில் ஒன்று இல்லாமல்போகும் எனத் தெரிவித்துள்ளார். (இதனை சிங்கள மொழியில் "மாவோஇரஜாவோஇகங்காவோ' என்று சொல்வார்கள். இந்தக் கூற்று இப்போதும் வழமையில் உள்ளது
அரிட்டுகே வெண்டுவின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாத இராஜசிங்கன் கோயிலைக் கட்டுமாறு பணித்துள்ளான். அதன்பிரகாரம் கடுமையான உழைப்பின் பின்னர் ஆற்றை மறித்து பைரவர் கோயில் உருவாகியுள்ளது.
சுமார் 2 ஆயிரம்பேர் 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்தக் கோயிலைக் கட்டியதாக "அசிரிமத் சீதாவக' எனும் சிங்கள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிட்டுகே வெண்டுவின் எச்சரிக்கையின்படி கோயில் அமைக்கப்பட்ட பின்னர் இராஜசிங்க மன்னன் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் தந்தார்கள்.

இலங்கைக்குப் படையெடுத்த போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதில் இந்த பைரவர் கோயிலும் உடைக்கப்பட்டது.
கோயில் சிலைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அழிக்கப்பட்டன. அப்போது தொடக்கம் சிதைவுற்ற நிலையிலேயே இந்தக் கோயில் காணப்படுகிறது. இராஜசிங்கனின் தந்தை மாயாதுன்னையின் கட்டளையின்பேரில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இன்னுமொரு தகவல் கூறுகிறது. எவ்வாறாயினும் இந்த ஆலயம் சுமார் 500 வருட கால பழைமை உடையது.
கோயிலின் பிரதான வாயில் உட்பட நான்கு வாயில்கள் காணப்படுகின்றன. உள்வீதியுடன் வெளிப்பிரகாரம் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. கருவறைத் தளம் உட்பட அனைத்துப் பகுதிகளுமே மிகச் சிறந்த சிற்பவேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
பைரவர் கோயில் பெரண்டி கோயிலானது எப்படி?
தல்துவையில் கோயிலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் பெரண்டி கோயில் என்றே அழைக்கிறார்கள். ஆனால் அந்தப் பெயர் எப்படி வந்தது? அதற்கான அர்த்தம் என்ன? போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.
"பைரவர் காவல் தெய்வமாதலால் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த மக்களிடையே ஓர் அச்சம் காணப்பட்டது. இரவில் நடமாடுவதற்குக்கூடப் பயப்பட்டனர். அந்த மக்கள் அதிகமான நேரங்களில் "பைரவயா எனவோ' (பைரவர் வாறார்) என சிங்களத்தில் பேசிக்கொள்வதுண்டு' என்கிறார் பிரதேசவாசி ஒருவர்.
இந்தப் பெயர் மருவி பெரண்டி கோயில் எனத் தற்போது அழைக்கப்படலாம் எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது. இது பற்றி ஐ.டி.ஏ.பி.தனபால (வயது79) என்பவர் எம்மோடு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
"மாயாதுன்னை மன்னனின் மகனான முதலாம் இராஜசிங்கன் வீரம் பொருந்தியவனாக விளங்கினான். ஓர் இராச்சியம் அமைக்குப்போது எந்தெந்தப் பகுதியில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துவைத்திருந்தான்.
அதன்படி சீதாவாக்கை இராச்சியத்துக்கு வடக்காக காவல் தெய்வம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். சிவனுடைய உருவங்களில் ஒன்றான பைரவருக்குக் கோயில் கட்டி வழிபட்டான். ஏழு அடுக்கு மாடிகளைக் கொண்டதாக அந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும் எமது மூதாதையர்கள் சொல்வார்கள்' என்றார் தனபால.
தல்துவை பகுதியில் தொல்பொருள் சான்றாக விளங்கும் இந்த ஆலயம் பற்றி அநேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் இது தொடர்பாக ஆழமாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் எமது பாரம்பரியத்தின் பல்வேறு சான்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனலாம்.

No comments:

Post a Comment