Friday, July 1, 2011

படித்ததில் பிடித்த நகைச்சுவை


படித்ததில் பிடித்த நகைச்சுவை !!

“கல்யாணத்துக்கு முதல்நாள் ‘ஜான் வாசம்’ என்ற பெயரில் ஒரு ‘ப்ரொஸெஷன்’ நடக்கிறது. ….. ஜான்வாசம் என்பது பிள்ளையை மட்டும் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் ஒரு ‘பங்ஷன்’. பந்துக்களும், நண்பர்களும் காரைச் சூழ்ந்து கொண்டு மெதுவாக நடந்து செல்கிறார்கள். எல்லோருக்கும் முன்னால் நாதசுரக்காரர்கள் போகிறார்கள். தவில் என்பது ‘டிபிள் ஹெடட் இன்ஸ்ட்ருமெண்ட்’. இதை வாசிப்பவருக்குக் குடுமி உண்டு. இவர் ஒரு பக்கத்தை ‘ஸ்டிக்’கால் ‘பீட்’ செய்து கொண்டு, மறுபக்கத்தைக் கையால் அடிக்கிறார். எப்படி அடித்தாலும் தவில் கிழிந்து போவதில்லை. தாலி கட்டும் நேரத்தில் சிலர் ஆள்காட்டி விரலை வேகமாக ஆட்டி இவரைப் பயமுறுத்துகிறார்கள். உடனே தவில்காரர் பயந்து ‘டமடம’ என்று தவிலைக் கொட்டி முழக்குகிறார். அப்போது இவருடைய குடுமி அவிழ்ந்து போகிறது. உடனே வாசிப்பை நிறுத்திவிட்டுக் குடுமியைக் கட்டிக் கொள்கிறார். இவருக்குக் குடுமி கட்டுவதற்கென்று தனி ஆசாமி போட வேண்டும்.
மணப்பெண் என்பவள், தலையைக் குனிந்தபடி, எந்நேரமும் தரையைப் பார்த்தபடியே இருக்கிறாள். அவள் எதையோ தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பவள் போல் தோன்றுகிறது. இதனால் ஃபோட்டோவில் அவள் முகம் சரியாக விழுவதில்லை. மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் முன்னால் ‘ஹோமம்’ செய்யப்படுகிறது. ‘சமித்து’ எனப்படும் குச்சிகளில் நெய்யை ஊற்றி ‘ஸ்மோக்’ உண்டாக்குவதற்கு ஹோமம் என்கிறார்கள். நெய்யை ஹோமத்தில் கொட்டி வீணாக்குவது நேருஜிக்குப் பிடிக்கவில்லை. எனக்கு நெய்யே பிடிக்கவில்லை. இந்த ‘ஸ்மோக்’ சுற்றி உட்கார்ந்திருப்பவர்களின் கண்களில் புகுந்து எரிச்சலை உண்டாக்குகிறது. கல்யாண மண்டபத்தில் ஹோமம் நடக்கிற முற்றத்தில் தொழிற்சாலைகளில் உள்ளது போல் ஒரு புகை போக்கி கட்டி, புகையை மேலே அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மணப்பெண் தாலி கட்டிக் கொள்வதற்கு முன்னால், கூரைச் சேலை கட்டிக் கொள்கிறாள். ஆங்கிலத்தில் இதை ‘Roof Saree’ என்று கூறலாம். மணப்பந்தலில் எல்லோரும் சப்பணம் போட்டுக் கொண்டு மணிக் கணக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தட்சணை என்கிற ‘பூரி’ வழங்கப்படுகிறது. அதாவது ஒரு ரூபாய். இரண்டு ரூபாய் ‘டிப்ஸ்’ தரப்படுகிறது. இந்தியாவில் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் பணம் தருகிறார்கள். இது கொஞ்சம் கண்டிக்கத்தக்கது. ஆனாலும் சப்பணம் போட்டு உட்காரும் கலையில் இந்தியர்கள் வல்லவர்களாயிருக்கிறார்கள். இவ்வளவு நேரமாக மணப்பந்தலில் உட்கார்ந்திருப்பவர்கள், உடனே சாப்பாட்டுக்கும் அதே போஸில்தான் உட்காருகிறார்கள். இது எப்படித்தான் அவர்களால் முடிகிறதோ, தெரியவில்லை. இப்படிச் சம்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு இரண்டு ரூபாயும் கொடுக்கலாம், இருநூறு டாலரும் கொடுக்கலாம்.
