Monday, June 13, 2011

இந்துமத வரலாற்று தொடர் பாகம் -10 அக்னிகுண்டத்தில்வளர்ந்த அறிவு நான்குவேதங்களில் முதாவதாக உள்ள ரிக் வேதத்தின் தொடர்ச்சி .

இந்துமத வரலாற்று தொடர் பாகம் -10 அக்னிகுண்டத்தில்வளர்ந்தஅறிவு நான்குவேதங்களில் முதாவதாக உள்ள ரிக் வேதத்தின் தொடர்ச்சி .

by Keyem Dharmalingam குருஜியின் அருளாசியுடன் ...
நான்கு வேதங்களில் முதாவதாக உள்ள ரிக் வேதத்தின் தொடர்ச்சி ....

இந்த ரிக் வேத பாடல் ஒரு தோத்திர பாடலாக மட்டுமல்லாது அந்தகால மக்களின் நிலையை படம் பிடித்து காட்டும் காலக் கண்ணாடியாகவும் இருக்கிறது. அக்னியை அழியக்கூடிய பிறவிகொண்ட மனிதனான எங்களுக்கு நாள்தோறும் சக்தியை கொடு, அதேநேரம் அழிவற்ற நிலையை நோக்கி செல்லும் பாதையை காட்டி அருள் கொடு இப்போதும் இனி எப்போதும் குறைவில்லாத வளம் கொழிக்கும் வாழ்க்கையையே அறிவாளி வேண்டுகிறான்.  அந்த குறைவற்ற நிறைவான வாழ்வை எப்போதும் கொடுத்துக் கொண்டே இரு இப்படி அக்னி தேவனை நம்பிக்கையுடன் வழிபடும் வேத ரிஷி உரிமை நிறைந்த உறவுடன் அக்னியின் அருகில் நெருக்கமாக சென்று, அக்னியே எங்களிடம் அன்பு கொண்டவனாகவே நீ எப்போதும் இருக்கிறாய்.  நீ தான் எங்களுக்கு உயிர் கொடுத்த தந்தை என்பதை நாங்கள் அறிகிறோம்.  நீ எவராலும் வெல்ல முடியாத வல்லமை படைத்தவன் எனவே உனது குழந்தைகளை பலசாலிகாளக பார்க்கவே நீ விரும்புவாய்.  உன்னை வணங்கும் எங்களுக்கு நீயே பாதுகாவலன் நாங்கள் கேட்பதெல்லாம் எங்களை நூறு நூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் பெருக்கு.  உன்னிடம் நாங்கள் சரணடைகிறோம்.

வேதப் பாடல்களை வடித்தெடுத்த இந்த மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் வாழ்ந்த மற்ற மனித கூட்டத்தோடு ஒற்றுமையாக இல்லை.  அவர்களுடன் போராடிக் கொண்டே இருந்தனர் மனித எண்ணிக்கையும் அடிப்படையில் அன்றைய யுத்தத்தில் வெற்றி தோல்விகள் தீர்மாணிக்கப்பட்டதால்  ஆள் பலம் தங்களுக்கு வேண்டுமென்று நெருப்பு தேவியிடம் பிரார்த்தனை செய்கிறான்.  இதில் இன்னொறு உண்மையும் மறைந்திருக்கிறது.  நெருப்பு என்பது விரகுகளை மட்டுமே பற்றிக் கொண்டு எரியும் ஒரு பொருள்ளல்ல எல்லா உயிர் களிடத்திலும் உடம்பிற்குள் அக்னி மறைந்திருக்கிறது.  ஜனனத்தை அதிகப்படுத்தும் காமமும் ஒரு வகையில் நெருப்புதான். பித்த உடம்பு அதாவது சூடான உடம்பும் படைத்த மனிதனால் உடனுக்குடன் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியும். எனவே இந்த பாடல் அக்னியை போற்றும் பாடலாக மட்டும் அல்லாது இதை முறையிலான சந்தலயங்களோடு ஓதினால் மனித உடம்பில் வெப்பத்தை அதிகபடுத்தும் அதிர்வுகளும் நிறைந்துள்ளதை அனுபவத்தில் உணரலாம். இதனால்தான் வேத ரிஷி அக்னியை தந்தை என்று உணர்வு பூர்வமாக பாடுகிறான்.  அதனுடைய உறவையும் நெருக்கத்தையும் வேண்டுகிறான். 

எல்லா வெளிச்சங்களிலேயும் அக்னியை காண்கிறான்.  சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும், மின்னலும் அவனுக்கு அக்னி வடிவாகவே தெரிந்தது.  அக்னியை பற்றி வேத பாடல் ஆசிரியர் கூறுவதை உபநிஷத ஞானி தத்துவ நோக்கில் நமக்கு  காட்டுகிறான்.  இருட்டிலிருந்து உண்மைக்கு  என்னை கூட்டிசெல்வாயாக பொய்யிலிருந்து என்னை மீட்டு செல்வாயாக அழிவிலிருந்து அழிவற்ற அமிர்த நிலைக்கு என்னை அழைத்து செல்வாயாக என்று அக்னி தேவனிடம் முறையிடும் உபநிஷத வாக்கியம் அக்னியை ஞான வடிவாக நமக்கு காட்டுகிறது.
ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம் இந்திரனையும், மூன்றாவது பகுதி வருணனையும், நான்காவது வாயுவையும் பற்றி பேசுகிறது.  அவையாவும் ஏறக்குறைய முதல் மண்டல கருத்துகளை போலவே இருப்பதனால் இனி ஐந்தாம் மண்டலத்தில் சூரியனை பற்றி சொல்லப்பட்டிருப்பதை பார்ப்போம்.வேத ரிஷி சூரியனை துதிக்கும் போது அவனுக்கு பல பெயர்களை சூட்டி மகிழ்கிறான்.  சூரியனை இருட்டின்  பகைவன் என்றும் மனிதச் சோம்பலின் எதிரி என்றும் பாராட்டுகிறான். 

சூரியனை சோம்பலின் எதிரியாக காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.  வேதகால மனிதன் சோம்பி இருக்க முடியாத நிலையில் இருந்தான்.  பகைவர்களிடமிருந்தோ கொடிய மிருகங்களிடமிருந்தோ சதாகாலமும் அவனை அபாயம் துரத்திக் கொண்டே இருந்தது.  சூரியன் மறைந்து விட்டால் அவனது அச்ச உணவு அதிகபட்டது பாதுகாப்புணர்வு இன்னும் அதிகமாக தேவைப்பட்டது அதனால் அவன் இருட்டை வெறுத்தான் இருட்டை கிழித்தெரியும் பகலவனை வரவேற்றான். ஒளி தருகின்ற அனைத்து பொருட்களையுமே தனது நண்பனாக கருதி அன்பு செலுத்தினான் ஆராதனை செய்தான்.  இந்த உணர்வுகளை சூரியனை பற்றிய ரிக் வேதப் பாடல்கள் தெளிவாக காட்டுகிறது. சூரிய தேவன் எல்லாம் தெரிந்தவன் சகல சக்திகளும் வாய்க்கப் பெற்றவன் பலவாறு வடிவம் கொண்ட உயிர்கள் அனைத்திற்கும் போதனை செய்யும் ஆசியரை போன்றவன் மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் அவன் உணவளிப்பவன்.  வைகரை பொழுதின் இவன் தலை உயர்த்தி பார்த்து விட்டாலே மனித மனங்கள் இன்பத்தின் எல்லையை தொட்டுவிடுகிறது.  பசியை நீக்கும் நேரத்தை மட்டும் சூரியன் தருவதில்லை. ஞானமும் அறிவும் ஆற்றலும் பெறுகின்ற பொழுதையும் சூரியன் தருகிறான்.  சூரியனின் ஞானக் கதிர்கள் மனநிலத்தை ஆழ உழுது அறிவு பயிர்களை விதைக்கிறது.  இதனால் புத்திசாலிகள் சூரியனை ஆராதிக்கிறார்கள். 

தெய்வீகமான எண்ணங்களை வளர செய்பவன் மனச்சோர்வுகளை போக்க செய்பவனும் தானியங்களை செழிக்க செய்பவனும் சூரியனே ஆவான் என்று சூரியனை போற்றும் இந்த பாடல் மேலோட்டமாக பார்க்கும் பொழுது சாதாரணமாக நமக்கு தெரியும் ஆழமான சிந்தனையை செலுத்தினால் ஆதிகால இந்து எத்தகைய நுட்பம் வாய்ந்தவனாக இருந்தான் என்பது புலப்படும்.

வைகரையில் சூரிய தரிசனத்தை பெறும்படி வேத ரிஷி ஏன் வற்புறுத்துகிறான்.  அந்த நேரம் மனிதனின் உடலும் மனமும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கக் கூடியதாக இருக்கிறது.  சூரிய கதிர்கள் கண்களிலும் உடல் முழுவதும் அந்த நேரம் பரவினால் மனிதனின் அறிவாற்றல் பலமடங்கு கூடும்.  சிந்தனையின் வேகம் செழுமைபடும்.  எதையும் துணிந்து செய்யக் கூடிய மன தைரியம் அதிகரிக்கும்.  உடலிலுள்ள மாசுகள் அழிந்து ஆரோக்கியம் பெருகும்.  இந்த உண்மையை அவன் அறிந்து பாடினானா அறியாமல் பாடினானா என்பது முக்கியமல்ல.  இந்த பாடல் வரிகள் சூரிய சக்தியை நமக்கு அதிகபடுத்தி தருவதாக இருப்பது அறிவியல் உண்மையாகும்.

இனி சமுதாய சிந்தனைகளை கொண்ட ரிக் வேதத்தின் ஆறாவது மண்டலத்தை பார்ப்போம்.  சமூகம் என்பது ஆண்களையும் பெண்களையும் கொண்டது மட்டுமல்ல குழந்தைகளையும், முதியவர்களையும், பல மற்றவர்களையும், நோயாளிகளையும் கொண்டதே ஆகும்.  பலசாலிகள் அப்படி பட்ட பலஹீனர்களை காப்பாற்ற வேண்டும் உணவளித்து பாதுகாக்க வேண்டும் என்று ரிக் வேதம் வலியுறுத்துகிறது. ஆறாவது மண்டலம் 75-வது சூத்தகம் சமூகத்தை நேசி அதற்கு மதிப்பு கொடு, பசியால் வாடுவோருக்கு ஆகாரம் கொடு, சிரமத்தில் சிக்கியோன் துன்பத்தை போக்க போராடு, அதற்காக உனது சக்தியை பெருக்கிகொள், ஆற்றலை வளர்த்துக் கொள், உனது கௌரவத்தை திரட்டிக்கொள், உயர்ந்த செயலுக்காக உன்னிடமுள்ள துணிச்சல் உச்ச நிலையை அடையட்டும்.  உனது கைகளிலுள்ள ஆயுதங்கள் எதிகளை மட்டுமல்ல அதர்மத்தையும் சாய்க்கும் ஆற்றலை பெறும் வண்ணம் பயிற்சி எடுத்துக்கொள்.  தர்மத்திற்கு மாறானவைகளிடமும் எதிகளிடமும் நிமிர்ந்து நிற்க்கும் சுபாவத்தை வளர்த்துக் கொள்.  மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பண்பை பெறுக்கி கொள் என்றெல்லாம் மனிதனுக்கு அறிவுரை தருகிறது.


அடுத்ததாக முழுமுதற்கடவுளான விஷ்ணுவை பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலத்தை பார்ப்போம்.  இந்த இடத்தில் ஒரு உண்மையை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.  வேத பாடங்களில் எந்த இடத்திலேயும் விஷ்ணுதான் மூலப்பரம் பொருள் என்று குறிப்பிடப்படவில்லை.  இந்திரன் வருணன் போன்ற தெய்வங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற முக்கியத்துவம் கூட கொடுக்கப்படவில்லை.  விஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால்தான் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்ற கருத்து வேதகாலத்திற்கு பின்பு வந்ததே ஆகும்.  உபநிஷதங்களின் சாரமாக கருதப்படும் வேதாந்தம் என்பது நடைமுறைக்கு வந்த பிறகுதான் விஷ்ணு பரம்பொருளாகக் கருதப்பட்டு வைணவ சம்பிரதாயத்தில் முதல் தெய்வமாக உயர்த்தப்படுகிறார்.  இப்படி வேதத்தில் விஷ்ணுவை பிரதானபடுத்தாமைக்கு வேறொரு காரணத்தையும் கூறலாம். 

வேத பாடல்கள் அனைத்துமே ஒருவரால் உருவாக்கப்படவில்லை ஒரே காலகட்டத்திலும் ஆக்கப்படவில்லை பல ரிஷிகளால் பல காலத்தில் அறியபட்டதே வேதபாடல்களின் தொகுப்பாகும்.  எனவே ஒவ்வொரு பாடலும் தான் போற்றும் தெய்வமே சிறந்தது உயர்ந்தது இணையற்றது என்று கருதுகிறது.  அதனால் மற்ற தெய்வங்களை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் விஷ்ணுவை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதனால் வேதத்தில் விஷ்ணுவின் தரம் தாழ்த்தபட்டிருப்பதாக கருதமுடியாது. இந்திய தத்துவங்கள் சிந்தனை மரபுகள் மதக் கோட்பாடுகள் உருவாக வேதங்கள் பாதைகளை மட்டுமே அமைத்து கொடுத்து இருக்கிறது மற்றபடி உள்ள வளர்சிகள் அனைத்துமே உபநிஷதங்களாலும் இதிகாச புராணங்களாலும் ஏற்படுத்தப்பட்டிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால் எந்த குழப்பம் ஏற்படாது.  இனி விஷ்ணுவை பற்றிய வேத வரிகளை பார்ப்போம்.

