Search This Blog

Saturday, July 1, 2017

Shridi Sai Painting


வண்ணத்துப் பூச்சியும் கடலும் ~ பிரமிள்


சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

சூன்யத்தின் பெருவெளியில் ஒரு சிறு துளி

இருளடர்ந்து வரும் அந்திப்பொழுதொன்றில்
ஏதேனும் ஒரு ஆற்றின் பரப்பை பார்க்கையிலே
மனது பிசையும் உணர்வை உதற முடியவில்லை
என்னால் எப்போதுமே

மனதின் விசாலங்களை
சூன்யம் சூழும்போதெல்லாம்
பெருமணல் பரப்பிக்கிடக்கும்
அந்தி நேரத்து ஆற்றோரத்தை
தனியாய் அளைந்து திரிய
மனது விளைகின்றது..........

முன்பனிக்காலமொன்றில்
குளிர் சுருட்டும் உடலோடு
தோழனொருவனின் நெஞ்சினில் சாய்ந்தபடி
நிலவை வெறித்த
ஆற்றோர தில்லை மர வாழ்வை
எப்படி நான் மறந்து போனேன்.......

மெலிதான அரவத்திலும்
துணுக்குற்று விழித்தெழுவதும்
பின் நீளும் இரவுகளை
கதை மொழிந்து கடத்துவதும்.
ஆட்காட்டியின் கேவலிலே
அனைத்தும் அடங்குவதும்
சோவெனப் பெய்யும் மழையில்
விறைத்து நடுங்குவதும்
எப்படி மறந்தேன் என் தில்லை மர வாழ்வை?

ஆழப்படுக்கையினில்
அழவற்ற அற்புதங்களைப்
பொதித்திருக்கும்
கோரைக்களப்பாறு அமைதியாய்
தூங்கும் நடு நிசி நேரத்திலே
துள்ளியெழும் கயல் மீனில்
நிலவு தெறிக்க உண்டாகும்
வெள்ளி வளைவுகளை ரசித்த
தருணங்களை எப்படி நான் மறந்து போனேன்?

அந்த இரவுகள் அச்சங்களில் முடிந்தது
அந்த இரவுகள் அழுகைகளில் முடிந்தது
அந்த இரவுகள் மரணங்களோடு முடிந்தது
அந்த இரவுகள் காதலின் துயரோடு முடிந்தது
ஆனாலும் யாவற்றையும் மீறி
அந்த இரவுகள் நம்பிக்கையோடு முடிந்தது

எப்படி மறந்தேன் என் தில்லைமர இரவுகளை?.....
Yuvendra Rasiah