Wednesday, June 29, 2011

கடவுளும், விஞ்ஞானமும் - கணித மேதைகளின் வியப்பும்


கடவுளும், விஞ்ஞானமும் - கணித மேதைகளின் வியப்பும் !!

கணிதத்தையும் கடவுளையும் இணைத்து சுமார் 941 புத்தகங்கள் சமீபத்தில் வெளி வந்துள்ளன.இவற்றில் விஞ்ஞானிகளின் பெரும்பாலான நூல்கள் அனைத்தும் இயற்கையில் காணும் கணித அமைப்பைப் பார்த்து வியக்கின்றன. பல விஞ்ஞானிகள் கடவுளைக் கணிதத்துடன் இணைத்துப் போற்றி மகிழ்கின்றனர்.

அமெரிக்க விஞ்ஞானியின் கணித நிரூபணம்

அமெரிக்க விஞ்ஞானக் கழகத் தலைவர் க்ரெஸி மாரிஸனை, "இறைவன் இருக்கிறானா? இருக்கிறான் என்றால் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும். ஆராய்ந்து கூறுங்கள்" என்று கேட்டபோது விஞ்ஞானிகளுடன் இதை ஆராய்ந்த அவர், "இறைவன் இருக்கிறான். இறைவனை அறிவியல் பூர்வமாக நம்புவதற்கான காரணங்கள் ஏழு" என்று பட்டியலிட்டுக் கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தினார். அவர் கூறிய ஏழு காரணங்களுள் முதல் காரணமே கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது சுவையான செய்தி!

அவர் கூறிய முதல் காரணம் இது தான்:-

கணித முறைப்படி பார்த்தால் இப்பிரபஞ்சம் அமைந்ததும் இயங்குவதும் ஒரு பேரறிவுடைய பரம்பொருளின் அறிவால் என்பதை நன்கு நிரூபிக்கலாம்.

ஒரு பையில் ஒன்று, இரண்டு என்று எண் குறிக்கப்பட்ட பத்துப் பொருட்களைப் போட்டுக் குலுக்குங்கள். ஒன்று என்ற எண் குறிக்கப்பட்ட பொருள் முதலாவதாக வருமாறு எடுக்க முயலுங்கள்! கணித நூல் வல்லுநர், இப்படிப் பொருளை வரிசையாக எடுக்கப் பத்தில் ஒரு வாய்ப்புத்தான் கிட்டும் என்று கூறுகின்றனர். ஒன்று, இரண்டு என்ற எண் குறிக்கப்பட்ட பொருள்களை அடுத்தடுத்து எடுக்கும் வாய்ப்பு நூற்றில் ஒன்றுதான். இது போலவே ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாகத் தொடர்ந்து எடுக்கும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்று. இப்படியே வரிசையாக ஒன்றிலிருந்து பத்து வரை குறிக்கப்பட்ட பொருள்களை அவற்றின் எண் வரிசைப்படி அடுத்தடுத்து எடுக்கும் வாய்ப்பு ஆயிரம் கோடியில் ஒன்றுதான்!

இந்த தர்க்க முறையைப் பார்க்கும்போது, இவ்வுலக வாழ்விற்கு வேண்டிய பல்வேறு நிபந்தனைகள் சீராக அமைந்து, நிலைத்திருப்பது தற்செயலான நிகழ்ச்சி என்று கூற முடியுமா? பூமி தனது அச்சைச் சுற்றி மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் சுழல்கிறது. மணிக்கு நூறு மைல் வேகம் குறைவாகச் சுழன்றால் என்ன ஆகும்? நமது பகலும், இரவும் இப்போது இருப்பதைவிடப் பத்து மடங்கு அதிக நீளமுள்ளவையாகும்! நீண்ட பகலில் கதிரவனின் வெப்பத்தில் பயிர்கள் பொசுங்கும்; நீண்ட இரவில் மிஞ்சியிருக்கும் செடி கொடிகளும் விறைத்துப் போய் அழிந்து விடும்!

உயிர்களுக்கெல்லாம் ஆதாரமான கதிரவனின் மேல் பரப்பில் 12000 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உள்ளது. நமது உடல் வெப்ப நிலை சுமார் 98.4 டிகிரி. நமது பூமி கதிரவனிடமிருந்து நம் உயிருக்குத் தேவையான அளவு வெப்பத்தைப் பெறுகின்ற தூரத்தில் உள்ளது. இந்தச் சூரியன் கொடுக்கும் வெப்பம் இன்னும் ஒரு மடங்கு அதிகரித்தால் நாம் வறுபடுவோம்! அரை மடங்கு குறைந்தால் நாம் குளிரில் விறைத்து உறைந்து போய் விடுவோம்! இப்படியே நிலவுக்கும் நமக்கும் இடையேயுள்ள தூரம், பூமியின் மேல் பரப்பு, கடலின் ஆழம், காற்று மண்டலத்தின் பருமன் ஆகியவை எதைக் காட்டுகின்றன? இவையெல்லாம் தற்செயலான நிகழ்ச்சிகளாக இருக்க முடியாது என்பதையே உறுதிப் படுத்துகின்றன.

க்ரெஸி மாரிஸனின் இதர ஆறு காரணங்கள் இறைவன் இருப்பதை விஞ்ஞான பூர்வமாக மேலும் உறுதிப்படுத்துகின்றன!

விஞ்ஞானத்தின் தாய்

கணிதத்தை விஞ்ஞானத்தின் தாய் என்று அறிஞர்கள் சொல்வர். அமெரிக்கன் மேதமேடிகல் சொஸைடி அதிகாரபூர்வமாக 97 கணித கிளைகளை அறிவித்துள்ளது; இந்தக் கிளைகளுக்கு கிளைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன! இவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் வெளிவந்து விட்டன. இவற்றில் வெளிப்படும் சமன்பாடுகளோ எண்ணிலடங்கா. ஆனால் இத்தனை சமன்பாடுகளும் கடவுளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லாவிடில் அது வீண் என்று கூறிய அற்புதக் கணித மேதை ஒரு தமிழர் என்பதை நாம் மறந்து விட முடியாது!

கடவுளை நினைவுபடுத்தும் சமன்பாடுகள்

ஈரோட்டில் பிறந்து நாமகிரி அம்மனை நாளும் வழிபட்டு அம்மனின் அருளாலேயே தனக்கு கணித ஞானம் மேம்பட்டது என்று கூறிய சீனிவாச ராமானுஜன்தான் அவர்! கடவுளையும் கணிதத்தையும் இணைத்து அவர் கூறிய "கடவுளை நினைவுறுத்தாத ஒரு சமன்பாடு எனக்கு அர்த்தமில்லாத ஒன்றுதான்!" ( "An equation for me has no meaning, unless it represents a thought of God.") என்ற பிரசித்தி பெற்ற வாக்கியம் பொருள் பொதிந்த ஒன்று!


Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_27.html#ixzz1QdS14i3O

1 comment:

  1. cracy morrison அவர்களின் புத்தகத் தலைப்பினை தந்தால் நலமாக இருக்கும்
    நன்றி

    ReplyDelete