Wednesday, July 13, 2011

மலேரியா நோய் பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருள்



மலேரியா, டெங்கு பரவுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் மென்பொருளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்பட பல்வேறு விதமான நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் குழந்தைகள், பெண்கள் உள்பட 70 கோடி பேர் இந்நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நோய் தீவிரமாகி சுமார் 20 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கொசுவால் பரவும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிப்பதற்கான கணணி மென்பொருளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், புவியியல் தகவலியல் துறை பேராசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சியில் இந்த மென்பொருள் உருவாகியிருக்கிறது.
இதுபற்றி ஆய்வு குழு தலைவர்கள் யி லியூ, மைக் விம்பர்லே ஆகியோர் கூறியிருப்பதாவது: பருவநிலை மாற்றம், கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியவை காரணமாக வைரஸ் கிருமி தாக்குதலால் இத்தகைய நோய்கள் உண்டாகின்றன.
இந்த காரணிகள் மாறுவதை ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கலாம். தொடர்ந்து இவை மாறிக்கொண்டே இருப்பதை ரிமோட் சென்சிங் கருவிகள் பதிவு செய்து கணணினுக்கு அனுப்பும்.
மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா நோய் பரவ வாய்ப்பு உருவாவதை மென்பொருள் ண்டறிந்து எச்சரிக்கும். சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தல், கொசு ஒழிப்பு பணிகள், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு இம்மாத கடைசியில் "கொசு நோய்கள் தடுப்பு மென்பொருள்" வெளியிடப்படும்.

No comments:

Post a Comment