Monday, September 12, 2011

தோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்






http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQP3Q4WbrSlB5McpH899iqFAztSFp1rNWzCcWPvtYz7w-VFBf0N

அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த கட்டுரையிலும்  அடுத்து வரும் மூன்று கட்டுரைகளிலும் உள்ள - மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

பல வருடங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று , அங்கேயே குடியுரிமை பெற்று தங்கிவிட்ட எனக்கு மிகவும் வேண்டப்பட்ட நண்பர் ஒருவர், கும்பகோணத்திற்கு செல்ல விருப்பப் பட்டதால், சில நாட்களுக்கு முன்பு சென்று வந்தோம். அங்கு இருந்தபடியே , இணைய தளத்தில் அவர் திரட்டி இருந்த தகவல்களின் மின்னஞ்சலை எனக்கு அனுப்பி இருந்தார். நம் வாசகர்களுக்கும் அது பயன் தரும் என்பதால் , அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம , கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்...

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து , மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.

இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்தி என்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் -  நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும். ஹோரைகள் பற்றி , நவ கிரகங்களுக்கு உரிய தேவதைகள் பற்றிய நமது முந்தைய கட்டுரையை , ஒரு முறை சரி பார்த்து , அதன்படி நடக்கவும்...

நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை , குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான்.  இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும்,  அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!

மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் "
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம். 

புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை "
 

புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில். 
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 



கடன் தொல்லைகள் தீர்க்கும் " திருச்சேறை ருண விமோச்சனர்    "

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருண விமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் " சூலினி, பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர் "
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11 வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்"
காசிக்கு இணையான தலம் இந்த ஸ்ரீவாஞ்சியம். காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால், இத் தலத்திலோ புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே சிலையில் காட்சி தரும் இத் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், மங்களநாயகியையும், மஹாலஷ்மியையும் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர், பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர். கால சர்ப்ப தோஷம் நீக்கும், பாவங்கள் தீர்த்து முக்தி அருளும் இது சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த திருத்தலம்.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும் வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் "
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் "
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" 

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்

மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

 

நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்

காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்

கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்

கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள்

ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி

மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்

குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்

விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன்


Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_8283.html#ixzz1XkS6ohPh

No comments:

Post a Comment