Thursday, April 21, 2011

ஏழை, பணக்காரர் என இரு இந்தியாவா? பட்டினிச் சாவு கண்டு சுப்ரீம் கோர்ட் கோபம்


புதுடில்லி: நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், "ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது' என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறித்த சமீபத்திய விவரங்களைத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, நாட்டில் அடிக்கடி நிகழும் பட்டினிச் சாவுகள், பொது வினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.இந்த மனுவானது, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், ""ஊட்டச் சத்து குறைபாட்டை தீர்க்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதிப்பாடு கொண்டுள்ளது. பொது வினியோக முறையை முறைப்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன,'' என்றார்.

இதன்பின் நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் பட்டினிச் சாவுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என, இரண்டு இந்தியா இருக்க முடியாது. நாட்டு மக்களில், 36 சதவீதம் பேர், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை குறைக்க, திட்ட கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? இந்தியா சக்தி வாய்ந்த நாடு என, பறை சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு என்பது, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.பட்டினியில் ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானிய கையிருப்பு இருப்பதாக கூறிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. விளைச்சல் நன்றாக உள்ளது, அரசு குடோன்கள் நிரம்பி வழிகின்றன என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. ஆனால், மக்கள் இதனால் பலன் அடையவில்லை எனில், என்ன பயன்?

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை, 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, பல மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கும் வினியோகிக்க அதிகளவில் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கையை, 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், திட்ட கமிஷன் தெரிவித்துள்ளது சரியல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழே தற்போது எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் திட்ட கமிஷன் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment