amudu
A WAY OF LIVING
Monday, November 28, 2011
எரியும் இளமை.......
கனவுகளை ஒழித்து வைத்த
இதயம்
இப்போதெல்லாம்
விழித்தே கிடக்கிறது!
காலமோ என் வயதையும்
கூடவே குடிக்கிறது!
விடிவெள்ளியின் நேரத்தில்
எல்லாம் என்னிளமை
இந்த விளக்கோடு சேர்ந்து
எரிந்தே கரைகிறது!
வாரத்தின் வெள்ளிக்கிழமை
அம்மனிற்கு உகந்தநாளாம்!
அன்றுதானே நமக்கும் அற்புதநாள்!
உன்னோடு உரையாட
விதி நமக்குக் கொடுத்த கெடு!
அரபிக்கடலுக்கு நீ உன்னை
அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாய்...
நானோ நொய்யலாற்றுக்கு
விளக்கு விட்டுக் கொண்டிருக்கின்றேன்...
உன் கடமையின் கண்ணியத்தை
உற்றாரும் ஊராரும் சொல்லும்போது
பெருமைப் படுகின்றேன்...
உன்
பாதத்தடத்தில் நடக்கும்
அரேபியக் குதிரைகளைக் கண்டு
பொறாமைப்படுகின்றேன்...
ஆனபோதும்
அந்நிய தேசத்தில்
உன் உழைப்பு உப்பாய் இருப்பதை
உள் மனம் ஒத்துக்கொள்ள
மறுக்கிறது....
நம் தேசத்தில்
ஒப்புக்கு உழைத்தாலும்
தப்பென்று மனம் ஒருபோதும்
நினைந்ததில்லை...
நமக்காக கண்ணுக்குள்
எதிர்காலத்தை விதைத்தபடி
விமான நிலையத்தில்
தலையசைத்து விடைபெறுவாயே
அதற்கு மறு கவிதை
இன்னும் என்னால் எழுத
இயலவில்லை....
என் கண்களில் பிரிவின் வலி
உன் கண்களில் அதற்கான நிவாரணம்!
இன்னும்
நீ அழுத்திப்பிடித்த
உள்ளங்கைச்சூட்டு இதமாய்
என் கரங்களுக்குள்...!
நினைவுகள் நீளும்போது
என்
சிவந்த இதழ்களை
ஈரப்படுத்தியபடி
கனவுகளை சாகடிக்கின்றேன்....
துடிக்கும் உதடுகள்
காட்டிக் கொடுத்துவிடும்
என்பதால்
கடித்து வைக்கின்றேன்...
செந்நீரும் வெந்நீராய்
கன்னங்களில்!
ஆயினும்
புவி பார்க்காத சூரியகாந்தி
பூவைப் போல்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
எனக்குள் உன்னை மட்டும்
முணுமுணுத்துக் கொள்கின்றேன்....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment