Tuesday, September 13, 2011

அவளும் சுதந்திரமும்... (விகடினில் வெளியான எனது சிறுகதை)


"இவங்க என் அம்மா"  என்று என் மகள் அர்ச்சனா, ரமேஷிடம் என்னை அறிமுகப்படுத்த, 'வணக்கம்' என்றேன். அவர் புன்னகைத்தார். 

எனக்கு அவரின் அந்த புன்னகை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அந்த உண்மை எனக்குள் பதிந்து எனது வெளிப்படுத்தாத பட்டியலில் வழக்கம்போல் மௌனமாக சென்றுசேர்ந்தது. 

"பெண்களும் சுதந்திரமும்" என்ற தலைப்பில் கல்லூரியின் பேச்சுப் போட்டியில் பேசி வெற்றி பெற்றவள் நானே இப்படி என்றால்..!

இன்னொரு பெண்ணோடு என் கணவருக்கு தொடர்பிருந்ததை அறிந்ததும், என்னை பார்க்கையில் அவருக்கு அவளைத் தான் ஞாபகம் வருகிறதென்று பலமுறை என்னிடம் சொன்ன பிறகும் நான் வேறென்ன செய்ய? 

அந்த நல்லவனுக்கு நிரந்தர சுதந்திரம் கொடுத்தேன். நல்லவேளை எனக்கு அரசு வேலை இருந்தது. ஆனால் என் மீது அனுதாபம் காட்டின சமூகம் என்னை ஆணவக்காரி என்று சொல்லாமல் விட்டதா? இல்லையே! 

மகளின் மீதுள்ள பாசத்தால் மறுமணமத்தை தவிர்த்த பல லட்சங்களில் நானும் ஒருத்தி. உணர்ச்சிகள் வெல்லும்போது அறிவை தோற்கடிக்கக் கூடாது என்ற கொள்கையை இறுதிவரை கடைபிடிக்க உறுதி எடுத்தவள் தான் நான்! 

என்றாலும், என்னையே நான் கரைத்து வருகிறேனோ என்று அவ்வப்போது என் மனதின் கேள்விக்கு பதிலின்றி நான் தவிக்கிறேன். எந்தன் இதயத்தின் கனத்த பாரம் கண்ணீராய் பரிணமிப்பதை என்னால் தடுக்க இயல்வதில்லை!

காலையில் சந்தித்த ரமேஷின் புன்னகை மனதில் ஒரு மின்னலைக் கொண்டு வந்தது. 

"அர்ச்சனா..! ஜயந்தியின் அப்பா ரமேஷ் என்ன செய்கிறார்? டாக்டரா? சீரியல் நடிகரா?"

"அம்மா, அவங்க அப்பா நல்ல அப்பா!" 

"அது சரி, அவருக்கு என்ன வேலைன்னு கேட்டேன். பி.ஏ படிக்கிறாயே, கேள்விக்கு சரியான பதில் சொல்லத் தெரியலையே," என்று சிரித்தேன். 

உடனே அர்ச்சனா, "அம்மா, அவர் ஒரு வக்கீல். ஆனால் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்". 

"ஆமாம் அர்ச்சனா, வக்கீல்களும் மருத்துவர்களும் சந்தோஷமானவர்களை சந்திப்பது மிகவும் குறைவு." 

ஆறு வருடங்களுக்கு முன்னர் இந்த வக்கீலை நான் சந்தித்திருப்பின் இவர் மூலமாகவே அந்த கடைசி கையெழுத்திட்டுருப்பேன் என்றதென் மனம். 

அப்போது ஜயந்தியின் அலைபேசி அழைப்பு.. "அர்ச்சனா இருக்காளா" என்றதொரு இனிமையான சத்தம். 

"அர்ச்சனாவை அழைக்கிறேன், சரி.. உங்க அம்மாவை எனக்கு அறிமுகப்படுத்தமாட்டாயா? அவங்க கிட்ட கொடும்மா ஜயந்தி!" 

"ஐயோ.. அம்மாவும் அப்பாவும் ஒரே சண்டை என்றும் போல் இன்றும்.." என்று ஒரு கவலையுமின்றி ஜயந்தி சாதாரணமாக சொன்னதை கேட்டு ஏனோ எனது மனதில் நிறைந்தது, கவலையின் இருண்ட மேகங்கள்.

இந்த நல்ல மனிதருக்கா!?

நல்ல பெண்ணுக்கு நல்ல ஒருவன் கணவனாக அமைவதும், நல்லவனுக்கு அன்பான மனைவி அமைவதும் மிகவும் அபூர்வம் என்றே தோன்றுகிறது. வித்தியசமான இருவரை இணைக்க இறைவன் ஆசைப்படுகிறாரோ? சரிப்படவில்லை என்றால் எவ்வளவு காலம் தான் தாம்பத்திய நாடகம் தொடர முடியும்? இருப்பினும் தற்கொலையை விட விவாகரத்து மேல்! 

அது சரி தான் என்றாலும், சமூகத்தில் விவாகரத்துக்கு பின்னர் நேரிட வேண்டின கொடுமையைப் பட்டியலிட்டால், அதை பத்து நாளானால் கூட சொல்லித் தீர்க்க முடியாது. விதவை என்றால் கூட ஓர் அனுதாபமாவது கிடைத்திருக்கும். என் தாய் தந்தையரின் தாம்பத்தியத்தில், ஆரம்பம் முதல், அவர்கள் வாழ்ந்த காலத்தின் முடிவு வரை, அவர்களில் இருந்த உண்மையான அன்பும் மனம் கனிந்த மன்னிப்பும் எவ்வளவு சிறப்பானது!

ஆண்களுக்கு ஆதரவாக இயற்கையும் இருக்கிறதே! 

பெண்களுக்கென்ற கஷ்டங்கள் இனி இல்லை என்ற காலத்தில் இந்த பூமி சுற்றுவதை அதிர்ச்சியுடன் ஒருவேளை நிறுத்திவிடுக்கூடும்.

இல்லை... இல்லை..! எனது முடிவில் தவறில்லை, பத்து வருடங்களுக்கு முன்னர் நான் எடுத்த விவாகரத்து முடிவு சரி தான்! 

எங்கிருந்து எனக்கு தைரியம் வந்ததோ... அன்று காலை நேரடியாக ரமேஷைக் காண அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன். 

"உங்களிடம் பேச வேண்டும்" என்றேன். 

என் கதையை கவலையோடு... அதிர்ச்சி, அனுதாபப் பார்வை ஏதுமில்லாமலும் பொறுமையுடன் கேட்டார்.

"ஏன் ஜயந்தியின் அம்மா, அது தான் உங்கள் மனைவி, தினமும் உங்களோடு சண்டை" என்ற கேள்வியை நான் கேட்டு முடிவதற்குள், "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாரங்கள், கவலைகள்" என்றார் ரமேஷ். 

அவர் மனதின் கவலையை அழிக்க முயறிசித்தது அவரின் புன்னகை.

"மற்றவர்களை தனது அதிகாரத்தால் மிரட்டி அடக்கியாளும் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை நான் திருமணத்துக்கு தேர்வு செய்தது, இல்லையில்லை... அவர்களின் தேர்ந்தெடுப்புக்கு எனது விருப்பம் தெரிவித்தது எனது தவறு தானே? வருடங்கள் இருபது முடிந்தும் மாற்றங்கள் ஏதுமில்லை. எப்படி வரும்? என் மனைவி வளர்ந்த சூழ்நிலைக்கேற்றபடி அவர்கள் உள்ளார்கள், அவ்வளவு தான்! ஆப்பிளின் விதை விதைத்தால் மாங்கனி கிடைக்காதே? ஏதோ ஒரு விபத்தில் கிடைத்த பாக்கியமாக எங்களுக்கு ஜயந்தி! 

இத்தனை வருடங்களில் இதெல்லாம் பழகிப்போயிற்று. நான் ஒரு சுதந்திரனாக இருப்பதும் தவறு தான் போலுள்ளது. கோடி ரூபாய் கொடுத்தால் கூட ஓர் அடிமையின் வேடமிட்டு நடிக்க என் மனம் சம்மதிக்காது. ஆனால், வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவனுக்கு மன நிம்மதி நிச்சயம் இருக்காது என்று தான் நினைக்கிறேன். எனக்கு மனநிம்மதி இல்லை என்பதை இனி எத்தனை காலம் தான் மறைத்து இப்படி சிரிப்பது என்றும் புரியவில்லை." என்று ரமேஷ் சொல்ல... 

நான்... "எல்லாவற்றுக்கும் ஆண்களை திட்டித் தள்ளும் அர்த்தமற்ற ஓர் பெண்ணியத்தில் எனக்கு ஈடுபாடில்லை. ஆண்களும் பெண்களும் சேர்ந்தது தானே இந்த உலகம்? நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கு தான் இல்லை? சரி, நல்லவர்கள் - கெட்டவர்கள் என்ற இந்த தலைப்பிற்கே எத்தனை முரண்பாடுகள்? இதற்கு என்ன அடிப்படைகள்? 

ஒரு மனிதனை, அவனுடைய செயல்களை சரி என்றும் தவறென்றும் தீர்மானிப்பது ஒவ்வொரு சமூகத்தின் வித்தியாசமான கட்டமைப்புகளும், மரபுகளும், சூழ்நிலைகளும் தான் எனினினும், பொதுவாக எனது சமூகத்தைப் பார்த்து நான் என்ன சொல்வேன் என்னெவென்றால், ஓரளவுக்கு மனிதமும் புரிதலும் இருப்பின் நல்லவன் அல்லது நல்லவள் என்ற அந்தஸ்தை கொடுக்கலாம். 

சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் வழியே பெண்கள் ஆண்களை வேட்டையாடுவது நிறுத்த வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இப்படி இவர்கள் செய்வது தவறு தான். ஆனால், இது போன்ற சட்டங்கள் கூட இல்லை என்றால் பெண்களின் நிலை?! 

அடிமைப்படுத்தும் மனநிலையோடு வாழும் கணவனும் மனைவியும் குற்றவாளிகளே. இருப்பினும் அதிகமாக பாதிப்பது பெண்கள் தான் என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் சட்டம் பெண்களுக்கு மட்டுமே அதிகமும் சாதகமாக இருப்பதும் என்னை யோசிக்க வைக்கிறது" - என்றேன். 

ரமேஷுக்கு என்னையும் எனது கருத்துக்களையும் பிடித்திருந்தது என்று புரிந்தது.

"ரமேஷ், இன்று மாலை என் வீட்டுக்கு வாங்க," என்று அழைத்தேன்.   அப்படி அழைக்க எனக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ...?

மல்லிகை பூக்களோடும் மகளுக்கு இனிப்புகளோடும் அன்று மாலையில் என் வீட்டுக்கு வந்தார் ரமேஷ். 

"வாங்க" எனறு புன்னகை வணக்கமிட்டு வரவேற்றேன். 

பெண் பார்க்க வரும் ஒருவரின் வெட்கம் போலெல்லாம் விவேகமற்ற சிந்தனையொன்று அவருக்கும் இல்லை, எனக்கும் இல்லை. சகஜமாக அருகருகே அமர்ந்தோம். 

பேசினோம். பேசினோம், பேசிக்கொண்டே இருந்தோம். 

டியூஷன் முடித்த பின்னர் எங்களோடு சேர்ந்து அர்ச்சனாவும் பேசிக்கொண்டிருந்தாள். 

"பிறகு சந்திப்போம்," என்று சொல்லி புறப்பட்டார் ரமேஷ்!

"தன்னை நேசிக்க ஓர் அன்பு மனம்; சென்று சேர ஓர் அன்பின் இல்லம்; கொஞ்சம் ஆசைகள்... இவைகள் இருப்பின் நான் வாழ்ந்திருப்பேன்"  என்றெழுதி இறந்துபோனார் ஓர் எழுத்தாளர் என்று காலையில் வாசித்த செய்தி ஞாபகத்திற்கு வந்தது. 

அந்த எழுத்தாளர் எவ்வளவு முட்டாளென்று அன்றிரவு நினைக்கையில் நான் வானத்தை பார்த்தேன். இரண்டு நட்சத்திரங்கள் அருகருகே இருந்தது.  அந்த இனிய காட்சியைக் கண்டதும்...

எனக்கு உன்னைத் தெரியாது
உனக்கு என்னையும் - ஆனால்
நமது கவலைகள் தங்கள் வலிகளை
நட்சத்திரங்களாய் அதோ
பகிர்ந்து கொண்டிருக்கின்றன... 

என்று காகிதம் ஒன்றில் நான் எழுதினதை, இல்லை - கிறுக்கினதை ரமேஷின் பார்வைக்கு நாளை மாலையில் சமர்ப்பணம் செய்ய காத்திருந்தது விடியலுக்கு காத்திருந்த பறவையைப் போல் என்னுள்ளம்!

சதை சார்ந்த ஈர்ப்பு அல்ல. மனம் சார்ந்த நேசம், நட்பு தான் எனினும் ரமேஷின் வீட்டுக்கு நான் ஏன் செல்ல தயங்குகிறேன்? ரமேஷ் என் வீடு வர நான் ஏன் எதிர்பார்க்கிறேன்? ஜயந்தியின் அம்மா எனது சுதந்திரத்துக்கு தடையா? அல்லது அவர்களுடைய வாழ்க்கையின் சுதந்திரத்துக்கு நான் தான் தடையா? ஒரு பெண்ணின் சுதந்திரத்துக்கு அதிகமும் தடை இன்னொரு பெண் தானோ? அல்லது அவளே தானோ? என்னிலிருந்து என் சமுதாயம் துவங்கிட நான் மாறாமல் இந்த சமூகத்தை சாடுவதில் என்ன பயன்? விடைகளைத் தேடி எனது வாழ்க்கையில் தான் இப்படி எத்தனை கேள்விகள்!

அத்தனைக் கேள்விகளும் என்னை சுற்றியிருக்க, ஓடி என்னருகே வந்து அர்ச்சனா சொன்னாள், "அம்மா, நாளை கல்லூரியில் ஒரு பேச்சுப்போட்டி...

No comments:

Post a Comment