Search This Blog

Saturday, October 3, 2015

கட உபநிஷதத் தத்துவங்கள் 108 :


மரணமிலாப் பெருநிலை :
அவ்யக்தாத் து பர: புருஷோ வ்யாபகோஅலிங்க ஏவ ச I
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்து: அம்ருதத்வம் ச கச்சதி II (கட 2.3:8)

பொருள்: அவ்யக்த்தத்தை விட இறைவன் மேலானவர், அவர் எங்கும் நிறைந்தவர், (இவர்தான் என்று சுட்டிக் காட்டுவதற்கு) எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் (தளைகளிலிருந்து) விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்.
புலன்களின் செயல்பாடு தனியானவை, அவற்றுடன் ஆன்மாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மனம் ஆன்மாவில் நிலைபெறும்போது புலன்கள் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன. இதனைப் படிப்படியாக 7&8 ஆம் மந்திரங்கள் தெரிவிக்கின்றன. 1.3:10-11 மந்திரங்களும் இதே கருத்தை வலியுறுத்துவதாக அமைந்தது ஒப்புநோக்கத் தக்கது.
இறைவனை அடைந்தால் மனிதன் மரணமிலாத நிலையை அடைகிறான். அந்த நிலையைப் பற்றிய சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.
இந்தக் கண்களால் காண முடியாது:
ந ஸந்ருசே திஷ்ட்டதி ரூபமஸ்ய
ந சக்ஷுஷா பச்யதி கச்சனைனம் I
ஹ்ருதா மனீஷா மனஸா அபிக்ல்ருப்தோ
ய எதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி II ( கட 2.3:9)
பொருள்: இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக்குகையிலுள்ள ஆன்மாவால், விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்.
மிகவும் பொருள் பொதிந்த மந்திரம் இது. இறையனுபூதி என்பதன் ஒரு தெளிவான விளக்கத்தை இங்கு காண்கிறோம். இறையனுபூதிக்கு இங்கே ஐந்து விளக்கங்கள் தரப்படுகின்றன –
1 புறத்தில் காணக்கூடியதல்ல; 2 கண்களால் காண்பதில்லை; இந்தக் கருத்துக்களை ஏற்கெனவே (2.2:14-15) கண்டோம்.
3 ஆன்மாவால் காணப்படுகிறது ; உடம்பிலுள்ள சாதாரணக் கண்கள் இறைவனைக் காண்பதில்லை என்றால் அவரைக் காண்பது, உணர்வது யார்? இதயக் குகையிலுள்ள ஆன்மா. இதயக் குகை பற்றியும் ஆன்மா பற்றியும் ஏற்கெனவே விரிவாகக் கண்டுள்ளோம். இறைவன் ஒரு பேரொளி என்றால் ஆன்மா ஒரு சுடர், ஒரு பொறி. ஒவ்வொருவரிலும் அந்தப் பொறி உள்ளது. அந்தப் பொறிதான் இறைவனை அறிகிறது.
4 புத்தி தெளிய வேண்டும்: ஆன்மா இறைவனை எங்கே காண்கிறது? விழிப்புற்ற புத்தியில். இது பற்றியும் ஏற்கெனவே (1.3:6-9) விரிவாகக் கண்டுள்ளோம்.
5 மனத்தின் தொடர்ந்த முயற்சி வேண்டும்: ஆன்மா, இதயக் குகை, புத்தி என்றெல்லாம் கூறியதால் அவை ஏதோ நம்மை மீறிய விஷயங்கள் என்று எண்ணி விடாமல், நமது கருவியாகிய மனத்தைத் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடுத்த வேண்டும். ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முழுமூச்சுடன் அதில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு மனத்தின் தொடர்ந்த முயற்சியால் புத்தி தெளிகிறது. தெளிந்த புத்தியால் தன்னை ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக் காண முடிகிறது. நம்மில் உள்ள இருவரில் (1.3.1) ‘நாம் ஜீவன்’ என்ற நிலை மாறி ‘நாம் ஆன்மா’ என்ற நிலை உருவாகிறது. இந்த ஆன்ம நிலையில் இறைக்காட்சி கிடைக்கிறது.

ராமர் பட்டாபிஷேகம்!



ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எப்படி நடந்தது? எத்தனையோ ராமயணங்கள் இருந்தாலும், அதில் வால்மீகி ராமாயணத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காவியத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்ததை வால்மீகி எப்படி வர்ணிக்கிறார்?
அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருக்கிறது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்டுவதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொள்கிறோம்.  வானவீதியில் முழுமையான ஒளிக்கிரணங்களுடன் அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவண்ணமாக ஸ்ரீராமனிடம் வேண்டினான்.
பூஜிதா மாமிகா மாதா
தத்தம் ராஜ்யம் இதம் மம
தத் ததாமி புனஸ் துப்யம்
யதாத்வம் ததா மம
முன்பு எனக்கு அரசு தந்து என் தாயைப் போற்றினாய். அதை அப்படியே உனக்குத் தருகிறேன். பரதனின் சரணாகதியை அயோத்தி ராமனும் ஏற்றார். ஆசனத்தில் அமர்ந்தார். பட்டாபிஷேகத்துக்குரிய பணிவிடைகள் எல்லாம் சீராகத் தொடங்கின. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னார்களுடைய அலங்காரம் நடந்தேறியது. சீதாதேவிக்கு, தசரத பத்தினிகளே அலங்காரம் செய்தனர். வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்கிறாள் கௌசல்யை.
ததோ வானர பத்னீனாம்
ஸர்வாஸாமேவ சோபனம்
சகார யத்னாத் கௌஸல்யா
ப்ரஹ்ருஷ்டா புத்ரவத்ஸலா
சத்ருக்னருடைய ஆணையின் பேரில் இஷ்வாகு குலத்தின் தேரோட்டியான சுமந்திரர், கம்பீரமான குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொணர்ந்தார். கதிரவன் போன்று ஒளிமயமாகக் காட்சிதரும் அந்த ரதத்தில் ஸ்ரீராமன் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் அனுமனும் உடன் சென்றனர். சுக்ரீவன் மனைவியும் சீதாபிராட்டியும், திவ்யமான அலங்காரத்துடன் அவர்களுடனே சென்றனர். ஸ்ரீராமனுக்கு சகல நலங்களும் சுகமும் தனமும் பெருகுவதற்கும், அயோத்தி நகரமும் அந்த நாடும் என்றும் மங்கலம் பெறுவதற்கும் உரிய சுப காரியங்களைச் செய்யுமாறு அனைவரும் வசிஷ்டரிடம் வேண்டினர். அமைச்சர்கள் பின்தொடர ஜய விஜயபீவ என்ற முழக்கம், ஜயகோஷமுமாகக் காற்றுடன் அலை மோதியது. ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, கல்யாண குனோஜ்வலனான, பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான, சர்வஜன ரக்ஷகனான ஸ்ரீராமன் அயோத்தி நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சள் கலந்த அட்சதையுடன் பிராமணர்களும் உடன் சென்றனர். பசுக்களும் கோலாகலத்தில் கலந்து சென்றன. குடிமக்களின் குதூகலம் பொங்க, ஸ்ரீராமன் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து, கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி மூவரையும் நமஸ்கரித்தார். சத்ருக்னர், ராமருடைய அபிஷேகத்துக்காக சுக்ரீவனிடம் வானரர்களை அனுப்பப் பணித்தார். பொழுது புலரும் முன் வானரர்கள், ரத்னமும் தங்கமும் இழைத்த குடங்களில், கடலிலிருந்தும் நதிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தத்தைக் கொணர்ந்தார்கள். ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு நதிகளிலிருந்து புண்ணிய தீர்த்தத்துடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணர்ந்தார்கள்.
பேரருள் பெற்றவரும் தசரத குல குருவுமான வசிஷ்ட மகரிஷி, புலன்களையும் புத்தியையும் சமன் செய்து, பிராமணர்களின் சம்மதத்துடன் ஸ்ரீராமனை ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில் அமரும்படி செய்தார்.
ராமம் ரத்னமயே பீட
ஸஹஸுதம் ந்யவேசயத்
பட்டாபிஷேக வைபவம் பவித்திரமாகத் திகழ்ந்தது. வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயநர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு மகா ஞானியர்களும் நிகழ்த்திய பட்டாபிஷேகம். எண்மரும் வேதச் சீர்மையுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணமிகுந்த திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தால் நெறிமுறைகளின்படி பட்டாபிஷேகத்தை நிறைவேற்றினார்கள். வானத்தில் திக்பாலர்களும் தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். சத்ருக்னர் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண் சாமரம் வீசினார். வாயுபகவான் தங்கத் தாமரைகளாலான ஒளி கூடிய மாலைகளையும், ஒன்பது ரத்தினம் சேர்ந்த முத்து மாலையையும் கொணர்ந்தார். பூமி செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன. பசுக்களையும், கன்றுகளையும், தங்க நாணயங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீராமன் தானமாக வழங்கினார். சுக்ரீவனுக்குத் தங்க மாலையையும், அங்கதனுக்குத் தங்கத்தோள் வளைகளையும் வழங்கினார். சீதாதேவியிடம் சந்திரன் போன்று பிரகாசமான முத்துமாலையை வழங்கினார். பிராட்டியும் மணாளனின் விருப்பத்தை ஜாடையால் அறிந்து, அம்மாலையை அனுமனுக்கு அளித்தாள். விபீஷணர், ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்காபுரி சென்றார். தசரத குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து பரிபாலனம் நடத்தி வந்தார். லக்ஷ்மணனை இளவரசாக இருக்கக் கோரினார். லக்ஷ்மணர் இசையவில்லை. பரதனுக்கு இளவரசுப் பட்டம் நிகழ்ந்தது. சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கிறான் அனுமன். அங்கதன் வாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதையின் உவகை ஓங்க, வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். அச்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராமமயமாகவே இருந்தது.

உலக இறுதி நாட்களில் ஏற்படும் அடையாளங்கள் என்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிட்டவைகள்.


* அநீதி பெருகிவிடும்.
* பொய் உண்மையாகும்.
* தீர்ப்புகள் நியாயமானதாக இருக்காது.
* மனித உள்ளங்கள் மாசு படிந்திருக்கும்.
* இலேசன விஷயத்திற்கெல்லாம் கொலை செய்வார்கள்.
*
*
* வட்டியைச் சாப்பிடுவார்கள்.
* ஆண்கள் பட்டாடை அணிவார்கள்.
* உறவினர்களை துண்டித்து வாழ்வார்கள்.
* கட்டிடங்களை உயர உயரமாக கட்டுவார்கள்.
* உலக ஆதாயங்களுக்காக மார்க்கத்தை விற்பார்கள்.
*
*
* மழை பொழியாது.
* பூகம்பம் ஏற்படும்.
* சிகப்பு சூறாவளி காற்று வீசும்.
* வானத்திலிருந்து கல்மாரி பொழியும்.
* பாவமான செயல்கள் அதிகமாகி விடும்.
*
*
* பொய்யனை மெய்யனாக ஆக்குவார்கள்.
* மெய்யனைப் பொய்யனாக ஆக்குவார்கள்.
* அவதூறுகள் (வீண்பழிகள் சுமத்துவது) பரவலாகி விடும்.
* மோசடிக்காரர்களை மக்கள் நம்பிக்கையாளர்கள் என நினைப்பார்கள்.
* நம்பிக்கையாளர்களை மக்கள் மோசடிக்காரர்கள் என நினைப்பார்கள்.
*
*
* பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்படும்.
* குர்ஆன் பிரதிகள் அலங்கரிக்கப்படும்.
* மினராக்கள் உயர உயரமாக கட்டுவார்கள்.
* குர்ஆனை ஓதிக் கொண்டே பாவங்கள் செய்வார்கள்.
* தீயவர்களின் சப்தம் பள்ளி வாசல்களில் அதிகமாகி விடும்.
*
*
* திடீர் மரணம் அதிகமாகி விடும்.
* விவாகரத்து (தலாக்) அதிகமாகி விடும்.
* குழந்தைகள் அதிகம் பெற்றெடுப்பதை வெறுப்பார்கள்.
* தகுதி குறைந்தவர்கள், உயர் ரக வாழ்க்கை வாழ்வார்கள்.
* கண்ணியத்திற்குறியவர்கள் வசதி வாய்ப்பின்றி வாழ்வார்கள்.
*
*
* அக்கிரமம் செய்வதை பெருமையாகக் கருதுவார்கள்.
* நம்பிக்கைக்கு உரியவர்கள் கூட மோசடி செய்வார்கள்.
* தலைவர்களும், மந்திரிகளும் பொய்யர்களாக இருப்பார்கள்.
* கூட்டத்தில் இழிவுக்குறியவன் அவர்களுக்குத் தலைவராகி விடுவான்.
* செருப்பில்லாமல் நடப்பவர்கள், ஆடையின்றி இருப்பவர்கள் கூட தலைவர்களாக ஆகிவிடுவார்கள்.
*
*
* பாதுகாப்பு குறைந்து விடும்.
* காவலர்கள் அதிகமாக இருப்பார்கள்.
* மதுபானங்கள் அருந்துவது அதிகரிக்கும்.
* மக்கள் நீதத்தை லஞ்சம் கொடுத்து மாற்றுவார்கள்.
* பொய்யை ஒரு கலையாக சாமர்த்தியமாக நினைப்பார்கள்.
*
*
* இசைக் கருவிகள் அதிகமாகி விடும்.
* இசையைப் போன்று குர்ஆனை ஓதுவார்கள்.
* பாட்டுப் பாடும் பெண்கள், கண்ணியம் செய்யப்படுவார்கள்.
* மக்கள் மிருகங்களின் தோலினாலான ஆடையை அணிவார்கள்.
* எவ்விதம் உயர்ரக ஆடைகளை அணிந்தாலும், அவர்களின் உள்ளங்கள் செத்த பிணங்களை விட, மிக மோசமானதாக இருக்கும்.
*
*
* ஆண்கள் பெண்களைப் போன்று நடிப்பார்கள்.
* பெண்கள் ஆண்களைப் போன்று நடிப்பார்கள்.
* கணவன் மனைவிக்குக் கட்டுப்பட்டு நடப்பான்.
* கணவருடன் மனைவி வியாபாரத்தில் ஈடுபடுவாள்.
* அடிமைபெண் (தனக்கு கட்டளையிடும்) எஜமானியைப் பெற்றெடுப்பாள். (அதாவது பெண் மக்கள் தனது தாயை வேலைக்காரியைப் போன்று வழி நடத்துவார்கள்)
*
*
* தனது தாயை வெறுத்து விடுவான்.
* தனது நண்பனுக்கு கேடு செய்வான்.
* மகன் தந்தையை நோவினை செய்வான்.
* முஸ்லிம் பொய் சாட்சி கூறத் தயாராகி விடுவான்.
* அறிமுகம் உள்ளவர்களுக்கு மட்டும் ஸலாம் கூறுவார்கள்.
*
*
* தங்கம் பயன்பாட்டில் அதிகமாக இருக்கும்.
* வெள்ளி பயன் படுத்துதல் குறைந்து விடும்.
* விலங்கினங்களின் தோலைப் பயன்படுத்துவார்கள்.
* நடக்கும் பாதைகளில் மதுபானங்கள் அருந்துவார்கள்.
* பிற்காலத்தவர் முற்காலத்தவர்களைத் திட்டுவார்கள். சாபமிடுவார்கள்.
*
*
* பொறுமையாளர்கள் அநீதம் புரிவார்கள்.
* ஜகாத் கொடுப்பதை அபராதமாக நினைப்பார்கள்.
* தீனுக்காக அல்லாமல் உலக ஆதாயத்திற்காக கல்வி கற்பார்கள்.
* அல்லாஹ் அல்லாத உலக வஸ்துக்களின் மீது சத்தியம் செய்வார்கள்.
* தொழுகையை மரணிக்கச் செய்வார்கள். அதாவது தொழுகைக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், அதை முறைப்படி நிறைவேற்ற மாட்டார்கள்.
*
*
* குற்றங்களுக்குறிய ஷரீஅத் தண்டனைகள் நிறைவேற்றப் படாது.
* கனீமத் பொருட்களை தங்கள் சொந்தப் பொருள்களைப் போன்று பயன்படுத்துவார்கள்.
* மனிதர்களின் உருவங்களை உருமாற்றம் செய்யப்படும் மற்றும் பல அடையாளங்கள் நிகழும்.
* அமானிதப் பொருள்களை போரில் கிடைத்த (கனீமத்)பொருளைப் போன்று எடுத்துக்கொள்வார்கள்.
* அமானிதப் பொருட்களை வீணாக்கி விடுவார்கள். அதாவது அமானிதப் பொருள்களைக் கொடுத்து வைத்திருந்தால் அதில் மோசடி செய்வார்கள்.


இத்தகைய செயல்கள்(பாவங்கள்) ஏற்படும் போது,
இந்த உலகின் இறுதி நாளை எதிர் பாருங்கள்.
*
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக
ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
*
ஆதார நூல்: - துர்ருல் மன்சூர். பக்கம் :-56.