பந்தலில் கூடியிருப்பவர்கள் எந்நேரமும் ‘சளசள’ வென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் ஸ்திரீகள் புதுப் புடவைகளைக் கட்டிக்கொண்டு, குறுக்கும் நெடுக்கும் அலையும் போது உண்டாகும் ‘சரக் சரக்’ என்ற புடவைச் சத்தம் வேறு. இதனாலெல்லாம் மந்திரச் சத்தம் நம் காதில் சரியாக விழுவதில்லை.
தாலி கட்டும் போது மணப்பெண் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து கொள்கிறாள். மணமகன், மனைவியாகப் போகிறவளின் எதிரில் நின்றுகொண்டு, அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். இவ்வளவு நேரம் செலவு செய்து திருமணம் செய்கிறவர்கள் தாலி கட்டிக் கொள்ளும் நேரத்தில் மணப்பெண் செளகரியமாக உட்கார்ந்து கொள்வதற்கு ஒரு சோபா செட் வாங்கிப் போட்டிருக்கலாம்.
அட்சதை எனப்படும் ‘ரைஸ்’களை ரெட் பவுடரில் கலந்து அவ்வப்போது மணமக்கள் தலையில் இறைக்கிறார்கள். ரைஸ்தான் தென்னிந்தியாவில் முக்கிய உணவுப் பொருள். அதை இப்படி வீணாக்குவது எனக்குச் சரியாகப்படவில்லை. என்னிடம் கொடுத்த எல்லா அட்சதைகளையும் நான் வாயில் போட்டுத் தின்றுவிட்டேன். அரிசியை ‘ரா’வாகச் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கிறது. அதை வீணாகச் சாதமாக்கிக் கொடுத்து விடுகிறார்கள். இவ்வளவு அரிசிகளையும் பெரிய பெரிய பாத்திரங்களில் போட்டுக் கொதிக்க வைக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு அரிசியை மட்டும்தான் கையில் எடுத்து நசுக்கி, வெந்து போய்விட்டதா என்று பார்க்கிறார்கள். இதற்குப் ‘பதம் பார்ப்பது’ என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பருக்கையை மட்டும் எடுத்துப் பதம் பார்த்துவிட்டு, ஒரு பானைச் சோறும் வெந்துவிட்டது என்று எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ, தெரியவில்லை.
சாப்பாட்டில் அப்பளம் என்னும் வட்டமான ஒரு ‘வஸ்து’வைப் போடுகிறார்கள். ‘அதை எப்படி வட்டமாகச் செய்கிறார்கள்? எப்படி நொறுங்காமல் செய்கிறார்கள்?’ என்பதெல்லாம் விளங்காத மர்மங்களாயிருக்கின்றன.  தென்னிந்தியாவில் பாட்டிமார்கள் என்றொரு கூட்டம் இருக்கிறது. அவர்களால் தான் இவை தயாரிக்கப்படுகின்றனவாம். அப்பளம் தின்பதற்கு ருசியாக இருக்கிறது. நான் எவ்வளவோ முயன்றும் ஒரு அப்பளத்தைக் கூட அப்படியே முழுசாக வாயில் போட்டு விழுங்க முடியவில்லை. சாப்பிடுகிறவர்கள் இதைத் துண்டு துண்டாக்கிச் சாப்பிடுகிறார்கள். அப்பளத்தை உடைக்கும்போது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் துண்டுகளாக உடைத்துச் சாப்பிடுவதென்றால் அவ்வளவு பிரயாசைப்பட்டு வட்டமாகச் செய்திருக்க வேண்டியதில்லை அல்லவா?”
- இதெல்லாம் தென்னிந்தியிவிற்கு வந்த ஹாரி ஹாப்ஸ் என்னும் தம்பதியர், அங்கு நடக்கும் ஒரு திருமணத்தைப் பார்த்து விட்டு எழுதிய குறிப்புகள் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார் சாவி. 

=============================================

ஒரு புத்தகம் முழுக்க இதே மாதிரி இருந்தால் ...!! வாய்ப்பு கிடைக்குறப்போ படிச்சுப் பாருங்க..!

வாஷிங்டனில் திருமணம்
வெளியீடு -கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
விலை:ரூ.80.


Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_30.html#ixzz1QoxBo0O2

No comments:

Post a Comment