Thursday, July 28, 2011

இறைவனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஒரு அதிசய ஆலயம்




சில ஆலயங்களுக்கு செல்லும்போது , நம்மை அறியாமல் பூரண மன நிம்மதி கிடைக்கும். பூர்வ ஜென்ம தொடர்பு அந்த ஆலயங்களுக்கும் , நமக்கும் இருக்கும் என்கிற எண்ணம் மனதில் மெல்ல அரும்பும்.  , புராதன காலத்தில் இருந்தே பெரும் புகழுடன் , அருள் பாலித்துக் கொண்டு இருந்த ஒரு சில ஆலயங்கள் - இன்று மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படுவது இல்லை. ஆனால் , அந்த ஆலயங்களில் இன்றும் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படுகின்றன.  

அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான - அக்னியும், நவ கிரகங்களில் நீதி தேவனான - சனி பகவானும் , வழிபட்ட பழம்பெரும் ஆலயமான திருக்கொள்ளிக்காடு ஆலயம் பற்றிய தகவல்களை , நமது வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பர் ஒருவர், தனது கடன் இந்த ஜென்மத்தில் முடியாது என்று , எல்லா விதமான முயற்சி , பரிகாரம் என்று சகலமும் செய்துவிட்டு , வெறுத்துப் போய் , விரக்தியின் விளிம்பில் , குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று விபரீத முடிவுக்கும் சென்றவர்.  அந்த நிலையில் எதேச்சையாக திருவொற்றியூர் - வடிவுடை அம்மன் ஆலயம் அருகில் , அவர் என்னை சந்திக்க ,  என்னுடைய ஆலோசனையின் பேரில் இந்த ஆலயம் சென்று வந்தார்.  " 48 நாட்கள் - உடல் , மன சுத்தியோடு , கடைசி ஒன்பது  நாட்கள் தினம் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு , விரதம் மேற்கொண்டு - இந்த ஆலயம் சென்று அபிஷேகம் செய்து வாருங்கள் . உங்களை அந்த சிவன் நிச்சயம் காப்பாற்றுவார்" என்று நம்பிக்கையூட்டினேன்.  

இது தான் சார் , என்னுடைய கடைசி முயற்சி . நீங்கள் சொல்லியபடி இன்னும் ஒரு வருடத்தில் , எனக்கு விடிவு இல்லை என்றால், நான் வாழ்வதிலே அர்த்தமில்லை என்று சொல்லிச் சென்றவர்.

சென்று வந்த ஆறே மாதத்தில் , அவரது ஒட்டு மொத்த கடனும் அடைந்து , பூரிப்புடன் இருக்கிறார். இப்போது , அவரை பார்க்கும்போது - அவர் முகத்தில் தெரியும் சந்தோசம் , மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. 

அதனால் தான், அடிக்கடி நான் சொல்வது உண்டு. சில ஆலயங்களுக்கு நாம் செல்லும்போது , நமது கர்மக்கணக்கு நேராகிறது.

ஏழரை சனி , அஷ்டம சனி  நடப்பவர்களும் , மகர  , கும்ப - ராசி , லக்கினங்களில் பிறந்தவர்களுக்கும் , சிம்ம ராசி , இலக்கின நேயர்களும் - இந்த ஆலயம், அவசியம் ஒருமுறை வந்து , வழிபட்டுச் செல்லுங்கள்.
உங்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனை ஏற்படும்.



ஆலயத்தின் பெருமைகளையும், மகிமைகளையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பழம் பெரும் அரசர்கள், இறைவனின் மகிமையை பரிபூரணமாக உணர்ந்து , அவரை பூஜித்து இருக்கின்றனர். ஆயிரம் வருடங்களாக , பூஜை செய்யப்பட்ட இறை சந்நிதானத்தில் - அருள் அலைகள் அபரிமிதமாக நிறைந்து இருக்கும். ராகு கால நேரங்களில் இதைப் போன்ற ஆலயங்களில் - அம்மன் சந்நிதி முன்பு இருக்க வாய்ப்பு கிடைப்பவர்கள், பாக்கியம் செய்தவர்கள். 


திருக்கொள்ளிக்காடு! -  திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள திருநெல்லிக்காவிலிருந்து தெங்கூர், கீராலத்தூர் வழியாக இத்தலத்தை அடையலாம். சனி பகவானின் தோஷம் நீக்கும் தலங்கள் வரிசையில் இது தலையாயது.

சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை. 

இத்திருக்கோயிலை வலம் வந்து சனி பகவானை வழிபட்டுத் திருக்கொள்ளி அக்னீஸ்வரர் திருமுன்பு வீழ்ந்து வணங்குபவர்களின் சனி தோஷத்தைத் தன் ஜோதியால் எரித்துச் சாம்பலாக மாற்றுபவன் அவ்விறைவன் என்பதைத் தொன்மை நூல்கள் கூறுகின்றன.

1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு, அவனது மகன் முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள், பிற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. 

சோழ மன்னன் ஒருவனுக்கு மிகக் கடுமையான சனி தோஷம் ஏற்படவே, எங்கும் அவனுக்கு அமைதி கிட்டாமையால் கடைசியாக இங்கு வந்து சனி பகவானைப் பூஜித்து அக்னீஸ்வரர், மிருதுபாதநாயகி ஆகியோர் திருவடிகளை வணங்கி சிவஜோதியின் காரணமாகச் சனி தோஷம் முழுவதும் நீங்க மனமகிழ்வடைந்தான் என்பது தலபுராணம்.சோழ மன்னர்கள் காலத்தில் இத்தலம் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. 

இத்திருக்கோயிலின் தலமரம் வன்னி. தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரே உள்ளது. இராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றால் பலி பீடமும் நந்தியும் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி தெய்வயானையுடன் முருகப் பெருமான், மகாலெட்சுமி, சனி பகவான், பைரவர் சந்நிதிகள், உள்ளன. விநாயகர், காசி விசுவநாதரை வணங்கி வலம் முடித்து உள்ளே நேரே மூலவராம் அக்னீஸ்வரரைத் தரிசனம் செய்யலாம். இடப்புறம் மிருதுபாத நாயகியின் சந்நிதி உள்ளது.

மூலவரின் கர்ப்பகிருகத்தின் வெளிப்புற மாடங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ உருவங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலாம் இராஜராஜசோழனின் கல்வெட்டில் செப்புத் திருமெனியாக விளங்கும் அமரசுந்தரப் பெருமான், நம்பிராட்டியார், பணபதிப் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், திருக்கொள்ளிக்காட்டு ஊரார் கோயிலுக்காக நிலம் அளித்தது. அதன் வருவாயிலிருந்து தினமும் 6 நாழி அரிசி அமுதுக்காக அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இதற்குத் தடையாக யார் இருந்தாலும் அவர்களிடமிருந்து 25 கழஞ்சுப்பொன்னை ஊர் மன்றம் அபராதமாக வசூலிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே மன்னனின் மற்றொரு கல்வெட்டில் பாதசிவன் ஆச்சன் என்பவனும் அவன் தம்பி ஆச்சன் அடிகள் என்பவனும் கோயிலில் சங்கு, காளம், சேகண்டிகை ஆகியவை ஒலிப்பதற்கு நிலம் அளித்தது குறிக்கப் பெற்றுள்ளது.

இராஜேந்திர சோழனின் கல்வெட்டில் கொள்ளிக் காட்டைச் சேர்ந்த மூவேந்த வேளான் என்பவன் வழிபாட்டிற்காக ஒரு வேலி நிலமும் 200 பொற்காசுகளும், அளித்தாகவும் அந்த நிலம் அருமுளைச் சேரியான மறையமங்கலத்தில் இருந்ததாகவும் கூறுகிறது.

இதே மன்னனின் மற்றொரு கல்வெட்டில் திருக்கொள்ளிக்காட்டுக் கோயில் நிலத்தை உத்தம சோழனின் இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டு வரை சிலர் தவறாக அனுபவித்து வந்ததை திருவெண்டுறை அன்னதான யோகிகள் மன்னனிடம் முறையிட, மன்னனும் தன் அதிகாரியை அனுப்பி விசாரணை செய்து அந்த நிலங்களை கைப்பற்றியதோடு 400 பொற்காசுகளைத் தண்டமாகப் பெற்றுக் கோயிலுக்குச் செலுத்திய செய்தி கூறப்பெற்றுள்ளது.

