Tuesday, August 30, 2011

உபதேசம்


ஒரு ஓவியக் கண்காட்சி. மாடர்ன் ஆர்ட். ஓவியம் வரைஞ்சவர் ஒரு இடத்திலே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தார். படங்கள் எல்லாம் பார்த்துட்டு , வந்த ஒருத்தர் - அவரை பார்த்து,  "சார் , பிரமாதம் சார்.. அப்படியே தத்ரூபமா வரைஞ்சு இருக்கிறீங்க.. பார்த்ததுமே அப்படியே நாக்குலே தண்ணி ஊறிடுச்சு.. கிரேட் சார்..." னு கைகொடுத்து இருக்கார்.. இவருக்கு ஒண்ணுமே புரியலை..ரொம்ப சந்தோசம் சார்.. எப்படி பீல் பண்ணுறீங்க? விட்டா அப்படியே பிச்சு தின்னுடுவேன்.. ஆம்லெட்டை இப்படி ஒருத்தர் வரைஞ்சு நான் பார்த்ததே இல்லை. நம்ம ஓவியரு , மனுஷன் நொந்து நூலாகிட்டார்.. அவர் வரைஞ்சு இருந்தது, சூரிய உதய காட்சி.. 

 இந்த மாதிரி , வாழ்க்கையை நம்ம கண்ணோட்டத்திலே பார்க்கும்போது - ஒரு ஆங்கிள் லே தெரியுது. ஆனா, அடிப்படை வேற ஒன்னா இருந்து தொலையிது..
கல்யாணம் முடியாம கஷ்டப்படுறவங்களுக்கு , கடவுள் ஏன்தான் இப்படி சோதிக்கிறாரோனு கவலை. முடிஞ்சவங்களுக்கு , ச்சே , கடவுள்  நம்மளை இப்படி சோதிச்சுப்புட்டாரேனு  கவலை.

குடும்ப தலைவன், திறமையா , நல்லா சம்பாதிக்க தெரிஞ்சவனா , ஆரோக்கியமா , குடும்பத்து மேல அக்கறையா இருந்தா - போதும் அவன் தலைவனா இருக்கலாம். இல்லை, டப்பா டான்ஸ் ஆடிடும் வீட்டுல. ஆனா எத்தனை பேரால அப்படி இருக்க முடியுது?

இன்னைக்கு நாம பார்க்கப் போறது , ஆரோக்கியம் பத்தி கொஞ்சம்....

 எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். வாழ்க்கையில நீங்க கொஞ்சம் தாமதமாக தெரிஞ்சு கிட்ட விஷயம் எதுன்னு சொல்ல முடியுமா சார்னு கேள்வி. ஆயில் புல்லிங் னு ஒரு
 விஷயம் சார். நல்லெண்ணெய் கொஞ்சம் வாயில் விட்டு , சிறிது நிமிடம் வைச்சு , வாய் கொப்பளிக்கிறது. காலைலேயும், இரவு தூங்கும் முன்பும். அற்புதமான ஒரு அனுபவம் சார். கண்ணுக்கு அவ்வளவு நல்லது. ஒரு மாசம் பண்ணினதுக்கே , அவ்வளவு திருப்தியா இருக்கு. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலே ஆரம்பிச்சு இருந்தா எவ்வளவோ , நல்லா இருந்து இருக்கும்ங்கிறார்.

 இதயம் கம்பெனி, ஜோதிகா படம் போட்டு வருஷக் கணக்கா இதை சொல்லிக் கிட்டு இருக்கு... நாமளும் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்ப்போமா?

 ஆறு மணி நேரம் தூங்குகிறவன் ஆம்பிளை, ஏழு மணி நேரம் தூங்கினா பொம்பளை எட்டு மணி, நேரம் தூங்கினா முட்டாள் என்று சொல்வாங்க, கேள்விப்பட்டு இருக்கீங்களா..?  அதெல்லாம் , நமக்கு கொஞ்சமாவது ரோஷம் வரட்டும் , சீக்கிரம் தூங்கி எழுந்துக்கட்டும்னு நம்ம வீட்ல, எங்க கிராமத்துல சொல்ற விஷயங்கள். எஹே.. ஹே , தூக்கம்ங்கிறது பெரிய வரம். உனக்கு கிடைக்கலைனா, பெருசு,, என்ன ஏன் பாடா படுத்துறேனு நெனைச்சு இருப்போம்..  இல்லையா, மேலே படிங்க...

இன்னைக்கு நாம எல்லாம், பயங்கரமான ஒரு காஸ்மோ பாலிட்டன் கல்ச்சர்ல இருக்கோம். நகரம் / மாநகரம் என்று பெரிய , பெரிய கம்பெனிகளில் வேலை பார்க்கும், மெத்தப் படித்தவர்கள் , கைநிறைய சம்பளம் வாங்குபவர்கள் என்று இருப்பவர்கள் அனைவரும், குடிப்பழக்கம் உள்ளவர்கள் தான். தன் உடல் நலம், குடும்ப நலம் என்று எதிலும் அக்கறை இல்லை. பனிரெண்டு மணிநேரம் , கம்பெனியில் வேலை - வொர்க் ஆல்ககாலிக் என்ற ஒரு போர்வை - வரும் வழியில் அல்லது வீட்டிலேயே என்று ஒரு உற்சாக பானம் அருந்தி , மிதமான ஒரு போதையில் தான் தூங்குகிறார்கள். இது கொஞ்சம் நல்ல நிலையில், சம்பாதிப்பவர்களுக்கு. (வீட்டுல சரக்கு அடிக்க ஆரம்பிச்சுட்டா , அது ஹை கிளாஸ் பேமிலியாம்ல ... ஆமாவா? ) . மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு இதை வைச்சுத்தான் ரொம்ப பேரு சொல்றாங்க..

சம்பளம் கம்மியாக சம்பாதிப்பவர்களுக்கு , அதுவே ஒரு காரணமாகி விடுகிறது. கடன் தொல்லை, கடனை அடைக்க கடன் இப்படி நிறைய காரணங்கள். இளைஞர்களுக்கு, காலேஜ் பசங்களுக்கு இருக்கவே இருக்கு - மச்சி , அவ என்னை ஏமாத்திட்டாடா.. டயலாக்கு. தினமும் இவர்களுக்கு இது பழக்கம் ஆகி விடுகிறது. காலம் எவ்வளவு வேகமாக மாறிவிடுகிறது பாருங்கள்.

 நான் சின்னப் பையனாக இருந்த காலத்தில் எல்லாம் எங்கள் ஊரில் குடிப்பவர்கள் வெறுமனே அஞ்சு / ஆறு பேர்தான். ஏதாவது விசேஷம் , கடா வெட்டுன்னு இருந்தா , ஊரு பெருசுங்க , வாத்தியாரு எல்லாம் - ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கி, ஒரு ஆறு பேர் சாப்பிடுவாங்க. ஒரு பெக்குக்கு ஆட்டம் போட்ட வாத்தியார், இன்னைக்கு தினம் ஒரு ஹாப் சாப்பிடுறாராம். காலையில் கடை திறக்குறதுக்கு முன்னே, ஏக்கத்தோட ஒரு பத்து பேராவது அங்கே நிக்கிறாங்க. 


இன்னைக்கு ஊரில் பாதிப் பேரு தினமும் குடிக்கிறவங்க தான். எதுக்கு குடிக்கிறோம்னு இப்போ இவங்களுக்கு காரணம் கூட தெரியாது. இதுல மாப்ள , நான் ரொம்ப ஸ்டெடி னு  சொல்லிக்கிட்டு வண்டி ஓட்டுறாங்க.


 என் கிளாஸ்மேட் பொண்ணு ஒருத்தி , கலயாணமான மூன்றே வருஷத்தில் கைம்பெண் ஆகிவிட்டார். நல்லா வசதியான வீட்டில் தான் கட்டிக் கொடுத்தார்கள். சென்னையில் சிவில் இன்ஜினியரிங் முடித்த மாப்பிள்ளை . சந்தோஷ மிகுதியில் ஒரு இரவு வேளை - பைக்கில் ரோட்டுக்குப் பதில் , ரோடு டிவைடர் மேல் பயணிக்க , ஸ்பாட்டிலேயே மரணம். இருபத்தி இரண்டு வயதில் இன்பமயமாக தொடங்கிய தாம்பத்யம், ஒரே நாள் சூறாவளியில் சின்னா பின்னமாகி விட்டது. ஒரு வயது கைக்குழந்தை. அது என்ன பாவம் செய்தது?  இவர்கள் இருவரின் எதிர் காலத்திற்கு யார் பதில் சொல்ல ? குடி குடியைக் கெடுக்கும் என்று சொன்னவன் மடையன்தான் , அது உங்கள் சொந்த வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்தும்வரை. இதே மாதிரி நிதானம் இழந்து , நம் வாழ்வில் எத்தனை முடிவுகள்... இன்னும் இது தொடரணுமா?

விதி என்று சொன்னாலும், மரணம் யாருக்கும் எந்த நொடியிலும் ஏற்படும் என்றாலும்,  கொஞ்சம் கொஞ்சமாக தற்கொலை பண்ணிக் கொள்ளும் இது போன்ற பழக்கங்களுக்கு மெத்தப் படித்த மேதாவிகளும் பலிகடா ஆவதுதான் கொடுமை.

அது போக , எல்லா தமிழ் படத்துலேயும்,   இப்போ ஹீரோ - தண்ணி யடிக்காம இருக்கிறதே இல்லை. குழந்தைகளுக்கு அந்த காட்சிகள் எல்லாம் , ஒரு சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. அவங்க தலைமுறையிலே இன்னும் எப்படி இருக்குமோ.. தெரியாது .

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுதான் நமக்கு கைவந்த கலையாயிற்றே.
 எட்டு மணி நேரம் தூங்குகிறவன் எப்படி முட்டாளாவான் என்று அடிக்கடி யோசிப்பேன்.எட்டு மணி நேரத் தூக்கம் என்பது சராசரி வாழும் வயது (70) பிரகாரம் இருபத்தி மூன்று வருஷம். வாழ்க்கையில் இருபத்தி மூன்று வருஷங்களை தூங்கி கழித்தால் எத்தனையோ வாய்ப்புகளை நழுவ விட்டு விடுவோம் என்கிற அர்த்தத்தில் இருக்கலாம். குடிக்கிறவங்களுக்கு இன்னும் ஒரு பத்து வருஷம் அதிகமாகும்.
ஆனால் தூக்கத்தை விஞ்ஞான கண் கொண்டு பார்த்தால் வேறு விதமான அர்த்தங்களைச் சொல்லலாம். தூங்குகிறவர்கள் எப்படி சுவாசிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா?
நீண்ட உள்ளிழுப்பு, சிறிது இடைவெளி, அப்புறம் நீண்ட வெளிவிடுதல். ஒவ்வொரு சைக்கிளும் இருபத்தைந்து செகண்டாவது எடுக்கும். இப்படிப்பட்ட சுவாசம் என்ன நன்மையைத் தருகிறது? காற்றில் இருக்கும் பிராண வாயுவை முழுசாக உடம்பு எடுத்துக் கொள்கிறது. மூளையின் செல்கள் ரீஜெனரெட் ஆக இந்த பிராணவாயு உதவுகிறது.இது மாதிரித் தூக்கம் நாலு மணி நேரம் தூங்கினால் போதும்.
ஆனால் ஏன் எட்டு மணி நேரம் தூங்கினாலும் அலாரத்தை அமர்த்திவிட்டு  புரண்டு படுத்து தூங்குகிறோம்?
இரண்டு காரணங்கள்.
ஒன்று, பகலை விட இரவு நேரங்களில் பிராணவாயு குறைவாக இருக்கிறது. ஏனென்றால் தாவரங்கள் இரவில் பிராண வாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை அதிக அளவில் வெளியிடுகின்றன.
இரண்டாவது, நமது தேசிய பறவை கொசுவுக்கு பயந்து எல்லா ஜன்னல்களையும் இறுக்கமாக மூடி விட்டுத் தூங்குகிறோம். அறையில் இருக்கிற பிராண வாயு இரண்டு மணி நேரத்தில் காலியாகி அதற்கப்புறம் கரியமில வாயுவைத்தான் சுவாசிக்கிறோம்.
விடிகாலை நேரத்தில் ஓசோன் அதிகமாக இருப்பதால் ராத்திரி கிடைக்காத பிராணவாயு விடிகாலையில் அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் சுகமாகத் தூக்கம் வருகிறது.  விடிகாலை எழுந்து , வேர்க்க விறுவிறுக்க உடற் பயிற்சி செய்பவர்கள் , நமக்கு மட்டும் தெரிவதே இல்லை ..
சரி, அப்படியானால் எல்லாரும் எட்டுமணி நேரம் தூங்கத்தான் வேண்டுமா?
அவசியமில்லை.
தூக்கத்தில் சுவாசிக்கிற அதே ரிதம் பிராணாயாமத்தில் உண்டு.
பிராணாயாமம் கற்றுக் கொண்ட புதிதில் ஆழமில்லாத தூக்கமும், ரொம்ப அதிகாலை எழுந்து விடுகிற பழக்கமும் வரும். ஆனாலும் நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க முடியும்.
பிராணாயாமத்தின் சிறப்பை எடுத்துச் சொல்கிற போதெல்லாம்,
 “அதெல்லாம் மூட நம்பிக்கைங்க” என்று அதையும் மூட நம்பிக்கையில் சேர்த்து விடுகிற நபர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை, நமது இணைய தளத்தில் இதைப் பற்றி எழுதுவதால், ஆமான்னு அடிச்சு சொல்லிடுவாங்களோ..?

இந்தக் கட்டுரையை படிச்சுட்டு , யாராவது ஒருத்தர் தன்னோட லைப் ஸ்டைல் ஐ மாத்திக்கிட்டாக் கூட , ஒரு கட்டுரை ஆசிரியரா எனக்கு பரம திருப்தி கிடைக்கும். செய்ய முடியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்...

No comments:

Post a Comment