Saturday, May 28, 2011

The Isle

The Isle


அமைதியான பெரிய ஏரி. அதற்குள் மிதக்கும் சின்னச் சின்ன மிதவை வீடுகள் (Floating cottages). அவற்றில் தங்கி ஓய்வெடுக்கும், மீன்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தரையிலிருந்து படகுச் சேவை, உணவு, போன்றவற்றைக் கவனித்துக் கொள்கிறாள் அந்த அழகான ரிசார்டை (Resort) நடத்தும்/வேலை பார்க்கும் வாய்பேசாத பெண் ஹீ ஜின்! தேவையாயின் பெண்களும் வரவழைத்துக் கொடுக்கப்படும். ஹீ ஜின் விருப்பப்பட்டால் அவளையும்!

அங்கு தங்க வருகிறான் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான ஹூன் சிக். அவனிடம் அவளுக்கு எந்த விதமான ஈடுபாடும் இல்லை. ஒருமுறை அவன் அழுதுகொண்டிருப்பதைக் காணும் அவள் அவனுக்குள் இருக்கும் ஏதோ பிரச்சினையைப் புரிந்துகொள்கிறாள். அவன் மேல் ஒரு சிறு பரிதாபம் வருகிறது. தற்கொலைக்கு முயலும் அவனைக் காப்பாற்றுகிறாள்.


ஹூன் மீன்பிடிப்பதற்கு போட்டிருந்த தூண்டிலை எடுத்துப்பார்க்க அதில் ஒரு பொம்மை மீன். சிறு சிரிப்புடன் ஒரு புழுவை மாட்டி விடுகிறாள். தூண்டிலில் மீன் சிக்கியவுடன் வந்து பார்க்கும் அவனைச் சிரித்தவாறே, ஊஞ்சலில் ஆடிக்கொண்டு பார்க்கிறாள். தூண்டிலில் இருந்து மீனை விடுவித்து, மீண்டும் கடலில் விடும் அவனை ஆச்சரியமாகப் பார்க்கிறாள். மறுநாள் ஹூன் கம்பியினால் வளைத்துச் செய்யப்பட்ட ஊஞ்சலாடும் பெண் உருவப் பொம்மையை அவளுக்குப் பரிசளிக்கிறான்.

ஒரு மழை நாளில் அவனுக்காக ஒரு பெண் அனுப்பப்பட, அவளை அவனது மிதவையில் கொண்டு சென்று விடும் ஹீ ஜின் அந்தப்பெண் மீது லேசான பொறாமையுணர்வு தலைதூக்க, கரைக்குத் திரும்ப அவளை அழைத்துவரச் செல்லவில்லை. இதனால் அன்றிரவு முழுதும் அங்கேயே அந்தப்பெண் தங்கிவிட நேர்கிறது. அவன் அந்தப்பெண்ணுடன் வெறுமனே போழுதைக்கழிக்கவே விரும்புகிறான். அவனுடைய செயலால் அவன்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட அவன் கொடுக்கும் பணத்தை மறுத்துவிடுகிறாள். அவன் செய்த சைக்கிள் பொம்மையை எடுத்துக் கொள்கிறாள் மறுநாள் அவளைக் காணாததால் தேடிவரும் பெண்தரகன், அவனைத் தாக்கிவிட்டு, அழைத்துச் செல்கிறான். ஹூனைப் பிடித்துப் போனதால் தனது விடுமுறை நாட்களில் அவனைச் சந்திக்க வருகிறாள் அந்தப்பெண்.


ஒருமுறை ஹூனைத்தேடி அந்த ஏரிக்கு வரும் போலீசாரைப் பார்த்தவுடன் தற்கொலை செய்ய முயலும் ஹூனை மீண்டும் காப்பாற்றி, மறைவான இடத்தில் அவனுடைய மிதவையை நிறுத்தி வைக்கிறாள் ஹீ ஜின். இந்நிலையில், மீண்டும் ஹூனைச் சந்திக்க வரும் அந்தப் பெண் உற்சாகத்துடன் படகில் ஏறுகிறாள். படகைச் செலுத்தும் ஹீ ஜின்,  ஹூனுடைய மஞ்சள் மிதவையைக் கடந்து வேறொரு மிதவைக்கருகில் நிறுத்த, குழப்பத்துடன் இறங்கும் அந்தப் பெண் உள்ளே எட்டிப் பார்க்க...என்னவாகிறது?

ஓரிரு காட்சிகளைக் கண்களை மூடியவாறே என்னால் பார்க்க(?!) முடிந்தது. தைரியசாலிகள் நேரடியாகப் பார்க்க முயற்சி செய்யலாம். குறிப்பாக ஹூன், ஹீ ஜின்  தற்கொலைக்கு முயலும் காட்சிகள் (ஸ்ஸ்ஸப்பா! முடியல ஏண்டா பார்த்தோம்னு ஆயிடிச்சு!)

என்னால் சிறுபடகு, கப்பல், படு மோசமான பாதையினூடான பயணங்களில் எல்லாம் வாந்தி எடுக்காமல் செல்ல முடியும்! எடுத்ததற்கெல்லாம் வாந்தி எடுப்பவர்கள் பலர். அவர்கள் இந்தப்படத்தைத் தவிர்க்கலாம். அந்தளவிற்கு பாதிப்பான காட்சிகளா என்று எனக்குத் தெரியவில்லை. அனால் வெனிஸ் படவிழாவில் திரையிட்டபோது பலர் வாந்தி எடுத்ததாக விக்கிபீடியா சொல்கிறது! 
 

அழகான அமைதியான இயற்கைக் காட்சிகள். மிக மெதுவாக நகரும் காமெரா, ஒரு கவிதைபோல பயணிக்கும் கதை, மிகக் குறைந்த வசனங்கள். இது காதல் படமா, இல்லையா என்பதை நாங்கதான் தீர்மானிக்கவேண்டும். முக்கியமாக காமெராவோ, இசையோ எந்த இடத்திலும் உறுத்தவில்லை!

தமிழ் சினிமாவோடு ஒப்பிடுகையில் கொலையை எல்லாம் படு டீசண்டாகத்தான் காட்டுகிறார் இயக்குனர். சொல்லப் போனால் கொலை செய்வதைக் காட்டவே இல்லை.  ஆனால் தற்கொலை தான் முடியல! சுயவதை என்பது எப்படி இருக்கிறது என்று 'டீப்'பா காட்டியிருக்கிறார் இயக்குனர். இதற்கு 'பியானோ டீச்சர்' எவ்வளவோ பரவாயில்ல! 

2000 ஆண்டில் வெளியான இந்த தென்கொரியப்பட்ம் சொந்த நாட்டில் போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், உலக  அளவில்  பேசப்பட்ட, சர்ச்சைக்குரிய திரைப்படம்.

இயக்கம் - Kim Ki-duk
மொழி - Korean          

No comments:

Post a Comment