ஏழரை ஆண்டுச் சனித்தோஷம், ஜன்மச் சனி, சனிபகவானின் கடுமையான பார்வை ஆகியவை உடையவர்களும், மற்றவர்களும் கொள்ளிக்காடு சென்று வழிபாடு செய்தால் எல்லா நலமும் பெறலாம்.

தல வரலாறு

செய்த தவறுக்காக முற்றிலும் பலம் இழந்த சனி பகவான் , பின்பு மனம் வருந்தி, வசிட்ட முனிவரின் யோசனைப்படி அக்கின்வனம் எனும் இத்தலத்தில் கடுமையான   தவமியற்ற ஈசன் மனமிரங்கி அக்னி உருவில் தரிசனம் தந்து சனி பகவானை பொங்கு சனியாக மறு அவதாரம் எடுக்கச் செய்ததுடன் இத்தலத்திற்கு வந்து தம்மையும் சனீஸ்வரரையும் வழிபடுவோர்க்கு சனிக்கிரகம் தொடர்பான எல்லா துர்பலன்களும் விலகும் என அருளினார். பொங்கு சனியாக அவதாரம் எடுத்து குபேர மூலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதர சிறப்புகள்:

அக்னி பகவான் நமது சாபம் தீர இத்தலத்து ஈசனை பூஜித்தமையால் இக்கோயிலுக்கு அக்கினிபுரி, அக்னீஸ்வரம் என்று பெயர்.

இவ்வாலயத்துக்கு மூன்று தல விருட்சங்கள் வன்னி, ஊமத்தை மற்றும் கொன்றை ஆகியன. இதில் வன்னி மரம் குபேர சம்பத்தை அளிக்கிறது. ஊமத்தை தீராத சஞ்சலம், சித்த பிரமை, மனக்கவலை, ஆகியவற்றை போக்கக் கூடியது. கொன்றை குடும்ப ஒற்றுமையையும் அளிக்கிறது.

நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் தரிசனம் தருவார்கள் (ஒன்றை ஒன்று பாராமல்) ஆனால் இத்திருக்கோயில் ‘ப’ வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி தருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் பாவங்களுக்கு தண்டனை அளிக்கும் வேலை நவக்கிரங்களுக்கு இல்லை. ஆதலின் நவக்கிரகங்களில் நமது மாறுபட்ட குணங்களை விட்டு ‘ப’ வடிவில் ஒருவரை ஒருவர் நோக்கிய வண்ணம் காட்சியளிக்கின்றனர்.


நம்பிக்கையுடன் நீங்களும், ஒருமுறை சென்று வணங்கி வாருங்கள். மங்களம் உண்டாகட்டும்!

சனி பகவானின் சக்தி அபரிமிதமாக வெளிப்படும் ஆலயங்களில் - திரு நள்ளாறும் ,  திருக்கொள்ளிக்காடும் முதன்மையானவை , என்று ராஜ ராஜன் காலத்திலிருந்தே நம்பிக்கை இருந்து இருக்கிறது. 


என் அனுபவத்தில், நான் கீழே உள்ள ஆலயங்களையும் என்னிடம் ஜாதகம் பார்க்கும் நேயர்களுக்கு - சனி பிரீதிக்காக பரிந்துரைப்பது வழக்கம். நீங்களும் உங்கள் அருகில் இருக்கும் இந்த ஆலயத்திற்கு சென்று  வணங்கி வரலாம். 



அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை.

அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில், கோழிகுத்தி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.

அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், தூத்துக்குடி.

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம்.

அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில், கல்பட்டு, விழுப்புரம்.

அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம், திருவண்ணாமலை.

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான், மதுரை. 


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் - 

திருக்கொள்ளிக்காடு



நிணம்படு சுடலையின் நீறு பூசிநின்
றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங்
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.
01

ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.
02

அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.
03
பாவணம் மேவுசொன் மாலை யிற்பல
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.
04

வாரணி வனமுலை மங்கை யாளொடுஞ்
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லார்எயில்
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.
05
பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.
06

இறையுறு வரிவளை இசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.
07
எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்
படுத்தன ரென்றவன் பாடல் பாடலுங்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.
08
தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்
கூடினார்க் கருள்செய்வர் கொள்ளிக் காடரே.
09

நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.
10

நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே.
11


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_28.html#ixzz1TPGFmuI8

No comments:

Post a Comment