செல்வந்தனும் ஏழையும்
ஒரு தடவை விவசாயி ஒருவன் மலையடிவாரக் காட்டில் இருந்து சிலை ஒன்றைக் கண்டெடுத்தான். அது, விலை மதிக்கமுடியாத 'பதினெட்டு புத்த புனிதர்கள்' சிலைகளில் ஒன்று.
அதைப் பார்த்ததும் அவன், "ஆ... தங்கச் சிலை" என்று பேராச்சரியம் கொண்டான். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
சிலையைப் பார்த்த அண்டை அயலார் "நிச்சயம் இது சொக்கத் தங்கத்தில் நூறு பவுண்டுகள் இருக்கும்!" என்று சத்தியம் செய்தனர்.
"ஆஹா, நாம் உண்பதற்கும் குடிப்பதற்கும் இனிமேல் கவலையே இல்லை!" என்று பேருவகை கொண்டது விவசாயியின் குடும்பம்.
ஆனால் சிலையைக் கண்டெடுத்த விவசாயி மட்டும் முகத்தில் கவலை படிய கன்னத்தில் கைவைத்து சோகமாக அமர்ந்திருந்தான்.
அதைக் கண்ட ஒருவன்,"இப்போது நீ பெரிய பணக்காரன். ஏன் இப்படி குடிமுழுகிப் போனதைப்போல் அமர்ந்திருக்கிறாய்?" என்று விவசாயியிடம் கேட்டான்.
அதற்கு ,"என் கவலை எல்லாம் மீதியுள்ள பதினேழு சிலைகள் எங்கிருக்கின்றன என்று ஏன் இன்னும் எனக்குத் தெரியவில்லை என்பதுதான்" என்றான் அந்த விவசாயி.
எவ்வளவு செல்வம் வைத்திருக்கிறோம் என்பதல்ல விஷயம்... இருப்பதைக் கொண்டு நாம் திருப்தியாக இருக்கிறோமா இல்லையா என்பதில்தான் இருக்கிறது - வறுமைக்கும் வளத்துக்குமான வேறுபாடு.
ஜென் கதைகள்
தமிழில்: சேஷையா ரவி.
கோ.வரதராஜன்.
No comments:
Post a Comment