Tuesday, June 7, 2011

உத்தமனாக மாற ஒரு நாள் போதுமா?

by Keyem Dharmalingam 

உத்தமனாக மாற ஒரு நாள் போதுமா?

ஒருவன் வாழ் நாளில் பெரும் பகுதியை முறை தவறி கழித்து விட்டு திடிரென புனிதனாகி விட முடியுமா? அப்படி புனிதன் ஆனால் செய்த பாவத்திலிருந்து விடுதலை பெற முடியுமா?

முறையானது என்பதையும் முறைதவறியது என்பதையும் நாம் உடலை வைத்தே கணக்கு போடுகிறாம். ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கு உடலும் ஒரு காரணம் என்றாலும் உடல் மட்டுமே முழு பொறுப்பாளி ஆகாது.  மனதிற்கும், புத்திக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. இயற்கையாகவே நல்ல சுபாவம் உள்ள ஒரு குழந்தை திருடர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் அதன் சுய தன்மை என்றாவது ஒரு நாள் வெளிப்படும். 

அப்படி வெளிப்படுவதற்கு சற்று கால தாமதம் ஆனாலும் கூட அது நடந்தே தீரும். சுபாவத்திலேயே கெட்ட தன்மை இருந்தால் அவன் மகாத்மாக்களோடு வாழ்ந்தால் கூட ஒரு நாள் நிஜ சொரூபம் வெளிப்பட்டு விடும். ஒரு மனிதனின் குணாதிசயம் அவனது சுற்று புறத்தை மட்டுமே மையமாக கொண்டு அமைவதில்லை.இது தான் இப்படி தான் என கூற முடியாத இயற்கை சுபாவத்தை பொறுத்தே அமைகிறது. நல்ல பெற்றோருக்கு பிறந்த குழந்தை காமூகனாக திரிவதும் உண்டு. கொலை காரனுக்கு பிறந்தவன் அகிம்சா மூர்த்தியாக அமைவதும் உண்டு.  எனவே ஒருவனை பிறப்பை வைத்தும்குலத்தை வைத்தும் எடை போட கூடாது. 

ஒரு குப்பை மேட்டில் திடிரென தீப்பிடித்து கொண்டது என சொல்லலாம். ஆனால் அந்த தீ திடிரென பிடிப்பது இல்லை.  குப்பையின் கனன்று கொண்டியிருக்கும் சிறு நெருப்பு பொறி பெரு நெருப்பாக மாறிவிடும்.   அதே போல தான் ஒரு மனிதனின் குணம் மாறுதல்.   ஒரு நாள் இரவு விடிந்தவுடன் எவனும் உத்தமனாகி விட முடியாது.  உத்தமன் ஆவதற்கான அறிகுறிகள் அவனிடம் ஆரம்ப காலம் முதலே இருந்திருக்கும். உள்ளுக்குள் இருந்த நெருப்பை திடிரென வீசும் காற்று பெரிதாக்கி விடுவது போல் சில சம்பவங்கள் மனித தன்மையை மாற்றுகின்றன.

அதனால் எழுபது வயது வரை திருடனாக இருந்தவன் எழுபத்தியோராவது வயதில் திருந்தி விடுவது அதிசயம் இல்லை.  அதற்காக அவன் அதற்கு முன்னால் செய்த தவறுதலுக்கு விதி தத்துவப்படி தண்டனை பெறாமல் தப்பிக்க இயலாது . அதற்காக  அப்படி திருந்துபவனை ஏற்றுக் கொள்ளாமல் சந்தேகப்படுவதும் புறக்கணிப்பதும் மனித தர்மம் அல்ல.

No comments:

Post a Comment