வணக்கம் மக்களே...
அப்பாவோட பள்ளிக்கூட நண்பர் என்பதால் எங்க வீட்டுக்கு எப்போ வெள்ளை அடிச்சாலும் ஹரி அங்கிளைத் தான் கூப்பிடுவார். ஹரி அங்கிளின் மனசு கூட வெள்ளை தான். பாக்குறதுக்கு ரொம்ப சாதாரணமா தெரிவார், ஆனா ரொம்ப ரசனையான மனிதர். “என்னடா இவனுங்க எப்ப பார்த்தாலும் வெளிர் மஞ்சளையும் பளீர் பச்சையையுமே அடிக்க சொல்றானுங்க...”ன்னு ஊர்க்காரங்களோட ரசனையை நொந்துக்கொள்வார். அப்போ என்ன கலர் தான்னே அடிக்கணும்னு ஒரு நாள் போகிறப்போக்கில் கேட்டுவைத்தேன். அவ்வளவுதான் அப்படி கேளுடா என் வெல்லக்கட்டின்னு என்னை உக்காரவச்சு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டார்.
அவர் சொன்ன விஷயமெல்லாம் ரொம்ப கலர்புல்லா இருந்தது. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் மாதிரி, ஒவ்வொரு கலருக்கும் ஒரு பீலிங் உண்டாம். இப்படி ஒவ்வொரு கலரை பத்தியும் சில தகவல்களை எடுத்துவிட்டார். அவைகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.
வெள்ளை:
பரிசுத்தம், நடுநிலைமை இவைகளை குறிக்கும் நிறம். வெறுமனே வெள்ளை மாத்திரம் அடித்தால் சிறப்பாக இருக்காது எனவே வெள்ளையுடன் சிகப்பு அல்லது நீல காம்பினேஷன் அடிக்கலாம். வெள்ளை கலரில் உள்ள நன்மை என்னவென்றால் இவை வெளிச்சத்தை நன்கு பிரதிபலிக்கும். ஆனால் அதே சமயம் அழுக்கு ஏதாவது ஏற்பட்டால் அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும்.
கிரே (Gray): (இதை தமிழில் எப்படி சொல்லுவதேன்று ஹரி பெயிண்டருக்கே தெரியவில்லை. கலரை காட்டித்தான் என்னிடம் விளக்கினார். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்)
நிறைய பேர் இந்த கலரை தான் கேட்டு வாங்கி அடிக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கக்கூடிய நிறம். க்ரே கலரிலேயே பல்வேறு வகைகள் இருப்பதாக தெரிகிறது.
நீலம்:
அமைதி மற்றும் குளிர்ச்சியை குறிக்கும் நிறம். ரொம்பவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பெட்ரூமுக்கு நீலக்கலர் பெயின்ட் அடித்தால் “அந்த” மாதிரி விஷயங்களுக்கு நல்ல மூடை ஏற்படுத்தி கொடுக்குமாம். (எனக்கு எதுவும் தெரியாதுங்க... அவர் தான் சொன்னார்...) வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களோடு காம்பினேஷன் கலக்கலாக இருக்கும்.
மஞ்சள்:
மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை குறிக்கும் நிறம். இவ்வித நிறங்கள் மனதிற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சமையல் அறைக்கு அடிக்கும்போது நன்றாக பொருந்தும். வெளிர் மஞ்சளாக அடித்துவிட வேண்டாம் அது சோம்பலை ஏற்படுத்து நிறம். சூரியகாந்தி பூவின் மஞ்சலே சரியான தேர்வு.
சிகப்பு:
வறுமையின் நிறம் சிகப்பு. இது வீட்டுக்கு பெயின்ட் அடிக்கும்போது பொருந்தாது. ஹரி பெயிண்டரின் விதிகளின்படி கொண்டாட்டத்தின் நிறமே சிகப்பு. தர்பூசணி பழத்தின் நிறமே இதற்கு உதாரணம்.
