Friday, June 10, 2011

இந்தியாவின் பிக்காஸோ ஹூசைன் 96 வயதில் லண்டனில் காலமானார்




pekashoஇந்தியாவின் பிக்காஸோ என்று ஓவிய உலகினால் அழைக்கப்பட்ட புகழ்பெற்ற ஓவியர் எம்.எம்.ஹூசைன் (96 வயது) லண்டனில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை காலமானார். சுயமாக ஓவியக்கலையை கற்று புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்றிருந்த ஹூசைன் பல சர்ச்சைகளிலும் சிக்கியிருந்தார்.

பத்ம விபூஷண் பட்டம் பெற்றுள்ள ஹூசைன் கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்துக் கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் இந்து அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். பாரத மாதாவின் படத்தையும் நிர்வாணமாக வரைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் ஹூசைனுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தை திரும்பப் பெற்றார். பின்னர் மன்னிப்பும் கோரினார்.

இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளும் கொலை மிரட்டல்களும் அதிகரித்ததால் 2006 இல் நாட்டை விட்டு வெளியேறினார். 2010 ஆம் ஆண்டு அவருக்கு கட்டாரினால் குடியுரிமை வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டார்.  இந்திய நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக இப்போதும் கைதாணைகள் உள்ளன. 1995 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 1973 இல் பத்ம பூஷண் விருதும் 1991 இல் பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பந்தர்பூரில் 1915 செப்டெம்பர் 17 இல் பிறந்தவர் ஹூசைன். எழுத்து அலங்காரக் கலையை அவர் கற்றுக்கொண்டதைத் தொடர்ந்து ஓவியத்துடன் விதி அவரை பிணைத்தது. 20 வயதில் பம்பாய்க்குச் சென்ற அவர் திரைப்பட சுவரொட்டிகள், டெய்லர் பலகைகளுக்கு ஓவியங்களை வரைவதை தொழிலாகக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment