Monday, August 22, 2011

LOVE

 ஏன் நமக்கு இந்த பிறவி என்பதை தேடி உணர்வது ஒவ்வொரு ஆத்மாவின் கடமை. அதே சமயத்தில் , கடவுளை தேடுகிறேன் , தன்னைத் தேடுகிறேன் பேர்வழி என்று வாழும் கால கட்டத்தில் , சக உறவுகளை மதிக்க தவறி விடாதீர்கள். உறவுகளை நேசியுங்கள்.
உங்கள் வீட்டில் , ஒரு சின்னத் தொட்டியிலாவது - ஒரு சிறிய பூஞ் செடியோ, துளசி செடியோ வளர்த்து வாருங்கள். உங்கள் கையால் தண்ணீர் ஊற்றி வாருங்கள். அந்த செடி வளர , வளர உங்கள் மனதிலும் ஒரு மகிழ்ச்சி , நிம்மதி பரவும். எதோ சந்தர்ப்ப சூழ்நிலையில், நீங்கள் தண்ணீர் ஊற்ற முடியாத நிலை வரும்போது , அந்த செடி வாடி நிற்கும்போது - உங்கள் மனதில் ஒரு சின்ன வலி , வேதனை வரும் பாருங்கள் !

ஒரு செடிக்கே அப்படி இருக்கும்போது.. உங்களை வளர்த்தவர்களை , அல்லது நீங்கள் வளர்த்தவர்களை - காயப்படுத்தும்போது, கோபத்தில் குதிக்கும்போது  , வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்போது, அவர்களை குத்திக் கிழிப்பதை நாம்  உணர்வதில்லை.நாம சொல்றதுதான் எப்பவுமே சரியாம். அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாதாம்..!

 கல்யாணம் செய்து ஆரம்ப காலத்தில் இருக்கும் நேசம், சில வருடங்கள் கழித்து - அதே அளவு (?)  இருந்த போதும், அதை வெளிப்படுத்த முடியாமல் , எதோ ஈகோ தடுக்கிறது. முதல் இரண்டு வருடங்களில் நீங்கள் பாசத்துடன் எத்தனை முத்தம் கொதித்து இருப்பீர்கள் , மீதி இருக்கும் அம்பது வருடங்களில் அதில் பாதி கூட கொடுப்பீர்களோ ? என்னவோ ? ஏன்..? அது ஒரு முக்கியமான விஷயமா , நமக்குத் தோணுவதில்லை. அவங்களுக்கும் தோணாதுன்னு  நாமளே , அவங்க சார்பாகவும், முடிவெடுத்து விடுவதுதான் இதில் கொடுமை.
எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்க பாஸ். கல்யாணம் ஆகியிருந்தா , உங்க குடும்பத்தோட.. இன்னும் கல்யாணம் ஆகலையா, அப்பா அம்மாவோட -. ஒரு  ரெண்டு நாள் ... சந்தோசமா , பொழுதைக் கழிச்சிட்டு வாங்க. உங்கள் பார்வையிலும், சொல்லிலும் செயலிலும் அன்பு பொங்கி வழியட்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த சந்தோசத்தை அனுபவியுங்கள். மாதம் அல்லது   இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது இது இருக்கட்டும்.

 அடுத்த நொடி என்ன நடக்கும்னு , யாருக்குமே தெரியாது . கிடைக்கிற ஒவ்வொரு நிமிஷமும் சந்தோசமா இருக்க ட்ரை பண்ணுவோம்..

 திரு. ராம் சுரேஷ் அவர்கள் எழுதியுள்ள கல்யாணச் சாவு கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். வளைகுடா நாடுகளில் பணியில் இருப்பவர். படித்து முடித்ததும், மனதளவில் உங்களில் ஒரு மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடன், பகிர்ந்து கொள்கிறேன்...
====================================================


சந்தோஷம் என்பதை இருக்கும்போது உணர முடியாது என்று ஒரு வசனம்..
எவ்வளவு விஷயங்களை taken for granted ஆக எடுத்துக்கொண்டிருக்கிறேன்..
வெளியூரில் இருக்கையில் வெள்ளிக்கிழமை சம்பிரதாய ஃபோன் காலில் சக்கரை அளவு எண்களை (Sugar level)  மட்டும் கேட்டுக்கொண்டு " பார்த்துக்கோம்மா" வுடன் விட்ட நாட்கள்.
ஊரில் இருக்கையில், நண்பர்களைப் பார்க்க, அரட்டை அடிக்க, ஊர்சுற்ற என்ற நேரம் ஒதுக்கி சாய்வு நாற்காலியைப்பற்றிச் சிந்திக்காமல் விட்ட நாட்கள்..
7 மணிக்கு எழுந்தாலும் தூக்கம் வராமல் நாலரைக்கே எழுந்தாலும் சூடான காபிக்காக அவளை உருட்டிய நாட்கள்..
எனக்குப் பிடித்த கறிகாய் சமைத்து சாப்பிடும்போது முகத்தையே பார்க்கும்போது, எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்தும் "சச்சின் அந்த ஷாட் ஆடியிருக்கக்கூடாது" என்று அவள் anxiety ஐ அதிகப்படுத்திய நாட்கள்..
தொடர்களின் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டவளைத் தொடரின் தரத்துக்காகக் கிண்டல் அடித்த நாட்கள்..
வெளியூரின் மழை குளிரிலும் மேடு பள்ளங்களிலும் எங்கள் மகிழ்ச்சிக்காக உடன் வந்தவளின் உபாதைகளைச் சிந்திக்காமல் கும்மாளம் போட்டு வேகமாக வரச் சொன்ன நாட்கள்..
சில்லறை ஆசைகளை அலட்சியப்படுத்தி உனக்கென்ன தெரியும் என் priorities என்று எடுத்தெரிந்து பேசிய நாட்கள்..
நினைவின் அடியாழத்து வறுமை நாட்களில் உணவுப்பங்கீட்டில் தன்னைத் துறந்தும் மற்றோர் சாப்பிடாததற்கு எரிந்து விழுந்த நாட்கள்..
எல்லா நாட்களும் மறந்து..
பால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க..
பேரன் பேத்தி எல்லாம் பாத்துட்டுதானே போயிருக்கா.. கல்யாணச்சாவுதான் என்றவர்க்கு எப்படிச் சொல்வேன் இத்தனை விஷயங்களும்?


Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_22.html#ixzz1VkMjX6sv

No comments:

Post a Comment