பச்சை:
இயற்கையையும் ஆரோக்கியத்தையும் குறிக்கும் நிறம். பச்சை என்றதும் ராமராஜன் கலரை போல பளீர் பச்சையை தேர்ந்தெடுக்க வேண்டாம். மிதமான பச்சை இதமான பச்சை. ஹாலுக்கு அடிக்க உகந்த நிறம் இதுதான்.
கறுப்பு:
எதிர்மறையான எண்ணங்களை கொடுக்கக்கூடிய நிறம் என்று கருதப்படுவதால் யாரும் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் எக்கச்சக்கமாக மாத்தி யோசிப்பவர்கள் முயற்சி செய்யலாம்.
வடிவேலுவிடம் பெட்டிக்கடைக்கார பெண்மணி கேட்டது போல கலரில் ஆம்பிளைக்கலர் பொம்பளைக்கலர் இருக்கிறதாம்.
சாக்லேட் பிரவுன் (ஆம்பளை கலர்):
ஒரு ஆணுடைய அறையை (ஆணுறை இல்லை) அலங்கரிக்க சரியான நிறம் இதுவே. உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கக்கூடிய நிறம்.
பிங்க் (பொம்பளை கலர்):
எல்லோருக்கும் தெரிந்ததே. பெண்களுக்கு பிடித்த நிறம் பிங்க். இதே போல லாவண்டர் நிறமும் பெண்களுக்கு பிடித்தமான கலரே.
பெங் சூயி கலர்கள்:
என்னடா இவன் கெட்ட வார்த்தைல என்னமோ சொல்றான்னு டரியல் ஆகாதீங்க. எனக்கு வாஸ்துவில் நம்பிக்கை இல்லை. ஹரி பெயிண்டருக்கும்தான். ஆனாலும் பெங் சூயி எனப்படும் சீன வாஸ்து நிறங்கள் மனிதர்களின் மனநிலைக்கு தகுந்தபடி சில நிறங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி வெள்ளை, நீலம், பச்சை போன்ற நிறங்கள் மன அமைதியை கொடுக்குமாம். அதே போல மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்கள் உற்சாகத்தை கொடுக்குமாம்.
கிரியேட்டிவிட்டி:
வண்ணங்கள் மட்டும் வீட்டின் அழகை நிர்ணயித்து விடாது. மேலும் சில டிங்கரிங் வேலைகள் அவசியம்.
- அதாவது வீட்டிற்கு அடிக்கும் வன்னங்களுக்கு ஏற்றபடி சாமான் செட்டெல்லாம் இருந்தா டக்கராக இருக்கும். ஆனா இதெல்லாம் நடக்குற காரியமா.
- ஓவியங்கள் வரைவது: அதாவது குழந்தைகள் அறையில் கார்டூன் அல்லது விலங்குகள். சமையல் அறையில் பழங்கள் நிறைந்த கூடை. இதுபோல வரையலாம். கழிவறையில் என்ன வரைவது என்று கேட்டுவிடாதீர்கள்.
- ப்ளைன் சட்டை போடுவதைக் காட்டிலும் கொடு போட்ட சட்டை நன்றாக இருக்குமல்லவா. அதுபோல தான் வீட்டிற்கு இரு வண்ணங்களால் ஆன Stripes அடிக்கலாம்.
- திரைச்சீலைகள் ஒரு வீட்டை மென்மேலும் மெருகேற்றும். வீட்டின் பெயின்ட் காலருக்கு ஏற்றபடி திரைச்சீலைகளை அமையுங்கள்.
நம்ம ஹரிபெயிண்டர் சொன்னது கலர்புல்லா இருந்ததா. இன்னும் பெயிண்டின் வகைகள் அப்படின்னு ஏதேதோ சொல்லி மொக்கையை போட்டார். நான்தான் வர்ற கொஞ்ச பெரும் ஓடிடப்போறாங்கன்னு சொல்லி அவரை பத்தி விட்டேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
No comments:
Post a Comment