விஷ்ணுவே நீ தான் அனைத்திலும் உயர்ந்தவன்.  மிகச் சிறந்த அரியாசனத்தில் அமர்ந்திருப்பவன் ஏனென்றால் இந்த மண்ணில் பிறந்த நாங்கள் பூமியின் அனைத்து பகுதிகளையும் அறிந்து கொள்ள முடியாத அர்பர்களாக இருக்கிறோம்.  ஆனால் நீ எல்லா இடங்களை அறிந்தவனாகவும் எங்கும் இருப்பவனாகவும் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளாய்.  நீ விஸ்வரூபம் எடுத்து உயரும் போது எல்லாமே உனக்குள் அடங்கி விடுகிறது.  உனது விஸ்வ ரூபத்திற்கு எல்லைகளை வகுக்கும் ஆற்றல் எங்களுக்கு இல்லை.  அதனால் உனது பெருமையில் சந்தேகப்படும் தகுதி எந்த மனிதனுக்கும் இல்லவே இல்லை.  நீ தான் உயர்ந்தவன் சிறந்தவன் என்று உன்னை துதிக்கும் எனக்கு ஆதாரமாக இருப்பதுவும் நீயே ஆகும்.  நீ பெரு வடிவம் எடுத்து நிர்க்கும் பொழுது உனது சிரசு சொர்க்கத்தையும் தாண்டி மேலே நிற்க்கிறது.  உன் பலம் பொருந்திய பாதங்கள் பாதாளத்தையும் தாண்டி கண்ணுக்கு புலப்படாமல் இருக்கின்றன.  திசைகள் அனைத்தும் உனது கைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது.  மனித சமூகம் தனது சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டாலும் உனது பெருமையின் ஒரு துளியை மட்டுமே கணித்து பார்க்க முடியும்.  இது இப்போது இருக்கும் எங்களின் கருத்துமட்டுமல்ல.  எங்களுக்கு முன்னால் இருந்தவர்களும் இப்படித்தான் கருதினார்கள் இனி வரப்போகிறவர்களும் இப்படிதான் கருதுவார்கள்.

விஷ்ணுவை பற்றி இன்னும் சில குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளது. அவற்றில் முக்கியமானதாக இந்த பகுதியை நான் சுட்டி காட்டுவதற்கு வேறொரு காரணம் உண்டு.  நமது புராணங்களை பற்றி குறிப்பிடும் பொழுது அவைகள் வேதங்களுக்கான விளக்க உரைகளே என்று பொதுவான கருத்துகள் சொல்லப்படுவது உண்டு. வேதங்களை புராணங்கள் எந்த வகையில் விளக்குகின்றன என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளவே இந்த பகுதியை மட்டும் தொட்டேன்.  விஷ்ணுபுராணத்தில் நாராயணன் வாமன அவதாரமும், திருவிக்ரம் அவதாரமும் எடுத்த விதத்தை வர்ணனை செய்யப்பட்டிருப்பதை எல்லோரும் அறிவீர்கள்.  அந்த வர்ணனையோடு ரிக் வேத கருத்துகளை பொறுத்தி பார்த்தால் வேத விஷயங்கள் புராணங்களில் எந்த வகையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது நன்கு புலனாகும்.

மேலும் ரிக் வேதத்தில் வேதத்தின் பெருமையை பற்றி எட்டாவது மண்டலமும் விடியலை பற்றி ஒன்பதாவது மண்டலமும் சதுரங்கம் முதலான அறிவு சார்ந்த விளையாட்டுகளை பற்றி பத்தாவது மண்டலமும் பேசுகிறது.  அவைகள் முக்கியம் வாய்ந்தவைகள் என்று கருதினாலும் கூட நாம் எடுத்திருக்கின்ற  மதம் சார்ந்த சிந்தனை ஓட்டத்திற்கு அவைகள் தற்போது தேவைபடாது என்பதனால் அடுத்த வேதமான யஜீர் வேதத்தை பற்றி சிந்திப்போம்....... தொடருவோம் ....

No comments:

Post a Comment