Thursday, October 6, 2011

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் கவிதைகள்...





மாற்றம் காணவே!

ரோட்டில் பள்ளம் மேடு எங்கும் பாருங்கள் - கோடை
ஆற்று மணல் காட்சி அங்குப் பாருங்கள்!
போக்குவரவை எச்சரிக்கும் செங்கொடி - அங்கே
ரோட்டின் ஓரம் காற்றிலாடப் பாருங்கள்! பழுது
பார்க்கும் தொழிலாளரைப் பாருங்கள்!
ஏற்றத் தாழ்வு இருக்குமிடம் எங்குமே
மாற்றம் காணவே பறக்கும் செங்கொடி!

பூமி நடுங்குமடா!
ஆளில்லை என்பதாலே
தானென்ற அகங்காரம்
தலைவிரித்து ஆடுதடா
ஊனுருக ஏழைகளின்
உள்ளமெல்லாம் புண்ணாக
உயிரோடு கொல்பவனைக் - காலம்
உயர்வாய் மதிக்குதடா!

பொறுமை ஒருநாள்
பொங்கி எழுந்தால்
பூமி நடுங்குமடா
கொடுமை புரியும் பாதகனை - அவன்
குறைகள் விழுங்குமடா!
காலையாகி மதியமாகி
மாலையானது பலபொழுது,
மாலையாகி பகலும் முடிந்து
இருளில் போனது பல இரவு

ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன்
வாழ்வெல்லாம் ஒரு நாள் வாழ்வென்றால்
தினம் தீராத வெறியோடு போராடும் மனிதன்
பேராசை நிலைதன்னை என்னென்று சொல்வேன்!

மானம் என்றே மங்கை அழுதால்
இன்ப மென்றே நகைப் பானே
பால வயதில் செய்த வினையை
வாழ்வு முடிவில் நினைப்பானே!

தானாகச் சிரிப்பான் தானாக அழுவான்
காணாத கனவும் காண்பானே - அவன்
ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடிக்
கூனாகி ஊணாகிக் கூடாகிப் போவானே!

      
              என்றும் நட்புடன்
*~*பொறிஞர் வி.நடராஜன்*~*


றாம் திணை இணயத்தளத்தில் தெ. மதுசூதனன், "'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" பற்றி எழுதியுள்ளது:
'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதை எளிமையும், இனிமையும், புதுமையும் கொண்டு நவீன கவிதையாயிற்று. இதனால் தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டு புதிய களங்களில் பயனிக்க வழி ஏற்பட்டது. இந்த வழியைப் பின்பற்றி தமிழ்க்கவிதையை எழுதியவர்கள் 'பாரதி பரம்பரையினர்' என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழ்க் கவிதை மரபின் செழுமைக்கும் வளத்துக்கும் காரணமாயிருந்த இந்தப் பரம்பரையில் பாரதிதாசன், பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இருவருமே தனித்தன்மை மிக்க கவிஞர்கள். சமுதாயத்தின் மறுமலர்ச்சி சீர்திருத்த சமத்துவச் சிந்தனையின் அடிச்சரடாகவே இவர்களது கவிதைகள் அமைந்திருக்கின்றன.
29 ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும் தான் எழுதிய பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் 'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள செங்கப்படுத்தான் காடு எனும் சிற்றூரில் அருணாசலக்கவிராயருக்கும் விசாலாட்சிக்கும் நான்காம் குழந்தையாக 13.4.1930 இல் பிறந்தார். இவரது தந்தையார் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். 'முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி' எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். தந்தை கவிஞராக இருந்ததால், அவர் பிள்ளைகளான கணபதி சுந்தரமும், கல்யாண சுந்தரமும் கவிபாடும் திறத்தை வளர்த்துக் கொண்டார்கள்.
கல்யாணசுந்தரம் ஆரம்பக்கல்வியை அண்ணன் கணபதி சுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அத்துடன் அவரது பள்ளிப்படிப்பு முடிந்துவிட்டது. காரணம் திண்ணைப் பள்ளிக்கூடம் சென்று படிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. தன் அண்ணனிடம் அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டார். அண்ணனும் கல்யாணசுந்தரம் மீது அளவற்ற அன்பு கொண்டவர்.
பாடல் பாடுவதிலும் கல்யாணசுந்தரம் ஈடுபாடு காட்டினார். நாடகம் திரைப்படம் பார்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். கற்பனை ஆற்றலும் இயற்கை ரசனையும் கல்யாணசுந்தரத்தை இயல்பாகவே கவிதை புனைய வைத்தன. 1946 இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.
'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன். அதுதான் இது.
ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே - கரை
தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள். பாடல் இலக்கணங்கள் அறியாத நேரம் அது. எல்லோரும் இரசித்ததிலிருந்து ஓகோ இப்படித்தான் பாடல் எழுத வேண்டும் போலிருக்கிறது என்று சிந்தித்த நான் அன்று முதல் சுவையான நிகழ்ச்சிகள், பறவை இனங்கள், அழகிய காட்சிகள், அறிஞர்கள், மடையர்கள் இன்னும் மாடுகள், ஆடுகள், நாய்கள் எல்லாவற்றையும் பற்றி வேடிக்கையாகப் பாடுவதுண்டு''
இவ்வாறு தனது ஆரம்ப காலபாடல் இயற்றும் பின்புலத்தை அவரை கூறியுள்ளார். தான் வாழ்ந்த காலத்து சமுதாயத்து மக்களின் போக்குகளைக் கூர்மையாக அவதானித்தார்.
திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையும் சீர்திருத்தக் கருத்துக்களும் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தன. இதன் தாக்கம் பல்வேறு இளந்தலைமுறையினரையும் பாதித்தது. பட்டுக்கோட்டையில் மிகத்தீவிரமாக பகுத்தறிவுக் கொள்கை பரவிக் கொண்டிருந்தது. இந்தத் தாக்கம் கல்யாணசுந்தரத்தையும் பாதித்தது. அவரது சிந்தனையும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் சாதி மதபேத உணர்வுகளுக்கு எதிராகவும் திரட்சி பெற்றது. அவரது பாடல்கள் சமுதாய சீர்திருத்தம் வேண்டி மக்கள் எழுச்சிப் பாடல்களாக மலர்ந்தன.
பட்டுக்கோட்டைமண், கம்யூனிச கட்சியினரால் செல்வாக்கு மிக்க பிரதேசமாக மாறியது. பல்வேறு போராட்டங்கள் இங்கு வெடித்தன. கல்யாணசுந்தரத்தின் ஆளுமையும் கவிப்புலமையும் மேலும் மேலும் புத்துணர்வு பெற்றது. மக்களிடையே செல்வாக்குமிக்க கவிஞராக அடையாளம் காணப்பட்டார்.
திரைப்படத்துறையில் திறமையைக் காட்ட கல்யாணசுந்தரமும் அவரது அண்ணனும் சென்னை சென்றார்கள். ஆனால் அவர்களால் அங்கு தாக்குப் பிடிக்கமுடியவில்லை. ஊர் திரும்பினார்கள். திரைப்பட ஆர்வம் கவிஞரை விட்டுவிலகவில்லை. சிறிது காலம் சக்தி கிருஷ்ணசாமி நாடகக்குழுவில் சேர்ந்து கொண்டார். சில நாடகங்களில் நடித்தும் வந்தார்.
பாரதிதாசனோடு நட்பு ஏற்பட்டது. பலமுறை இருவரும் சந்தித்து உரையாடி வந்தனர். பாட்டுத்திறனை வளர்க்க பாரதிதாசன் துணையாக இருந்தார். திரைப்படத் துறைக்குள் நுழைவதற்குக்கூட உதவி செய்தார். 1950களில் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். முதன்முதலாக 'படித்த பெண்' (1951) என்னும் படத்திற்கு எழுதினார். ஆனால் முதலில் வெளிவந்த படம் 'மகேஸ்வரி'.
அக்காலத்தில் கவிஞர்கள் காமு.ஷெரீஃப், மருதகாசி போன்றவர்கள் பாடல் எழுதும் திரைப்படத்துறையில் பட்டுக்கோட்டையாரும் நுழைந்து தனக்கென்று தனி முத்திரையை பதித்தார்.
ஊனுருக ஏழைகளின்
உள்ளமெல்லாம் புண்ணாக
உயிரோடு கொல்பவனைக் - காம்
உயர்வாய் மதிக்குதடா - என்றும்
படம்: இரத்தினபுரி இளவரசி 1959
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா - நான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா
வெளியே படிக்க வேண்டியது நெறைய இருக்கும்
படிச்சிட்டு வாரேண்டா - சிலர்
படிக்க மறந்தது நெறைய இருக்குப்
படிச்சிட்டு வாரேண்டா
படம்: கண்திறந்தது, 1959
''நான் நாடகங்களுக்கென்றும் சினிமாவுக்கென்றும் எழுதியுள்ள பாடல்கள் அனைத்துமே ஒவ்வொரு காரணத்துடன் பிறந்ததாக இருக்கும். ஒரு சிறு சான்று: 'பனகல் பார்க்' என்று சென்னை தியாகராய நகரில் ஒரு பூங்கா உள்ளது. அதில் நான் சிந்தனை செய்வதற்கென்றே போய் உட்காருவேன். ஒருநாள் 'சக்கரவர்த்தி திருமகளில்' பாடல் ஒன்று எழுதத் கேட்டிருந்தபடியால் பொதுவாகவும் எல்லோரும் பாடலின் கருத்தில் அங்கம் வகிப்பவர்களாகவும் பாடல் அமைந்தால் நல்லது என்று நான் சிந்திக்கும்வேளையில் பூங்காவில் பேசிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர், 'அவன் குணம் அப்படி; இவன் குணம் இப்படி; அதுக்கு ஆரென்ன செய்யுறது' என்று அவர்களுக்குள் எழுந்த வார்த்தைகள் என் செவிகளில் விழவே 'ஆமாம் மனிதனின் குணம் எப்பொழுது மாறுகிறதுட. இருந்த குணம் எப்பொழுது பிரிந்து போகிறது. மீண்டும் மனிதனிடம் எப்போது சேருகிறது என்று ஆராய்ச்சி பண்ணியவாறே 'உமா பிக்சர்சு'க்கு சென்று மாடியில் அமர்ந்தேன். பூனை ஒன்று என் பக்கத்தில் நின்றது. உறங்குகையில் பானைகளை உருட்டுவது பூனைக்குணம் என்று தொகையறா ஒன்றை ஆரம்பித்தேன்.
உறங்குகையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்
வாழுதடா

பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது
படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957
இவ்வாறு கவிஞரின் பாடல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் நிகழ்வுகள் உண்டு. அவற்றை உள்வாங்கி அறிவுபூர்வமாக சிந்தனையைத் தொடுக்கும் வகையில் பாட்டு எழுதும் போக்கைத் தொடர்ந்து வந்தார். பாடலை தானே இசையுடன் பாட எத்தனிப்பார். பாடிப் பார்ப்பார். அப்போதுதான் பாடலின் முழுமையை தீர்மானமாக்குவார். கல்யாண சுந்தரம் முழுக்க முழுக்க இசைப்பாடல்களையே பாடியுள்ளார். இவரது பாடல்களில் இசையும் கவிதையும் ஒத்த சிறப்பு பெற்று கேட்பவர்களை உளக்கிளர்ச்சிக்குத் தூண்டும் சக்தி கொண்டவையாக உள்ளன.
ஒருமுறை இடதுசாரி சிந்தனையாளர்களான பா. ஜீவானந்தமும் கே. முத்தையாவும் கவிஞர் வீட்டில் சந்தித்தனர். அப்போது தான் எழுதிய புதிய பாடல் ஒன்றை படித்துக் காட்டினார். பாடும்பொழுது சில வரிகளை விட்டுவிட்டார். 'இடையில் இன்னும் சில வரிகள் இருக்கு கொஞ்சம் பொறுங்கோ' என்று கூறி வீட்டின் உள்ளே சென்றார். நோட்டுப் புத்தகத்தை எடுத்து வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். அவர் கையில் எடுத்து வந்தது தாம்பாளம்!.
கவிஞர் அதை வைத்துக் கொண்டு தாளம் போட ஆரம்பித்தார். சிறிது நேரம் தாம்பாளத்தில் தாளத்தை எழுப்பி அந்த இசையுடன் பாடலை மீண்டும் பாடினார். மறந்து போன வரிகள் நினைவுக்கு வந்தன. கவிஞர் உணர்ச்சிப் பெருக்குடன் தாளவேகத்தில் பாடலைப் பாடி முடித்தார்.
'தாளமும் இசையும் சேரும் போது கருத்தாழமிக்க அவரது கிராமிய இசைச் சொற்கள் கவிதைகளாகப் பிரவாகமெடுத்ததைக் காண முடிந்தது' என்று இந்த நிகழ்வைக் குறித்து கே. முத்தையா பதிவு செய்துள்ளார். ஆக கல்யாணசுந்தரத்தின் கவிதையும் இசையும் மக்கள் வாழ்வில் இருந்து பிறக்கும் உயிர்ப்புத்தன்மையுடன் கூடிய படைப்பு என்பது புலனாகிறது. அதுதான் கல்யாண சுந்தரத்தின் சிறப்பு. மக்கள் கவிஞருக்குரிய தகுதிக்கும் இலக்கணத்துக்கும் அவர் எழுதியுள்ள பாடல்கள் சான்று.
''எந்தப் புலவர் பேரவையும் எந்தப் பல்கலைக்கழகமும், எந்தத் தமிழ்த் தெய்வமும் பட்டுக்கோட்டைக்கு மக்கள் கவிஞர் என்று பட்டம் சூட்டவில்லை. மக்கள் மன்றமே அவருக்கு மக்கள் கவிஞர் என்ற பட்டத்தை மனமார வழங்கிற்று.''
பட்டுக்கோட்டை இயற்கை எய்திய ஓராண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக ப.ஜீவானந்தம் எழுதிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். பட்டுக்கோட்டையின் தனித்தன்மை என்ன என்பதைத் துல்லியப்படுத்தியிருக்கும் இவரது கட்டுரை, பட்டுக்கோட்டை பற்றிய மதிப்பீட்டுக்கும் ஆய்வுக்கும் வெளிச்சம் காட்டும் வயைில் உள்ளது. திரைக்கவிஞர் என்ற பொத்தாம் பொதுவான மதிப்பீட்டுக்கு அப்பால் கவிஞரின் ஆளுமைகளை சமூக அரசியல் பார்வைகளை விரிவாக நோக்குவதற்கான தர்க்க அறிவுப்பின்புலத்தையும் இந்தக் கட்டுரை கொடுத்தது.
கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும் ஆற்றலுக்கும் அவர் வாழ்ந்த ஆண்டுகள் மிகக் குறுகியது. (மறைவு: 8-10-1959) ஆனாலும் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது.
திரைப்படத்துறையினுள் நுழைந்தாலும் தனது தனித்தன்மை கெடாது திரைப்பட ஊடகத்துக்கும் கவிதைக்குமுள்ள தொடர்பின் தன்மையை தெளிவாகப் புரிந்து சாதனை நிகழ்த்திய ஓர் முன்னோடியாகவே தமிழில் வாழ்ந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவைப் போற்றும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்' ஒன்றை அமைத்து, அங்கு கல்யாணசுந்தரத்துக்கு மார்பளவு சிலை அமைத்துள்ளது. அம் மணிமண்டபத்தினுள், அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள்  கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment